பரிசுத்தமானவற்றை நீங்கள் மதிக்கிறீர்களா?
1 பரிசுத்தமானவற்றை மதிக்கிறோமா என நம்மிடம் கேட்டால் உடனடியாக ஆம் என பதில் சொல்வோம்! நாம் மதிக்கும் சில பரிசுத்தமான காரியங்கள் யாவை?
2 நம்முடைய பரலோக தகப்பனுடன் தனிப்பட்ட விதத்தில் பேச முடிவதை நாம் எவ்வளவு அருமையானதாய் நினைக்கிறோம்! ‘நாம் அவரிடம் நெருங்கி சென்றால் அவர் நம்மிடம் நெருங்கி வருவதாக’ உறுதியளிக்கிறார். (யாக். 4:8, NW) இயேசு கிறிஸ்துவின் கிரய பலி இல்லையென்றால் யாருக்கும் நித்திய ஜீவனும் இல்லை. (யோவா. 3:16) நன்றியோடு, கடவுளின் ஈடிணையற்ற இந்தப் பரிசுக்கான நம்முடைய மனமார்ந்த போற்றுதலை நித்தம் நம் ஜெபத்தில் தெரிவிக்கிறோம்.
3 அடுத்ததாக, நாம் பரிசுத்தமாக கருதுவது கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த பைபிள். யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பும் பரிசுத்தமானது. யெகோவாவின் இந்த ஏற்பாடுகளுக்கு உரிய மதிப்பை நாம் எவ்வாறு காட்டுகிறோம்? பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ்ந்து, சகோதர அன்பின் பிணைப்பில் பலப்பட்டு, தேவராஜ்ய ஒழுங்கை கவனமாக பின்பற்றி, முன்நின்று வழிநடத்துபவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் காட்டுகிறோம்.—1 பே. 1:22.
4 உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய உணவு ஏராளம் ஏராளம். இந்த வருடத்தில் நடக்கவிருக்கும் “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” என்ற மாவட்ட மாநாட்டிலும் ஏராளம் பெறுவோம். அங்கு, நமக்கு அதிகம் தேவைப்படுகிற முக்கிய அறிவுரைகளை பெற்று, அன்பான தோழமையையும் அனுபவிப்போம். இந்த பரிசுத்த ஏற்பாட்டை மனமார மதிப்பதை நாம் எப்படி காட்டலாம்?
5 யெகோவாவின் வீட்டை அசட்டை செய்யாதீர்கள்: எருசலேமின் மதில்களை திரும்ப கட்டுவதில் கடுமையாய் உழைத்தவர்களிடம், ‘தேவனுடைய வீட்டைப் புறக்கணிக்க வேண்டாம்’ என நெகேமியா அறிவுரை கூறினார். (நெ. 10:39, NW) இன்று யெகோவாவின் ‘வீடு’ என்பது, வணக்கத்திற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகள்தான். அந்த ஏற்பாட்டின் ஓர் அம்சமே நம்முடைய மாவட்ட மாநாடுகள். இந்த ஏற்பாட்டை நாம் புறக்கணிக்கக் கூடாது. மாநாடுகளுக்குச் செல்வதன் மூலமும், நன்கு கவனம் செலுத்துவதன் மூலமும் யெகோவாவின் ஏற்பாடுகளை நாம் பொக்கிஷமாய் போற்றுகிறோம் என்பதை அவருக்குக் காட்டுவோம். (எபி. 10:24, 25) இந்த பரிசுத்தமான நிகழ்ச்சிநிரலுக்கான மனப்பூர்வமான மதித்துணர்வை காட்ட என்ன திட்டங்களை இப்போதே போட வேண்டும்?
6 மூன்று நாட்களும் ஆஜராயிருத்தல்: மாநாட்டின் மூன்று நாட்களும் ஆஜராயிருக்க நாம் ஒவ்வொருவரும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக வரவும் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஜெபம் வரை அங்கிருக்கவும் நீங்கள் திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். மாநாட்டில் கலந்துகொள்வது எப்போதுமே எளிதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. நீங்கள் வேலை செய்யுமிடத்தில் லீவு கிடைப்பதில் பிரச்சினைகள் வரலாம். வசதியான பயணம் கிடைக்காமல் இருக்கலாம். மாநாட்டில் கலந்துகொள்வதை இப்படிப்பட்ட அம்சங்கள் எதுவும் தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள்.
7 அருமையான அனுபவம்: கடந்த வருடம், உள்நாட்டு கலவரம் நடந்துகொண்டிருந்த ஆப்பிரிக்க நாடு ஒன்றில் கும்பலாக சில சகோதரர்கள் மாவட்ட மாநாட்டுக்குச் செல்கையில் இராணுவத்தினரை எதிர்ப்பட்டனர். “நீங்க யாரு? எங்க போறீங்க” என அவர்கள் சகோதரர்களிடம் கேட்டனர். “நாங்க யெகோவாவின் சாட்சிங்க, மாவட்ட மாநாட்டுக்கு போயிட்டிருக்கோம்” என அவர்கள் பதிலளித்தனர். இராணுவ வீரர் ஒருவர் சொன்னதாவது: “உங்க யெகோவாவின் சாட்சிகளுக்கு எதைக் கண்டும் பயமில்ல. தைரியமாக போங்க எந்த இடைஞ்சலும் இல்லாம உங்க மாநாடு நடக்கும். ஆனா ஜாக்கிரதை, நிறைய இராணுவ வீரர்களை வழியில பார்ப்பீங்க. எப்பவும் நடுரோட்டிலேயே நடங்க! கும்பலாக ஆளுங்கள பார்த்தீங்கன்னா நிற்காம நடுரோட்டில நடந்துகிட்டே இருங்க!” அவர் சொன்னபடியே அவர்கள் செய்தனர்; மாநாட்டிற்கு பத்திரமாய் போய் சேர்ந்தனர். பரிசுத்த காரியங்களை மதித்ததனால் இந்த சகோதரர்களுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
8 ஆப்பிரிக்காவிலுள்ள நம் சகோதரர்களைப் போலவே நமக்கும் எதிர்ப்புகள் வரலாம். ஆனால் விசுவாசம் காட்டுவதில் நாமும் அவர்களைப் பின்பற்றலாம்; முழுக்க முழுக்க மூன்று நாளும் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள நாமும் தீர்மானமாயிருப்போம். ஏதேனும் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், யெகோவாவின் உதவியை நாடுங்கள். முழுமையாக மாநாட்டை அனுபவிப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார்.
9 பொழியும் ஆசீர்வாதங்கள்: கடவுளுடைய வார்த்தையின் மூலம் அறிவில் வளர்ந்து இரட்சிப்பைப் பெற முடியும் என்பதால் அதன் மேல் நாம் வாஞ்சையாய் இருக்கிறோம். (1 பே. 2:3) மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு, நிகழ்ச்சிநிரலை செவிகொடுத்து கேட்பதனால் பைபிளிடம் நம் ஒவ்வொருவரின் விசுவாசமும் பலப்படும்; இது சாத்தானின் கடுந்தாக்குதலை சகித்து நிற்க உதவும். இவ்வாறு செய்கையில் நாம் பரிசுத்த காரியங்களை முழுமையாய் மதிக்கிறோம் என்பதையும் ‘நாம் பின்வாங்குகிறவர்களல்ல . . . ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களே’ என்பதையும் யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவோம்.—எபி. 10:39; 12:16; நீதி. 27:11.
10 யெகோவா தேவன் வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை ஏராளமாக நம்மீது பொழிவார் என நாம் எதிர்பார்க்கலாம். (மல். 3:10) வெள்ளிக்கிழமை காலை “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் ஆரம்பமாவது முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவு ஜெபத்தில் “ஆமென்” சொல்லும் வரை அங்கிருப்பது உங்கள் தீர்மானமாய் இருக்கட்டும். அப்படி செய்தீர்கள் என்றால் சந்தோஷம் நிச்சயம்!