புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
பயம் என்பதற்கு அளிக்கப்படும் ஒரு விளக்கம், “ஆழ்ந்த மரியாதை, பயபக்தி; இது விசேஷமாக கடவுளிடம் காட்டப்படுவது.” இது, “ஞானத்தின் ஆரம்பம்” என பைபிள் விவரிக்கும் ஆரோக்கியமான பயத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (சங். 111:10) இதற்கு முரணாக, நம்மை சுற்றியுள்ள சாத்தானிய உலகில் மற்றொரு வகை பயம் நிலவி வருகிறது. யெகோவாவிடம் மரியாதை கலந்த பயத்தை வளர்த்து வருகையில் அப்படிப்பட்ட தவறான பயத்தை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? 2002-ம் ஊழிய ஆண்டுக்குரிய புதிய வட்டார மாநாட்டில் இந்தக் கேள்வி கலந்தாலோசிக்கப்படும். மாநாட்டின் முக்கிய தலைப்பு, “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்.” (வெளி. 14:7) யெகோவாவுக்கான பயத்தால், தனி நபராகவும் ஓர் அமைப்பாகவும் எந்தெந்த விதங்களில் நன்மை அடையலாம் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
பயம் என்பது கவலைப்படுவதையும் தைரியத்தை இழப்பதையும் கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்ப்பட மனமில்லாதிருப்பதையும் அர்த்தப்படுத்தினாலும், பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘யெகோவாவுக்கு பயப்படுகிறவன் சந்தோஷமுள்ளவன்.’ (சங். 128:1, NW) மெய் வணக்கத்தின் நிமித்தம் எதிர்ப்படும் சவால்களை வெற்றிகரமாக எவ்வாறு சமாளிக்கலாம் என்பது மாநாட்டு நிகழ்ச்சிகளில் எடுத்துரைக்கப்படும். கடவுளிடம் அப்படிப்பட்ட ஆரோக்கியமான பயத்தை வளர்க்க புதியவர்களுக்கு உதவும் விதத்தை நாம் கற்றுக்கொள்வோம்; இந்தப் பயமே முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் அவரை சேவிக்க அவர்களை உண்மையில் உந்துவிக்கும். (மாற். 12:30) “நீங்கள் நேசிப்போரிடம் நெருங்கி வாருங்கள்” என்ற தலைப்பில் கொடுக்கப்படும் மாவட்ட கண்காணியின் பேச்சுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடையும். யெகோவாவிடமிருந்து, குடும்பத்தாரிடமிருந்து, நம் கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து நம்மை பிரிப்பதற்கு பிசாசு செய்யும் சதித்திட்டங்களைக் குறித்து விழிப்புடன் இருப்பது எவ்வாறு என அவர் விளக்குவார்.
“யெகோவாவுக்கு பயப்படுங்கள், மனிதனுக்கு அல்ல” என்பதே இரண்டாம் நாளில் நான்கு பகுதிகளாக கொடுக்கப்படும் தொடர்பேச்சின் தலைப்பு. நம் ஊழியத்தை முழுமையாய் செய்து முடிப்பதிலிருந்து, அல்லது பள்ளியிலும் வேலை பார்க்கும் இடத்திலும் உத்தமத்தையும் சுத்த மனசாட்சியையும் காத்துக்கொள்வதிலிருந்து நம்மை தடுக்கும் எந்த விதமான பயத்தையும் மேற்கொள்வது எப்படி, ஏன் என்பது அப்பேச்சில் விளக்கப்படும். “தேவனுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் கொடுக்கப்படும் பொதுப் பேச்சு, வெளிப்படுத்துதல் 14-ம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள வரிசையான சம்பவங்களின் அடிப்படையில் இருக்கும். “யெகோவாவுக்கு பயப்படும் பயத்தில் தொடர்ந்து நடவுங்கள்” என்ற உற்சாகமூட்டும் அறிவுரையுடன் இந்த வட்டார மாநாடு நிறைவடையும்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி, மாதிரி ஊழியக் கூட்டம், முழுக்காட்டுதல் பேச்சு, காவற்கோபுர சுருக்கம் ஆகியவையும் இம்மாநாட்டின் விசேஷ அம்சங்களாகும்; நீங்கள் இவற்றையும் தவறவிட விரும்ப மாட்டீர்கள். உங்களோடு பைபிள் படிப்பவர்களையும் உங்களுடன் மாநாட்டில் கலந்துகொள்ள அழையுங்கள். முழுக்காட்டுதல் பெற விரும்புவோர் கூடிய சீக்கிரம் அதை நடத்தும் கண்காணிக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாமனைவரும் யெகோவாவிடம் ஆரோக்கியமான பயத்தைக் காட்ட விரும்புவோம்; எதையும் தவற விடாமல் சிறப்பு வாய்ந்த இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அவருக்கே மகிமை செலுத்த விரும்புவோம்!