உத்தம முதியவர்களை நினைவில் வையுங்கள்
1 அன்னாள் ஒரு விதவை, 84 வயதான மூதாட்டி; எனினும் “தேவாலயத்தை விட்டு நீங்காமல்” இருந்தார். அவருடைய உத்தமத்தைக் கண்டு யெகோவா அவருக்கு விசேஷித்த பாக்கியத்தை அளித்தார். (லூக். 2:36-38) இன்று அநேக சகோதர சகோதரிகள் கஷ்டமான சூழ்நிலைமைகளில் இருந்தாலும் அன்னாளின் மனநிலையை வெளிக்காட்டுகிறார்கள். அத்தகைய உத்தமர்கள் உடல்நல பிரச்சினைகளோடு அல்லது முதுமையின் குறைபாடுகளோடு போராடுகையில், சிலசமயங்களில் சோர்வினால் துவண்டு போவதுண்டு. சிறந்த ஆவிக்குரிய நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபட அவர்களை உற்சாகப்படுத்தவும், உதவிக்கரம் நீட்டவும் வாய்ப்பளிக்கும் சில நடைமுறையான வழிகளை நாம் கலந்தாராயலாம்.
2 கூட்டங்களும் ஊழியமும்: மற்றவர்கள் அன்புடன் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கையில், அநேக உத்தமமுள்ள முதியவர்கள் சிரமமின்றி கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் வர முடியலாம். இந்த நீண்ட கால உத்தம ஊழியர்களை இது ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதோடு சபைக்கும் பயனளிப்பதாய் இருக்கும். இந்த அருமையான உதவியை நீங்கள் எப்போதாவது அளித்திருக்கிறீர்களா?—எபி. 13:16.
3 தவறாமல் ஊழியத்தில் கலந்துகொள்வது உண்மை கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. ஆனால் வயதானவர்களுக்கும் சுகவீனமுள்ளவர்களுக்கும் அது முடியாத காரியம். ஊழியம் செய்யும்போது அந்த அன்பானவர்களில் ஒருவரை, ‘உடன் வேலையாளாக’ உங்களுடன் அழைத்துச் செல்ல முடியுமா? (ரோ. 16:3, 9, 21) டெலிபோன் மூலம் சாட்சி கொடுக்கும் போது அல்லது மறுசந்திப்புக்கோ பைபிள் படிப்புக்கோ செல்லும்போது உங்களுடன் அவரை அழைத்து செல்லலாம். அந்த வயதானவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவராக இருந்தால், உங்கள் பைபிள் மாணாக்கர் படிப்புகளுக்காக அவருடைய வீட்டுக்கு வர முடியுமா?
4 படிப்பும் கூட்டுறவும்: வயதானவரை அல்லது சுகவீனமுள்ளவரை தங்களுடன் குடும்ப படிப்பில் கலந்துகொள்ள அவ்வப்போது சிலர் அழைக்கிறார்கள்; அப்படிப்பை அவருடைய வீட்டிலேயே நடத்துகிறார்கள். என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து தன்னுடைய இரு குழந்தைகளுக்கு பைபிள் படிப்பை நடத்த ஒரு தாய் அவர்களை வயதான சகோதரி ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்; அந்தக் கூட்டுறவை அனைவரும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். உணவருந்த அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அப்படிப்பட்டவர்களை அழைக்கையில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். இப்படி நீண்ட நேரம் பொழுதைக் கழிக்க முடியாதளவு அவர்கள் பலவீனமாக இருந்தால் அவர்களுடன் டெலிபோனில் பேசலாம், அல்லது நேரில் சென்று அவர்களுக்கு எதையாவது கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டலாம், அவர்களுடன் சேர்ந்து ஜெபிக்கலாம், அல்லது ஊக்கமளிக்கும் அனுபவம் ஒன்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.—ரோ. 1:10, 11.
5 உத்தம முதியவர்களை யெகோவா பொக்கிஷமாய் கருதுகிறார். (எபி. 6:10, 12) அவர்களுக்கு போற்றுதலை தெரிவிப்பதன் மூலமும் சிறந்த ஆவிக்குரிய நடவடிக்கைகளில் அவர்கள் தவறாமல் ஈடுபட உதவுவதன் மூலமும் நாமும் யெகோவாவைப் பின்பற்றலாம்.