யெகோவாவை துதிப்பதற்காக ஒன்றுகூடி வருதல்
1 யெகோவா சர்வவல்லவர், அளவிட முடியாதளவுக்கு ஞானமுள்ளவர், பரிபூரண நீதியுள்ளவர், அதோடு அன்பே உருவானவர். அவர் சிருஷ்டிகராக, உயிர் கொடுப்பவராக, சர்வலோக பேரரசராக இருப்பதால் அவர் ஒருவரே நம் வணக்கத்திற்கு பாத்திரர். (சங். 36:9; வெளி. 4:11; 15:3, 4) அவர் ஒருவருக்கே துதி செலுத்த வேண்டும் என்ற நம் தீர்மானத்தை, இவ்வருடத்தின் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடு திடப்படுத்தும்.—சங். 86:8-10.
2 சரியாக திட்டமிடுவது அவசியம்: யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் ஆவிக்குரிய விருந்திலிருந்து நாம் முழு நன்மையடைவதற்கு சரியாக திட்டமிடுவது அவசியம். (எபே. 5:15, 16) தங்குவதற்கு இடம், போக்குவரத்து, வேலையிலிருந்தோ பள்ளியிலிருந்தோ லீவு ஆகியவற்றை ஏற்பாடு செய்துவிட்டீர்களா? இந்த முக்கியமான காரியங்களை கடைசி நிமிடம் வரைக்கும் தள்ளிப்போடாதீர்கள். லீவு கேட்பதை நீங்கள் தள்ளிப்போட்டீர்கள் என்றால் இந்த சந்தோஷ நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பாகத்தை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் நாம் எல்லாருமே ஆஜராயிருப்பது அவசியம்.
3 ஒவ்வொரு நாளும் மாநாட்டு மன்றத்திற்கு சீக்கிரமே வருவதை உங்கள் இலக்காக வையுங்கள். இப்படி சீக்கிரம் வருவது, ஆரம்ப பாட்டு தொடங்கும் முன்பே நம் இருக்கைகளில் அமருவதற்கும், கொடுக்கப்படும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதற்கு சரியான மனநிலையில் இருப்பதற்கும் நமக்கு உதவும். ஒவ்வொரு நாளும் காலை 8:00 மணிக்கு மன்றம் திறக்கப்படும். உங்கள் குடும்ப அங்கத்தினருக்கும் உங்களோடு பயணித்தவர்களுக்கும் தவிர மற்றவர்களுக்காக இருக்கைகளை தயவுசெய்து பிடித்து வைக்காதீர்கள்.
4 மதிய இடைவேளையின்போது, உணவுக்காக மாநாட்டு மையத்தை விட்டு வெளியே போய் சாப்பிடுவதற்கு பதிலாக எல்லாரும் அவரவர் உணவை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இந்த ஏற்பாட்டிற்கு நீங்கள் ஒத்துழைத்தால் ஒரு அமைதியான சூழலை அனுபவிக்க முடியும்; அதோடு, சகவிசுவாசிகளோடு கூட்டுறவு கொள்ள அதிக நேரமும் கிடைக்கும். (சங். 133:1-3) கண்ணாடி பாட்டில்களோ மதுபானங்களோ மாநாட்டு மன்றத்தில் அனுமதிக்கப்படாது என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வையுங்கள்.
5 கேட்டு கற்றுக்கொள்ளுங்கள்: கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள எஸ்றா தன் இருதயத்தை ஜெப சிந்தையுடன் பக்குவப்படுத்தினார். (எஸ்றா 7:10) யெகோவாவின் போதனைகளை கேட்பதற்கான மனச்சாய்வைக் கொண்டிருந்தார். (நீதி. 2:1) நாமும், வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே மாநாட்டின் மையக்கருத்தைப் பற்றி தியானிப்பதன் மூலமும் குடும்பத்தோடு அதை கலந்தாலோசிப்பதன் மூலமும் மாநாட்டிற்காக நம் இருதயங்களை தயார் செய்து கொள்ளலாம்.
6 ஒரு பெரிய ஆடிட்டோரியத்தில், ஏராளமான காட்சிகளும் சத்தங்களும் நம் கவனத்தை சிதறடிக்கலாம். அத்தகைய கவனச்சிதறல்கள் பேச்சாளர் சொல்லும் விஷயங்களிலிருந்து நம் மனதை எளிதில் திசை திருப்பிவிடலாம். அப்படி நடக்கும்போது, மதிப்புமிக்க விஷயங்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும். இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் காணப்படும் ஆலோசனைகள் இன்னுமதிக உன்னிப்புடன் கவனிக்க நமக்கு உதவும்.
7 மற்றவர்களுக்கு கரிசனை காட்டுங்கள்: நிகழ்ச்சியின்போது காமராக்களையும் சிறிய வீடியோ காமராக்களையும் உபயோகிக்கலாம்; ஆனால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காதவாறு உங்கள் இருக்கைகளிலிருந்தே அவற்றை உபயோகப்படுத்துங்கள். செல் போன்களும் பேஜர்களும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத விதத்தில் செட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும் சில இடங்களில், நிகழ்ச்சி நடைபெறுகையில் சிலர் மாநாட்டு வளாகங்களில் இங்குமங்குமாய் உலாவுவதால் மற்றவர்களையும் சரிவர கவனிக்க விடாமல் திசைதிருப்பியிருக்கின்றனர். இன்னும் சிலர் தாமதமாக வருவதால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சொல்லப்படும் விஷயங்களை மற்றவர்கள் சரிவர கேட்க முடியாமல் செய்திருக்கின்றனர். தயவுசெய்து அட்டெண்டன்ட்டுடன் ஒத்துழையுங்கள்; சேர்மன் அறிவிக்கையில் உங்கள் இருக்கைகளில் உட்காருங்கள்.
8 யெகோவாவை துதிப்பதற்காக ஒன்றுகூடி வருவதை நாம் எவ்வளவு ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்! ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆஜராயிருப்பதன் மூலமும், கவனமாக கேட்பதன் மூலமும், கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலமும் அவரை மகிமைப்படுத்த தீர்மானமுள்ளவர்களாய் இருப்போமாக.—உபா. 31:12.
[கேள்விகள்]
1. மாநாட்டின் மையக்கருத்து என்ன, நம் துதியை பெற்றுக்கொள்ள யெகோவா ஏன் பாத்திரர்?
2, 3. சரியாக திட்டமிடுவது எவ்வாறு முழு நன்மையடைய நமக்கு உதவும்?
4. மாநாட்டிற்கு வரும்போதே எல்லாரும் அவரவர் மதிய உணவை கொண்டுவர ஏன் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்?
5. மாநாட்டிற்காக நம் இருதயங்களை எவ்வாறு தயார் செய்ய ஆரம்பிக்கலாம்?
6. நிகழ்ச்சியை தொடர்ந்து உன்னிப்பாக கவனிப்பதற்கு எது நமக்கு உதவும்? (பெட்டியை காண்க.)
7, 8. மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு கரிசனை காட்டலாம், நம் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 1-ன் பெட்டி]
மாநாடுகளின்போது உன்னிப்பாக கவனித்தல்
▪ பேச்சுத் தலைப்புகளைப் பற்றி ஆழ்ந்து யோசியுங்கள்
▪ வசனங்களை எடுத்துப் பாருங்கள்
▪ சுருக்கமாக குறிப்பெடுங்கள்
▪ கடைப்பிடிக்க வேண்டியவற்றை விசேஷமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
▪ கற்றுக்கொண்டவற்றை மறுபார்வை செய்யுங்கள்