‘நாம் ஒருமித்து அவர் நாமத்தை துதிப்போமாக’
1 ‘என்னோடே கூட யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக [அதாவது துதிப்போமாக]’ என சங்கீதக்காரன் பாடினார். (சங். 34:3) “கடவுளோடு நடவுங்கள்” என்ற தலைப்பில் நடக்கப்போகும் மாவட்ட மாநாடு, பல சபைகளைச் சேர்ந்த நம் சகோதர சகோதரிகளுடன் ஒருமித்து யெகோவாவின் பெயரை துதிப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும். தங்குமிடங்களுக்கும், பிரயாணத்திற்கும், வேலையிலிருந்து விடுப்பு எடுப்பதற்கும் நீங்கள் ஏற்பாடுகளை செய்துவிட்டீர்களா? இவற்றிற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்வது நல்லது.—நீதி. 21:5.
2 மாநாட்டு வளாகத்திற்கு வருதல்: மாநாட்டிற்காக செல்லும்போது அநேக காரியங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சீக்கிரமாகவே புறப்படுவது எதிர்பாராமல் ஏற்படும் காலதாமதங்களை சமாளிக்க உதவுகிறது, அதுமட்டுமல்ல, முன்பாகவே நம் இருக்கைகளை கண்டுபிடித்து அமர முடிவதால் ஆரம்ப பாட்டிலும் ஜெபத்திலும் முழு இருதயத்துடன் பங்கெடுக்கவும் உதவுகிறது. (சங். 69:30) டுலியாஜான், புது டெல்லி, போர்ட் ப்ளேயர், செகந்திராபாத் ஆகிய இடங்களில் நடைபெறும் மாநாடுகளில் கலந்துகொள்ள திட்டமிடுபவர்கள் இருதயப்பூர்வமாக பாடுவதற்கு தங்களது மொழியிலுள்ள பாடல் சிற்றேட்டை (sb-29) எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மாநாடுகளில் பாடவிருக்கும் பாடல்கள் அனைத்தும் இந்த சிற்றேட்டிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ராஜ்ய இன்னிசை இசைக்கப்படுகையில் சேர்மன் மேடையில் அமர்ந்திருப்பார். அந்தச் சமயத்தில் நாமனைவரும் நம் இருக்கைகளில் அமர வேண்டும்; கண்ணியமான முறையில் நிகழ்ச்சியை ஆரம்பிக்க இது பொருத்தமானது. (1 கொ. 14:33, 40) டுலியாஜான், ஐஜால் ஆகிய இடங்களில் நடைபெறும் மாநாடுகளில் எல்லா நாட்களிலும் நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். மாநாட்டிற்கு வருவோர் இருட்டுவதற்கு முன்பு வீடு திரும்ப உதவுவதற்கே இந்த ஏற்பாடு.
3 இந்த வருடம் இந்தியாவில் நிகழும் மாவட்ட மாநாடுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பெரியளவில் மாநாடுகள் நடத்துவதற்கே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிலர் அதிகளவு பயணிக்க வேண்டியிருக்கலாம், செலவும் அதிகமாகலாம். ஆனாலும் அநேக சகோதரர்களுடன் கூட்டுறவு கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும், அத்துடன் தரமான நிகழ்ச்சியையும் அனுபவித்து மகிழ்வோம். இத்தகைய பெரிய மாநாடுகள் சமுதாயத்தினருக்கு சிறந்த சாட்சியாகவும் அமையும். எனவே யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்காக ஜெபியுங்கள், ஊக்கமாக முயற்சி எடுங்கள், மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பணத்தை சேமியுங்கள், விடுப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
4 “உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது” என கடவுளுடைய வார்த்தை நமக்கு புத்திமதி சொல்கிறது. (1 கொ. 16:14) மற்றவர்கள் மீது நமக்குக் கரிசனை இருந்தால், காலை 8:00 மணிக்கு மன்றத்தின் கதவை திறந்தவுடன் நமக்கு விருப்பமான இருக்கைகளைப் பிடிப்பதற்காக எல்லாருக்கும் முன்பாக ஓட மாட்டோம், இடித்து நெருக்க மாட்டோம், தள்ள மாட்டோம். உங்கள் வீட்டில் உங்களுடன் வசிப்பவர்களுக்கு அல்லது உங்களுடன் பைபிள் படிப்பவர்களுக்கு மட்டுமே நீங்கள் இருக்கைகளை பிடித்து வைக்கலாம்.—1 கொ. 13:5; பிலி. 2:4.
5 மதிய வேளையில் மாநாட்டு வளாகத்திலிருந்து வெளியே போய் உணவை சாப்பிடுவதற்கு பதிலாக தயவுசெய்து எளிய மதிய உணவை எடுத்து வாருங்கள். இது ஊக்கமூட்டும் கூட்டுறவை அனுபவிக்கவும், பிற்பகல் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதற்கொண்டே அங்கிருக்கவும் வழிசெய்யும். மாநாட்டில் சாப்பிடுவதற்காக வீட்டில் சகோதரிகள் நிறைய உணவு வகைகளைத் தயாரித்து எடுத்து வரும்படி குடும்பத்தாரும் மற்றவர்களும் எதிர்பார்ப்பது அன்பற்ற செயலாகும். சகோதரிகள் அப்படி சமைக்கையில் மாநாட்டிற்கு வரும்போது களைப்படைந்து, நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவது கடினமாகிவிடுகிறது. மதுபானங்கள் மாநாட்டு வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது.
6 நமக்கு ஆவிக்குரிய விருந்து காத்திருக்கிறது: யோசபாத் ராஜா ‘தேவனைத் தேட அவருடைய இருதயத்தை நேராக்கினார் [அதாவது தயார்படுத்தினார்].’ (2 நா. 19:3) நாமும் நம் இருதயத்தை மாநாட்டிற்கு முன்பாக எப்படி தயார்படுத்த முடியும்? அக்டோபர் 8 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகைகளின் கடைசி பக்க கட்டுரைகள், நாம் அனுபவிக்கப் போகும் ஆவிக்குரிய விருந்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவுகின்றன. இந்தக் கட்டுரைகளைக் குறித்து சிந்திக்கவும், நமக்காக யெகோவா ஏற்பாடு செய்திருப்பவற்றிடம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளவும் நாம் ஏன் நேரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது? மாநாட்டில் நாம் பெறப்போகும் அறிவுரைகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைப் பின்பற்றவும் நமக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபிப்பதும்கூட நம்முடைய இருதயத்தை தயார்படுத்துவதில் உட்பட்டுள்ளது.—சங். 25:4, 5.
7 கடவுளுடைய வார்த்தையிலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ள நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம்; ஏனென்றால், அதன் மூலமாகவே நாம் இரட்சிப்பை நோக்கி முன்னேற முடியுமென அறிந்திருக்கிறோம். (1 பே. 2:3) எனவே, “கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வோமாக, ‘ஒருமித்து யெகோவாவின் நாமத்தை துதிப்போமாக.’—சங். 34:3.
[கேள்விகள்]
1. ஒருமித்து கடவுளுடைய பெயரை துதிப்பதற்கு நமக்கு என்ன வாய்ப்பிருக்கிறது, அதற்கு தயாராகும் வகையில் இப்போது நாம் என்ன செய்யலாம்?
2. மாநாட்டு வளாகத்திற்கு முன்னதாகவே வர திட்டமிடுவது ஏன் பயனுள்ளது?
3. இந்த வருடம் ஏன் பெரியளவில் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
4. இருக்கைகளைப் பிடிப்பதில் நாம் எப்படி மற்றவர்கள் மீது கரிசனை காட்டலாம்?
5. மதிய இடைவேளைக்கான ஏற்பாடுகள் யாவை, இது ஏன் பயனுள்ளது?
6. நாம் பெறப்போகும் அறிவுரைகளுக்காக நம்முடைய இருதயத்தை எப்படி தயார்படுத்த முடியும்?
7. நாம் எதற்கு ஆசைப்படுகிறோம், ஏன்?
[பக்கம் 3-ன் பெட்டி]
கடவுளுடைய பெயரை துதிப்பதற்கான வழிகள்
◼ முன்கூட்டியே திட்டமிடுங்கள்
◼ மற்றவர்கள் மீது அன்பு காட்டுங்கள்
◼ உங்கள் இருதயத்தை தயார்படுத்துங்கள்