முக்கிய மருத்துவ முறையை சிறப்பித்துக்காட்டும் வீடியோ
சட்ட நிபுணர்களும் உடல்நல நிபுணர்களும் சிகிச்சை பெறுகிற நோயாளிகளின் நன்னெறி சார்ந்த கருத்துகளுக்கும் உரிமைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் புதுப்புது சிகிச்சை முறைகளும் உத்திகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இவற்றிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் பயனடையலாம். (அப். 15:28, 29) உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோவில் இவையே இடம்பெறுகின்றன. இந்த வீடியோவைப் பாருங்கள், பின்னர் நீங்கள் கற்றுக்கொண்டதை மறுபார்வை செய்யுங்கள்.—குறிப்பு: வீடியோவில் அறுவை சிகிச்சை செய்யும் சில காட்சிகள் வருவதால் குழந்தைகளுடன் இந்த வீடியோவைப் பார்க்கும் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
(1) இரத்தமேற்றுதலைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் மறுமதிப்பீடு செய்வது ஏன்? (2) இரத்தமேற்றாமல் செய்யப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு மூன்று உதாரணங்களைக் கொடுங்கள். (3) உலகெங்கும் எத்தனை மருத்துவர்களும் அறுவை மருத்துவர்களும் இரத்தமேற்றாமல் சிகிச்சை அளிக்க தாங்கள் முன்வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்? அதற்கு காரணம் என்ன? (4) இரத்தத்தைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்திய மருத்துவமனை ஆய்வுகள் என்ன காட்டுகின்றன? (5) இரத்தமேற்றுதலில் என்னென்ன ஆபத்துகள் உட்பட்டுள்ளன? (6) இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக பிற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதால் என்ன பலன்கள் கிடைக்குமென நிபுணர்கள் பலர் கண்டிருக்கிறார்கள்? (7) இரத்த சோகை ஏன் ஏற்படுகிறது? இதை எந்தளவுக்கு உடல் தாக்குப்பிடிக்கும்? இதை சரிக்கட்ட என்ன செய்யலாம்? (8) நோயாளியின் உடலில் சிகப்பணு உற்பத்தி எப்படி தூண்டுவிக்கப்படலாம்? (9) அறுவை சிகிச்சையின்போது இரத்தம் வீணாவதைக் குறைப்பதற்கு என்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? (10) குழந்தைகளுக்கும் உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளவர்களுக்கும் இரத்தமேற்றுவதற்கு பதிலாக பிற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவது பலனளிக்குமா? (11) சிறந்த சிகிச்சைக்குரிய முக்கிய தார்மீக நெறிகளில் ஒன்று எது? (12) இரத்தமில்லா சிகிச்சை முறையை கிறிஸ்தவர்கள் முன்கூட்டியே தெரிவுசெய்வது ஏன் முக்கியம்? இதை நாம் எப்படி செய்யலாம்?
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வது பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய மனசாட்சிக்கும் விடப்படும் தனிப்பட்ட தீர்மானமாகும். இரத்தமேற்றுதலுக்குப் பதிலான மாற்று சிகிச்சை முறைகளில் எதை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தெரிவு செய்வது என்பதை தீர்மானித்துவிட்டீர்களா? சாட்சிகளாக இல்லாதிருக்கும் குடும்பத்தாரிடம்கூட உங்கள் தீர்மானங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் தெள்ளத் தெளிவாக தெரிவிப்பது அவசியம்.—காவற்கோபுரம், 2000, ஜூன் 15-லும் அக்டோபர் 15-லும் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.