தள்ளிப் போடுகிறீர்களா?
எதை? முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்குக் கொடுக்கப்படுகிற DPA (உடல்நலப் பராமரிப்பிற்குரிய நிரந்தர அதிகாரப் பத்திரம்) அட்டையைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடுகிறீர்களா? ‘நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாததால்’ மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது எப்படிப்பட்ட சிகிச்சைகளையும் மருத்துவ முறைகளையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அவற்றை எழுத்தில் குறிப்பிடுவது முக்கியம். (யாக். 4:14; அப். 15:28, 29) இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக, உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளோடு ஜெபத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.—குறிப்பு: இந்த வீடியோவில் அறுவைச் சிகிச்சை செய்யும் சில காட்சிகள் வருவதால், சிறு பிள்ளைகள் இதைப் பார்ப்பதா வேண்டாமா என்பதை பெற்றோர் தீர்மானிக்க வேண்டும்.
(1) இரத்தமேற்றுதலைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் சிலர் மறுமதிப்பீடு செய்வது ஏன்? (2) இரத்தமேற்றாமல் செய்யப்பட்டிருக்கிற சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு மூன்று உதாரணங்களைக் கொடுங்கள். (3) உலகெங்கும் எத்தனை மருத்துவர்களும் அறுவை மருத்துவர்களும் இரத்தமேற்றாமல் சிகிச்சை அளிக்க தாங்கள் முன்வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்? அதற்குக் காரணம் என்ன? (4) இரத்தத்தைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்திய மருத்துவமனை ஆய்வுகள் என்ன காட்டுகின்றன? (5) இரத்தமேற்றுதலில் என்னென்ன ஆபத்துகள் உட்பட்டுள்ளன? (6) இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக பிற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதால் என்ன பலன்கள் கிடைக்குமென நிபுணர்கள் பலர் கண்டிருக்கிறார்கள்? (7) இரத்த சோகை ஏன் ஏற்படுகிறது? இதை எந்தளவுக்கு உடல் தாக்குப்பிடிக்கும்? இதைச் சரிக்கட்ட என்ன செய்யலாம்? (8) நோயாளியின் உடலில் சிகப்பணு உற்பத்தி எப்படித் தூண்டுவிக்கப்படலாம்? (9) அறுவை சிகிச்சையின்போது இரத்தம் வீணாவதைக் குறைப்பதற்கு என்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? (10) குழந்தைகளுக்கும் உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளவர்களுக்கும் இரத்தமேற்றுவதற்குப் பதிலாக பிற சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவது பலன் அளிக்குமா? (11) சிறந்த சிகிச்சைக்குரிய முக்கிய தார்மீக நெறிகளில் ஒன்று எது? (12) இரத்தமில்லா சிகிச்சை முறையைக் கிறிஸ்தவர்கள் முன்கூட்டியே தெரிவுசெய்வது ஏன் முக்கியம்? இதை நாம் எப்படிச் செய்யலாம்?
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வது பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய மனசாட்சிக்கும் விடப்படும் தனிப்பட்ட தீர்மானமாகும். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எந்த சிகிச்சைகளையும் மருத்துவ முறைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானித்துவிட்டீர்களா? இந்த விஷயங்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு காவற்கோபுரம், ஜூன் 15, 2004 மற்றும் அக்டோபர் 15, 2000-லுள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியையும் நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலுள்ள “இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும்பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?” என்ற பகுதியையும் பாருங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உடல்நல பராமரிப்பு முகவரிடமும் சாட்சிகளல்லாத குடும்பத்தாரிடமும் உங்கள் தீர்மானங்களைத் தெள்ளத் தெளிவாக தெரிவிப்பது அவசியம்.