ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவு
1 ‘உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப் பண்ணுவேன்’ என சர்வலோக பேரரசராகிய யெகோவா சொல்கிறார். (எசே. 36:29) இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இன்று கடவுளுடைய ஜனங்களுக்குப் பொருந்துகின்றன. அடையாள அர்த்தத்தில், தம்முடைய ஜனங்களுக்காக யெகோவா உயிரைக் காக்கும் தானியத்தை ஏராளமாக விளைய செய்திருக்கிறார். நம் மாவட்ட மாநாடுகளில் பகிர்ந்தளிக்கப்படும் காலத்துக்கேற்ற ஆவிக்குரிய உணவு இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறது.
2 ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் 1931-ல் நடைபெற்ற மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயரை தங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி தம் வணக்கத்தாரை யெகோவா வழிநடத்தினார். (ஏசா. 43:10-12) 1935-ல், வெளிப்படுத்துதல் 7:9-17-ல் குறிப்பிடப்பட்டுள்ள திரள் கூட்டத்தார் சரியாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள். 1942-ல், “சமாதானம்—அது நிலைக்குமா?” என்ற பேச்சை சகோதரர் நார் கொடுத்தார். இந்தப் பேச்சு உலகளாவிய பிரசங்க வேலையைத் தூண்டுவித்து, உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. முக்கியமாய் சில மாநாடுகள் மனதைவிட்டு அகலாத அளவுக்கு முத்திரை பதித்தாலும் எல்லா மாநாட்டிலுமே போஷாக்குமிக்க, காலத்துக்கேற்ற ஆவிக்குரிய உணவு ஏராளம் பரிமாறப்படுகிறது.—சங். 23:5; மத். 24:45.
3 சாப்பிட்டு ஊட்டம் பெறுகிறீர்களா? சுற்றிலும் உணவிருக்க, அதை சாப்பிட முயற்சி எடுக்காவிட்டால் ஊட்டக்குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (நீதி. 26:15) ஆவிக்குரிய அர்த்தத்திலும் இது உண்மையே. நிகழ்ச்சி நடைபெறுகையில் அநேகர் தேவையில்லாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருப்பது அல்லது மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது சில மாநாடுகளில் கவனிக்கப்பட்டிருக்கிறது. மாநாடுகளில் ஊக்கம்தரும் கூட்டுறவு முக்கியமானதாக இருந்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் அதற்கென நேரமிருக்கிறது. (பிர. 3:1, 7) நம் இருக்கைகளில் அமர்ந்து கூர்ந்து கவனிக்காவிட்டால் ஏதாவதொரு முக்கிய குறிப்பை நாம் தவறவிட்டுவிடலாம். பயணமும் உஷ்ணமும் சேர்ந்து ஓரளவு தூக்க மயக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இரவில் போதியளவு தூங்குவது மறுநாள் விழித்திருக்கவும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தவும் நமக்கு உதவும். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கையில், மாநாட்டு இலாகா கண்காணிகளும் நியமிப்புகள் உள்ள சகோதரர்களும் மாநாட்டு விஷயங்களைக் குறித்து சில சமயங்களில் பேச வேண்டியிருக்கலாம். அப்படி தேவை ஏற்படாவிட்டால், நிகழ்ச்சியை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவர்கள் முன்மாதிரி வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் முடிவு ஜெபம் வரை எல்லாரும் அங்கிருக்க வேண்டும். அளிக்கப்படும் எந்த ஆவிக்குரிய உணவையும் நாம் யாரும் தவறவிடக் கூடாது.—1 கொ. 10:12; பிலி. 2:12.
4 கிறிஸ்தவமண்டலத்தின் பொய் மத போதகங்களோடு ஒப்பிட யெகோவா அளிக்கும் ஏராளமான ஆவிக்குரிய சத்தியங்களில் நாம் எவ்வளவாய் சந்தோஷப்படுகிறோம்! (ஏசா. 65:13, 14) யெகோவாவால் போதிக்கப்படுவதற்கான வாய்ப்பாக மாநாட்டை கருதுவது, நாம் ‘நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்பதைக்’ காட்டுவதற்கான ஒரு வழியாகும். (கொலோ. 3:15) பேச்சு கொடுக்கும் சகோதரரை அல்ல, ஆனால் அவர் சொல்லும் விஷயத்தைக் கவனியுங்கள், அந்த செய்தி நமது ‘மகத்தான போதகரிடமிருந்து’ வருவதாக கருதுங்கள். (ஏசா. 30:20, NW, 21; ஏசா. 54:13) மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்துங்கள். முக்கிய குறிப்புகளை சுருக்கமாக எழுதிக் கொள்வதன் முக்கியத்துவத்தை மனதில் வையுங்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் நிகழ்ச்சியின் சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்வதற்கு மட்டுமல்லாமல் பின்னர் ஊழியக் கூட்டத்தில் அட்டவணையிடப்பட்டுள்ள வாய்முறை மறுபார்வையில் கலந்துகொள்ளவும் உதவும். நீங்கள் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள்.
5 அர்மகெதோனுக்கு முன்பாக நடக்கும் ஒவ்வொரு மாநாடும், அது அகதிகள் முகாமில் நடந்தாலும் சரி, போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் நடந்தாலும் சரி, அதிக சமாதானமிக்க சூழலில் பெரிதளவில் நடந்தாலும் சரி, அது சாத்தானின் மீது பெறும் வெற்றியாகும்! ஐக்கியப்பட்ட சகோதரத்துவமாக, மாவட்ட மாநாடுகளில் ஒன்றாக கூடிவரும் வாய்ப்புகளை நாம் மனதார போற்றுகிறோம். (எசே. 36:38) மீண்டும் யெகோவா அன்போடு ‘தகுதியான காலத்திலே படிகொடுப்பார்’ என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.—லூக். 12:42.
[கேள்விகள்]
1. இன்று எசேக்கியேல் 36:29 எவ்வாறு நிறைவேற்றமடைகிறது?
2. ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை பகிர்ந்தளிக்க மாவட்ட மாநாடுகளை யெகோவா எப்படி பயன்படுத்தி வந்திருக்கிறார்?
3. நம் மாவட்ட மாநாட்டின் ஆவிக்குரிய விருந்திலிருந்து பயனடைய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
4. யெகோவா அளிக்கும் ஏராளமான ஆவிக்குரிய உணவுக்காக நாம் எப்படி நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்?
5. சந்தோஷப்படுவதற்கு மாவட்ட மாநாடுகள் நமக்கு என்ன காரணங்களை அளிக்கின்றன?
[பக்கம் 4-ன் பெட்டி]
யெகோவாவின் பந்திக்கு போற்றுதல் காட்டுங்கள்
◼ கூர்ந்து கவனம் செலுத்துங்கள்
◼ முக்கிய குறிப்புகளை எழுதிக் கொள்ளுங்கள்
◼ மாநாட்டு சிறப்புக் குறிப்புகளை ஒவ்வொரு நாள் மாலையிலும் மறுபார்வை செய்யுங்கள்
◼ கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள்