‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் ஊட்டம் பெற்றிருத்தல்’
1 தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ கடும் முயற்சி தேவை. (1 தீ. 4:7-10) நம் சொந்த பலத்தால் அதற்காக முயலுவோமெனில், சீக்கிரமாகவே சோர்ந்துபோய், இடறி விடுவோம். (ஏசா. 40:29-31) அப்படியானால் யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெறுவதற்கு ஒரு வழி, ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் ஊட்டம் பெற்றிருப்பது.’—1 தீ. 4:6, NW.
2 செழுமையான ஆன்மீக உணவு: யெகோவா, தமது வார்த்தை மற்றும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாக செழுமையான ஆன்மீக உணவைத் தருகிறார். (மத். 24:45, NW) அதிலிருந்து பயனடைய நம் பாகத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறோமா? தினந்தோறும் பைபிள் வாசிக்கிறோமா? தனிப்பட்ட படிப்பிற்கும் தியானத்திற்கும் நேரத்தை ஒதுக்கி இருக்கிறோமா? (சங். 1:2, 3) இப்படிப்பட்ட ஆரோக்கியமான ஆன்மீக உணவு நமக்குச் சக்தியளிக்கிறது; சாத்தானின் உலகம் நம்மை பலவீனப்படுத்தி விடாதபடி காக்கிறது. (1 யோ. 5:19) ஆரோக்கியமான காரியங்களால் நம் மனதை நிரப்பி அவற்றை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்தோமெனில், யெகோவா நம்மோடு இருப்பார்.—பிலி. 4:8, 9.
3 சபைக் கூட்டங்களின் மூலமாகவும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். (எபி. 10:24, 25) இக்கூட்டங்களில் பெறும் ஆன்மீக போதனைகளும் ஆரோக்கியமான சகவாசமும் சோதனைகளைச் சந்திக்கையில் நாம் உறுதியாக நிற்பதற்கு உதவுகின்றன. (1 பே. 5:9, 10) ஒரு கிறிஸ்தவ இளம் பெண் கூறினதாவது: “தினமும் நான் ஸ்கூலுக்குப் போகும்போது மனதளவில் சோர்ந்துவிடுகிறேன். ஆனால் கூட்டங்களோ பாலைவனச் சோலையாக இருக்கின்றன. இவை அடுத்த நாள் ஸ்கூலில் எதையும் சமாளிக்கத் தேவையான புத்துணர்ச்சியைத் தருகின்றன.” கூட்டங்களுக்குச் செல்ல நாம் எடுக்கும் முயற்சிக்குத்தான் எவ்வளவு பலன் கிடைக்கிறது!
4 சத்தியத்தை அறிவித்தல்: மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பது இயேசுவுக்கு போஜனம் போலிருந்தது. அது அவருக்குச் சக்தியளித்தது. (யோவா. 4:32-34) அதுபோலவே, கடவுளுடைய அற்புதமான வாக்குறுதிகளைப் பற்றிப் பிறரிடம் பேசுவது நமக்குப் புத்துயிர் அளிக்கிறது. அத்துடன், ஊழியத்தில் படுசுறுசுறுப்பாக ஈடுபடுவது, சீக்கிரத்தில் வரவிருக்கிற ராஜ்யத்தின் மீதும் அதன் ஆசீர்வாதங்களின் மீதும் நம் இருதயத்தையும் மனதையும் ஒருமுகப்படுத்துகிறது. அது உண்மையில் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.—மத். 11:28-30.
5 யெகோவா தம் மக்களுக்கு இன்று அளித்து வரும் செழுமையான ஆன்மீக உணவிலிருந்து ஊட்டம் பெறுகிற நாம், பாக்கியம் பெற்றவர்கள்! எனவே அவருக்குத் துதியுண்டாக தொடர்ந்து மனமகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிப்போமாக.—ஏசா. 65:13, 14.