பைபிளுக்கு அதிக முக்கியத்துவம்!
1 அக்டோபர் 1, 1919-ல் பொற்காலம் (த கோல்டன் ஏஜ்) பத்திரிகை முதன்முதலாக வெளியிடப்பட்டது. அது பிரசங்க வேலைக்கு மிகுந்த பயனளித்தது. ஏன்? ஏனென்றால் அது பொது மக்களுக்கென்றே விசேஷமாக தயாரிக்கப்பட்டது. காவற்கோபுரம் பத்திரிகையோ அப்படியல்ல; அது முக்கியமாக ‘சிறு மந்தைக்காகவே’ தயாரிக்கப்பட்டதாய் பல ஆண்டுகள் கருதப்பட்டது. (லூக். 12:32) புதிதாக வெளியாகிய பொற்காலம் பத்திரிகையை பிரஸ்தாபிகள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார்கள்; சொல்லப்போனால் பல ஆண்டுகளுக்கு அது காவற்கோபுரம் பத்திரிகையைவிட பல மடங்கு அதிகமாக விநியோகமானது.
2 மனித பிரச்சினைகளுக்கான நிரந்தர பரிகாரம் கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியே என்றும் அது மனிதவர்க்கத்துக்கு ஒரு பொற்காலத்தை கண்டிப்பாக கொண்டுவரும் என்றும் மக்களுக்குத் தெரிவிக்கவே பொற்காலம் பத்திரிகை பிரசுரிக்கப்பட்டது. அதன் பிறகு காலத்தின் தேவைகளுக்கு இசைவாக அநேக ஆண்டுகளாக அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1937-ல் அதன் பெயர் ஆறுதல் (கன்சோலேஷன்) என மாற்றப்பட்டது. 1946-ல் விழித்தெழு! என்ற பெயர் சூட்டப்பட்டது, இன்று வரை அதுவே அதன் பெயர்.
3 1919 முதல் நடந்துவரும் பிரமாண்டமான பிரசங்க வேலைக்கு இந்த விழித்தெழு! பத்திரிகை பெருமளவு பங்களித்திருக்கிறது. (மத். 24:14) இருந்தாலும், நம்முடைய காலங்களின் அவசரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பத்திரிகை சம்பந்தமாக மேலும் சில மாற்றங்களை செய்வது ஞானமானதாக தோன்றுகிறது.
4 ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில், ஆன்மீகம் சாராத பலதரப்பட்ட பொதுவான தலைப்புகளின் பேரில் விழித்தெழு! கட்டுரைகளை பிரசுரிக்கிறது; ஆகவே லட்சக்கணக்கானவர்கள் அதை வாசித்து மகிழ்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்புக்கு வருபவர்களில் பெரும்பான்மையானோர் விழித்தெழு! வாசகர்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் ‘யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே’ மறைக்கப்பட விரும்பும் எவரும், நம் பிரசுரங்களை தவறாமல் வாசித்து வருவது மட்டுமல்லாமல் இன்னும் அதிகத்தைச் செய்ய வேண்டும்; அதற்கு அவர்களுக்கு உதவி தேவை.—செப். 2:3; வெளி. 14:6, 7.
5 ஆகவே ஜனவரி 2006 முதற்கொண்டு, விழித்தெழு! பத்திரிகை கடவுளுடைய ராஜ்யத்தை அதிகமாக சிறப்பித்துக் காட்டும். அது, பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக பைபிளைப் பார்க்கும்படி நேரடியாகவே வாசகர்களை உற்சாகப்படுத்தும்; தற்போதைய சம்பவங்களைப் பற்றி பைபிள் தரும் விளக்கத்தை முக்கியமாக எடுத்துக் காட்டும். இவ்வகையில், தற்போதைய சம்பவங்களைப் பற்றி வாசகர்கள் இன்னும் அதிகம் புரிந்துகொள்வார்கள்; மேலும், யெகோவாவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள தூண்டப்படுவார்கள்.—செக். 8:23.
6 பொதுவான தலைப்புகளில் விழித்தெழு! தொடர்ந்து கட்டுரைகளை வெளியிடும். ஆனால் பைபிளுக்கே அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கும். (1 தெ. 2:13) காவற்கோபுரம் பைபிளிலுள்ள கருத்தாழமிக்க விஷயங்களை கலந்தாலோசிக்கும் என்பதாலும் விழித்தெழு!-வும்கூட அதிகமதிகமான பைபிள் விஷயங்களையே இனி சிறப்பித்துக் காட்டும் என்பதாலும், ஆங்கில விழித்தெழு!-வை மாதம் இருமுறை பிரசுரிக்க அவசியமில்லாததாக தோன்றுகிறது. ஆகவே ஜனவரி 2006 முதல் ஆங்கில விழித்தெழு! மாதம் ஒருமுறை மட்டும் பிரசுரிக்கப்படும். இதனால் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, விநியோகிப்பு ஆகிய வேலைகள் பெருமளவு எளிதாகும்.
7 இந்த மாற்றம், விழித்தெழு! பிரசுரிக்கப்படும் மொழிகளில் சுமார் 40 சதவீதத்தை பாதிக்கும். பெரும்பாலான மொழிகளில், விழித்தெழு! ஏற்கெனவே மாதாந்தர பத்திரிகையாக அல்லது காலாண்டு பத்திரிகையாக வெளிவருகிறது. காவற்கோபுரம் பத்திரிகையைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது.
8 பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதத்தின் விழித்தெழு! பத்திரிகையோடு அம்மாதத்திற்குரிய இரு காவற்கோபுரம் பத்திரிகைகளில் ஒன்றை அளிக்கலாம். அவர்கள் மாதம் முழுவதும் ஒரே விழித்தெழு! பத்திரிகையை அளிக்க முடியும்; இப்போது செய்வது போல் மாதத்தின் நடுவில் மற்றொரு பிரசங்கத்தை பயன்படுத்த வேண்டியிருக்காது.
9 பொற்காலம், ஆறுதல், விழித்தெழு! என்றெல்லாம் மாறிமாறி அழைக்கப்பட்டு வந்திருக்கும் இந்தப் பத்திரிகை 1919-ல் பிரசுரமாக ஆரம்பித்தது முதற்கொண்டே பிரசங்க வேலைக்கு பெரும் பங்களித்திருக்கிறது. புதிய வடிவத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் பத்திரிகையின் விநியோகத்தையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டுமென ஜெபிக்கிறோம்; “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” இன்னும் அநேக மக்கள் கடவுளுடைய ராஜ்யத்தை தங்களுடைய ஒரே நம்பிக்கையாக கருதுவதற்கு இந்தப் பத்திரிகை உதவ வேண்டுமென்றும் ஜெபிக்கிறோம்.—வெளி. 7:9.
[கேள்விகள்]
1. ஆரம்பத்தில் காவற்கோபுரம் பத்திரிகையும் பொற்காலம் பத்திரிகையும் முக்கியமாய் யாருக்காக வெளியிடப்பட்டன?
2. பொற்காலம் பத்திரிகையின் இன்றைய பெயர் என்ன, ஆரம்பத்திலிருந்தே அதன் நோக்கம் என்னவாக இருந்திருக்கிறது?
3. எந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் விழித்தெழு! பெருமளவு பங்களித்திருக்கிறது?
4. (அ) ‘யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே’ மறைக்கப்பட விரும்பும் எவரும் என்ன செய்ய வேண்டும்? (ஆ) வெளிப்படுத்துதல் 14:6, 7-ன்படி ‘வானத்தின் மத்தியில் பறக்கும் தூதன்’ என்ன செய்யும்படி அனைவரையும் அழைக்கிறார்?
5. (அ) ஜனவரி 2006 முதற்கொண்டு விழித்தெழு! முக்கியமாக எதைச் சிறப்பித்துக் காட்டும்? (ஆ) அநேகர் எதைச் செய்ய தூண்டப்படலாம், இது எந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருக்கும்?
6, 7. (அ) விழித்தெழு! எவ்வாறு 1 தெசலோனிக்கேயர் 2:13-ஐக் கடைப்பிடிக்க அநேகருக்கு உதவும் விதத்தில் தயாரிக்கப்படும்? (ஆ) விழித்தெழு! எவ்வளவு முறை பிரசுரிக்கப்படும், இந்த மாற்றத்தால் எத்தனை மொழிகள் பாதிக்கப்படும்?
8. பிரஸ்தாபிகள் எவ்வாறு விழித்தெழு! பத்திரிகையை காவற்கோபுரம் பத்திரிகையோடு சேர்த்து அளிக்கலாம்?
9. விழித்தெழு! தொடர்ந்து என்ன பங்கு வகிக்கும்?