பிரசங்கிப்பது சகித்திருக்க நமக்கு உதவுகிறது
1 ‘நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே [அதாவது சகிப்புத்தன்மையோடே] ஓடும்படி’ கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. (எபி. 12:1) பந்தயத்தில் வெற்றிகரமாக ஓடி முடிக்க ஓட்டக்காரருக்கு எவ்வாறு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறதோ அவ்வாறே நித்திய ஜீவன் எனும் பரிசைப் பெற நமக்கும் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. (எபி. 10:36) அப்படியானால், முடிவுவரை சகித்திருப்பதற்கு கிறிஸ்தவ ஊழியம் நமக்கு எவ்வாறு உதவும்?—மத். 24:13.
2 ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தப்படுவது: நீதியான புதிய உலகைப் பற்றி பைபிளிலுள்ள வாக்குறுதியை நாம் பிரசங்கிப்பது, நம்முடைய நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. (1 தெ. 5:8) தவறாமல் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது, பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட சத்தியங்களை மற்றவர்களுக்கு அறிவிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம் விசுவாசத்தை ஆதரித்துப் பேசவும் வாய்ப்பளிக்கிறது, இவ்வாறு செய்வது ஆன்மீக ரீதியில் நம்மை வலுப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
3 பயன் தரும் விதத்தில் மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கு முதலாவது நாம்தானே பைபிள் சத்தியங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். படிக்கப்போகும் பொருளின் பேரில் ஆராய்ச்சி செய்து, தியானிக்க வேண்டும். இப்படி ஊக்கமாக முயற்சி செய்யும்போது நம் அறிவு அதிகரிக்கிறது, நம் விசுவாசம் பலப்படுகிறது, ஆன்மீக புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. (நீதி. 2:3-5) இவ்வாறு, மற்றவர்களுக்கு உதவ நாம் முயலும்போது நம்மை நாமே பலப்படுத்திக் கொள்கிறோம்.—1 தீ. 4:15, 16.
4 ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவது, ‘தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தின்’ மிக முக்கிய அம்சமாகும்; பிசாசையும் அவனுடைய பேய்களையும் உறுதியாக எதிர்த்து நிற்பதற்கு இந்தச் சர்வாயுத வர்க்கம் நமக்குத் தேவைப்படுகிறது. (எபே. 6:10-13, 15) பரிசுத்த சேவையில் நாம் சுறுசுறுப்பாக ஈடுபடுவது, உற்சாகமளிக்கும் காரியங்கள் மீது நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் சாத்தானின் உலகத்தால் கறைபடாதிருப்பதற்கும் உதவுகிறது. (கொலோ. 3:2) மேலும், யெகோவாவின் வழிகளை மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, பரிசுத்த நடத்தையை காத்துக்கொள்வதன் அவசியத்தை நமக்கு நாமே தொடர்ந்து நினைப்பூட்டிக் கொள்கிறோம்.—1 பே. 2:12.
5 கடவுள் பலப்படுத்துகிறார்: முடிவாக, சுவிசேஷ வேலையில் நாம் கலந்துகொள்வது, யெகோவாவைச் சார்ந்திருக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. (2 கொ. 4:1, 7) அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! அவ்வாறு சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வது, நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு உதவுவதோடு, வாழ்க்கையில் எதிர்ப்படும் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிப்பதற்கு நம்மை தயார்படுத்துகிறது. (பிலி. 4:11-13, NW) எனவே, முழுமையாக யெகோவாவைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வதுதான் சகித்திருப்பதற்கான முக்கிய வழியாகும். (சங். 55:22) ஆம், பிரசங்கிப்பது சகித்திருக்க பல வழிகளில் நமக்கு உதவுகிறது.