ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வீடியோ
“இந்த வீடியோ நிஜமாகவே சிந்திக்க வைக்கிறது!”
“அது என் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது!”
“அது என்னைத் திக்குமுக்காடச் செய்தது!”
1 இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோவை முதன்முதலாகப் பார்த்தபோது நீங்களும் இப்படித்தான் உணர்ந்தீர்களா? சில வருடங்களுக்கு முன்பு, ஓர் இளம் சகோதரர் சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுக்காததால் தன் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படாத பாடுபட்டார். அவர்களுடைய சகவாசம் சத்தியத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் குறைத்துவிட்டது, இதனால் யெகோவாவுடன் அவருக்கிருந்த பந்தம் முறிந்துபோனது. அப்பொழுதுதான், நல்ல நண்பர்கள் வீடியோ வெளியிடப்பட்டது. அவர் எழுதினதாவது: “அந்த வீடியோவை அடிக்கடி போட்டுப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, கண்ணீர் சிந்தினேன். சரியான சமயத்தில் எனக்கு உதவி செய்ததை நினைத்து யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன்.” அந்த வீடியோ, அந்த இளைஞனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புக்கட்டத்தை ஏற்படுத்தி, நல்ல நண்பர்களைச் சம்பாதிக்க அவருக்கு உதவியது. அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்தக் காலத்தில் இளைஞர்களைப் பாதிப்பது எதுவென்று நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.” பெற்றோர்களே, இளைஞர்களே, அடுத்து வரும் உங்களுடைய குடும்பப் படிப்பில் இந்த வீடியோவை மீண்டும் ஒருமுறை போட்டுப் பார்க்கலாம், அல்லவா? ஒவ்வொரு பாகமும் முடிந்த பிறகு வீடியோவை நிறுத்திவிட்டு, பின்வரும் பாராக்களிலுள்ள கேள்விகளை ஒளிவு மறைவின்றி நேர்மையுடன் கலந்தாலோசியுங்கள்.
2 முன்னுரை: உண்மையான சிநேகிதர் யார்?—நீதி. 18:24.
3 நட்புக்கு முட்டுக்கட்டைகள்: யாருமே உங்களை நண்பராகச் சேர்த்துக்கொள்ளவில்லை என்ற உணர்வை எப்படி மேற்கொள்ளலாம்? (பிலி. 2:4) உங்கள் சுபாவத்தை முன்னேற்றுவிக்க நீங்கள் ஏன் மனமுள்ளவராய் இருக்க வேண்டும், யார் உங்களுக்கு உதவ முடியும்? நிறைய நண்பர்களைச் சம்பாதிக்க இருக்கிற வாய்ப்புகள் என்ன, அவர்களை எங்கே காணலாம்?—2 கொ. 6:13, NW.
4 கடவுளோடு நட்பு: யெகோவாவோடு இன்னும் நெருங்கிய நட்பை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம், அது ஏன் வீணாகாது? (சங். 34:8) கடவுளோடு உங்களுக்கிருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள மிகச் சிறந்த உதவியைத் தருவது யார்?
5 தவறான நண்பர்கள்: தவறான நண்பர்களாய் இருப்பது யார்? (1 கொ. 15:33) தவறான நண்பர்கள் ஆன்மீக ரீதியில் ஒருவரை எப்படிக் கெடுக்க வாய்ப்புண்டு? தீனாள் பற்றி பைபிள் கூறுவதிலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்?—ஆதி. 34:1, 2, 7, 19.
6 நவீன நாளைய நாடகம்: தாராவை தனிமை எப்படி வாட்டியது? உலக இளைஞர்களோடு நட்பு வைத்திருந்தது சரியே என அவள் எப்படி நியாயப்படுத்திக்கொண்டாள்? அவர்கள் என்ன ஆபத்தில் அவளை சிக்க வைக்கப் பார்த்தனர்? அவள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள இருந்ததை அவளுடைய பெற்றோர் எப்படிக் காணத் தவறினர், ஆனால் அவள் ஆன்மீக ரீதியில் குணமடைய என்ன மனப்பான்மையுடன் உதவினர்? தான் ஒரு நிஜமான சிநேகிதி என்பதை பயனியராக இருந்த ஒரு சகோதரி தாராவுக்கு எப்படிக் காட்டினார்? கிறிஸ்தவர்கள் நீதிமொழிகள் 13:20-ஐயும் எரேமியா 17:9-ஐயும் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? முக்கியமான என்ன பாடத்தை தாரா கற்றுக்கொண்டாள்?
7 முடிவுரை: இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றிருக்கிறீர்கள்? மற்றவர்களுக்கு உதவ இதை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?—சங். 71:17.