ஊழியத்திற்காக ஒதுக்கிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள்
1 ஊழியத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அதிகம் இருக்கின்றன; ஆனால், நமக்கு இருப்பதோ குறுகிய காலம்தான். (யோவா. 4:35; 1 கொ. 7:29) முன்கூட்டியே திட்டமிட்டு, நம் காரியங்களை நன்கு ஒழுங்குபடுத்தினால் ஊழியத்திற்காக ஒதுக்கிய நேரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2 தயாராகுங்கள்: வெளி ஊழிய கூட்டத்திற்குச் செல்லும்முன், தேவையான பிரசுரங்கள் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். ஊழியத்தில் பேசப் போகும் விஷயத்தை நன்கு தயாரித்திருக்கிறீர்களா என்றும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அக்கூட்டம் ஜெபத்துடன் முடிந்தபின், நேரடியாக ஊழியத்திற்குச் செல்லுங்கள். அப்படிச் செய்யும்போது நீங்களும் உங்களுடன் வருபவரும் ஊழியத்திற்காக ஒதுக்கிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
3 வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அதைச் சரியான நேரத்தில் துவங்குங்கள். கூட்டத்தை 10-15 நிமிடத்திற்குள் முடித்துவிடுங்கள். வந்திருப்போரை ஊழியத்திற்கு அனுப்புவதற்கு முன், ஒவ்வொருவரும் எங்கு செல்ல வேண்டும், யாருடன் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4 ஊழியத்தில்: வெளி ஊழியக் கூட்டம் முடிந்ததும், தேவையில்லாமல் அங்கு நின்றுகொண்டிருக்காதீர்கள், பிராந்தியத்திற்குச் செல்ல உடனடியாகத் தயாராகுங்கள். ஒருவேளை, ஊழியத்தைச் சீக்கிரமாக முடித்துவிட வேண்டுமென நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் யாருடன் செய்கிறீர்களோ அவரிடம் முன்னதாகவே தெரிவித்துவிடலாம். அப்போது, மற்றொரு பிரஸ்தாபியுடன் அவர் சேர்ந்துகொள்ளவும் நீங்கள் போன பிறகு தொடர்ந்து ஊழியம் செய்யவும் முடியும். ஒருவேளை ஒரு தொகுதியாக ஊழியம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வீட்டில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிற மற்றவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒருவர் வீண் விவாதம் செய்துகொண்டிருக்கிறார் என்றால் சாதுரியமாக அங்கிருந்து வந்துவிடலாம்; அல்லது ஒருவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்றால், அவரைத் திரும்ப வந்து சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.—மத். 10:11.
5 மறு சந்திப்புகள் செய்கையில், ஒரு பகுதியிலுள்ள மறு சந்திப்புகளை முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம். அப்படிச் செய்யும்போது வீணாக அங்குமிங்கும் பயணிப்பதைத் தவிர்க்கலாம். நாம் சந்திக்கச் செல்லும் நபர்கள் வீட்டில் இருப்பார்களா என்பதை முன்கூட்டியே போனில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். (நீதி. 21:5) உங்களுடைய மறுசந்திப்பை முடிப்பதற்கு அதிக நேரமெடுக்கும் எனத் தெரிந்தால், நீங்கள் அதை முடிக்கும் வரையில் உங்களோடு வந்த மற்றவர்கள் அருகிலுள்ள பகுதியில் ஊழியம் செய்வதற்கோ வேறு ஏதேனும் மறு சந்திப்புகள் செய்வதற்கோ ஏற்பாடு செய்யலாம்.
6 ஆன்மீக அறுவடை மிகுதியாய் இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். (மத். 9:37, 38) இந்த வேலை சீக்கிரத்தில் முடிவுக்கு வரும். ஆகவே, ஊழியத்திற்காக ஒதுக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதே நம் விருப்பமாக இருக்க வேண்டும்.