நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களுக்கு எப்படி உதவலாம்?
1. மார்ச் 22, 2008-ல் என்ன பலமான சாட்சி கொடுக்கப்படும்?
1 மார்ச் 22, 2008-ல், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்குப் பலமான சாட்சி கொடுக்கப்படும். மீட்கும் பலியை அளித்ததன் மூலம் மனிதகுலத்திடம் யெகோவா காட்டிய மாபெரும் அன்பைக் குறித்து நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்வோர் அனைவரும் தெரிந்துகொள்வார்கள். (யோவா. 3:16) ராஜ்யத்தைக் குறித்தும், பூமியின் சம்பந்தமாக தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் அதை எப்படிப் பயன்படுத்துவார் என்பதைக் குறித்தும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். (மத். 6:9, 10) கடவுளுடைய மக்களிடையே உள்ள அன்பையும் ஐக்கியத்தையும் கண்கூடாகப் பார்ப்பார்கள். நம்முடன் கனிவான தோழமையை அனுபவிப்பார்கள்.—சங். 133:1.
2. நம்மோடு பைபிள் படிப்பவர்கள் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்ளும்போது நாம் எப்படி உதவலாம்?
2 பைபிள் படிப்பவர்கள்: சமீபத்தில் நம்மோடு பைபிள் படிக்க ஆரம்பித்திருக்கும் சிலர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். சகோதர சகோதரிகளிடம் அவர்களை அறிமுகப்படுத்துங்கள். வாரந்தோறும் நடக்கும் கூட்டங்களைப்பற்றிச் சொல்லுங்கள். ராஜ்ய மன்றத்தைச் சுற்றிக்காட்டுங்கள். பேச்சு கொடுக்கும்போது, தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றத்தைச் செய்யும்படி பேச்சாளர் இவர்களை ஊக்கப்படுத்துவார். அவருடைய வார்த்தைகளையே பயன்படுத்தி, உங்களுடன் பைபிள் படிப்பவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
3. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் செயலற்ற பிரஸ்தாபிகளை நாம் எவ்வாறு ஊக்கப்படுத்தலாம்?
3 செயலற்ற பிரஸ்தாபிகள்: செயலற்ற பிரஸ்தாபிகளும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். வலியச் சென்று அவர்களை அன்புடன் வரவேற்றிடுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து கேள்வி கேட்காதீர்கள். அவர்களை தர்மசங்கடப்படுத்தும் விதத்தில் எதையும் சொல்லாதீர்கள். நினைவுநாள் ஆசரிப்பு முடிந்து, ஒருசில நாட்களோ வாரங்களோ கழித்து மூப்பர்கள் இவர்களைச் சந்திக்க வேண்டும். அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சி எடுத்ததற்காக அவர்களைப் பாராட்டி, அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்க வேண்டும்.
4. புதிதாக வருவோருக்கு நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு உதவலாம்?
4 புதியவர்கள்: நாம் அழைத்திருந்த குடும்ப அங்கத்தினர்களும் நம்முடன் வேலை செய்பவர்களும் அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம். வேறு சிலர், விசேஷ வினியோகிப்பின்போது அழைப்பிதழைப் பெற்றிருக்கலாம். உங்களுக்குத் தெரியாதவர்களைப் பார்த்தால், நீங்களாகவே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள், அவர்களை வரவேற்றிடுங்கள். ஒருவேளை, அவர்கள் நம் கூட்டங்களுக்கு வருவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். பேச்சுவாக்கில், அவர்களை மீண்டும் எப்படிச் சந்திக்கலாம் என்பதை ஒருவேளை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நினைவுநாள் ஆசரிப்பு முடிந்து ஒருசில நாட்களுக்குப் பிறகு, நீங்களே நேரடியாகச் சென்று அவர்களைச் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் சுருக்கமாகப் பேசலாம். பைபிளைக் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும்படி அவர்களை ஊக்கப்படுத்தி, பைபிள் படிப்பைக் குறித்துச் சொல்லலாம்.
5. பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு நாம் என்ன சொல்லலாம்?
5 மறுசந்திப்பின்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் காட்டுவதற்கு, நினைவுநாள் ஆசரிப்பு பேச்சில் கொடுக்கப்பட்ட தகவலை அடிப்படையாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஏசாயா 65:21-23-ஐ பேச்சாளர் வாசிப்பார். மறுசந்திப்பில், அந்தப் பேச்சைப்பற்றிக் குறிப்பிட்டு விட்டு, “மீட்கும் பலியினால் கிடைக்கவிருக்கிற மற்ற ஆசீர்வாதங்களைக் காட்டுகிறேன்” என்று நீங்கள் சொல்லலாம். பிறகு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் பக்கங்கள் 4-5-ஐக் காட்டி விளக்கலாம். அல்லது, “ஏசாயா சொன்ன அந்தத் தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறும் என்று அநேகர் யோசிக்கிறார்கள்” என்று சொல்லலாம். பிறகு அதிகாரம் 9-ல் 1-3 பாராக்களை விளக்கலாம். அல்லது, பேச்சாளர் சொன்ன குறிப்புகளைச் சொல்லிவிட்டு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் காட்டிவிட்டு, படிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதைச் செய்து காட்டலாம்.
6. தம்முடைய மரணத்தை நினைவுகூரும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது, எதைச் செய்ய நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும்?
6 அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பைபிள் படிப்பவர்கள், செயலற்ற பிரஸ்தாபிகள், புதியவர்கள் ஆகியோருக்கு உதவ அநேக வாய்ப்புகள் இருக்கும். அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள நாம் ஒவ்வொருவருமே தயாராக இருப்போமாக. (லூக். 22:19) ராஜ்ய சேவையில் இன்னுமதிகமாக ஈடுபட நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.