வலிமையான சாட்சி கொடுக்கப்படும்
1. நினைவுநாள் நிகழ்ச்சியில் கொடுக்கப்படுகிற பேச்சோடுகூட, வேறு எதுவும் பார்வையாளர்களின் மனதைக் கவரலாம்? விளக்குங்கள்.
1 எப்போது? நினைவுநாள் அனுசரிக்கப்படும்போது. ஆம், இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி நிறையப் பேரை அழைப்பதற்கு நாம் பெருமுயற்சி எடுத்திருப்போம். நம்முடைய அழைப்பை ஏற்று அங்கு வருகிற புதியவர்கள், காதால் கேட்கிற விஷயங்களால் மட்டுமல்ல, கண்ணால் பார்க்கிற விஷயங்களாலும் மனங்கவரப்படலாம். நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிற்பாடு ஒரு பெண்மணி, தான் அங்கு பார்த்த விஷயங்கள் தன் மனதைக் கவர்ந்ததாகச் சொன்னார்; அதாவது, அங்கிருந்த எல்லாரும் நட்பாகப் பழகியதைப் பற்றியும், வாலண்டியர்களால் கட்டப்பட்டு, சுத்தமாகவும் அழகாகவும் பராமரித்து வரப்படுகிற அந்தக் கட்டடத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். எனவே, இந்த வருடத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியில் பேச்சாளர் மட்டுமல்ல, நாம் எல்லாருமே சாட்சி கொடுக்க வாய்ப்பிருக்கிறது.—எபே. 4:16.
2. புதியவர்களுக்கு நாம் ஒவ்வொருவருமே எப்படிச் சாட்சி கொடுக்கலாம்?
2 புதியவர்களுக்குக் கனிவாக வரவேற்பளியுங்கள்: புதியவர்களைக் கனிவாக, சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்லி வரவேற்பது சாட்சி அளிப்பதாக இருக்கும். (யோவா. 13:35) வந்திருக்கிற எல்லாருடனும் உங்களால் பேச முடியாவிட்டாலும்கூட, உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்களைக் கனிவாக வரவேற்கலாம், அவர்களிடம் உங்களை அறிமுகம் செய்துகொள்ளலாம். (எபி. 13:1, 2) இன்னும் சிலர் நாம் விநியோகித்த அழைப்பிதழிலுள்ள விலாசத்தைப் பார்த்து வந்திருப்பார்கள். நம்மில் யாரையுமே அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அப்படிப்பட்டவர்களை நாம் குறிப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும். “இப்போதுதான் முதல்முறையாக இங்கே வந்திருக்கிறீர்களா?” என்று நீங்கள் ஒருவேளை அவர்களிடம் கேட்கலாம். அவர்களை உங்களுக்கு அருகில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். மற்றொரு சபையும் அந்த மன்றத்தை பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் உடனடியாக அதைக் காலி செய்ய வேண்டியிருக்கலாம்; அப்போது, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக, உங்களை நான் எங்கே சந்திக்கலாம், எப்படித் தொடர்புகொள்ளலாம்?” என்று கேளுங்கள்.
3. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு நாம் எப்படி வரவேற்பளிக்கலாம்?
3 செயலற்றவர்களுக்கு வரவேற்பளியுங்கள்: இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருவோரில் செயலற்ற பிரஸ்தாபிகளும், வருடா வருடம் நினைவுநாள் அனுசரிப்புக்காக மட்டுமே சபைக்கு வருகிற சிலரும் இருப்பார்கள். அவர்களுக்கு வரவேற்பளியுங்கள்; ‘நீங்கள் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொல்லுங்கள். (ரோ. 15:7) அதற்குப் பின்பு கொஞ்ச நாட்களில், அவர்களுடைய வீட்டிற்கு மூப்பர்கள் சென்று, சபைக்குத் தொடர்ந்து வரும்படி அவர்களை ஊக்கப்படுத்தலாம். இந்த நிகழ்ச்சிக்கு வருகிற பலர் தாங்கள் கேட்கிற காரியங்களால் மட்டுமல்ல, ‘நம்முடைய நற்செயல்களைக் கண்ணாரக் கண்டு’ கடவுளை மகிமைப்படுத்தத் தூண்டப்பட வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!—1 பே. 2:12.