வரவிருக்கும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
“ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருங்கள்” என்பதே 2009 ஊழிய ஆண்டில் நடக்கவிருக்கிற விசேஷ மாநாட்டு தினத்தின் பொருளாகும். இது கொலோசெயர் 4:17-ன் அடிப்படையில் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த அறிவுரைக்கு அதிக கவனம் செலுத்துகிறோம். இயேசுவைப் போலவே நம்முடைய ஊழியத்தை செய்து முடிப்பதில் குறியாக இருக்கிறோம். (யோவா. 17:4) இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. ஊழியத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார்.—அப். 20:24.
ஊழியத்தில் சந்திக்கும் சவால்களைப் பல்வேறு பிரஸ்தாபிகள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை வட்டாரக் கண்காணியின் பேச்சிலிருந்து தெரிந்துகொள்வோம். “நீங்கள் நட்டவற்றை வளர்க்க பாடுபடுங்கள்” என்ற பேச்சு, ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களுக்கு’ நாம் எப்படி உண்மையிலேயே உதவலாம் என்பதைச் சிறப்பித்து காட்டும். (அப். 13:48, NW) “ஊழியர்களாக நம்மை எவ்வாறு விளங்கப்பண்ணலாம்” என்ற பேச்சில் சிறப்புப் பேச்சாளர் 2 கொரிந்தியர் 6:1-10-ஐ வசனம் வசனமாக விளக்குவார். பிற்பகல் நிகழ்ச்சியில் அவர், “உங்கள் ஊழியத்தை உயர்வாய் மதியுங்கள்” என்ற தலைப்பில் பேசுவார். “சிறியோரும் பெரியோரும் ஊழியத்தில் மகிழ்ச்சி காண்கிறார்கள்,” “ஊழியத்தை நிறைவேற்றும் இளைஞர்கள்” ஆகிய பேச்சுகள் உங்களுக்கு உற்சாகமளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விசேஷ மாநாட்டு தினத்திலோ வட்டார மாநாட்டிலோ, ஞானஸ்நானம் பெற விரும்புகிறவர்கள், முன்னதாகவே நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்க வேண்டும். காவற்கோபுர கட்டுரையைச் சிந்திப்பது நம்முடைய மாநாடுகளின் சிறப்பம்சமாகும். எனவே, விசேஷ மாநாட்டு தின வாரத்தில் சிந்திக்கவிருக்கும் காவற்கோபுரத்தை எடுத்து வாருங்கள்.
நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற நாம் கவனமாய் இருக்கும்போது யெகோவா ஒப்படைத்திருக்கும் வேலைகளை செய்வதற்குரிய நேரத்தை மற்ற காரியங்களுக்கு செலவிடாதபடி நாம் கவனமாய் இருக்க வேண்டும். இந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியின் வாயிலாக பைபிளிலிருந்து நாம் பெறப்போகும் உற்சாகம், ஊழியத்தில் முழுக்க முழுக்க கவனம் செலுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள நம் எல்லாருக்கும் நிச்சயம் உதவும். அதோடு, நம்முடைய ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்ற இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கவும் உதவும்.