யெகோவாவை நேசிக்க மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்
1 நீங்கள் எப்போது யெகோவாவைப்பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எது உங்களை அவரிடம் சுண்டியிழுத்தது? நம்முடைய படைப்பாளருடைய ஒப்பற்ற குணங்களைப் பற்றி தெரிந்துகொண்டது, முக்கியமாக அவருடைய இரக்கத்தையும் அன்பையும் தெரிந்துகொண்டது தங்களை அவரிடம் நெருங்கி வரச் செய்தது என்று நல்மனமுள்ள அநேகர் உங்களிடம் சொல்வார்கள்.—1 யோ. 4:8.
2 “இவரே நம்முடைய தேவன்”: பைபிள் கற்பிக்கிறது புத்தகம் யெகோவாவின் அன்பையும் அவருடன் நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பதன் அவசியத்தையும் சிறப்பித்துக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி, கடவுளை இன்னும் அதிகமாக நேசிக்க மற்றவர்களுக்கு நாம் எப்படிக் கற்பிக்கலாம்? புதிய விஷயங்களை விவரிக்கையில் ஆழமாய்ச் சிந்திக்க வைக்கும் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு: “இந்த உண்மையிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?” அல்லது “இந்த விஷயம், யெகோவாவே ஈடிணையற்ற மிகச் சிறந்த தந்தை என்பதற்கு எப்படி அத்தாட்சி அளிக்கிறது?” இந்த விதத்தில் கற்பிப்பது மாணாக்கர் நித்திய காலத்திற்கும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவும்.
3 உண்மையான, உயிருள்ள ஒரே கடவுளைப் பற்றி அறிந்துகொள்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் மாணாக்கர்களுக்கு உதவ வேண்டும்; அப்போது, அவர்கள் ஏசாயா சொன்னதுபோல் “இவரே நம்முடைய தேவன்” என்று அவரை மனதார ஏற்றுக்கொள்வார்கள். (ஏசா. 25:9) கடவுளுடைய வார்த்தையை விளக்குகையில், கிறிஸ்து இயேசு அரசாளும் அரசாங்கத்தின் மூலம் தம்முடைய நோக்கங்களை யெகோவா நிறைவேற்றுவார் என்பதையும் அதன் வாயிலாக மனிதகுலத்தை ஆசீர்வதிக்கப் போகிறார் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.—ஏசா. 9:6, 7.
4 யெகோவாவிடமுள்ள அன்புக்கு அத்தாட்சி: யெகோவாவை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் நேசிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தால் மட்டும் நமக்குப் போதாது. அவர் யோசிக்கும் விதத்தில் நாம் யோசிக்க வேண்டும், அதற்கு இசைய நடக்கவும் வேண்டும். (சங். 97:10) அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலமும் சோதனையையும் எதிர்ப்பையும் சந்திக்கும்போதுகூட “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும்” மிக்க செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலமும் கடவுள்மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுகிறோம்.—2 பே. 3:11; 2 யோ. 6.
5 கடவுள்மீது அன்பிருப்பதால் அவருடைய சித்தத்தைச் செய்வது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (சங். 40:8) அவர் எல்லா கட்டளைகளையும் தம்முடைய ஊழியர்களின் நித்திய நன்மைக்காகவே கொடுத்திருக்கிறார் என்பதை பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்ள வேண்டும். (உபா. 10:12, 13) யெகோவாவுடைய வழிநடத்துதலுக்கு இசைய வாழ்வதன் மூலம் அவருடைய அரும்பெரும் செயல்கள் அனைத்திற்கும் ஒரு நபர் நெஞ்சார நன்றி தெரிவிக்கிறார். யெகோவாவுடைய நீதியான வழிகளில் நடந்தால் வேதனையையும் விரக்தியையும் தவிர்க்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள மாணாக்கருக்கு உதவுங்கள்.
6 கடவுளை நேசிப்போருக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்: மனத்தாழ்மையோடு தம்மை நேசிக்கிறவர்களை யெகோவா கண்ணுக்குக் கண்ணாகக் கவனித்துக்கொள்கிறார், “தேவனுடைய ஆழங்களை” அவர்கள் புரிந்துகொள்ள உதவுகிறார். (1 கொ. 2:9, 10) இப்படி யெகோவாவின் நோக்கங்களை அறிந்திருப்பது, எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கிறது. (எரே. 29:11) யெகோவாவை நேசிப்பவர்கள் அவருடைய அளவற்ற கருணையைப் பெறுகிறார்கள். (யாத். 20:6) அவர் தங்கள்மீது அன்பைப் பொழிவதால் முடிவில்லா வாழ்க்கையைப் பெறும் பாக்கியத்தை அவர்கள் பொன்னென போற்றுகிறார்கள்.—யோவா. 3:16.
7 நம்முடைய பரலோகத் தந்தையைப் பற்றி எந்தளவு தெரிந்துகொள்கிறோமோ அந்தளவு மற்றவர்களிடம் அவரைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். (மத். 13:52) யெகோவாவை நேசிக்கும்படி மற்றவர்களுக்குக் கற்பிப்பது, முக்கியமாக நம் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் அரும்பெரும் பாக்கியம். (உபா. 6:5–7) யெகோவாவின் “மிகுந்த தயவை” அதாவது நற்குணத்தை ருசிக்கையில் நம் பைபிள் மாணாக்கர்களுடன் சேர்ந்து அவரை எப்போதும் வாயாராப் புகழ்வோமாக.—சங். 145:7.
[கேள்விகள்]
1. எது சிலரை யெகோவாவிடம் நெருங்கி வர செய்திருக்கிறது?
2, 3. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி, கடவுளை இன்னும் அதிகமாக நேசிக்க பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
4, 5. யெகோவாவை நேசிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
6. யெகோவாவை நேசிக்கும் ஒருவருக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
7. யெகோவாவை நேசிக்க மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?