சபை கூட்டங்களில் புதிய மாற்றம்
1 உலகெங்கும் உள்ள நம் சகோதரர்கள் 2008 ஏப்ரல் 21-27-க்கான வாரத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பைக் கேட்டார்கள். “2009 ஜனவரி 1 முதற்கொண்டு தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் நடைபெறும் அதே நாளில் சபை புத்தகப் படிப்பும் நடக்கும். அது முதல் சபை புத்தகப் படிப்பு, சபை பைபிள் படிப்பு என்று அழைக்கப்படும்.”
2 இந்தக் கூட்டத்திற்கான அட்டவணை: பாட்டு, ஜெபம் உட்பட இந்தக் கூட்டத்தை 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். பாட்டு, ஜெபத்துடன் (5 நிமி.) கூட்டம் ஆரம்பமாகி முதலில் சபை பைபிள் படிப்பு (25 நிமி.) நடைபெறும். அதைத் தொடர்ந்து உடனடியாக தேவராஜ்ய ஊழியப் பள்ளி (30 நிமி.) நடைபெறும். பிறகு, பாடலுடன் (5 நிமி.) ஊழியக் கூட்டம் (35 நிமி.) ஆரம்பமாகும். கடைசியில் பாட்டு, ஜெபத்துடன் (5 நிமி.) கூட்டம் முடிவடையும். இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் தயாரிப்பதற்கு உதவியாக, சபை பைபிள் படிப்பு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம் ஆகியவற்றிற்கான அட்டவணை ஒவ்வொரு மாதமும் நம் ராஜ்ய ஊழியத்தில் இடம்பெறும்.
3 சபை பைபிள் படிப்பு: காவற்கோபுர படிப்பைப் போலவே இந்தக் கூட்டம் நடைபெறும். கடந்த வாரம் படித்ததை ஆரம்பத்தில் மறுபார்வை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மிகச் சுருக்கமான அறிமுகத்தோடு மட்டுமே கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இது சுருக்கமான பதில்களைச் சொல்ல எல்லாருக்குமே வாய்ப்பளிக்கும். இந்தக் கூட்டத்தை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மூப்பர் நடத்துவார்; யார், எந்த வாரம் படிப்பை நடத்த வேண்டும் என்பதை நடத்தும் கண்காணி பார்த்துக்கொள்வார்.
4 ஊழியக் கூட்டம்: ஊழியக் கூட்டத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதே தவிர மற்றபடி இதில் எந்த மாற்றமும் இல்லை. அறிவிப்புகளுக்கு பொதுவாக ஐந்து நிமிடங்களே தேவைப்படும். அவசியமான அறிவிப்புகளுக்கும் கிளை அலுவலகத்திலிருந்து வரும் சில கடிதங்களை வாசிப்பதற்கும் இந்த நேரம் போதுமானதாக இருக்கும். வெளி ஊழிய ஏற்பாடுகள், சபை சுத்தம் செய்வதைக் குறித்த ஏற்பாடுகள், கணக்கு அறிக்கைகள் போன்ற அறிவிப்புகளை இனி செய்ய வேண்டாம்; அதோடு, கிளை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் வரும் கடிதங்களையும் வாசிக்க வேண்டாம். ஆனால், இவற்றை சகோதரர்கள் வாசிப்பதற்கு வசதியாக அறிவிப்பு பலகையில் போட வேண்டும். ஊழியக் கூட்டத்தில் பேச்சு கொடுக்கும் சகோதரர்கள் நன்கு தயாரிக்க வேண்டும், கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும், உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.
5 வட்டாரக் கண்காணியின் சந்திப்பு: இந்த மாற்றம் வட்டாரக் கண்காணி சந்திக்கும் வாரத்திற்குப் பொருந்தாது. செவ்வாய்க்கிழமை தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் பாட்டுடன் ஆரம்பமாகும். பிறகு வட்டாரக் கண்காணி 30 நிமிட பேச்சைக் கொடுப்பார். இப்போது அவருடைய சந்திப்பின் வாரத்தில் நடப்பதைப் போலவே, சபை பைபிள் படிப்பு வேறொரு நாள் நடைபெறும். பைபிள் படிப்புக்குப் பின்பு பாட்டுடன் வட்டாரக் கண்காணியின் ஊழியப் பேச்சு ஆரம்பமாகும். கடைசியில் பாட்டு ஜெபத்துடன் கூட்டம் முடிவடையும்.
6 வெளி ஊழியக் கூட்டங்கள்: மூப்பர் குழுவால் நியமிக்கப்படும் தொகுதிக் கண்காணிகள், தங்கள் வெளி ஊழிய தொகுதியை கவனித்துக்கொள்வதோடு, அதிலுள்ள ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவார்கள். இத்தகைய வேலையைச் செய்ய உதவி ஊழியர் நியமிக்கப்படுகையில் அவர் “தொகுதி ஊழியர்” என அழைக்கப்படுவார்.
7 இந்த மாற்றங்கள், யெகோவாவுடன் பலமான பந்தத்தை அனுபவிக்க உதவுகிற பயனுள்ள, உற்சாகமூட்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள நமக்கு வாய்ப்பளிக்கும். இது, திறம்பட்ட விதத்தில் பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் பலன் தரும் விதத்தில் ஊழியம் செய்ய நாம் பயிற்சி பெறுவதற்கும் உதவும்.—எபே. 4:11, 14; 2 தீ. 3:16.
8 கூட்டங்களுக்காக முன்னதாகவே தயாரிப்பது ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தப்படும் முக்கிய குறிப்புகளைச் சட்டெனப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். பதில் சொல்வதற்கும், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் நம் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். (ரோ. 1:11, 12, NW; எபி. 10:24) ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பதன்’ மூலம் நாம் ‘தேறுகிறதை யாவருக்கும் விளங்கப்பண்ணுவோம்.’—1 தீ. 4:15; 2 தீ. 2:15.
9 சபை கூட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்காக நாம் சந்தோஷப்படுகிறோம். நாம் எல்லாரும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்” அளித்துவரும் வழிநடத்துதலுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிவோமாக; அதோடு, விரைந்து வரும் மிகுந்த ‘உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைக்க பெரிய மேய்ப்பர் நம்மை தயார்படுத்துகையில் அவரைவிட்டு விலகாமல் நெருக்கமாய் இருப்போமாக.—மத். 24:21, 45, NW; எபி. 13:20, 21; வெளி. 7:14.
[கேள்விகள்]
1, 2. ஜனவரி 2009-லிருந்து கூட்டங்களில் என்ன மாற்றம் செய்யப்படும்?
3. சபை பைபிள் படிப்பை எப்படி நடத்த வேண்டும்?
4. ஊழியக் கூட்டத்தில் எந்த விதமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
5. வட்டாரக் கண்காணியின் சந்திப்பு வாரத்தில் சபை கூட்டம் எப்படி நடைபெறும்?
6. தொகுதிக் கண்காணியின் வேலை என்ன?
7. சபை கூட்டங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்திலிருந்து என்ன பலன்களை நாம் எதிர்பார்க்கலாம்?
8. நாம் ஒவ்வொருவரும் கூட்டங்களுக்காக முன்னதாகவே தயாரிப்பது நமக்கும் மற்றவர்களுக்கும் எப்படிப் பயனளிக்கும்?
9. நாம் என்ன தீர்மானத்தோடு இருக்க வேண்டும், ஏன்?