நம் ஊழியம்—கடவுள் மீதுள்ள நம் அன்பின் வெளிக்காட்டு
1. கடவுள் மீதுள்ள அன்பு என்ன செய்ய இயேசுவைத் தூண்டியது?
1 இயேசுவை ஊழியத்தில் ஈடுபட தூண்டியது அன்பே. அவருடைய ஊழியத்தின் ஒவ்வொரு அம்சமும் யெகோவாமீது அவர் எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியை அளிக்கிறது. இயேசு சொன்னார்: “தகப்பன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் அறிந்துகொள்வதற்காக என் தகப்பன் கட்டளையிட்டபடியே செய்து வருகிறேன்.” (யோவா. 14:31) இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாமும், ஊழியத்தின்மூலம் கடவுள் மீதுள்ள ஆழமான அன்பை வெளிக்காட்டும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.—மத். 22:37; எபே. 5:1, 2.
2. யெகோவா மீதுள்ள அன்பு ஊழியத்தில் நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?
2 “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”: யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்; அப்படிச் செய்வது, கடவுள்மீது நமக்கு அன்பு இருப்பதை வெளிக்காட்டுகிறது. சொல்லப்போனால், அவருடைய பெயர் பரிசுத்தப்படுவதற்கு நம் பங்கைச் செய்வதையே காட்டுகிறது. (சங். 83:17; எசே. 36:23; மத். 6:9) இயேசு செய்த ஊழியத்தைப் போலவே நாமும் தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபடுவதன்மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும், அவருடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்ற உள்ளான ஆசையை வெளிக்காட்டுகிறோம்.—மத். 26:39.
3. தடைகளைத் தகர்த்தெறிய யெகோவா மீதுள்ள அன்பு எப்படி உதவுகிறது?
3 தடைகளைத் தகர்த்தெறிய அன்பு நம்மைத் தூண்டுகிறது: யெகோவா மீதுள்ள அன்புக்கு எதுவும் தடையாய் இருக்க முடியாது. (1 கொ. 13:4, 7) இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடர முடியாத பல சூழ்நிலைகளை எதிர்ப்பட்டார். அப்படி அவர் தடைகளை எதிர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் யெகோவா மீதுள்ள மிகுந்த அன்பும் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற அளவற்ற ஆசையும் ஊழியத்தைத் தொடர அவருக்கு உதவின. (மாற். 3:21; 1 பே. 2:18-23) நமக்கும் பல இடையூறுகள் வருகின்றன; அவற்றைச் சமாளிக்கக் கடவுள் மீதுள்ள அன்பு நமக்கு உதவும். கிறிஸ்துவின் முன்மாதிரியை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவதன்மூலம் ஊழியத்தை முழு நம்பிக்கையுடனும் முழு மூச்சுடனும் செய்ய முடியும். குடும்பத்தாரின் எதிர்ப்பு, உடல்நலக் குறைவு, வயோதிபம், ஊழியத்தில் எதிர்ப்பு, மக்களின் அலட்சிய மனப்பான்மை போன்றவை நம்மைச் சோர்வடையச் செய்யலாம்; ஆனாலும், முடிந்தவரை சிறப்பாக ஊழியத்தில் ஈடுபடும்போது யெகோவாமீது அன்பு காட்டுவதற்கு அது தடையாய் இருக்காது.
4. யெகோவா மீதுள்ள அன்பினால் நாம் என்ன பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்?
4 அன்பு வலிமைமிக்கது; அதோடு, கடவுள் மீதுள்ள நம்முடைய உள்ளப்பூர்வமான அன்பை ஊழியத்தில் வெளிக்காட்டும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். (1 கொ. 13:13) யெகோவா தம்முடைய பெயரை முற்றும் முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதற்கான காலம் வெகு சமீபமாய் இருப்பதால், நம்முடைய ‘அன்பு . . . அதிகமதிகமாகப் பெருகட்டும்.’—பிலி. 1:9; மத். 22:36-38.