“பயப்படவேண்டாம்”
1. எரேமியாவைப் போலவே, நாம் என்னென்ன சவால்களை எதிர்ப்படலாம்?
1 எரேமியா ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டபோது, தன்னால் அந்த வேலையைச் செய்ய முடியுமா என நினைத்து ஆரம்பத்தில் பயந்தார். ஆனால், யெகோவா எரேமியாவிடம், “நீ . . . பயப்படவேண்டாம்” என்று உறுதியளித்து, அவருடைய பொறுப்பை நிறைவேற்ற உதவினார். (எரே. 1:6-10) இன்று, நாமும்கூட கூச்ச சுபாவத்தாலோ தன்னம்பிக்கை இல்லாததாலோ ஊழியத்தில் ஈடுபடத் தயங்கலாம். மக்கள் என்ன சொல்வார்களோ, நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நினைத்தும்கூட நாம் சில சமயம் ஊழியத்தில் பின்வாங்கலாம். இந்தச் சவால்களை நாம் எப்படி மேற்கொள்ளலாம்? அதனால் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெறலாம்?
2. ஊழியத்தில் பயத்தைப் போக்க முன்தயாரிப்பு எப்படி உதவும்?
2 முன்கூட்டியே தயாரியுங்கள்: முன்கூட்டியே தயாரித்தோமென்றால் பயம் பெரும்பாலும் குறைந்துவிடும். உதாரணத்திற்கு, உரையாடலை நிறுத்த மக்கள் என்னவெல்லாம் சொல்ல வாய்ப்புண்டு என நாம் முன்னமே யோசித்து வைத்தால் அதுபோன்ற சூழ்நிலைகளை நன்கு சமாளிப்போம். (நீதி. 15:28) எனவே, பள்ளியிலும் ஊழியத்திலும் சந்திக்கிற வெவ்வேறு சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைக் குடும்ப வழிபாட்டின்போது ஒத்திகை பார்ப்பது உங்களுக்குக் கைகொடுக்கும்.—1 பே. 3:15.
3. யெகோவாமீது சார்ந்திருப்பது பயத்தைப் போக்க எவ்வாறு உதவும்?
3 யெகோவாமீது சார்ந்திருங்கள்: நாம் யெகோவாமீது சார்ந்திருந்தோமென்றால் நிச்சயம் பயப்பட மாட்டோம். நமக்கு உதவி செய்வதாக யெகோவா உறுதியளித்திருக்கிறார். (ஏசா. 41:10-13) அதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்? இன்னும் சொல்லப்போனால், எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நாம் சிறப்பாகச் சாட்சி கொடுக்க கடவுளுடைய பரிசுத்த சக்தி நமக்கு உதவும் என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். (மாற். 13:11) எனவே, பரிசுத்த சக்தியைத் தரும்படி யெகோவாவிடம் தவறாமல் மன்றாடுங்கள்.—லூக். 11:13.
4. சவால்கள் மத்தியிலும் தொடர்ந்து ஊழியம் செய்தால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
4 ஆசீர்வாதங்கள்: சவால்கள் மத்தியிலும் நாம் தொடர்ந்து ஊழியம் செய்தோமென்றால் எதிர்காலத்தில் வரும் சோதனைகளை வெற்றிகரமாய்ச் சமாளிக்கத் தேவையான பலத்தைப் பெறுவோம். பரிசுத்த சக்தியின் உதவியோடு தைரியத்தையும் பெறுவோம். (அப். 4:31) அதுமட்டுமல்ல, யெகோவாவின் உதவியால் பயத்தை மேற்கொள்ளும்போது நம் விசுவாசம் பலப்படும்; அவருடைய காக்கும் கரத்தில் நம் நம்பிக்கை உறுதிப்படும். (ஏசா. 33:2) அதோடுகூட, நம் பரலோகத் தகப்பனை மகிழ்விப்பதால் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுவோம். (1 பே. 4:13, 14) எனவே, நாம் ஒருபோதும் பயப்படாதிருப்போமாக! யெகோவா நமக்குத் துணைநிற்பார் என்ற நம்பிக்கையோடு நற்செய்தியைத் தைரியமாய் அறிவிப்போமாக!!