படிப்புக் கட்டுரை 26
யெகோவாவின் அன்பு பயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும்
“யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்.”—சங். 118:6.
பாட்டு 105 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
இந்தக் கட்டுரையில்...a
1. பொதுவாக என்னென்ன விஷயங்களை நினைத்து நாம் பயப்படுகிறோம்?
சிலருடைய அனுபவங்களை இப்போது நாம் கவனிக்கலாம். நெஸ்டரும் அவருடைய மனைவி மரியாவும், தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் ஊழியம் செய்ய ஆசைப்பட்டார்கள்.b அதற்கு, தங்கள் செலவுகளையெல்லாம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டார்கள். ஆனால், செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சந்தோஷம் போய்விடுமோ என்று நினைத்துப் பயந்தார்கள். பினியம் என்கிற ஒருவர் நம்முடைய வேலை தடை செய்யப்பட்ட ஒரு நாட்டில் வாழ்கிறார். யெகோவாவின் சாட்சியாக ஆன பிறகு துன்புறுத்தல் வரும் என்பதை நினைத்து அவர் பயந்தார். ஆனால் அதைவிட, தான் யெகோவாவின் சாட்சியாக ஆன விஷயம் தன் குடும்பத்துக்குத் தெரியவந்தால் என்ன ஆகுமோ என்று நினைத்து இன்னும் அதிகமாகப் பயந்தார். வேலரி என்ற சகோதரிக்கு, பயங்கரமான ஒரு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. பைபிள் சொல்கிறபடி இரத்தமில்லாமல்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். ஆனால், அப்படி இரத்தமில்லாமல் சிகிச்சை கொடுக்கிற டாக்டரைக் கண்டுபிடிப்பது அவருக்குப் பெரிய பாடாய் இருந்தது. அதனால், செத்துப்போய்விடுவோமோ என்று நினைத்து ரொம்ப பயந்தார்.
2. நம் பயங்களைக் கட்டுப்படுத்துவது ஏன் முக்கியம்?
2 உங்களுக்கு இதுபோன்ற பயம் வந்திருக்கிறதா? இது நம் எல்லாருக்குமே வருவதுதான். ஆனால், இதுபோன்ற பயங்களைக் கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் தவறான தீர்மானங்களை எடுத்துவிடலாம். அதனால், யெகோவாவுடன் நமக்கு இருக்கும் பந்தம்கூடப் பாதிக்கப்படலாம். சாத்தானுக்கு இதுதான் வேண்டும். நாம் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது, நல்ல செய்தியைப் பிரசங்கிக்கக் கூடாது என்றெல்லாம் அவன் நினைக்கிறான். (வெளி. 12:17) அதனால், நம்முடைய பயத்தை ஒரு கண்ணியாகப் பயன்படுத்துகிறான். சாத்தான் ரொம்ப மோசமானவன், கொடூரமானவன், அவனுக்கு நிறைய சக்தியும் இருக்கிறது. ஆனாலும், நீங்கள் அவனுடைய வலையில் சிக்காமல் இருக்க முடியும். எப்படி?
3. பயங்களைச் சமாளிக்க எது நமக்கு உதவி செய்யும்?
3 யெகோவா நம் பக்கம் இருக்கிறார், நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் முழுமையாக நம்பும்போது, சாத்தானுடைய உருட்டல் மிரட்டல் எல்லாம் நம்மிடம் பலிக்காது. (சங். 118:6) சங்கீதம் 118-ஐ எழுதியவரின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவருடைய வாழ்க்கையில் நிறைய கவலைகளும் கஷ்டங்களும் வந்தன. அவருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள். சில தலைவர்கள்கூட அவரைப் பகைத்தார்கள் (வசனங்கள் 9, 10). சில சமயங்களில், அவர் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தார் (வசனம் 13). ஒரு சமயம், யெகோவா அவரைக் கடுமையாக கண்டித்தார் (வசனம் 18). இதெல்லாம் நடந்தபோதும், “நான் பயப்பட மாட்டேன்” என்று அவர் சொன்னார். அவரால் எப்படி இவ்வளவு தைரியமாக இருக்க முடிந்தது? யெகோவா அவரைக் கண்டித்தாலும் ஒரு அப்பாவாக அவர்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார் என்று அவருக்குத் தெரியும். வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் சரி, யெகோவா ஒரு அன்பான கடவுளாகத் தனக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பார் என்று அவர் நம்பினார்.—சங். 118:29.
4. கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்பும்போது, எப்படிப்பட்ட பயங்களை நம்மால் சமாளிக்க முடியும்?
4 யெகோவா நம் ஒவ்வொருவர் மீதும் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். அப்போதுதான், பொதுவாக நமக்கு வருகிற இந்த மூன்று விதமான பயங்களைச் சமாளிக்க முடியும்: (1) குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம், (2) மனிதர்கள்மேல் இருக்கும் பயம், (3) மரண பயம். முதல் பாராவில் நாம் பார்த்த சகோதர சகோதரிகள், கடவுள் தங்கள்மேல் அன்பு வைத்திருந்ததை முழுமையாக நம்பினார்கள். அதனால், அவர்களுக்கு இருந்த பயங்களை அவர்களால் சமாளிக்க முடிந்தது.
குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம்
ஒரு சகோதரர் தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக மீன் பிடிக்கும் வேலையைச் செய்கிறார். பக்கத்தில் அவருடைய மகனும் இருக்கிறான். (பாரா 5)
5. ஒரு குடும்பத் தலைவர் என்னென்ன விஷயங்களை நினைத்துக் கவலைப்படலாம்? (அட்டைப் படம்)
5 ஒரு கிறிஸ்தவ குடும்பத் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பை ரொம்ப முக்கியமாக நினைக்கிறார். (1 தீ. 5:8) நீங்கள் ஒரு குடும்பத் தலைவரா? அப்படியென்றால், கொரோனா பெருந்தொற்று சமயத்தில், உங்கள் வேலை பறிபோய்விடுமோ என்று நீங்கள் ஒருவேளை பயந்திருக்கலாம். சாப்பாட்டு செலவுக்கு என்ன செய்வது, வீட்டு வாடகையை எப்படிக் கட்டுவது என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட்டிருக்கலாம். அதுமட்டுமல்ல, இந்த வேலை போனால் இன்னொரு வேலை கிடைக்குமா என்றும்கூட நீங்கள் பயந்திருக்கலாம். இல்லையென்றால், ஆரம்பத்தில் பார்த்த நெஸ்டர்-மரியா மாதிரி செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சந்தோஷம் போய்விடுமோ என்று நினைத்து நீங்கள் பயந்திருக்கலாம். இதுபோன்ற பயங்களையெல்லாம் சாத்தான் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிறைய பேரை அவனுடைய வலையில் விழ வைத்திருக்கிறான்.
6. நம்மை என்ன நினைக்க வைக்க சாத்தான் முயற்சி செய்கிறான்?
6 யெகோவாவுக்கு நம்மேல் அக்கறை இல்லை என்றும், நம் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அவர் உதவி செய்ய மாட்டார் என்றும் நம்மை நினைக்க வைக்க சாத்தான் முயற்சி செய்கிறான். அதனால், எப்படியாவது நம் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கலாம். பைபிள் நியமங்களை மீற வேண்டியிருந்தால்கூட பரவாயில்லை, வேலைதான் முக்கியம் என்றும்கூட நாம் நினைக்கலாம்.
7. இயேசு நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்?
7 யெகோவாவைப் பற்றி வேறு யாரையும்விட இயேசுவுக்குத்தான் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரே என்ன சொல்லியிருக்கிறார்? ‘நாம் கேட்பதற்கு முன்பே நமக்கு என்னென்ன தேவை’ என்று கடவுளுக்குத் தெரியும் என்று அவர் சொல்லியிருக்கிறார். (மத். 6:8) அதோடு, நமக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்க யெகோவா காத்துக்கொண்டிருக்கிறார் என்று இயேசுவுக்குத் தெரியும். கிறிஸ்தவர்களாக நாம் கடவுளுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிறோம். யெகோவாதான் அந்தக் குடும்பத்தின் தலைவர். குடும்பத் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று 1 தீமோத்தேயு 5:8-ல் அவர் சொல்லியிருக்கிறார். அதை அவரே செய்யாமல் இருப்பாரா?
யெகோவா நமக்குத் தேவையானதைக் கண்டிப்பாக கொடுப்பார். நமக்கு உதவி செய்ய நம் சகோதர சகோதரிகளை அவர் ஒருவேளை பயன்படுத்தலாம் (பாரா 8)d
8. (அ) குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தைச் சமாளிக்க எது நமக்கு உதவும்? (மத்தேயு 6:31-33) (ஆ) படத்தில் பார்க்கிறபடி, ஒரு சகோதரிக்கு உணவு கொண்டு வந்த தம்பதியைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
8 யெகோவா நம்மேலும் நம் குடும்பத்தின்மேலும் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் நம்பினோம் என்றால், நமக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்றும் நம்புவோம். (மத்தேயு 6:31-33-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்க விரும்புகிறார். அவருடைய அன்புக்கும் தாராள குணத்துக்கும் அளவே இல்லை. நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையானதை மட்டுமே யெகோவா இந்தப் பூமியில் படைக்கவில்லை. நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எத்தனையோ விஷயங்களையும் படைத்திருக்கிறார். (ஆதி. 2:9) சிலசமயம், நம் வாழ்க்கையை ஓட்டுகிற அளவுக்கு மட்டும்தான் நம்மிடம் இருக்கும். ஆனால், அப்போதுகூட நம்மால் வாழ்க்கையை ஓட்ட முடிகிறது என்பதை நாம் நினைக்க வேண்டும். நமக்குத் தேவையானதை யெகோவா கொடுக்காமல் இருந்ததே இல்லை. (மத். 6:11) அதோடு, நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் பணம், பொருள் என்று எதைத் தியாகம் செய்தாலும் சரி, யெகோவா அதைவிட பல மடங்கு அதிகமாக நமக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவார், இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி! இதைத்தான் நெஸ்டரும் மரியாவும் புரிந்துகொண்டார்கள்.—ஏசா. 65:21, 22.
9. நெஸ்டர்-மரியா தம்பதியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
9 நெஸ்டரும் மரியாவும் கொலம்பியாவில் ரொம்ப வசதியாக வாழ்ந்துவந்தார்கள். “எங்க வாழ்க்கையை எளிமையாக்கிட்டு இன்னும் நிறைய ஊழியம் செய்யணும்னு நாங்க நினைச்சோம். ஆனா வசதி இல்லாம வாழ்ந்தா சந்தோஷம் போயிடுமோன்னு நினைச்சு ரொம்ப பயந்தோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். பயத்தைச் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியது? அவர்கள்மேல் இருந்த அன்பை என்னென்ன விதங்களில் யெகோவா ஏற்கெனவே காட்டியிருந்தார் என்று அவர்கள் யோசித்துப் பார்த்தார்கள். யெகோவா அவர்களை எப்போதும் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது. அதனால், கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோதும் தங்கள் வேலையை அவர்கள் விட்டுவிட்டார்கள். அவர்களுடைய வீட்டையும் விற்றுவிட்டு தேவை அதிகம் உள்ள ஒரு இடத்துக்குக் குடிமாறிப் போனார்கள். அவர்கள் எடுத்த முடிவைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நெஸ்டர் இப்படிச் சொல்கிறார்: “மத்தேயு 6:33-ல் இருக்குற வார்த்தைகள் எவ்வளவு உண்மைன்னு இப்போ நாங்க கண்கூடா பார்த்துட்டோம். எங்களுக்கு இப்போ எந்த குறையும் இல்ல. முன்னாடி இருந்ததவிட இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.”
மனிதர்கள்மேல் இருக்கும் பயம்
10. மனிதர்கள் மனிதர்களைப் பார்த்துப் பயப்படுவது ஏன் சர்வசாதாரணமாக இருக்கிறது?
10 ஆரம்பத்திலிருந்தே மனிதர்கள் ஒருவருக்கொருவர் கெடுதல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். (பிர. 8:9) உதாரணத்துக்கு, அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். குற்றவாளிகள் வன்முறையில் இறங்குகிறார்கள். ஸ்கூலில், சில முரட்டுப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைக் கிண்டல் செய்கிறார்கள் அல்லது மிரட்டுகிறார்கள். சிலர் தங்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களையே கொடூரமாக நடத்துகிறார்கள். மனிதர்கள் மனிதர்களைப் பார்த்துப் பயப்படுவதில் ஆச்சரியமே இல்லை. மனித பயத்தை சாத்தான் எப்படித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான்?
11-12. சாத்தான் எப்படி மனித பயத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான்?
11 ஊழியத்தையும், யெகோவா சொல்கிற மற்ற விஷயங்களையும் நாம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதுதான் சாத்தானுடைய குறிக்கோள். அதனால், மனித பயத்தை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். அவனுடைய தூண்டுதலினால் அரசாங்கங்கள் நம்முடைய வேலையைத் தடை செய்திருக்கின்றன, நம்மைத் துன்புறுத்தியிருக்கின்றன. (லூக். 21:12; வெளி. 2:10) சாத்தானுடைய உலகத்தில் நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தவறான தகவல்களையும் அப்பட்டமான பொய்களையும் பரப்புகிறார்கள். இந்தப் பொய்களை நம்புகிறவர்கள் நம்மைக் கேலி கிண்டல் செய்யலாம், நம்மைத் தாக்கவும் செய்யலாம். (மத். 10:36) சாத்தானுடைய சூழ்ச்சிகளைப் பார்த்து நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், முதல் நூற்றாண்டிலேயே அவன் இந்தச் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறான்.—அப். 5:27, 28, 40.
நம் குடும்பத்தில் இருக்கிறவர்கள் நம்மை எதிர்த்தாலும் யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம் (பாராக்கள் 12-14)e
12 அரசாங்கங்களின் எதிர்ப்பை நினைத்து நாம் பயந்தோம் என்றால் சாத்தானுடைய வலையில் விழுந்துவிட்டோம் என்று அர்த்தம். ஆனால், சாத்தான் இன்னொரு விதத்தில்கூட வலை விரிக்கிறான். சிலர் யெகோவாவின் சாட்சியாக ஆகும்போது, தங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து ரொம்ப பயப்படுகிறார்கள். மற்ற துன்புறுத்தலைவிட இதை நினைத்துதான் அதிகமாகப் பயப்படுகிறார்கள். குடும்பத்தார்மேல் அவர்கள் நிறைய பாசம் வைத்திருக்கிறார்கள். அதனால், அவர்களும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவைப் பற்றியும், அவரை வணங்குகிறவர்களைப் பற்றியும் அவமரியாதையாகப் பேசுவதைக் கேட்கும்போது இவர்களுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. சில சமயங்களில், குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஆரம்பத்தில் எதிர்த்திருக்கிறார்கள். அதன்பின், அவர்களே யெகோவாவின் சாட்சியாக ஆகியிருக்கிறார்கள். ஒருவேளை, நம் குடும்பத்தில் இருக்கிறவர்கள் நம்முடைய புது நம்பிக்கைகளைக் காரணம்காட்டி நம்மை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது?
13. கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்புவது குடும்பத்தில் இருக்கிறவர்களுடைய எதிர்ப்பைச் சமாளிக்க நமக்கு எப்படி உதவும்? (சங்கீதம் 27:10)
13 சங்கீதம் 27:10-ல் இருக்கிற அழகான வார்த்தைகளை நினைத்து நாம் ஆறுதல் அடையலாம். (வாசியுங்கள்.) யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துப் பார்த்தோம் என்றால், என்னதான் எதிர்ப்பு வந்தாலும் பயப்படாமல் தைரியமாக இருக்க முடியும். நாம் காட்டும் சகிப்புத்தன்மைக்கு அவர் பலன் தருவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். நம்முடைய உடல், உணர்ச்சிகள், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட எல்லா தேவைகளையும் வேறு யாரையும்விட யெகோவா ரொம்ப நன்றாகக் கவனித்துக்கொள்வார். ஆரம்பத்தில் நாம் பார்த்த பினியம் இதைத்தான் புரிந்துகொண்டார்.
14. பினியமின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
14 அதிகாரிகள் கடுமையாகத் துன்புறுத்துவார்கள் என்று தெரிந்தும் பினியம் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார். யெகோவா தன்னை நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டது, மனித பயத்தைச் சமாளிக்க பினியமுக்கு உதவியாக இருந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் நெனச்சு பார்த்ததைவிட பயங்கரமான துன்புறுத்தல் வந்துச்சு. ஆனா, அதிகாரிகள்கிட்ட இருந்து வந்த துன்புறுத்தலைவிட என்னோட குடும்பத்துக்கிட்ட இருந்து வந்த எதிர்ப்பை நெனச்சுதான் நான் ரொம்ப அதிகமா பயந்தேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சியா ஆகப்போறது தெரிஞ்சா, என் அப்பாவோட மனசு உடைஞ்சு போயிடுமோன்னு நெனச்சு கவலைப்பட்டேன். என் குடும்பத்துல இருக்கிறவங்க அதுக்கு அப்புறம் என்ன மதிக்கவே மாட்டாங்கன்னு நெனச்சு பயந்தேன்.” ஆனாலும், யெகோவா ஒருவர்மேல் அன்பு வைத்துவிட்டால் அவரை எப்போதுமே நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்பதை பினியம் உறுதியாக நம்பினார். அதைப் பற்றி பினியம் இப்படிச் சொல்கிறார்: “பணப்பிரச்சினை, மத்தவங்களோட வெறுப்பு, கும்பல்களோட தாக்குதல்... இதெல்லாம் சகிச்சிக்க யெகோவா எப்படி மத்தவங்களுக்கு உதவி செஞ்சிருக்காருனு நான் யோசிச்சு பாத்தேன். நான் யெகோவாவுக்கு உண்மையா இருந்தா அவர் என்னை ஆசீர்வதிப்பார்னு தெரிஞ்சுகிட்டேன். நிறைய தடவை என்னை கைது செஞ்சாங்க, சித்திரவதைகூட செஞ்சாங்க. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலயும், நாம யெகோவாவுக்கு உண்மையா இருந்தா அவர் எந்தளவுக்கு நமக்கு உதவி செய்வாருங்கறத கண்கூடா பார்த்தேன்.” இப்போது பினியம் யெகோவாவைத் தன்னுடைய சொந்த அப்பாவைப் போலவும், யெகோவாவின் மக்களைத் தன்னுடைய சொந்த குடும்பம் போலவும் பார்க்கிறார்.
மரண பயம்
15. மரண பயம் இயல்புதான் என்று ஏன் சொல்லலாம்?
15 மரணம் ஒரு எதிரி என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 15:25, 26) மரணத்தைப் பற்றி நினைத்தாலே நமக்குக் கவலையாக இருக்கலாம். முக்கியமாக, நமக்கோ நம் அன்பானவர்களுக்கோ தீராத வியாதி இருக்கும்போது நமக்கு அப்படிக் கவலையாக இருக்கலாம். நாம் ஏன் மரணத்தை நினைத்து பயப்படுகிறோம்? ஏனென்றால், நாம் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடுதான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். (பிர. 3:11) மரண பயம் ஓரளவு நல்லதுதான். ஏனென்றால், அது நம் உயிரைப் பாதுகாக்கும். உதாரணத்துக்கு, உயிர்மேல் ஆசை இருந்தால், நாம் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம், நன்றாக உடற்பயிற்சி செய்வோம், தேவைப்பட்டால் டாக்டரிடம் போவோம், மருந்துகளையும் எடுத்துக்கொள்வோம். அதுமட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தான எதையுமே செய்ய மாட்டோம்.
16. நமக்கு இயல்பாக இருக்கிற மரண பயத்தை சாத்தான் எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான்?
16 நம் உயிரை நாம் முக்கியமாக நினைக்கிறோம் என்று சாத்தானுக்குத் தெரியும். ஆனால், நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாம் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்போம் என்று அவன் சொல்கிறான். (யோபு 2:4, 5) சொல்லப்போனால், யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தைக்கூட நாம் இழக்கத் தயாராக இருப்போம் என்று சொல்கிறான். அவன் சொல்வது பொய். இருந்தாலும், சாத்தான்தான் ‘மரணத்துக்கு வழிவகுக்கிறவன்.’ (எபி. 2:14, 15) அதனால், நமக்கு இயல்பாக இருக்கிற மரண பயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான். சில சமயம், நம்முடைய நம்பிக்கையை விடவில்லை என்றால் நம்மைக் கொலை செய்யப்போவதாக சாத்தானுடைய ஆட்கள் நம்மை மிரட்டுகிறார்கள். மற்ற சமயங்களில், ஒருவேளை நம் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, கடவுளுடைய பேச்சை மீறி நடக்க சாத்தான் நம்மைத் தூண்டலாம். உதாரணத்துக்கு, இரத்தம் ஏற்றச் சொல்லி டாக்டர்களோ சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோ நம்மை வற்புறுத்தலாம். இல்லையென்றால், பைபிளுக்கு எதிரான ஒரு மருத்துவ சிகிச்சையை எடுக்கச் சொல்லி யாராவது நம்மைத் தூண்டலாம்.
17. ரோமர் 8:37-39 சொல்கிறபடி, நாம் ஏன் மரணத்தை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை?
17 சாக வேண்டும் என்று நாம் யாருமே விரும்புவது இல்லைதான். ஒருவேளை நாம் இறந்துவிட்டாலும், யெகோவா நம்மேல் அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டார் என்று நமக்குத் தெரியும். (ரோமர் 8:37-39-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்கள் இறந்தாலும் அவருடைய நினைவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். (லூக். 20:37, 38) மறுபடியும் அவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார். (யோபு 14:15) நமக்கு ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் மகனுடைய உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16) அவர் நம்மேல் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், வியாதியின் காரணமாக அல்லது துன்புறுத்தல் காரணமாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நாம் இருக்கும்போது யெகோவாவைவிட்டு விலகிப் போகவே கூடாது. அதற்குப் பதிலாக, ஆறுதலுக்காகவும் ஞானத்துக்காகவும் பலத்துக்காகவும் அவரையே நம்பியிருக்கலாம். அதைத்தான் வேலரியும் அவருடைய கணவரும் செய்தார்கள்.—சங். 41:3.
18. வேலரியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
18 வேலரிக்கு 35 வயது இருக்கும்போது அவருக்குப் பயங்கரமான ஒரு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆனால், யெகோவா அவர்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொண்டதால் மரண பயத்தை அவரால் சமாளிக்க முடிந்தது. வேலரி இப்படிச் சொல்கிறார்: “எனக்கு புற்றுநோய் இருக்குறது தெரியவந்தப்போ, என் கணவருக்கும் எனக்கும் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. உடனே ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்யணும், இல்லனா பிழைக்கவே மாட்டேன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. இரத்தம் இல்லாம ஆப்ரேஷன் செய்ய முடியுமான்னு நிறைய டாக்டர்கள்கிட்ட நான் கேட்டு பாத்தேன். அவங்க எல்லாருமே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு பயமாதான் இருந்துச்சு. ஆனா, என்ன ஆனாலும் சரி, கடவுளோட பேச்சை மீறி இரத்தத்தை ஏத்திக்கவே மாட்டேன்னு உறுதியா இருந்தேன். இத்தனை காலமா யெகோவா என்மேல அன்பை பொழிஞ்சிருக்காரு. இப்போ அவர்மேல எனக்கு இருக்குற அன்பை காட்ட ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் உடம்பு மோசமாயிட்டு வர்றதா டாக்டர்கள் சொன்ன ஒவ்வொரு சமயமும் என் மனஉறுதி ஜாஸ்திதான் ஆச்சு. சாத்தானை ஜெயிக்க விடவே கூடாது, யெகோவா பெருமைப்படுற மாதிரிதான் நடக்கணும்னு நெனச்சேன். கடைசியில எனக்கு இரத்தம் ஏத்தாமலேயே நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சுது. இப்பவும் எனக்கு உடல்நல பிரச்சினைகள் இருக்குதுதான். ஆனா எங்களுக்கு தேவையானதை யெகோவா எப்பவுமே கொடுத்துட்டு வந்திருக்காரு. உதாரணத்துக்கு, எனக்கு புற்றுநோய் இருக்குறது தெரியவர்றதுக்கு முந்தின வாரம்தான் ‘துயரங்களைத் தைரியமாய்த் துரத்தியடிக்க...’ அப்படிங்கற காவற்கோபுர கட்டுரைய கூட்டத்துல படிச்சோம்.c அந்த கட்டுரைதான் எங்களுக்கு டானிக் மாதிரி இருந்துச்சு. அத நாங்க திரும்ப திரும்ப படிச்சோம். இந்த மாதிரி கட்டுரைகளும், கூட்டங்களும், ஊழியமும்தான் என் கணவருக்கும் எனக்கும் மன அமைதியை கொடுத்துச்சு. பதட்டப்படாம இருக்குறதுக்கும் நல்ல தீர்மானங்கள எடுக்குறதுக்கும் உதவி செஞ்சுது.”
பயங்களைச் சமாளித்தல்
19. சீக்கிரத்தில் என்ன நடக்கும்?
19 யெகோவாவின் உதவியோடு உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் நிறைய சவால்களைச் சமாளித்து பிசாசை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். (1 பே. 5:8, 9) உங்களாலும் அதைச் செய்ய முடியும். ரொம்ப சீக்கிரத்தில், ‘பிசாசின் செயல்களை ஒழிக்கும்படி’ இயேசுவுக்கும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப் போகிறவர்களுக்கும் யெகோவா கட்டளை கொடுப்பார். (1 யோ. 3:8) அதற்குப் பிறகு, பூமியில் இருக்கிற அவருடைய மக்கள் ‘எதற்குமே பயப்பட மாட்டார்கள், எதுவுமே அவர்களைப் பயமுறுத்தாது.’ (ஏசா. 54:14; மீ. 4:4) அதுவரை, நம் பயங்களையெல்லாம் சமாளிக்க நாம் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.
20. பயங்களைச் சமாளிக்க நமக்கு எது உதவும்?
20 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார்... நம்மைப் பாதுகாக்கிறார்... என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கடந்த காலங்களில் யெகோவா எப்படித் தன்னுடைய ஊழியர்களைப் பாதுகாத்தார் என்பதை நாம் யோசித்துப் பார்க்கும்போதும், அதைப் பற்றிப் பேசும்போதும் நம் நம்பிக்கை பலமாகும். அதோடு, கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்க யெகோவா நமக்கு எப்படி உதவினார் என்பதை யோசித்துப் பார்ப்பதும் நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும். யெகோவாவின் உதவியோடு நம் பயங்களைக் கண்டிப்பாக நம்மால் சமாளிக்க முடியும்!—சங். 34:4.
பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!
a பயப்படுவது தவறு என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால், அது ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால், தேவையில்லாமல் பயப்படுவது நம்மை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எப்படி? பயத்தை சாத்தான் ஒரு கண்ணியாகப் பயன்படுத்தி, அவனுடைய வலையில் நம்மை விழ வைத்துவிடுவான். அதனால், தேவையில்லாத பயத்தை விட்டொழிக்க நாம் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய நமக்கு எது உதவும்? யெகோவா நம்பக்கம் இருக்கிறார்... நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்... என்பதை உறுதியாக நம்பும்போது எப்படிப்பட்ட பயத்தையும் நம்மால் சமாளிக்க முடியும். அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
c அக்டோபர் 15, 2012 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 7-11-ஐப் பாருங்கள்.
d படவிளக்கம்: கடினமாக உழைக்கிற ஒரு சகோதரியின் குடும்பத்துக்கு அவர்களுடைய சபையில் இருக்கிற ஒரு தம்பதி சாப்பாடு கொண்டுவருகிறார்கள்.
e படவிளக்கம்: ஒரு இளம் சகோதரர் யெகோவாவை வணங்குவதால் அவருடைய பெற்றோர் எதிர்க்கிறார்கள். ஆனால், யெகோவா தனக்கு உதவி செய்வார் என்று அந்தச் சகோதரர் நம்பிக்கையாக இருக்கிறார்.