பிரசங்கிக்க எப்போதுமே தயாராயிருங்கள்
1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்திலும் பிரசங்கித்தார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
1 முதல் நூற்றாண்டிலிருந்த பக்திவைராக்கியமுள்ள கிறிஸ்தவர்கள், மக்களை எங்கெல்லாம் பார்த்தார்களோ அங்கெல்லாம் நற்செய்தியை “இடைவிடாமல்” பிரசங்கித்தார்கள். (அப். 5:42) அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காக அவர்கள் போனபோது தெருவில் சந்தித்த ஆட்களிடமும் பிரசங்கித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஊழியத்தை முடித்துவிட்டு பொருள்களை வாங்குவதற்காகக் கடைகளுக்குச் சென்றபோதும்கூட சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருப்பார்கள். ஆம், இயேசுவைப் போலவே ஓய்வாக இருந்த நேரத்திலும்கூட அவர்கள் பிரசங்கித்தார்கள்.—மாற். 6:31-34.
2. பெயருக்கேற்றபடி வாழ்கிறோம் என்பதைக் காட்ட ஒரு வழி என்ன?
2 எப்போதும் தயாராயிருங்கள்: யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் சாட்சி கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, எப்போதுமே நாம் சாட்சிகளாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. (ஏசா. 43:10-12) எனவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மட்டுமில்லை, எல்லா சந்தர்ப்பத்திலும் நம்முடைய நம்பிக்கையைக் குறித்து பேசத் தயாராயிருக்க வேண்டும். (1 பே. 3:15) அப்படியென்றால், எப்போதெல்லாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம் என்பதை முன்கூட்டியே யோசித்துப் பார்க்கிறீர்களா, அதற்காகத் தயாரிக்கிறீர்களா? ஆர்வம் காட்டுகிறவர்களிடம் கொடுப்பதற்காக எப்போதும் பிரசுரங்களை கையில் வைத்திருக்கிறீர்களா? (நீதி. 21:5) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மட்டுமே ஈடுபடுகிறீர்களா அல்லது வாய்ப்பு கிடைக்கும்போது மற்ற இடங்களிலும் நற்செய்தியை அறிவிக்கிறீர்களா?
3. தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கடைவீதிகள் போன்ற இடங்களில் பிரசங்கிப்பதை இனிமேல் எப்படி அழைப்போம்?
3 “பொது” ஊழியம்: வீட்டுக்கு வீடு மட்டுமல்ல தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், கடைவீதிகள், ரயில் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுலும்கூட வீடு வீடாகவும் “பொது இடங்களிலும்” பிரசங்கித்தார். (அப். 20:20) எனவே, இப்படி பொது இடங்களில் ஊழியம் செய்வதை இனி “பொது” ஊழியம் என்று அழைப்போம். மக்களிடம் ராஜ்ய செய்தியைச் சொல்வதற்கு நாம் தொடர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுவோம். அது முக்கியமானதுதான், அதிக பலன் தரக்கூடியதுதான். என்றாலும், பொது ஊழியமும் முக்கியமானது. ஏனென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எத்தனை வீடுகளைச் சந்திக்கிறோம் என்பதில் அல்ல, எத்தனை பேரிடம் சாட்சி கொடுக்கிறோம் என்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியம், பொது இடங்களில் சாட்சி கொடுப்பது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது என எப்போதும் சாட்சி கொடுக்க அவர்கள் தயாராயிருந்தார்கள். நம்முடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நாமும் அவர்களைப் போலவே மக்கள்மீது அதிக அக்கறை காட்டலாம்.—2 தீ. 4:5.