எல்லோரோடும் சமாதானமாய் இருங்கள்
1. வீட்டுக்காரர்கள் நம்மீது கோபப்பட்டால் எந்த பைபிள் ஆலோசனையை நாம் பின்பற்ற வேண்டும்?
1 யெகோவாவின் மக்களாகிய நாம் சமாதானத்தை நேசிக்கிறோம். நாம் சொல்லும் செய்தியும் சமாதானத்தின் செய்தி. (ஏசா. 52:7) என்றாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சிலர் நம்மைப் பார்த்ததுமே கோபப்படலாம். அப்போது, சமாதானமாக இருக்க எது நமக்கு உதவும்?—ரோ. 12:18.
2. சூழ்நிலையைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
2 சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்: சத்தியத்தைப் பிடிக்காத காரணத்தினால் சிலர் நம்மீது கோபப்பட்டாலும், நிறைய பேர் நம்மீது கோபப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை, அசௌகரியமான நேரத்தில் நாம் அவர்களைச் சந்தித்திருக்கலாம், ஏதாவது சொந்த பிரச்சினையினால் அவர்கள் மனவருத்தத்தில் இருந்திருக்கலாம்; அல்லது, நம்மைப் பற்றிய பொய்களை நம்பி அவர்கள் மோசம் போயிருக்கலாம். (2 கொ. 4:4) எனவே, ஒருவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டால் நாம் அவரிடம் சாந்தமாக நடந்துகொள்வோம், அதோடு தனிப்பட்ட விதத்தில் அவருக்கு நம்மீது எந்தக் கோபமும் இல்லை என்பதை மனதில் வைப்போம்.—நீதி. 19:11.
3. வீட்டுக்காரரிடம் நாம் எப்படி மரியாதையுடன் நடந்துகொள்ளலாம்?
3 மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்: நம் பிராந்தியத்தில் இருக்கும் அநேகர் தங்கள் மத நம்பிக்கையில் ஊறிப்போயிருக்கிறார்கள். (2 கொ. 10:4) நம் செய்தியைக் கேட்பதும் கேட்காததும் அவரவருடைய விருப்பம். அதனால், வீட்டுக்காரர்களின் மத நம்பிக்கையை நாம் மட்டம்தட்டவும் கூடாது, நமக்குத்தான் அதிகம் தெரியும் என்பதுபோல் காட்டிக்கொள்ளவும் கூடாது. வீட்டுக்காரர் வெளியே போகச் சொன்னால் நாம் மரியாதையுடன் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.
4. இனிமையாகப் பேசுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
4 இனிமையாகப் பேசுங்கள்: வீட்டுக்காரர்கள் கோபத்தில் நம்மைக் கண்டபடி திட்டினால்கூட நாம் அவர்களிடம் சாந்தமாக, இனிமையாகப் பேச வேண்டும். (கொலோ. 4:6; 1 பே. 2:23) அவர்களிடம் வாதாடுவதற்குப் பதிலாக அவர்கள் ஒத்துக்கொள்கிற விஷயங்களைப் பேச வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை அவர்களிடமே கனிவாகக் கேட்டுப்பார்க்கலாம். ஆனால், அவர்கள் இன்னும் கோபப்படுகிறார்கள் என்றால் பேசுவதை நிறுத்திவிடுவது நல்லது.—நீதி. 9:7; 17:14.
5. ஊழியத்தில் நாம் சமாதானமாக நடந்துகொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
5 நாம் சமாதானமாக நடந்துகொண்டால் வீட்டுக்காரர்கள் அதை மறக்க மாட்டார்கள். அடுத்த முறை வேறு யாராவது சாட்சி கொடுக்கும்போது அவர்கள் காதுகொடுத்துக் கேட்க வாய்ப்பு இருக்கிறது. (ரோ. 12:20, 21) அவர்கள் நம்மைத் தொடர்ந்து எதிர்த்தால்கூட ஒருநாள் நம்முடைய சகோதரர்களாய் ஆகலாம். (கலா. 1:13, 14) அவர்கள் ஆர்வம் காட்டினாலும் சரி காட்டாவிட்டாலும் சரி, நாம் சுயக்கட்டுப்பாட்டோடும் சமாதானத்தோடும் நடந்துகொண்டால் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்போம், அவருடைய போதனைகளை அலங்கரிப்போம்.—2 கொ. 6:3.