இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
பைபிள் மாணாக்கரை அமைப்பிடமாக வழிநடத்த உதவும் புதிய சிற்றேடு
1. இந்தப் புதிய சிற்றேடு என்ன மூன்று காரணங்களுக்காகத் தயாரிக்கப்பட்டது?
1 இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? என்ற புதிய சிற்றேட்டைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா? என்ன காரணங்களுக்காக அது தயாரிக்கப்பட்டது? (1) யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட மக்கள் என மாணாக்கர்கள் நன்கு தெரிந்துகொள்வதற்காக, (2) நாம் செய்யும் வேலையை அவர்கள் புரிந்துகொள்வதற்காக, (3) நம்முடைய அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காகத் தயாரிக்கப்பட்டது. இந்தப் புதிய சிற்றேட்டில், பாடங்கள் ஒரு பக்கத்திற்கு மட்டுமே உள்ளன; ஒவ்வொரு முறையும் படிப்பு முடிந்த பிறகு வெறும் ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் ஒரு பாடத்தை எளிதாக நடத்திவிடலாம்.
2. இந்தச் சிற்றேடு எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? அதிலுள்ள சில அம்சங்களைப் பற்றி விளக்குங்கள்.
2 எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது: இந்தச் சிற்றேடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு பாகமும் யெகோவாவுடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கிறது. இதிலுள்ள 28 பாடங்களின் தலைப்பும் கேள்வி வடிவில் உள்ளது; கேள்விக்கான பதில் தடித்த எழுத்துகளில் உபதலைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய வேலை சர்வதேச அளவில் செய்யப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக, 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த புகைப்படங்கள் இந்தச் சிற்றேடு முழுவதிலும் இருக்கின்றன; அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே அந்தந்த நாட்டின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பாடங்களில், “மேலும் அறிய” என்ற பெட்டியும் உள்ளது; ஏதோவொன்றைச் செய்யும்படி பைபிள் மாணாக்கரை உற்சாகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் அதில் உள்ளன.
3. இந்தப் புதிய சிற்றேட்டை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?
3 எப்படிப் பயன்படுத்துவது: முதலாவதாக, கேள்வி வடிவிலுள்ள பாடத்தின் தலைப்பை மாணாக்கருக்குக் காட்டுங்கள். பின்பு, அந்தப் பாடத்தை இருவருமாகக் கலந்தாலோசிக்கும்போது, தடித்த எழுத்துகளிலுள்ள உபதலைப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். கடைசியாக, பக்கத்தின் கீழே உள்ள மறுபார்வைக் கேள்விகளைச் சிந்தியுங்கள். முழு பாடத்தையும் ஒரே சமயத்தில் படிக்கலாம் அல்லது பகுதி பகுதியாகப் படிக்கலாம். குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களில் எவற்றை வாசிப்பது என ஞானமாகத் தீர்மானியுங்கள். படங்களையும், “மேலும் அறிய” பெட்டிகளையும் கலந்தாலோசிக்க மறந்துவிடாதீர்கள். பெரும்பாலும், பாடங்களை வரிசையாகப் படிப்பதே நல்லது. என்றாலும், ஏதோவொரு விஷயத்தை உடனடியாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், அதைப் பற்றிய பாடத்தை நீங்கள் தாராளமாகக் கலந்தாலோசிக்கலாம். உதாரணத்திற்கு, வட்டார அல்லது மாவட்ட மாநாடு சீக்கிரத்தில் நடைபெறவிருந்தால், பாடம் 11-ஐ நீங்கள் கலந்தாலோசிக்கலாம்.
4. இந்தப் புதிய சிற்றேடு கிடைத்ததற்காக நீங்கள் ஏன் சந்தோஷப்படுகிறீர்கள்?
4 நாம் பைபிள் படிப்பு நடத்தும்போது, நம்முடைய பரலோகத் தகப்பனிடம் நெருங்கிவர மாணாக்கருக்கு உதவுகிறோம். என்றாலும், யெகோவாவின் அமைப்பைப் பற்றியும் நாம் அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். (நீதி. 6:20) அந்த வேலையை எளிதாக்குகிற இந்தப் புதிய சிற்றேடு நமக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு சந்தோஷம்!