கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது
1. 2014 ஊழிய ஆண்டில் நடத்தப்படும் விசேஷ மாநாட்டின் பொருள் என்ன?
1 மனிதன் எழுதிய எந்த நூல்களுக்கும் இல்லாத வல்லமை பைபிளுக்கு இருக்கிறது; ஆம், நம்மை அடியோடு மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது; அது நம் சிந்தையையும் செயலையும் யெகோவாவின் சித்தத்துக்கு ஏற்ப சீரமைக்கும். பைபிளுக்கு உண்மையில் எந்தளவு வல்லமை இருக்கிறது? அதன் வல்லமையை நம் வாழ்வில் எவ்வாறு முழுமையாகப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளலாம்? மற்றவர்களுக்கு உதவ அதை எப்படி இன்னும் திறமையாகப் பயன்படுத்தலாம்? 2014 ஊழிய ஆண்டில் நடத்தப்படும் விசேஷ மாநாட்டில் இந்தக் குறிப்புகள் சிந்திக்கப்படும். அவை ஆன்மீக ரீதியில் எல்லோரையும் பலப்படுத்தும் என்பது உறுதி. “கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது” என்பதே அந்த விசேஷ மாநாட்டின் பொருள். இது எபிரெயர் 4:12-ன் அடிப்படையில் அமைந்துள்ளது.
2. எந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் கவனிக்க வேண்டும்?
2 இந்தக் கேள்விகளுக்குக் கொடுக்கப்படும் பதில்களைக் கவனியுங்கள்: பேச்சுகளைக் கேட்கும்போது பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.
• யெகோவாவின் வார்த்தைமீது நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்? (சங். 29:4)
• கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை எப்படி நாம் அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ளலாம்? (சங். 34:8)
• கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருப்பதை ஊழியத்தில் எப்படிக் காட்டலாம்? (2 தீ. 3:16, 17)
• சாத்தானுடைய உலகத்தின் வஞ்சக சக்திக்கு இரையாகாமல் இருப்பது எப்படி? (1 யோ. 5:19)
• ஓர் இளைஞராக நீங்கள் எப்படி ஆன்மீக ரீதியில் வெற்றி பெறலாம்? (எரே. 17:7)
• நாம் பலவீனமாக இருக்கும்போதுகூட எப்படிப் பலமுள்ளவர்களாக ஆகலாம்? (2 கொ. 12:10)
• நம்மிடம் ஊறிப்போயிருக்கும் பழக்கவழக்கங்களையும் மனப்பான்மைகளையும்கூட விட்டொழித்து தொடர்ந்து மாற்றங்களைச் செய்ய எது அவசியம்? (எபே. 4:23)
3. பேச்சுகளைக் கேட்பதோடு வேறு எந்த விதத்திலும் விசேஷ மாநாட்டிலிருந்து நாம் நன்மையடையலாம்?
3 இந்த முக்கியமான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதால் நாம் எவ்வளவு நன்மையடைவோம்! அதுமட்டுமல்ல, வட்டார மாநாட்டையும் மாவட்ட மாநாட்டையும் போலவே இந்த விசேஷ மாநாட்டின்போதும் மற்ற சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளோடு பேசி மகிழ முடியும். ஆம், நம் இதயக் கதவை அகலத் திறக்க முடியும். (சங். 133:1-3; 2 கொ. 6:11-13) ஆகவே பழக்கப்பட்ட நண்பர்களோடு பேசி மகிழவும் புதிய நண்பர்களை உருவாக்கவும் நேரம் செலவிடுங்கள். நீங்கள் செல்லும் விசேஷ மாநாட்டுக்கு ஒரு மாவட்ட கண்காணியோ பெத்தேலிலுள்ள சகோதரரோ சிறப்புப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தால் அவரையும் அவருடைய மனைவியையும் ஏன் பார்த்துப் பேசக் கூடாது? வரவிருக்கும் விசேஷ மாநாட்டை ஆவலோடு எதிர்பார்த்திருக்க எத்தனை எத்தனை காரணங்கள்!