இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்?
1. யெகோவாவின் சித்தம் சிற்றேட்டை எப்போது முதல் சிந்திப்போம்? இது நமக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்?
1 ஜூன் 23-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பில், இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? சிற்றேட்டைப் படிப்போம். இந்தப் புதிய சிற்றேடு, ‘இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!’ மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது. பைபிள் மாணாக்கருக்கு அமைப்பைப் பற்றி சொல்லிக்கொடுக்க இது உதவும். இந்தச் சிற்றேட்டைக் கலந்தாலோசிப்பது, யெகோவாவுடைய அமைப்பின் பாகமாக இருப்பதற்கு இன்னும் நன்றியுள்ளவர்களாக இருக்கவும் ஊழியத்தில் இதைத் திறம்பட பயன்படுத்தவும் நமக்கு உதவும்.—சங். 48:13.
2. இந்தச் சிற்றேடு சபையில் எப்படிக் கலந்தாலோசிக்கப்படும்?
2 இதை எப்படிப் படிக்க வேண்டும்? ஒவ்வொரு பாடத்தையும் சிந்திக்க, நடத்துனர் சரிசமமான நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்பும் கேள்வி வடிவிலுள்ள அந்தப் பாடத்தின் தலைப்பை முதலில் அவர் வாசிப்பார். அதன்பின் வாசிப்பாளரிடம் அறிமுக பாராவை வாசிக்கும்படி சொல்வார். பின்பு, அந்தப் பாராவுக்குப் பொருத்தமான ஒரு கேள்வியை நடத்துனரே கேட்பார். அடுத்ததாக, தடித்த எழுத்தில் ஆரம்பிக்கும் பகுதியை ஒவ்வொன்றாக வாசித்து கலந்தாலோசிப்பார். ஒரு பகுதியை வாசித்தபின் அது அந்தப் பாடத்தின் தலைப்பிலுள்ள கேள்விக்கு எப்படிப் பதிலளிக்கிறது என்பதைச் சபையாரிடம் கேட்பார். இந்தச் சிற்றேட்டில் அநேக படங்கள் உள்ளன, அதையும் கலந்தாலோசிப்பார். நேரமிருந்தால் முக்கிய வசனங்களை வாசிக்கும்படி சொல்வார். அடுத்த பாடத்திற்குச் செல்லும்முன் இந்தப் பாடத்தின் கீழுள்ள கேள்விகளைக் கேட்டு மறுபார்வை செய்வார். “மேலும் அறிய” என்ற பெட்டி இருந்தால் வாசிப்பாளரை அதை வாசிக்க சொல்வார். அதிலுள்ள ஆலோசனையைக் கடைப்பிடித்தால் பைபிள் மாணாக்கர் எப்படி நன்மையடைவார் என்று சபையாரிடம் கேட்பார். படிப்பு முடிந்த பிறகு நேரமிருந்தால் பாடங்களின் தலைப்புகளை மறுபார்வை கேள்விகளாகக் கேட்பார். ஆனால், வீட்டு பைபிள் படிப்பு நடத்தும்போது சபையார் இந்தப் படிப்பு முறையைக் கையாள வேண்டியதில்லை.
3. இந்தச் சிற்றேட்டைக் கலந்தாலோசிப்பதிலிருந்து நாம் எப்படி முழுமையாகப் பயனடைவோம்?
3 இந்தச் சிற்றேட்டிலிருந்து முழுமையாக நன்மையடைய வேண்டுமென்றால் கூட்டத்திற்கு நன்கு தயாரித்து வாருங்கள். பதில் சொல்ல கடினமாக முயற்சி செய்யுங்கள். கலந்தாலோசிக்கப்படும் குறிப்புகள் பைபிள் மாணாக்கருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நம்மோடு சேர்ந்து மற்றவர்களும் கடவுளுடைய சித்தத்தை செய்ய நாம் உதவுகிறோம். அதற்கு இந்தச் சிற்றேடு நமக்குக் கைகொடுக்கும். அப்போது, நம்மோடு சேர்ந்து அவர்களும் முடிவில்லா வாழ்வை அனுபவிக்க முடியும்.—1 யோ. 2:17.