ஆகஸ்ட் மாதம்—ஊழியத்தில் சரித்திரம் படைக்கப் போகும் மாதம்!
உலகம் முழுவதும் ஒரு புதிய துண்டுப்பிரதி விநியோகிக்கப்படும்
1. என்ன விசேஷ விநியோகிப்பு உலகம் முழுவதும் செய்யப்படும்?
1 கடவுளுடைய அரசாங்கம் ஆரம்பமாகி 100 ஆண்டுகள் முடியப்போகிறது! இந்த மாதத்தில் ஒரு விசேஷ விநியோகிப்பைச் செய்வது யெகோவாவுக்கு எந்தளவு புகழ் சேர்க்கும்! வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற புதிய துண்டுப்பிரதியை ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் விநியோகிப்போம். வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் பதில்களைப் பார்க்கும்படி அந்தத் துண்டுப்பிரதி மக்களை ஊக்குவிக்கும். அதற்கு jw.org எப்படி உதவும் என்றும் விளக்கும். இன்று அநேகர் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை, வீட்டுக்காரருக்கு இன்டர்நெட் பயன்படுத்த தெரியாவிட்டால் இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35) துண்டுப்பிரதியையோ மற்ற பொருத்தமான துண்டுப்பிரதியையோ கொடுங்கள்.
2. ஆகஸ்ட் மாதத்தில் யெகோவாவுக்கு மாபெரும் புகழையும் துதியையும் சேர்க்க நாம் என்ன செய்யலாம்?
2 மகா கெம்பீரமாய் ஆரவாரம் செய்வோம்: ஆகஸ்ட் மாதத்தில் துணை பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் 30 மணிநேரம்கூட செய்யலாம். ஊழியத்தில் அதிகமாக ஈடுபட விரும்பும் ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகளுக்காகச் செய்யப்படும் விசேஷ ஏற்பாடு இது! இந்த மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதால் பள்ளிக்குச் செல்பவர்களும் வேலைக்குச் செல்பவர்களும்கூட துணை பயனியர் செய்யலாம். சத்தியத்தில் நன்கு முன்னேறுகிற உங்கள் பிள்ளைகளோ பைபிள் மாணாக்கரோ பிரஸ்தாபி ஆக விரும்பினால் சபையின் ஒருங்கிணைப்பாளரிடம் இப்போதே பேசுங்கள். மிக முக்கியமான இந்த மாதத்தில் நம்மோடு பிரஸ்தாபிகளாக சேவை செய்வது அவர்களுக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தரும் இல்லையா? அநேக ஒழுங்கான பயனியர்கள் தங்கள் வருடாந்திர மணிநேரத்தை முடித்துவிட்டு இந்த மாதம் கொஞ்சம் ஓய்வெடுப்பார்கள். இருந்தாலும், தங்களுடைய அட்டவணையில் சில மாற்றம் செய்து இந்த விசேஷ விநியோகிப்பில் மும்முரமாக ஈடுபட முயற்சி செய்வது அவர்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும். குடும்பமாகச் சேர்ந்து இந்த விசேஷ விநியோகிப்பில் ஈடுபட ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று இப்போதே கலந்துபேசுங்கள். இது யெகோவாவுக்கு மாபெரும் விதத்தில் புகழையும் துதியையும் சேர்க்கும்.—எஸ்றா 3:11; நீதி. 15:22.
3. இந்த விசேஷ விநியோகிப்பு எப்படி இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்?
3 இதுபோன்ற விநியோகிப்புகளில் நாம் முன்பு ஈடுபட்டிருந்தாலும் இந்த விசேஷ விநியோகிப்பு சரித்திரம் படைக்கும் என்று நம்புகிறோம். ஆகஸ்ட் மாதத்தில் மணிநேரங்களிலும், பிரஸ்தாபிகள் மற்றும் துணை பயனியர்களின் எண்ணிக்கையிலும் நம்மால் உச்சநிலையைத் தொட முடியுமா? 2014-ஆம் ஊழிய ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் செய்யப்போகும் இந்த விசேஷ ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிப்பாராக! இந்த மாதம் நாம் ஊழியத்தில் உச்சநிலையை எட்டுவோமாக!—மத். 24:14.