வாய்ப்பு என்ற பெரிய கதவு திறந்திருக்கிறது
ஊழியத்தில் ஆர்வத்துடிப்புடன் ஈடுபட்ட அப்போஸ்தலன் பவுல் தேவை எங்கு இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து ஊழியம் செய்தார். அப்படி அவர் ஊழியம் செய்த ஒரு நகரம்தான் எபேசு. அங்கே அவருக்கு அமோக பலன் கிடைத்தது. அதனால், மற்ற கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதினார்: “வாய்ப்பு என்ற பெரிய கதவு எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது.” (1 கொ. 16:9) பல மாதங்கள் அங்கே தங்கி சேவை செய்தார். எபேசு நகரைச் சேர்ந்த அநேகர் விசுவாசிகளானார்கள். (அப். 19:1-20, 26) இன்று நமக்கும் வாய்ப்பு என்ற பெரிய கதவு திறந்திருக்கிறது. விசேஷ விநியோகிப்பு சமயத்தில் அநேகர் ஆர்வம் காட்டினார்கள். முக்கியமாக நியமிக்கப்படாத பிராந்தியங்களில் இருந்தவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். எனவே, அவ்வளவாக ஊழியம் செய்யப்படாத இடங்களில் நற்செய்தியை சொல்லவும் ஆர்வம் காட்டுகிறவர்களை மீண்டும் சென்று சந்திக்கவும் நமக்கு இப்போது வாய்ப்பு இருக்கிறது.—2 கொரிந்தியர் 8:13-15-ஐ ஒப்பிடுங்கள்.
தேவையுள்ள இடத்தில் ஊழியம் செய்ய உங்களால் முடியும்? தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்வதைப் பற்றி நீங்கள் சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி ஜெபம் செய்திருக்கிறீர்களா? சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தேவை அதிகமுள்ள இடங்களுக்கு குடிமாறியிருக்கிறார்கள். அறுவடை வேலையில் அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு தம்பதி இதைப் பற்றி இப்படிச் சொன்னார்கள்: “யெகோவாவுக்கு நாங்க எங்க சேவை செஞ்சா நல்ல பலன் கிடைக்குமோ அங்க போய் சேவை செய்யணும்னு நினைச்சோம்.” உங்களுக்கும் இந்த ஆசை இருந்தால்... அதற்கான சூழ்நிலை இருந்தால்... மூப்பர்களிடம் பேசுங்கள். பிறகு வட்டாரக் கண்காணியிடமும் பேசுங்கள், அவர் கொடுக்கும் அறிவுரைகளை யோசித்துப் பாருங்கள்.
எங்கே தேவை அதிகம் உள்ளது என கிளை அலுவலகத்திடம் கேட்க நினைத்தால் சபையின் ஊழியக் குழுவிடம் ஒரு கடிதத்தைக் கொடுங்கள். உங்கள் விருப்பங்களை அதில் குறிப்பிடுங்கள். அவர்கள் தங்களுடைய குறிப்புகளையும் அதோடு சேர்த்து கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். வாய்ப்பு என்ற பெரிய கதவு திறந்திருக்கும்வரை யெகோவாவின் சேவையில் நாம் எல்லோரும் சுறுசுறுப்பாக ஈடுபடுவோமாக!—1 கொ. 15:58.