தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தை எப்படிப் பயன்படுத்தலாம்
வேறொரு பிராந்தியத்தில் வசிக்கிற அல்லது மற்றொரு மொழியைப் பேசுகிற ஆர்வமுள்ள ஒருவரை நீங்கள் ஊழியத்தில் சந்திக்கும்போது S-43-TL படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதுவும், அந்த நபர் ஆர்வம் காட்டினால் மட்டுமே இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், காதுகேளாத ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது, அவர் ஆர்வம் காட்டினாலும்சரி, காட்டாவிட்டாலும் சரி இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். அப்படிப்பட்ட சமயத்தில், உங்களுடைய சபையிலோ அருகிலுள்ள சபையிலோ சைகை மொழி தொகுதி இருந்தால், தயவு செய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தை நீங்கள் நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்பு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை சபைச் செயலரிடம் கொடுக்க வேண்டும். அதை எந்தச் சபைக்கு அனுப்ப வேண்டுமென அவர் அறிந்திருந்தால், அங்குள்ள மூப்பர்களுக்கு அனுப்பிவைக்கலாம்; அப்போதுதான், ஆர்வம்காட்டிய நபருக்கு அந்த சபை மூப்பர்களால் உதவி செய்ய முடியும். எந்தச் சபைக்கு அனுப்புவதென அவருக்குத் தெரியாமல் இருந்தால், இந்தப் படிவத்தை கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
வேறொரு மொழி பேசுகிற ஆர்வமுள்ள நபர் உங்கள் பிராந்தியத்தில் வசிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுடைய சபையிலோ வேறொரு சபையிலோ அந்த மொழியைப் பேசுகிற ஒரு பிரஸ்தாபி இருந்தால் ஆர்வமுள்ள நபரைத் தொடர்புகொள்ளும்படி அவரிடம் சொல்லுங்கள்; அதுவரை ஆர்வமுள்ள அந்த நபரை நீங்கள் தொடர்ந்து சந்தித்து, அவருடைய ஆர்வத்தை அதிகரித்து வரலாம்.—நவம்பர் 2009 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐப் பாருங்கள்.