பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நன்றாக பயன்படுத்துங்கள்
நம்மோடு பைபிள் படிப்பவர், பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொண்டு கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ முயற்சி செய்வார், அதற்காக நிறைய மாற்றங்களைச் செய்வார். (சங். 1:1-3) அவர் அப்படி மாற்றங்களைச் செய்வதற்கு நாம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும்.
அதிகாரத்தின் ஆரம்பத்திலுள்ள கேள்விகள்: ஒவ்வொரு அதிகாரத்தின் ஆரம்பத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. படிப்பவருடைய ஆர்வத்தை அதிகமாக்க இந்தக் கேள்விகளை வாசிக்கலாம். அல்லது, அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லலாம். அவர் தவறான பதிலைச் சொன்னால், அந்த சமயத்தில் எதுவும் சொல்லாதீர்கள். அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்த பதில் உங்களுக்கு உதவும். பிறகு, படிப்பு நடத்தும்போது அதை நன்றாக விளக்கி சொல்லுங்கள்.—நீதி. 16:23; 18:13.
பிற்சேர்க்கை: ஒவ்வொரு அதிகாரத்திலிருக்கும் விஷயங்களை அவர் நன்றாக புரிந்துகொண்டால், பிற்சேர்க்கையில் இருக்கும் தகவலை அவராகவே படிக்கும்படி சொல்லலாம். அடுத்த தடவை படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு சில நிமிடங்கள், அவர் என்ன புரிந்துகொண்டார் என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை, பிற்சேர்க்கையில் உள்ள தகவல் அவருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நினைத்தால் படிப்பு நடத்தும்போதே எல்லா பாராக்களையோ அல்லது சில பாராக்களையோ கலந்து பேசலாம். ஒவ்வொரு பாராவுக்கும் நீங்கள் முன்பே தயாரித்த கேள்விகளைக் கேட்டு பிற்சேர்க்கையில் இருக்கும் தகவலை விளக்கலாம்.
“பைபிள் கற்பிப்பவை” பெட்டி: ஒவ்வொரு அதிகாரத்தின் ஆரம்பத்தில் இருக்கும் கேள்விகளுக்கு அந்த அதிகாரத்தின் முடிவில் “பைபிள் கற்பிப்பவை” என்ற பெட்டியில் பதில் இருக்கிறது. நம்மோடு பைபிள் படிப்பவர், அந்த அதிகாரத்தில் இருக்கும் முக்கிய குறிப்புகளைப் புரிந்துகொண்டாரா, அதை மனதிலிருந்து சொல்கிறாரா என்று தெரிந்துகொள்ள அந்த பெட்டியைப் பயன்படுத்தலாம். அதை எப்படி செய்யலாம்? அதிலிருக்கும் ஒவ்வொரு குறிப்பையும் அதோடு சம்பந்தப்பட்ட வசனங்களையும் வாசியுங்கள். பிறகு, அவர் ஏன் அந்த விஷயத்தை நம்புகிறார் என்பதை அந்த வசனங்களை பயன்படுத்தி சொல்லச் சொல்லுங்கள்.—அப். 17:2, 3.