போரின் கோரமுகம்
போர்வீரர்களோ குடிமக்களோ யாராக இருந்தாலும்சரி, போர் ஒருவருடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டுவிடும்! போரின் கொடூரங்களும் அவலங்களும் அவர்கள் கண் முன்னால் அரங்கேறுவதால், அந்த வலியும் வேதனையும் அவர்களுக்குத்தானே நன்றாகத் தெரியும்!
ராணுவ வீரர்கள்
“எங்கே பார்த்தாலும் ஆட்கள் செத்துக் கிடக்கிறார்கள். காயப்பட்டு வலியில் துடிக்கிறார்கள். அதனால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பதட்டம் இருந்துகொண்டே இருக்கும்.”—கேரி, பிரிட்டன்.
“துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் என்னுடைய முகத்திலும் முதுகிலும் படுகாயமாகிவிட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என நிறைய பேர் என் கண் முன்னாடி கொல்லப்பட்டார்கள். இதையெல்லாம் பார்க்க பார்க்க மனசே மரத்துப்போய்விடும்.”—வில்மர், கொலம்பியா.
“உங்கள் கண் முன்னாடி யாரையாவது சுட்டால் அந்த காட்சி மனசை விட்டு போகவே போகாது. அவர்களுடைய கதறல் சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த நபரை உங்களால் மறக்கவே முடியாது.”—சாஃபிரா, ஐக்கிய மாகாணங்கள்.
குடிமக்கள்
“என்னுடைய சந்தோஷமே தொலைந்துபோன மாதிரி இருந்தது. நம்மை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதைவிட நம்முடைய குடும்பம், நண்பர்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்ற நினைப்புதான் அதிகமாக இருக்கும். உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.”—ஒலெக்சான்ட்ரா, உக்ரைன்.
“அதிகாலை 2 மணியிலிருந்து ராத்திரி 11 மணி வரைக்கும் சாப்பாட்டுக்காக வரிசையில் காத்து நிக்கிறது ரொம்ப கொடுமை. எப்போ எங்கிருந்து குண்டு வந்து தாக்குமோ என்ற பயமும் இருந்துகொண்டே இருக்கும்.”—டேலர், தஜிகிஸ்தான்.
“போரில் என்னுடைய அப்பா-அம்மாவை இழந்து நான் அநாதை ஆகிவிட்டேன். எனக்கு அன்பு காட்டவோ ஆறுதல் சொல்லவோ யாருமே இல்லை.”—மேரி, ருவாண்டா.
போரின் கோர முகத்தை நேருக்கு நேர் பார்த்திருந்தாலும் இப்போது மனநிம்மதியும், போரில்லா காலம் வரும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. போர்களுக்கு எப்படி முடிவுவரும் என்று பைபிளிலிருந்து இந்த காவற்கோபுரம் விளக்குகிறது.