மனக்காயம் இருந்தாலும் மன அமைதி கிடைத்தது
“இந்த உலகத்தில் ஏன் இந்தளவுக்கு கொடூரம், அநியாயம், அக்கிரமம் நடக்கிறது என்று பைபிள் படிப்பதற்கு முன்பு எனக்கு தெரியவில்லை. ஆனால் யெகோவா இந்த உலகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுவார் என்று கற்றுக்கொண்டேன். அதனால் இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்று முன்பு ராணுவத்தில் சேவை செய்த கேரி சொல்கிறார்.
கேரிக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
பைபிள் இப்படி சொல்கிறது: “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”—சங்கீதம் 86:5.
இது எப்படி உதவுகிறது: “போரில் ஈடுபட்டபோது நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன். இந்த வசனத்தை படித்தபோது யெகோவா ரொம்ப இரக்கமுள்ளவர் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது. நான் செய்த எல்லாவற்றையும் மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.”—வில்மர், கொலம்பியா.
பைபிள் இப்படி சொல்கிறது: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”—ஏசாயா 65:17.
இது எப்படி உதவுகிறது: “ராணுவத்தில் சேவை செய்தபோது எனக்கு கிடைத்த மோசமான அனுபவத்தால் பேரதிர்ச்சிக்கு பின்பு வரும் மன உளைச்சலால் கஷ்டப்படுகிறேன், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய மனசை வாட்டிவதைக்கும் எண்ணங்களை யெகோவா சீக்கிரத்தில் தூக்கிப்போட்டுவிடுவார், ஆறாத வடுக்களையும் குணப்படுத்திவிடுவார் என்று இந்த வசனம் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதை விட எனக்கு வேற என்ன வேண்டும்!”—சாஃபிரா, ஐக்கிய மாகாணங்கள்.
பைபிள் இப்படி சொல்கிறது: “அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.
இது எப்படி உதவுகிறது: “இந்த வார்த்தைகளை நான் அடிக்கடி யோசிச்சு பார்ப்பேன். போரும் அதனால் ஏற்படுகிற படுபயங்கரமான சம்பவங்களும் சீக்கிரத்தில் சுவடு தெரியாமல் போய்விடும். நம் அன்பானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது.”—ஒலெக்சான்ட்ரா, உக்ரைன்.
பைபிள் இப்படி சொல்கிறது: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள் . . . மண்ணுக்குள் இருப்பவர்களே, எழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்!”—ஏசாயா 26:19.
இது எப்படி உதவுகிறது: “டூட்ஸி மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையில் கிட்டத்தட்ட என்னுடைய குடும்பத்தை சேர்ந்த எல்லாரும் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களை திரும்பவும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையை இந்த வசனம் எனக்கு கொடுத்தது. அவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது அவர்களுடைய குரல்களை கேட்க ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருக்கிறேன்.”—மேரி, ருவாண்டா.
பைபிள் இப்படி சொல்கிறது: “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் . . . ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
இது எப்படி உதவுகிறது: “இந்த வசனங்கள் எனக்கு புது உத்வேகத்தை கொடுத்தது. ஏனென்றால், போர் ஓய்ந்தாலும் அநியாயமும் அக்கிரமங்களும் செய்கிறவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார், என் சூழ்நிலையை புரிந்துகொள்கிறார். சீக்கிரத்தில் இந்த கஷ்டங்களை எல்லாம் தீர்த்துவிடுவார், அவற்றை என்னுடைய நினைவில் இருந்தும் கூட நீக்கிவிடுவார்.”—டேலர், தஜிகிஸ்தான்.
பைபிளைப் படித்து மனநிம்மதி பெற்ற லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளில், ஒரு சிலருடைய அனுபவங்களை மட்டும்தான் இந்தப் பத்திரிகையில் நாம் பார்த்தோம். இனம், தேசம், குலங்கோத்திரம், பகை இவற்றையெல்லாம் தாண்டி வாழ அவர்கள் கற்றுக்கொண்டார்கள். (எபேசியர் 4:31, 32) உண்மைதான், யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் நடுநிலையோடு இருக்கிறார்கள், அடிதடியிலும் வன்முறையிலும் இறங்கவே மாட்டார்கள்.—யோவான் 18:36.
உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய அன்பான குடும்பம் ஒருவருக்கொருவர் ஆதரவாக துணை நிற்கிறது. (யோவான் 13:35) முன்பு நாம் பார்த்த ஒலெக்சான்ட்ரா, தன் நாட்டில் போர் நடந்ததால் தன்னுடைய அக்காவோடு வேறொரு நாட்டுக்கு தப்பித்து ஓடவேண்டியிருந்தது. அவர் இப்படி சொல்கிறார்: “எல்லையை கடந்த உடனேயே அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளை பார்த்தோம். எங்களை வரவேற்க அவங்க காத்துக்கொண்டிருந்தாங்க. இந்த புது நாட்டில் அகதிகளாக வாழ்க்கையை ஓட்ட அவங்கதான் எங்களுக்கு முழுக்க முழுக்க உதவுனாங்க.”
எங்களுடைய கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாங்கள் உங்களை அன்பாக வரவேற்கிறோம். இப்போதே மன அமைதியை பெறுவது எப்படி என்றும் எதிர்காலத்தில் இந்தப் பூமி ஒரு அமைதிப் பூங்காவாக மாறும் என்பதைப் பற்றியும் அதில் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் இருக்கும் இடத்தில் கூட்டங்கள் எங்கே நடக்கிறது என்று கண்டுபிடிக்க அல்லது யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து இலவசமாக பைபிளை படிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள jw.org வெப்சைட்டை பாருங்கள்.