யாருடைய கைவண்ணம்?
ஹார்மோன்கள்—உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் சாவி
நம்முடைய உடல் நன்றாக இயங்குவதற்கு கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் நம் இரத்தத்தில் இருக்க வேண்டும். ஆனால் உணவாகவோ அல்லது மற்ற விதத்திலோ நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்கிற எலக்ட்ரோலைட்டுகளின் அளவு வித்தியாசப்படுகிறது. தேவையான அளவு எலக்ட்ரோலைட்டுகள் நம்முடைய உடலில் இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய உடல் ஸ்பெஷலாக எதையாவது பண்ணுகிறதா?
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் எலக்ட்ரோலைட்டுகளுடைய அளவை அதுவே சரியாக வைத்துக்கொள்ளும். அதற்காக நம்முடைய உடல் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, சேகரித்து, அவற்றை நம்முடைய இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. ஹார்மோன்கள் என்றால் என்ன? நம்முடைய உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிற ரசாயனங்கள்தான் ஹார்மோன்கள். ஒரு ஹார்மோனில் சின்ன அளவில் ஏற்படுகிற மாற்றம் கூட நம் உடலில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை வெளியிடுவது, “ஏனோதானோ என்று நடக்கும் ஒரு விஷயம் கிடையாது. அது சிக்கலானதாக இருந்தாலும் ரொம்ப துல்லியமாக நடக்கிற ஒரு விஷயம்” என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.
நம்முடைய இரத்தத்தில் இருக்கிற கால்சியத்தின் அளவில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நம் கழுத்தில் இருக்கிற பாராதைராய்டு சுரப்பிகள் அதை கண்டுபிடித்துவிடும். இந்த சுரப்பிகள் பொதுவாக நமக்கு நான்கு இருக்கும். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு அரிசியின் அளவு இருக்கும்.
நம் உடலில் கால்சியத்தின் அளவு இருக்க வேண்டிய அளவை விட குறைந்துவிட்டால் இந்த சுரப்பிகள் அதை கண்டுபிடித்துவிடும். சீக்கிரத்திலேயே, சில சமயங்களில் சில வினாடிகளிலேயே, ஒரு ஹார்மோனை அவை வெளியிடும். எலும்புகள் சேகரித்து வைத்திருக்கிற கால்சியத்தை இரத்தத்தில் வெளியிடுவதற்கு இந்த ஹார்மோன் எலும்புகளுக்கு சிக்னல் கொடுக்கும். இரத்தத்தில் இருக்கும் கால்சியத்தை வடிகட்டிக்கொண்டிருக்கும் சிறுநீரகங்களுக்கு அதை நிறுத்த சொல்லி இந்த ஹார்மோன் ஆர்டர் போடும். அதோடு, சாப்பாட்டில் இருந்து உறிஞ்சிக்கொள்கிற கால்சியத்தின் அளவை அதிகப்படுத்த சொல்லி சிறுகுடல்களுக்கு அது ஆர்டர் போடும்.
அதேசமயத்தில், நம்முடைய இரத்தத்தில் கால்சியத்தின் அளவு ரொம்பவே அதிகமாக இருந்தால், இன்னொரு சுரப்பி அதாவது தைராய்டு சுரப்பி, வேறொரு ஹார்மோனை வெளியிடும். இந்த ஹார்மோன், தேவைக்கு அதிகமாக இருக்கிற கால்சியத்தை உறிஞ்சி அவற்றை சேகரித்து வைக்கச் சொல்லி எலும்புகளுக்கு கட்டளை போடும். அதோடு, தேவைக்கு அதிகமாக இருக்கிற கால்சியத்தை வடிகட்டி அவற்றை நீக்கும்படி சிறுநீரகங்களுக்கு கட்டளை போடும்.
நாம் வெறும் இரண்டு ஹார்மோன்களை பற்றி மட்டும்தான் பார்த்தோம். இந்த மாதிரி நூறுக்கும் சற்று அதிகமான ஹார்மோன்கள் இருக்கின்றன. நம்முடைய உடலில் இருக்கிற வெவ்வேறு இயக்கங்களை சரி செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் இந்த ஹார்மோன்கள் தானாகவே வந்திருக்குமா? அல்லது யாராவது அதைப் படைத்திருப்பார்களா?