ஆஸ்டியோபோரோஸிஸ்—‘எலும்பு மெலிதல்’ நோய்
“எலும்பு திசு அவ்வளவு குறைவாக இருப்பதன் காரணமாக கொஞ்சம் அழுத்தினாலே எலும்புகள் சுலபமாக உடையும் நிலையில் இருப்பதுதான் ஆஸ்டியோபோரோஸிஸ் (osteoporosis) என்பது. ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ள ஒரு நபர் ஐஸ்கட்டியின்மீது தடுக்கி விழுந்தாலே மணிக்கட்டையோ இடுப்பையோ உடைத்துக்கொள்ளலாம் அல்லது எவராவது பாசமாக அணைத்தால்கூட விலா எலும்பை முறித்துக்கொள்ளலாம். . . . இவ்வளவு ஏன், சொல்லப்போனால், எலும்பு திசு அவ்வளவு குறைவாக இருப்பதன் காரணமாக தனது சொந்த உடல் கனத்தையே தாங்கிக்கொள்ள முடியாமல் முதுகெலும்பை முறித்துக்கொள்ளலாம்.”—“ஆஸ்டியோபோரோஸிஸ்—தடுப்பிற்கும் சிகிச்சைக்குமான ஒரு வழிகாட்டி” (ஆங்கிலம்); ஜான் எஃப். ஆலாயா, எம். டி., என்பவரால் எழுதப்பட்டது.
நீங்கள் ஆஸ்டியோபோரோஸிஸ் நோயினால் அவதிப்படுகிறீர்களா? இந்த எலும்புமெலிதல் நோய் மாதவிடாய் முடிவடைந்த பெண்களிடையே பொதுவாக காணப்படுகிறது. ஆனாலும் அது இளம் பெண்களையும் ஆண்களையும்கூட பாதிக்கலாம். ஐ.மா. நாஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த்தின்படி, “ஐக்கிய மாகாணங்களில் 1.5-லிருந்து 2 கோடி நபர்களை” ஆஸ்டியோபோரோஸிஸ் பாதித்திருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும், 45 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமான நபர்களுக்கிடையே சுமார் 13 லட்சம் எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கு ஆஸ்டியோபோரோஸிஸ் காரணம் காட்டப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் 380 கோடி டாலர் செலவாகிறது.
கலிபோர்னியா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரசுரமான ஹெல்த் டிப்ஸ் இவ்வாறு விளக்குகிறது: “ஆஸ்டியோபோரோஸிஸ் அறிகுறிகள் முதிர் வயதில்தான் அதிகம் தெரியவரும் என்றாலும், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பமாகி 30-40 வருடங்களுக்குப் பிற்பாடுதான் முதல் எலும்பு முறிவு ஏற்படுகிறது. 35 வயதிற்குப் பின் ஆண்களும் பெண்களும் எலும்பு திசுவை இழக்க ஆரம்பிக்கின்றனர். எலும்புகள் கனமற்றவையாகவும் மெலிதாகவும் மாறமாற, இன்னும் எளிதாக எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன; அது குணமாகவும் வெகு நாட்கள் ஆகும், ஏனெனில் உடல் ஒரு புதிய எலும்பை உருவாக்குவது முதலிலிருந்ததுபோல் அவ்வளவு சுலபமாயிருப்பதில்லை. எலும்பு மெலிதல் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை, பெண்களில் ஈஸ்ட்ரோஜன் குறைவு, போதாத உடற்பயிற்சி ஆகியவை அதற்குக் காரணமாயிருக்கலாம்.”
உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுதல்
ஒவ்வொரு பெண்ணினது ஆரோக்கியமான வாழ்விற்கான வழிகாட்டி என்ற ஆங்கில புத்தகம், மாதவிடாய் முடிவுறும் பருவத்தோடு சம்பந்தப்பட்ட பொதுவான அறிகுறிகளில் ஒன்று, எலும்பு வலுவிழத்தல் என குறிப்பிடுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “மாதவிடாய் முடிவுற்ற பிறகு, துவாரங்களுள்ள எலும்புகள் என சொல்லர்த்தமாக அர்த்தப்படுத்தும் ஆஸ்டியோபோரோஸிஸ், பொதுவானதும் முக்கியமானதுமான உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது.”
எலும்பு மெலிதலைத் தடுக்கவும் அதற்கு சிகிச்சையளிக்கவும் முடியும் என ஆராய்ச்சி காட்டுகிறது. அது வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு வழி, உடலில் கால்சியமும் அது ஈர்த்துக்கொள்ளப்படுவதற்கு தேவையான வைட்டமின் “டி”-யும் போதுமான அளவில் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதாகும். மற்றொரு வழி, நடத்தல் அல்லது மென்னோட்டம் போன்ற எலும்புகளைப் பலப்படுத்தும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வதாகும்.
டாக்டர் காரல் ஈ. குட்மேன் என்பவர் முதியோர் நோயியல் என்ற ஆங்கில புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: “சரியான அங்க நிலையையும் பலப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் பரிந்துரை செய்யவேண்டும்
மருந்துகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்தளவு முக்கியத்துவத்தை இவற்றிற்கும் நாம் கொடுக்க வேண்டும். வயதான ஆஸ்டியோபோரோஸிஸ் நோயாளிக்கு, ஏற்ற ஓர் உடற்பயிற்சித் திட்டம், புரிந்துகொள்வதற்கு எளிதாகவும், செய்வதற்கு சுலபமாகவும், பாதுகாப்பாகவும்கூட இருக்கும்.”
ஆஸ்டியோபோரோஸிஸ் குணமாக்கப்பட முடியாததாய் இருந்தாலும், அதற்கான புதிய மருந்துகள் கிடைத்துவருகின்றன. மேலும், சரியான ஊட்டச்சத்து, போதுமான உடற்பயிற்சி, சிலருக்கும் ஹார்மோன் மாற்றீடு சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் இது தவிர்க்கப்படலாம். சிறந்த பலனைப் பெற, இந்த நடவடிக்கைகளை, எலும்பு திசு குறைய ஆரம்பிப்பதற்கு முன்பே துவங்கி, வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.
[பக்கம் 17-ன் பெட்டி]
ஆஸ்டியோபோரோஸிஸ் வராமல் பார்த்துக்கொள்வது
1. கால்சியம்
2. வைட்டமின் “டி”
3. சூரியவொளி
4. சரியான அங்க நிலை
5. முதுகெலும்பு-பாதுகாப்பு நடவடிக்கைகள்
6. உடற்பயிற்சி
7. புகைப்பதைத் தவிர்த்தல்
[பக்கம் 17-ன் பெட்டி]
உணவுப்பொருட்களில் கால்சியம்
உணவில் கால்சியம் (மில்லிகிராம்)
கொழுப்பு நீக்கப்பட்ட பால், 1 கப் 300
பாலாடைக்கட்டி (cheddar cheese), 1 அங்குல கட்டி 130
தயிர், 1 கப் 300
மாட்டுக்கறி, கோழி, மீன், 170 கிராம் 30-80
டின்னில் அடைக்கப்பட்ட வஞ்சரமீன், 85 கிராம் 170
ரொட்டி, தானியங்கள், அரிசி, 1 கப் 20-50
டோஃபு (சோயாபீன் தயிர்), 100 கிராம் 150
பாதாம் பருப்பு, 1/2 கப் 160
அக்ரோட்டுப் பருப்பு, 1/2 கப் 50
காலிஃபிளவர், ஒன்று 150
பசலைக்கீரை, 1 கப் 200
சீமை சிவப்பு முள்ளங்கிக் கீரை, 1 கப் 250
பெரும்பாலான மற்ற காய்கறிகள், 1 கப் 40-80
ஆப்ரிகாட்டுகள், காய்ந்தவை, 1 கப் 100
கொட்டையில்லா பேரீச்சம்பழம், 1 கப் 100
ருபார்ப் (rhubarb), 1 கப் 200
பெரும்பாலான மற்ற பழவகைகள், 1 கப் 20-70
ஃபலிஷியா ஸ்ட்யூவர்ட், காரி ஸ்ட்யூவர்ட், ஃபலிஷியா கெஸ்ட் மற்றும் ராபர்ட் மஹாச்சர் ஆகியோரால் எழுதப்பட்ட உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுதல் என்ற ஆங்கில புத்தகத்தில், பக்கம் 596-லிருந்து எடுக்கப்பட்டது.
[பக்கம் 17-ன் பெட்டி]
ஆஸ்டியோபோரோஸிஸை விளைவிக்கும் காரணிகள்
பரம்பரை காரணிகள்
பெண்கள்
கறுப்பர் அல்லாதோர்
வட ஐரோப்பிய சந்ததியினர்
வெள்ளை நிற மேனி
ஒல்லியான உருவம்
குட்டை (5 அடி 2 அங்குலம் அல்லது அதற்கும் குறைவு)
வாழ்க்கைப் பாணி காரணிகள்
வெளிப்புற சூரியவொளி, வாரத்திற்கு மூன்று மணிநேரங்களுக்கும் குறைவு
குறைவான கால்சியம் உட்கொள்ளல்
அதிகளவு காஃபீன் மற்றும்/அல்லது பாஸ்பேட் உட்கொள்ளல்
மருந்துகள்
அலுமினியம் கொண்ட அமில எதிர்ப்பிகள் (antacids)
தைராய்ட் அல்லது லிவோத்தைராக்ஸின்
ஸ்டீராய்ட் (கார்டிசான்)
டைலான்டன் (நீண்டகால சிகிச்சை முறை)
ஃப்யூரோஸிமைட் (சிறுநீரிறக்கி)
மருத்துவ பிரச்சினைகள்
முன்கூட்டியே அல்லது சரியான காலத்திற்கு முன்பே மாதவிடாய் முடிவுறுதல்
மாதவிலக்கின்மை
பசியில்லா உளநோய்
ஹைப்பர் தைராய்டிஸம் (அளவுக்கதிகமான தைராய்ட் ஹார்மோன்)
சிறுநீரக வியாதி அல்லது சிறுநீரக கற்கள்
சக்கரை வியாதி
லாக்டேஸ் குறைபாடு (பால் சகிப்பின்மை)
குடல் வியாதி (பெருங்குடல் அழற்சி, கடைச் சிறு குடலழற்சி)
மதுவுக்கு அடிமை
மூன்று வாரங்களுக்கும் அதிக காலம், படுத்த படுக்கையாக அல்லது அசைவற்று கிடப்பது
முடக்குவாதம்