உரையாடலைத் தூண்டுவிக்கும் ஒரு தின்பண்டம்
இனிப்புப் பலகாரம்? . . . இனிப்புப் பலகாரம்! . . . விருந்தாளிகளுக்கு ஒரு விருந்து படைக்கவேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு, ‘சாப்பிட்டு முடிந்தவுடன் இனிப்புப் பலகாரமாக எதைக் கொடுப்பேன்?’ என்று உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொண்டதுண்டா? சாதாரணமாக ஏற்படும் இந்தக் குழப்பம் ஒருவேளை உங்களிடம் இருக்கும் சமையல் செய்முறைகளிலும் எல்லா சமையல் புத்தகங்களிலும் உங்களுடைய தோழமைக் கூட்டத்திற்குப் பொருத்தமான இனிப்புப் பலகாரத்தைத் தேடி பக்கங்களைப் புரட்டவைத்திருக்கக்கூடும்.
ஒரு ஃபான்ட்யூவை செய்துபார்க்க விரும்புகிறீர்களா? அது இயற்கையாகவே உரையாடலைத் தூண்டிவிடும் தின்பண்டம் மட்டுமல்லாமல் விரைவிலும் சுலபமாகவும் அதைத் தயாரிக்கலாம். ஃபான்ட்யூ என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், ஒருசில கூட்டுப்பொருட்களை ஒரு கலத்தில் உருக்கும்போது கிடைக்கும் கலவையாகும். பின்னர், “டிப்பர்கள்” என்று நாம் அழைக்கும் மற்ற பண்டங்கள் அந்தக் கலவையில் முக்கி சாப்பிடப்படுகின்றன. ஃபான்ட்யூ என்ற வார்த்தை “உருக்கு” என்னும் அர்த்தப்படும் ஃபாண்ரெ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வருகிறது. உதாரணமாக, சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரத்தில், கலவையின் முக்கியப் பொருளாக இருப்பது உருக்கப்பட்ட சாக்லேட்டாகும், டிப்பர்களாக இருப்பவை கேக்கும் புதுப் பழமுமாகும்.
சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரம்
இடதுபக்கம் உள்ளது ஒரு சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரத்தின் செய்முறையாகும். இதை நீங்கள் ஒருபோதும் செய்துபார்த்ததில்லை என்றால், திளைக்கவைக்கும் அதிசயம் உங்களுக்காக காத்திருக்கிறது!
ஒரு வாணலியில் சாக்லேட்டை உருக்குங்கள். வைத்திருக்கும் மற்ற கூட்டுப்பொரு(ட்க)ளைச் சேருங்கள். கலவை நன்கு கெட்டியாகும்வரை கலக்கிவிடுங்கள். கலவையை ஒரு ஃபான்ட்யூ கலத்தில் மாற்றி வைத்துவிட்டு, அதை இளஞ்சூடாக வைத்திருக்கும் ஒரு சூடேற்றும் கருவியின்மீது வைத்திருங்கள்.
ஃபான்ட்யூவிற்குள் முக்கி எடுக்கத் தொடங்குமுன், இரண்டு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காபித் தூளையோ கால் தேக்கரண்டி லவங்கப்பட்டைத் தூளையோ இட்டுக் கலக்கிக்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழ டிப்பர்களின் நிறம் மாறாமல் இருக்க எலுமிச்சம் சாற்றை தண்ணீரோடு கலந்து அவற்றின்மேல் தெளித்துவையுங்கள். சாக்லேட் கலவை மிகவும் தண்ணீராக இருக்குமானால், அதிகம் சாக்லேட்டைக் கலந்துகொள்ளுங்கள். அதிக கெட்டியாக இருக்குமானால், பால் ஊற்றி இளகச் செய்யுங்கள்.
ஒரு மின்சார ஃபான்ட்யூ கலத்தையோ ஒரு ஸ்டவ்வின்மீது வைக்கையில் தீய்ந்துபோகாமல் வைத்துக்கொள்ளும் ஃபான்ட்யூ கலத்தையோ உபயோகிப்பீர்களானால், அதே கலத்தில் தயாரித்து அதிலிருந்தே பரிமாறலாம். ஃபான்ட்யூ கலத்தை மேசையின் நடுவில் எல்லாருக்கும் எளிதில் கை எட்டக்கூடிய தூரத்தில் வையுங்கள். ஒரு கலம் ஆறிலிருந்து எட்டுபேருக்கு போதுமானது.
அந்தக் கலவையில் ஏதேனும் மீதி இருந்தால், குளிர்சாதனப் பெட்டியில் அதை வைக்கும்போது கெட்டுப்போகாமல் இருக்கிறது. அது ஐஸ்கிரீமின் மேல்பாகமாக உபயோகிப்பதற்கு மிகச் சிறந்த ஒன்றாக இருக்கிறது.
ஸ்விஸ் பாலாடைக்கட்டி ஃபான்ட்யூ
ஒரு பாலாடைக்கட்டி (cheese) ஃபான்ட்யூவை செய்துபார்க்க விரும்புகிறீர்களா? வலதுபக்கம் உள்ளது பசியூட்டும் பண்டம் (appetizer) அல்லது முக்கிய உணவின் ஒரு செய்முறையாகும்.
ஒரு பல் பூண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பாகத்தை ஒரு வாணலியின் உட்பக்கத்தில் தேய்த்துவிட்டு அதை தூக்கிப் போட்டுவிடுங்கள். ஒயினையும் எலுமிச்சம் பழச்சாறையும் வாணலியினுள் ஊற்றி, மிதமான சூட்டில் சூடாக்குங்கள். குமிழிகள் உண்டாகி அவை மேல்மட்டத்தை மூடுகின்றன. ஒயினைக் கொதிக்க விட்டுவிடாதீர்கள்.
மக்காச்சோள கஞ்சியையோ மாவையோ சீவப்பட்ட பாலாடைக்கட்டியோடு ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்குங்கள்.
ஒயின் கலவையை விடாமல் கலக்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு கைப்பிடி பாலாடைக்கட்டியை போடுங்கள். பாலாடைக்கட்டி உருகியதும், இன்னொரு கைப்பிடி பாலாடைக்கட்டியைச் சேர்த்து, அது உருகும்வரை கலக்கிவிடுங்கள். எல்லா பாலாடைக்கட்டியும் உருகும்வரை இதேபோல் செய்யுங்கள். வேண்டுமானால், தோல்நீக்கப்பட்ட மிளகையும் (white pepper) ஜாதிக்காய் (nutmeg) அல்லது செம்மிளகையும் (paprika) அரைக்கப்பட்ட கிராம்பையும் வைத்துத் தாளித்துக்கொள்ளுங்கள்.
இதை ஃபான்ட்யூ கலத்திற்கு மாற்றி, குறைந்தளவு சூட்டிலிருந்து மிதமான சூடேற்றும் கருவியின்மீது அதை வையுங்கள். ஒவ்வொரு நபரின் கையிலும் நீண்ட கைப்பிடியைக் கொண்ட அவரவரது ஃபான்ட்யூ முள் கரண்டியும், உணவுத் தட்டும், உணவு முள்கரண்டியும் உள்ளன. டிப்பர்களில் ஒன்றை சும்மா குத்தியெடுத்து, வட்டமாகவோ எட்டு வடிவிலோ ஃபான்ட்யூவினுள் சுழற்றிவிடுங்கள். டிப்பரை உங்கள் உணவுத் தட்டில் வைத்து உணவு முள்கரண்டியால் அதை சாப்பிடுங்கள்.
ஃபான்ட்யூ மிகவும் தண்ணீராக இருக்குமானால், இன்னும் அதிக பாலாடைக்கட்டியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அது மிகவும் கெட்டியாக இருக்குமானால், சூடாக்கப்பட்ட ஒயின் சிறிது ஊற்றி கலக்கிவிடுங்கள். அந்தக் கலவைப் பிரியுமானால், அதிக வெப்பநிலையில் சூடாக்கி, மத்தைக்கொண்டு அடித்துவிடுங்கள்; பின்னர் சூட்டைக் குறைத்துவையுங்கள். நீங்கள் டிப்பரை ஒவ்வொரு முறை முக்கியெடுக்கும்போதும் அந்தக் கலவையைக் கலக்கினால், அது பிரியக் கூடாது.
ஃபான்ட்யூவுக்கு மதுபான வகையைச் சேராத ஒரு முக்கியப்பொருள் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பாலாடைக்கட்டியை முக்கியப் பொருளாக கொண்ட ஒரு சாஸைத் தயாரியுங்கள். நான்கு மேசைக் கரண்டியளவு வெண்ணெயையும் நான்கு மேசைக் கரண்டியளவு மாவையும் கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையை இளஞ்சூட்டில் வேகவையுங்கள். இரண்டு கப் குளிர்ந்த பாலை ஊற்றி, மெதுவாக கொதிக்கிற பருவத்துக்குக் கொண்டுவந்து, அந்தக் கலவையை இரண்டு நிமிடத்திற்கு வேகவையுங்கள். ஒன்றரை கப் (சீவப்பட்ட) நல்ல மணமும் சுவையுமுடைய பாலாடைக்கட்டியை சிறிது சிறிதாக சேர்த்து, அது உருகும்வரை கலக்கிவிடுங்கள். உப்பையும் மிளகையுமிட்டு தாளியுங்கள். இதற்குமுன் விவரித்ததுபோல முக்கியெடுங்கள்.
இனிமையான ஒரு முடிவு
அடுத்த தடவை இனிப்புப் பலகாரத்தைப் பற்றிய குழப்பம் உங்களுக்கு ஏற்படுமாயின், சாக்லேட் ஃபான்ட்யூவை ஒரு இனிப்புப் பலகாரமாகக் கொடுக்க நீங்கள் தீர்மானிக்கலாம். அல்லது இரவு விருந்துக்கு, நீங்கள் ஒருவேளை இறைச்சி ஃபான்ட்யூவை கொடுப்பீர்கள்.
நற்சுவை மணம் கமழும் இந்த உருக்கு கலம் உங்களுக்கும் உங்களுடைய நண்பர்களுக்கும் வெகுகாலத்திற்கு விரும்பப்பட்ட ஒரு பண்டமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அதன் கவர்ச்சியே அந்தப் பொதுவான கலத்தில்தான் இருக்கிறது. அனலான தோழமைத்துவம் நிலவும் ஒரு சூழலை ஏற்படுத்தி, உரையாடலைத் தூண்டுவிக்கும் இந்தத் தின்பண்டத்தை எல்லாரும் முக்கியெடுக்கிறார்கள்!—அளிக்கப்பட்டது.
[பக்கம் 22-ன் பெட்டி]
சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரத்திற்கான செய்முறை
170 கிராம் இனிப்பூட்டப்படாத சாக்லேட்
1 1/2 கப் சர்க்கரை
1 கப் அடர்த்தியில்லாத பாலாடை
1/2 கப் வனஸ்பதி அல்லது வெண்ணெய்
1/8 தேக்கரண்டி உப்பு
அல்லது:
340 கிராம் பாதி இனிப்பூட்டப்பட்ட சாக்லேட்
சாக்லேட் துண்டுகள் அல்லது இனிப்பான சமையல் சாக்லேட்
1/2 கப் பாதிக்குப்பாதி (பாலாடையும் வெண்ணெய் நீக்கப்படா பாலும்)
கேக் டிப்பர்கள்:
ஏஞ்சல் உணவு கேக், லேடிஃபிங்கர்ஸ், டோனட்ஸ், பவுண்ட்-கேக் போன்றவற்றின் துண்டுகள்
பழ டிப்பர்கள், ஏதேனும் ஒன்றோ எல்லாமோ:
ஆப்பிள்கள், வாழைப்பழங்கள், செர்ரிகள், பேரீச்சம்பழங்கள், திராட்சைப்பழங்கள், ஆரஞ்சுகள், முலாம்பழங்கள், பப்பாளிகள், பீச்சுகள், பேரிக்காய்கள், அன்னாசிப்பழத் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரிகள்
[பக்கம் 23-ன் பெட்டி]
ஸ்விஸ் பாலாடைக்கட்டி ஃபான்ட்யூவின் செய்முறை
பூண்டு 1 பல், இரண்டுபாதியாக வெட்டப்பட்டது
1 1/2 கப் இனிப்பில்லா ஒயின்
1 மேசைக் கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
1 1/2 முதல் 2 தேக்கரண்டி மக்காச்சோளக் கஞ்சி அல்லது மாவு
435 கிராம் ஸ்விஸ் பாலாடைக்கட்டி, சீவப்பட்டது (அல்லது ஸ்விஸ் மற்றும் க்ருயெரெ பாலாடைக்கட்டியின் சேர்மம்)
2 முதல் 3 மேசைக் கரண்டி இனிப்பில்லா கிர்ஷ் பிராந்தி (விருப்பப்பட்டால்)
விருப்பப்பட்டால், தோல்நீக்கப்பட்ட மிளகும் ஜாதிக்காய் அல்லது செம்மிளகும் கிராம்பும்
டிப்பர்கள்:
2 மொரமொரப்பான மேல்பரப்பைக் கொண்ட பிரெஞ்சு ரொட்டி (அல்லது இத்தாலியன் ரொட்டி, அல்லது ஹார்டு ரோல்கள்) 3 சென்டிமீட்டர் துண்டுகளாக்கப்பட்டது, ஒவ்வொன்றும் மொரமொரப்பான ஒரு பக்கத்தைக் கொண்டது
சமைக்கப்பட்ட கோழி, பன்றி, இறால்
பச்சையான அல்லது சமைக்கப்பட்ட காய்கறிகள்
[பக்கம் 24-ன் பெட்டி]
சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரம் முக்கியெடுப்பதற்கான சாஸ்கள்:
ஹார்ஸ்ரேடிஷ் சாஸ்
3 மேசைக் கரண்டி தயாரிக்கப்பட்ட ஹார்ஸ்ரேடிஷ்
பால்பண்ணைகளில் உற்பத்தியாகும் 1 கப் புளிப்புள்ள பாலாடை
1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
1/8 தேக்கரண்டி செம்மிளகு
கூட்டுப்பொருட்களை ஒன்றாக கலக்கவும்
மெயனெஸும் கறி சாஸும்
1/2 கப் மெயனெஸ்
பால்பண்ணைகளில் உற்பத்தியாகும் 1/2 கப் புளிப்புள்ள பாலாடை
1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
1 தேக்கரண்டி கறிமசாலாப் பொடி
கூட்டுப்பொருட்களை ஒன்றாக கலக்கவும்
ருசிக்காக உப்பும் மிளகும்
கடுகு சாஸ்
3 தேக்கரண்டி தயாராக்கப்பட்ட கடுகு
2 மேசைக் கரண்டி துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம்
பால்பண்ணைகளில் உற்பத்தியாகும் 1 கப் புளிப்புள்ள பாலாடை
கூட்டுப்பொருட்களை ஒன்றாக கலக்கவும்
ருசிக்காக உப்பும் மிளகும்
இறைச்சி ஃபான்ட்யூவிற்கான செய்முறை
இறைச்சி 1 கிலோகிராம்
தாவர எண்ணெய்
குறிப்பு: ஃபான்ட்யூ கலம் வார்ப்பிரும்பினால், செம்பினால், அல்லது ஸ்டீலினால் மட்டும் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும். பீங்கான் கலங்கள் எண்ணெய் ஃபான்ட்யூவுக்கு உபயோகிப்பது பாதுகாப்பானதல்ல. எண்ணெய் மிகச் சூடாய் இருப்பதனால், கலம் உடைந்துபோகும்
[பக்கம் 23-ன் படம்]
சாக்லேட் ஃபான்ட்யூ இனிப்புப் பலகாரம்
[பக்கம் 24-ன் படம்]
ஸ்விஸ் பாலாடைக்கட்டி ஃபான்ட்யூ