கமால் வர்தே | வாழ்க்கை சரிதை
நீதிக்கான தீரா தாகம் எனக்குள்ளே இருந்தது
“இங்க ஏன் இருக்கீங்க? இந்தியாவுக்கு வாங்க!” இப்படி எங்களிடம் சொன்னவர் சகோதரர் எட்வின் ஸ்கின்னர். இவர் 1926-லிருந்து இந்தியாவில் ஒரு மிஷனரியாக சேவை செய்துகொண்டிருந்தார். 1973 ஆகஸ்டில் இங்கிலாந்தில் இருக்கிற ட்விக்கென்ஹேமில் “தெய்வீக வெற்றி” என்ற சர்வதேச மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு நானும் என்னுடைய இரண்டு தங்கச்சிகளும் போயிருந்தோம். அங்கேதான் நாங்கள் ஸ்கின்னர் சகோதரரை சந்தித்தோம். நாங்கள் பஞ்சாபி மொழி பேசுவதை தெரிந்துகொண்டுதான் அவர் எங்களிடம் வந்து இப்படி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நாங்கள் இந்தியாவுக்குப் போனோம். பஞ்சாபி மொழி தொகுதியோடு என்னுடைய பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் அதற்கு முன்னால் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? அதைப் பற்றி முதலில் சொல்கிறேன்.
1951 ஏப்ரலில் கென்யாவில் இருக்கிற நைரோபியில்தான் நான் பிறந்தேன். என் அப்பா-அம்மா இந்தியாவை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள். என்னுடைய அப்பா இரண்டு கல்யாணம் பண்ணிக்கொண்டார். அதில் முதல் மனைவிதான் என்னுடைய அம்மா. இருந்தாலும் அந்த இரண்டாவது கல்யாணத்தை என் அம்மாவால் தடுக்க முடியவில்லை. என் அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் பெரும்பாலும் ஒரே சமயத்தில்தான் குழந்தைகள் பிறந்தார்கள். அதனால் கூடப் பிறந்தவர்கள்... கூடப் பிறக்காதவர்கள்... பெரியப்பா பையன்... என்று நாங்கள் மொத்தம் ஏழு பிள்ளைகளும் ஒன்றாகத்தான் வளர்ந்தோம். 1964-ல் அப்பா இறந்துவிட்டார். எனக்கு அப்போது வெறும் 13 வயதுதான்.
நியாயத்தை தேடி
வளர வளர என்னைச் சுற்றி சண்டை சச்சரவும் பாரபட்சமும் அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற லேயாள்-ராகேலுடைய கதைதான் எங்கள் வீட்டிலும் நடக்கிறது என்பதை பின்பு நான் பைபிளை படிக்கும்போதுதான் புரிந்துகொண்டேன். எங்கள் வீட்டு வேலைக்காரர்கள் கென்யர்கள். அவர்களை எங்கள் குடும்பத்தார் ரொம்ப கேவலமாக நடத்தினார்கள். ‘அவங்க எல்லாம் நம்மள விட தாழ்ந்தவங்க’ என்று எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். எங்கள் அக்கம்பக்கத்தில் இருந்த ஐரோப்பியர்களிடம் நாங்கள் நண்பர்களாக வேண்டும் என்று எங்கள் அப்பா நினைத்தார். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று அவர் சொல்வார். ‘இந்த ஆப்பிரிக்க மக்கள்கிட்ட கத்துக்க ஒண்ணுமே இல்லை, அதனால அவங்களோட பழகாதீங்க’ என்று எங்களுடைய அப்பா சொல்வார். அதே மாதிரி, ‘பாகிஸ்தான் நாட்டுக்காரங்க நம்முடைய எதிரிகள், அதனால அவங்க கூட பழகாதீங்க’ என்றும் அப்பா சொல்லியிருந்தார். அவர் யோசிக்கிற விதம் சரியில்லை என்று எனக்குத் தோன்றியது. எல்லாரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
சீக்கிய மதம் 15-ம் நூற்றாண்டின் முடிவில்தான் குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஒரேவொரு உண்மை கடவுள்தான் இருக்கிறார் என்று அவர் போதித்தார், அவருடைய போதனைகளை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் சீக்கிய மதத்தினரும் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்துவதை நான் பார்த்தேன். இது உண்மை மதமாக இருக்குமா என்ற கேள்வி எனக்குள் வந்தது.
நான் இப்படி யோசித்ததற்கு காரணம் அந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. சீக்கிய மதம் தோன்றி ஒருசில நூற்றாண்டுகள்தான் ஆகியிருந்தது. அப்படியென்றால், ‘அதற்கு முன்னால் என்ன இருந்தது? கடவுள் முதன்முதலாக ஏற்றுக்கொண்ட வணக்கம் எது?’ என்றெல்லாம் நான் யோசித்தேன். பத்து ஆரம்பகால சீக்கிய குருக்களுடைய படங்கள் இருக்கிற காலண்டர் எங்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது. ‘அவர்கள் பார்ப்பதற்கு இப்படித்தான் இருந்தார்கள் என்று நமக்கு எப்படி தெரியும்? ஒரே உண்மையான கடவுளைத்தான் வணங்க வேண்டும் என்று அந்தக் குருக்களே சொல்லும்போது என்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களும் மற்றவர்களும் செய்கிற மாதிரி அந்தக் குருக்களுடைய படங்களை வைத்து நாம் ஏன் கும்பிட வேண்டும்?’ இப்படியெல்லாம் கூட நான் யோசித்தேன்.
1965-ல் எனக்கு 14 வயது இருக்கும்போது நாங்கள் குடும்பமாக இந்தியாவுக்கு மாறிப் போனோம். காசுபணம் என்று எங்கள் கையில் பெரிதாக எதுவும் இல்லை. அதனால் வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பின்பு நாங்கள் இங்கிலாந்துக்குப் போகத் தயாரானோம். ஒரேயடியாக மாறிப் போக முடியாததால் ஒரு சமயத்தில் இரண்டிரண்டு பேராக போனோம், அங்கே லெஸ்டரில் குடியேறினோம்.
16 வயதில் நான் பாடுபட்டு உழைக்க ஆரம்பித்தேன், கிடைத்த வேலை எல்லாம் செய்தேன். அதுமட்டுமல்ல, நின்றுபோன என் படிப்பை தொடர்வதற்காக மாலை நேரப் பள்ளியிலும் சேர்ந்தேன். வேலை செய்கிற இடத்திலும் அநியாயம் நடப்பதை பார்த்தேன். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை விட அந்த ஊர்க்காரர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டது. அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தேன். வெளிநாட்டிலிருந்து வந்து அங்கே வேலை செய்துகொண்டிருந்த பெண்களை சேர்த்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினேன். மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிற அதே சம்பளம் எங்களுக்கும் வேண்டும் என்று நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். அநியாயமே இல்லாத ஒரு உலகத்துக்காக ஏங்கினேன்!
தேடிய பதில் கிடைத்தது
1968-ல் இரண்டு ஆண்கள் எங்களுடைய வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அப்போதுதான் முதல் தடவையாக யெகோவாவின் சாட்சிகளை பார்த்தேன். கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே இந்த உலகத்துக்கு சமத்துவத்தை கொண்டுவரும் என்ற வாக்குறுதி உடனே என் மனதை தொட்டது. வந்தவர்களில் ஒருவர் அடுத்த தடவை அவருடைய மனைவியை கூட்டிக்கொண்டு வந்தார். நானும் என் கூடப் பிறந்த தங்கை ஜெஸ்விந்தரும் எங்கள் சின்னம்மா பொண்ணு ஷானியும் பைபிள் படிக்க ஆரம்பித்தோம். நாங்கள் வெறும் ஆறு பாடங்கள் மட்டுமே படித்திருந்தோம். அதற்குள்ளேயே யெகோவாதான் உண்மையான கடவுள்... பைபிள்தான் அவருடைய புத்தகம்... அவருடைய அரசாங்கம் மட்டும்தான் உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டும்... என்று உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டோம்.
நாங்கள் பைபிள் படிக்க ஆரம்பித்தது எங்கள் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. அதனால் எங்களை பயங்கரமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். அப்பா இறந்த பின்பு எங்களுடைய சின்னம்மா பையன் குடும்பத் தலைவர் ஆனார். சின்னம்மா தூண்டிவிட்டதால் எங்களை ரொம்பவே எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். என் தங்கைகள் ஜெஸ்விந்தரையும் ஷானியையும் அடித்து வெளுப்பார், பூட்ஸ் காலிலேயே எட்டி உதைப்பார். 18 வயதான என்னை அடித்தால், நான் அவர்மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் என் தங்கைகள்மேல் கை வைத்தால் கேட்க யாருமே இல்லை என்று நினைத்துக்கொண்டார். ஒரு தடவை பைபிளில் தீ வைத்து எங்கள் முகத்துக்கு முன்னால் காட்டி “முடிஞ்சா உங்க கடவுள் யெகோவாகிட்ட இந்த தீய அணைக்க சொல்லுங்க” என்று சொன்னார். அந்த சமயத்தில் நாங்கள் யாருக்கும் தெரியாமல் இரண்டு மூன்று கூட்டங்களுக்குத்தான் போயிருந்தோம். ஆனால் ஒரே உண்மையான கடவுள் யெகோவாவைத்தான் வணங்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் வீட்டில் இருந்த சூழ்நிலைமையால் அது முடியாது என்று எங்களுக்கு தெளிவாக தெரிந்தது. அதனால், வீட்டை விட்டு போக வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தோம். அதற்காக என்னென்ன செய்தோம்?
என்னுடைய சம்பளத்தை நான் சின்னம்மாவுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அதிலிருந்து கொஞ்சம் பணம், மத்தியானம் சாப்பாட்டுக்கு கொடுத்த பணம், பஸ்ஸுக்கு கொடுத்த பணம் இதையெல்லாம் ரகசியமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம். மூன்று சூட்கேஸ் வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் வேறொரு இடத்தில் வைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் துணிமணிகளை அதில் போட்டு வைத்தோம். மே 1972-ல் ஜெஸ்விந்தருக்கு கிட்டத்தட்ட 18 வயசு ஆனது. அப்போது எங்கள் கையிலும் 100 பவுண்ட்ஸ் (260 டாலர்கள்) சேர்ந்தது. அதனால் நாங்கள் ஒரு ரயிலில் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கிற பென்சன்ஸ் என்ற இடத்துக்கு கிளம்பிவிட்டோம். அங்கே போய் சேர்ந்த உடனே ஃபோன் பூத்துக்குப் போய் அங்கிருந்த சாட்சிகளை கூப்பிட்டோம். அவர்கள் எங்களை அன்பாக வரவேற்றார்கள். மீனை வெட்டி சுத்தம் பண்ணுகிற வேலை, இன்னும் வெவ்வேறு வேலைகள் எங்களுக்கு கிடைத்தன. அதனால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கிவிட்டோம்.
வயதான தம்பதிகளான ஹேரி-பெட்டி பிரிக்ஸுடன் மறுபடியும் பைபிள் படிக்க ஆரம்பித்தோம். செப்டம்பர் 1972-ல், ட்ருரோ ராஜ்ய மன்றத்தில் இருக்கிற ஒரு சின்ன குளத்தில் ஞானஸ்நானம் எடுத்தோம். நாங்கள் எங்கே வாழ்கிறோம் என்று அப்போதும் கூட எங்கள் குடும்பத்தில் இருக்கிற யாருக்குமே தெரியாது. ஷானி பயனியர் சேவையை ஆரம்பித்தாள், அவளுக்குத் தேவையான பண உதவிகளை நானும் ஜெஸ்விந்தரும் பார்த்துக்கொண்டோம்.
தேவை அதிகம் உள்ள இடத்தில் சேவை
ஹாரிக்கும் பெட்டிக்கும் 85 வயதுக்குமேல் இருந்தது. ஆனாலும் இங்கிலாந்தின் தென்மேற்கு கடற்கரைப் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற ஸ்கில்லி தீவுகளுக்குப் போய் தவறாமல் ஊழியம் செய்தார்கள். இவர்களுடைய உதாரணம் அதே ஆசையை எங்களுடைய மனதிலும் விதைத்தது. அதனால்தான் 1973-ல் சகோதரர் ஸ்கின்னர் எங்களிடம் பேசியபோது என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தது.
ஜனவரி 1974-ல் நாங்கள் இந்தியாவில் இருக்கிற நியூ டில்லிக்குப் போனோம். அங்கே சகோதரர் டிக் காட்டரில், மிஷனரி இல்லத்தில் தங்க அனுமதி கொடுத்தார். ஷானி தன்னுடைய பயனியர் சேவையை தொடர்ந்தாள். நானும் ஜெஸ்விந்தரும் அதிகமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தோம்.
கொஞ்ச நாளுக்குப் பின்பு இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கிற பஞ்சாப் மாநிலத்துக்கு சகோதரர்கள் எங்களை போக சொன்னார்கள். அதன் தலைநகரான சண்டிகரில் இருக்கிற மிஷனரி இல்லத்தில் கொஞ்ச நாட்கள் தங்கினோம். அதற்கு பின்பு ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தோம். செப்டம்பர் 1974-ல், நான் பயனியர் சேவை ஆரம்பித்தேன். 1975-ல் விசேஷ பயனியராக எனக்கு நியமிப்பு கிடைத்தது. அங்கே ஊழியம் செய்யும்போதுதான் பஞ்சாபி மொழியில் பிரசுரங்கள் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டேன். பிரசுரங்கள் இருந்தால்தான் நிறைய மக்களால் யெகோவாவின் அன்பையும் நீதியையும் பற்றி தெரிந்துகொள்ள முடியும். 1976-ல் பஞ்சாபி மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்க்கச் சொல்லி எங்கள் மூன்று பேருக்கும் இந்திய கிளை அலுவலகத்திலிருந்து நியமிப்பு வந்தது. இப்போது இருக்கிற மாதிரி அப்போது டைப்ரைட்டரோ கம்ப்யூட்டரோ இல்லை. அதனால் நாங்கள் மொழிபெயர்த்ததை கையிலேயே எழுதி, அதை சரிபார்த்து பிழை திருத்தமும் செய்தோம். பின்பு அதை அங்கிருந்த ஒரு பிரிண்டரிக்கு கொண்டு போய் அச்சடித்தோம். அந்த பழைய காலத்து மெஷினில் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக்கோர்த்து வாக்கியமாக்கி அதற்கு பின்பு அச்சடிக்க வேண்டியிருந்தது. அதனால் நாங்கள் ரொம்ப கடினமாக உழைத்தோம்.
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிற சண்டிகரில், நான் இருந்த சபை
ஆரோக்கியம் குறைந்தாலும் ஆனந்தம் குறையவில்லை
எங்களுடைய சூழ்நிலைமை சீக்கிரத்திலேயே மாறியது. ஜெஸ்விந்தர் ஒரு சகோதரரைக் கல்யாணம் செய்துகொண்டு கனடாவுக்கு போய்விட்டாள். அமெரிக்காவிலிருந்து இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்த ஜெர்மனியை சேர்ந்த ஒரு சகோதரரை கல்யாணம் செய்துகொண்டு ஷானி அமெரிக்காவுக்கே போய்விட்டாள். எனக்கும் உடம்பு சரியில்லாமல் போனது. அதனால் அக்டோபர் 1976-ல் இங்கிலாந்துக்கே திரும்ப போய்விட்டேன். என் அம்மாவும் அண்ணனும் லெஸ்டர் நகரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அங்கே அவர்களோடு என்னையும் தங்க சொல்லிவிட்டார்கள். அவர்கள் சத்தியத்தை எதிர்க்கவில்லை, எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனக்கு எவன்ஸ் சிண்ட்ரோம் என்ற ஒரு அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தாக்கினால், நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பே தவறுதலாக உடலின் இரத்த அணுக்களை அழிக்கும். இதற்காக ஏகப்பட்ட சிகிச்சைகளை எடுத்தேன். அதோடு, என்னுடைய மண்ணீரலையே எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. பயனியர் சேவையையும் நிறுத்த வேண்டியிருந்தது.
எனக்கு ஓரளவுக்கு உடம்பு சரியானால் நான் திரும்பவும் பயனியர் சேவையை தொடங்குவேன் என்று யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் பண்ணினேன். அதே மாதிரி செய்தேன். எனக்கு இருக்கிற நோயால் அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடும். ஆனாலும் 1978-ல் உல்வர்ஹாம்டன் என்ற இடத்துக்கு மாறிப்போய் என்னுடைய பயனியர் சேவையை தொடர்ந்தேன். அங்கே பஞ்சாபி பேசுகிற மக்கள் அதிகமாக குடியிருந்தார்கள். சபை கூட்டத்துக்கான அழைப்பிதழை கையிலேயே எழுதி, அங்கிருந்த கடைகளில் நகல் எடுத்தோம். பஞ்சாபி பேசுகிற மக்களிடம் அதை கொடுத்து பொதுப் பேச்சுக்கு அழைத்தோம். இப்போது பிரிட்டனில் ஐந்து பஞ்சாபி மொழி சபைகளும் மூன்று தொகுதிகளும் இருக்கின்றன.
இந்தியாவில் இருந்தபோது நான் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளராக சேவை செய்திருந்தேன் என்று பிரிட்டன் கிளைக்கு தெரிந்திருந்தது. 1980-களின் கடைசியில் பிரிட்டன் கிளை என்னை தொடர்புகொண்டது. நம்முடைய பிரசுரங்களில் குர்முகி எழுத்து முறைகளை பயன்படுத்துவதற்காக அதற்கான எழுத்து வடிவம்... சாஃப்ட்வேர்... வெளியீட்டு விதிகள்... இவற்றையெல்லாம் தயார்செய்ய வேண்டியிருந்தது. லண்டனில் இருக்கிற பெத்தேலுக்கு நான் வீட்டிலிருந்து போய் சேவை செய்தேன். இதைத் தவிர நான் வேறு வேலையும் செய்துகொண்டிருந்தேன். கொஞ்சம் தூரத்தில் இருந்த என் அம்மாவையும் கவனித்துக்கொண்டேன். இதனால் என் வாழ்க்கை எப்போதுமே பரபரப்பாக இருந்தது. ஆனாலும், பெத்தேல் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததை நான் பொக்கிஷமாக நினைத்தேன்.
1980-களின் கடைசியில் லண்டன் பெத்தேலில் எனக்கு பயிற்சி கொடுக்கப்பட்டபோது
செப்டம்பர் 1991-ல் பெத்தேல் குடும்ப அங்கத்தினராவதற்கு எனக்கு அழைப்பு வந்தது. பைபிள் பிரசுரங்களை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கும் வேலை எனக்கு கொடுக்கப்பட்டது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு தகுதி இல்லை என்று நினைத்தேன். எனக்கு உடம்பும் சரியில்லை, பெத்தேலில் சேவை செய்வதற்கான வயது வரம்பையும் தாண்டிவிட்டேன். ஆனாலும் யெகோவா எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்தார். பெத்தேலில் நான் சந்தோஷமாக சேவை செய்து கொண்டிருந்தாலும் எனக்கு உடல்நல பிரச்சினைகளும் இருந்துகொண்டேதான் இருந்தது. கீமோதெரபியும் மற்ற சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டதால் நிறைய தடவை எனக்கு இரத்தம் ஏற்றுவது சம்பந்தமான பிரச்சினைகள் வந்தன. இரத்தம் ஏற்றாமலேயே என் உடம்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவதை பார்த்து இரத்தவியல் நிபுணர்கள் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். லண்டனில் இருக்கிற ஒரு பெரிய மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட ஒரு செமினாருக்கு என்னையும் அழைத்தார்கள். நான் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை என்பதைப் பற்றி 10 நிமிடங்கள் அவர்களிடம் பேசினேன். பின்பு மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுவில் சேவை செய்த ஒரு சகோதரர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்.
இந்தக் கஷ்டமான சமயத்தில் என்னுடைய தங்கைகள் ஜெஸ்விந்தரும் ஷானியும் என்னை தூண் மாறி தாங்கிப் பிடித்தார்கள். அதுமட்டுமல்ல, பெத்தேலில் இருந்தவர்களும் என்னுடைய மற்ற நண்பர்களும் எனக்கு அன்பையும் ஆதரவையும் காட்டினார்கள். அவர்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த எல்லா கஷ்டத்திலுமே நான் என்னுடைய நியமிப்பை தொடர்ந்து செய்வதற்கு தேவையான பலத்தை யெகோவாவும் எனக்கு அளவில்லாமல் தந்தார்.—சங்கீதம் 73:26.
யெகோவாவின் ஆசீர்வாதம்தான் பெரிய சொத்து!
கடந்த 33 வருடங்களாக நான் பெத்தேலில் சேவை செய்கிறேன். ‘யெகோவா நல்லவர் என்பதை நான் ருசித்துப் பார்க்க’ எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (சங்கீதம் 34:8; நீதிமொழிகள் 10:22) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற வயதானவர்களுடைய உதாரணம் எனக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. என்னோடு பைபிளை படித்த பஞ்சாபி மொழி பேசுகிற நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளாகி, அவருக்கு உண்மையாக சேவை செய்துகொண்டிருப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குடும்பத்தாருடனும் நல்ல உறவில் இருக்கிறேன். என்னுடைய அம்மாவும் அண்ணாவும் சாட்சிகள் கிடையாது. ஆனால் “நீ கடவுளுக்காக உன்னையே அர்ப்பணிச்சிட்ட” என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். வயதான எங்களுடைய அம்மாவை கவனித்துக்கொள்ள ‘நான் பெத்தேலை விட்டு வரட்டுமா?’ என்று கேட்டபோது, “நீ செய்யறது உண்மையிலேயே சூப்பரான வேலை, அதனால நீ அங்கேயே இரு!” என்று என் அண்ணா சொன்னார். பெத்தேலிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிற ஒரு பராமரிப்பு இல்லத்தில் அம்மா இப்போது இருக்கிறார். என்னால் முடியும் போதெல்லாம் அடிக்கடி போய் அவரை பார்த்துக்கொள்வேன்
என் வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும்போதெல்லாம் “பயப்படாத கமால். யெகோவா உனக்கு கேடயமா இருக்கார். உனக்கு மிக பெரிய ஆசீர்வாதத்தை தருவார்” என்று என் மனசுக்குள்ளே சொல்லிக்கொள்வேன். (ஆதியாகமம் 15:1) ‘நியாயத்தை வழங்குகிற கடவுளான’ யெகோவாவுக்கு நான் நன்றி சொல்கிறேன். (ஏசாயா 30:18) நான் சின்ன பிள்ளையாக இருக்கும்போதே அவர் என்னை பார்த்து அருமையான வேலையை கொடுத்து என் வாழ்க்கையை அழகாக ஆக்கிவிட்டார். ‘எனக்கு உடம்பு சரியில்லை என்று யாருமே சொல்லாத’ அந்த காலத்துக்காக நான் ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருக்கிறேன்.—ஏசாயா 33:24.
செம்ஸ்ஃபோர்டு பெத்தேலில்