சனி, அக்டோபர் 18
கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.—லூக். 11:9.
உங்களுக்கு இன்னும் அதிக பொறுமை தேவையா? ஜெபம் செய்யுங்கள். பொறுமை என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அதனால், யெகோவாவின் சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யலாம். அந்தச் சக்தியால் உண்டாகிற இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டும் ஜெபம் செய்யலாம். நம் பொறுமையைச் சோதிக்கும் ஒரு சூழ்நிலை வந்தால், கடவுளுடைய சக்திக்காக நாம் “கேட்டுக்கொண்டே” இருக்க வேண்டும். (லூக். 11:13) ஒரு விஷயத்தை யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்க உதவி செய்யும்படியும் அவரிடம் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் பொறுமையாக இருப்பதற்கு நம் பங்கில் செய்ய வேண்டியதையும் செய்ய வேண்டும். பொறுமைக்காக எந்தளவுக்கு ஜெபம் செய்கிறோமோ, எந்தளவுக்கு அதைக் காட்ட முயற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு இந்தக் குணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், நம் சுபாவத்தோடும் கலந்துவிடும். பைபிள் உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கவும் உதவும். பொறுமையாக இருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது. அவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எப்படியெல்லாம் பொறுமை காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம். w23.08 22 ¶10-11
ஞாயிறு, அக்டோபர் 19
உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்.—லூக். 5:4.
யெகோவா உதவி செய்வார் என்று பேதுருவுக்கு இயேசு நம்பிக்கை கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்து வந்த பிறகு, பேதுருவுக்கும் அவரோடு இருந்த மற்ற அப்போஸ்தலர்களுக்கும் மீன்பிடிப்பதில் இன்னொரு அற்புதத்தை செய்து காட்டினார். (யோவா. 21:4-6) இந்த அற்புதத்தை பார்த்தபோது யெகோவா அவருடைய பொருள் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்று பேதுருவுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுப்பவர்களை’ யெகோவா கவனித்துக்கொள்வார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளும் அப்போது அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும். (மத். 6:33) அதனால், மீன்பிடிக்கும் தொழிலை விட ஊழிய வேலைக்கு பேதுரு முதலிடம் கொடுத்தார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று, அவர் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 2:14, 37-41) அதற்குப்பின், சமாரியர்களும் மற்ற தேசத்தை சேர்ந்தவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி செய்தார். (அப். 8:14-17; 10:44-48) எல்லா விதமான மக்களையும் அவருடைய சபைக்குள் கொண்டுவருவதற்கு யெகோவா பேதுருவை பெரிய அளவில் பயன்படுத்தினார். w23.09 20 ¶1; 23 ¶11
திங்கள், அக்டோபர் 20
நான் பார்த்த கனவையும் அதன் அர்த்தத்தையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால், உங்களைக் கண்டந்துண்டமாக வெட்டிவிடுவேன்.—தானி. 2:5.
பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு, பிரமாண்டமான ஒரு சிலையைப் பற்றிய பயங்கரமான ஒரு கனவு வந்தது. இது எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நடந்திருக்கலாம். அந்தக் கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் எல்லா ஞானிகளையும் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டினார், தானியேலையும் சேர்த்துதான்! (தானி. 2:3-5) தானியேல் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால், நிறைய பேருடைய உயிரே போய்விடும் ஆபத்து இருந்தது! “அதனால் தானியேல் ராஜாவிடம் போய், கனவை விளக்குவதற்கு அவகாசம் கேட்டார்.” (தானி. 2:16) அதற்கு நிறைய தைரியமும் விசுவாசமும் அவருக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால், அதற்கு முன்பு தானியேல் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதாக பைபிளில் எந்தவொரு பதிவும் இல்லை. அதனால் தன் நண்பர்களிடம் போய், “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (தானி. 2:18) யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். யெகோவாவின் உதவியோடு நேபுகாத்நேச்சாரின் கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார். அதனால், தானியேலும் அவருடைய நண்பர்களும் உயிர்தப்பினார்கள். w23.08 3 ¶4