வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எலியாவின் ஆவியை எலிசா ஏன் ‘இரு மடங்காக’ கேட்டார்?
எலியா இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக தன் பணியை முடிப்பதற்கு சற்று முன்பு, இளைய தீர்க்கதரிசியாகிய எலிசா அவரிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!” (2 இராஜாக்கள் [2 அரசர்கள்] 2:9, பொது மொழிபெயர்ப்பு) ஆவிக்குரிய கருத்தில், மூத்த மகனுக்கு இரு மடங்கு பங்கை கொடுப்பது போல் தனக்கும் கொடுக்க வேண்டுமென எலிசா கேட்டிருப்பதாக தெரிகிறது. (உபாகமம் 21:17) அந்தப் பதிவை சுருக்கமாக சிந்திப்பது இதைத் தெளிவுபடுத்துவதுடன், நடந்தவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் நமக்கு உதவும்.
எலியா தீர்க்கதரிசி யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைவாக எலிசாவை தன் வாரிசாக அபிஷேகம் பண்ணினார். (1 இராஜாக்கள் 19:19-21) எலிசா சுமார் ஆறு வருடங்களுக்கு எலியாவின் ஊழியக்காரனாக உண்மையோடு சேவித்தார்; முடிவு வரை அவ்வாறே சேவிக்க தீர்மானமாயிருந்தார். எலியா இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாக சேவித்த கடைசி நாளில்கூட, எலிசா தன் போதகராகிய அவரோடு நெருங்கி பணியாற்றினார். தன் பின்னே வர வேண்டாமென எலிசாவிடம் எலியா சொல்லியும், “நான் உம்மை விடுகிறதில்லை” என மூன்று முறை எலிசா குறிப்பிட்டார். (2 இராஜாக்கள் 2:2, 4, 6; 3:11) சொல்லப்போனால் எலியாவை தன் ஆவிக்குரிய தந்தையாக எலிசா கருதினார்.—2 இராஜாக்கள் 2:12.
இருந்தாலும், எலிசா மட்டுமே எலியாவின் ஆவிக்குரிய மகன் அல்ல. “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” என அழைக்கப்பட்ட ஒரு தொகுதியினரும் எலிசாவுடனும் எலியாவுடனும் கூட்டுறவு வைத்திருந்தார்கள். (2 இராஜாக்கள் 2:3) அந்தப் ‘புத்திரரும்’ தங்கள் ஆவிக்குரிய தந்தையாகிய எலியாவிடம் நெருங்கிய பந்தத்தை வைத்திருந்ததாக இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலுள்ள பதிவு சுட்டிக்காட்டுகிறது. (2 இராஜாக்கள் 2:3, 5, 7, 15-17) என்றபோதிலும் எலிசாதான் அபிஷேகம் செய்யப்பட்ட வாரிசாக, எலியாவின் ஆவிக்குரிய மகன்களில் முதன்மையானவராக இருந்தார்; அவர் மூத்த மகன் போன்று இருந்தார். பூர்வ இஸ்ரவேலில் மூத்த மகன் தனது தந்தையின் சொத்தில் இரண்டு பங்கைப் பெற்றான்; மற்ற மகன்களோ ஆளுக்கு ஒரு பங்கை பெற்றார்கள். ஆகவேதான் எலியாவின் ஆவிக்குரிய சொத்தில் இரு மடங்கை தனக்குக் கொடுக்கும்படி எலிசா கேட்டார்.
ஏன் அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எலிசா அவ்வாறு வேண்டினார்? ஏனென்றால் பெரும் பொறுப்பை அவர் நிறைவேற்றவிருந்தார்; அதாவது எலியாவுக்கு அடுத்ததாக இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக சேவிக்கவிருந்தார். அந்த மாபெரும் நியமிப்போடு சம்பந்தப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற தன் சொந்த திறமைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய சக்தி தேவை என்பதை எலிசா உணர்ந்திருந்தார். யெகோவாவால் மட்டுமே அப்படிப்பட்ட சக்தியை தர முடிந்தது. எலியாவைப் போலவே எலிசா தைரியம் காட்ட வேண்டியிருந்தது. (2 இராஜாக்கள் 1:3, 4, 15, 16) ஆகவேதான் அவர் எலியாவின் ஆவியில்—தைரியத்தையும் ‘யெகோவாவுக்காக வெகு பக்திவைராக்கியத்தையும்’ காட்டும் ஆவியில்—இரு மடங்கைக் கேட்டார்; கடவுளுடைய ஆவி அபிவிருத்தி செய்யும் விரும்பத்தக்க குணங்களே அவை. (1 இராஜாக்கள் 19:10, 14) எலியா என்ன சொன்னார்?
எலிசா கேட்டதைக் கொடுப்பதற்கு கடவுளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, தனக்கு அந்த உரிமை இல்லை என்பதை எலியா அறிந்திருந்தார். ஆகவே, “அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்” என பணிவுடன் சொன்னார். (2 இராஜாக்கள் 2:10) உண்மையில், எலியா சுழல்காற்றிலே ஏறிப்போகிறதை காண எலிசாவை யெகோவா அனுமதித்தார். (2 இராஜாக்கள் 2:11, 12) எலிசாவின் வேண்டுகோள் அருளப்பட்டது. புதிய பொறுப்பை நிறைவேற்றவும் வரவிருந்த சோதனைகளை சந்திக்கவும் தேவையான ஆவியை யெகோவா அவருக்கு வழங்கினார்.
இந்த பைபிள் பதிவிலிருந்து, (எலிசா வகுப்பினர் என சிலசமயம் அழைக்கப்படும்) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் கடவுளுடைய ஊழியர்களான மற்றவர்களும் இன்று அதிக உற்சாகத்தைப் பெறலாம். சிலசமயங்களில் ஒரு புதிய நியமிப்பைப் பெறும்போது நம்மால் அதை நிறைவேற்ற முடியுமா என்று நினைத்து திணறிப்போகலாம் அல்லது நம் பிராந்தியத்தில் அதிகமதிகமானோர் நாம் சொல்லும் ராஜ்ய செய்தியை அசட்டை செய்யும்போதோ எதிர்க்கும்போதோ தொடர்ந்து பிரசங்கிக்க அந்தளவு தைரியம் இல்லாமல் போகலாம். ஆனால் யெகோவாவின் உதவிக்காக நாம் கெஞ்சிக் கேட்கும்போது அவர் தமது பரிசுத்த ஆவியை நமக்கு அருளுவார்; சவால்களையும் மாறுகிற சூழ்நிலைகளையும் சமாளிக்க நமக்கு அது தேவை. (லூக்கா 11:13; 2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13, NW) ஆம், கனத்த பொறுப்புகளை நிறைவேற்ற எலிசாவை பலப்படுத்தியதைப் போலவே, இன்று ஊழியத்தை நிறைவேற்ற இளையோர் முதியோர் ஆகிய நம் அனைவருக்குமே யெகோவா உதவி செய்வார்.—2 தீமோத்தேயு 4:5.