அதிகாரம் 7
“அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” உற்சாகப்படுத்துகிற கூட்டங்கள்
யெகோவாவின் மக்கள் பல நூற்றாண்டுகளாகவே ஒரு அமைப்பாக ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். பூர்வ காலத்தில், இஸ்ரவேலர்கள் மூன்று பெரிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக எருசலேமில் ஒன்றுகூடினார்கள். (உபா. 16:16) முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களும், பெரும்பாலும் யாராவது ஒருவருடைய வீட்டில் தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள். (பிலே. 1, 2) இன்றும்கூட, நாம் கூட்டங்களுக்கும், வட்டார மாநாடுகளுக்கும், மண்டல மாநாடுகளுக்கும் ஒன்றுகூடி வருகிறோம். ஏன்? ஏனென்றால், இப்படி ஒன்றுகூடி வருவது நம்முடைய வணக்கத்தின் முக்கிய பாகமாக இருக்கிறது.—சங். 95:6; கொலோ. 3:16.
2 கூட்டங்களில் கலந்துகொள்கிறவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு ஏழாவது வருஷத்தின் முடிவிலும் நடந்த கூடாரப் பண்டிகை சமயத்தில் என்ன செய்ய வேண்டுமென்று இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்டது. “ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும். அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. (உபா. 31:12) ஒன்றுகூடி வருவதற்கான முக்கிய நோக்கமே ‘யெகோவாவினால் கற்பிக்கப்படுவதற்குத்தான்’ என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (ஏசா. 54:13) அதுமட்டுமல்ல, ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகுவதற்கும், உற்சாகமும் பலமும் பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
சபைக் கூட்டங்கள்
3 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு ஒன்றுகூடி வந்த சீஷர்கள், அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தினார்கள். ‘அவர்கள் ஒரே நோக்கத்தோடு ஆலயத்தில் தினமும் கூடிவந்தார்கள்.’ (அப். 2:42, 46) பிற்பாடு, கிறிஸ்தவர்கள் வணக்கத்துக்காக ஒன்றுகூடி வந்த சமயங்களில், அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் எழுதிய கடிதங்களை வாசித்தார்கள்; கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட மற்ற வேதவசனங்களையும் வாசித்தார்கள். (1 கொ. 1:1, 2; கொலோ. 4:16; 1 தெ. 1:1; யாக். 1:1) அதோடு, ஜெபமும் செய்தார்கள். (அப். 4:24-29; 20:36) சிலசமயங்களில், மற்ற தேசங்களில் ஊழியம் செய்தபோது கிடைத்த அனுபவங்கள் சொல்லப்பட்டன. (அப். 11:5-18; 14:27, 28) பைபிள் கோட்பாடுகளும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களும் விளக்கப்பட்டன. கடவுளுக்குப் பிரியமாக நடந்துகொள்வதைப் பற்றியும், கடவுள்பக்தியைப் பற்றியும் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாக அறிவிக்கும்படி எல்லாரும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.—ரோ. 10:9, 10; 1 கொ. 11:23-26; 15:58; எபே. 5:1-33.
கஷ்டங்கள் நிறைந்த இந்தக் கடைசி நாட்களில், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டு உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம்
4 சபைக் கூட்டங்கள், அப்போஸ்தலர்களுடைய காலத்தில் எப்படி நடத்தப்பட்டதோ அப்படித்தான் இன்றும் நடத்தப்படுகின்றன. எபிரெயர் 10:24, 25 இப்படிச் சொல்கிறது: “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.” கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு நாம் கீழ்ப்படிகிறோம். கஷ்டங்கள் நிறைந்த இந்தக் கடைசி நாட்களில், கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். ஆன்மீக விதத்தில் பலமாக இருக்கவும், கடவுளுக்கு உண்மையாக இருக்கவும் இது நமக்கு உதவுகிறது. (ரோ 1:11, 12) அதனால், சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறை மத்தியில் நாம் வாழ்ந்தாலும், கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் ஒதுக்கித்தள்ளியிருக்கிறோம். (பிலி 2:15, 16; தீத் 2:12-14) உண்மையில், வேறு எந்தவொரு இடத்திலும் இருப்பதைவிட யெகோவாவின் மக்களோடு இருப்பதுதானே சிறந்தது? (சங் 84:10) கடவுளுடைய வார்த்தையைப் படித்துக் கலந்துபேசுவதைவிடப் பிரயோஜனமான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? நம்முடைய நன்மைக்காக என்னென்ன கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
வாரயிறுதியில் நடக்கும் கூட்டம்
5 வாரயிறுதியில் நடக்கும் கூட்டத்தில் முதலாவதாக பைபிள் அடிப்படையில் ஒரு பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அது முக்கியமாகப் பொது மக்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுகிறது. முதல் தடவையாகக் கூட்டத்துக்கு வருகிறவர்களுக்குக்கூடப் புரியும் விதத்தில் இந்தப் பேச்சு கொடுக்கப்படுகிறது. புதியவர்களும் சரி, ஏற்கெனவே சபையில் இருப்பவர்களும் சரி, எல்லாருமே யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள இந்தப் பொதுப் பேச்சு உதவுகிறது.—அப் 18:4; 19:9, 10.
6 இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் சகோதரர்கள் பேச்சுகளைக் கொடுப்பது போலவே, முதல் நூற்றாண்டில் கிறிஸ்து இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும், அவர்களோடு இருந்தவர்களும் பேச்சுகளைக் கொடுத்தார்கள். பூமியில் வாழ்ந்தவர்களில், இயேசுவைப் போலத் தலைசிறந்த பேச்சாளர் யாருமே கிடையாது. அவர் பேசியதைக் கேட்டவர்கள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொன்னார்கள். (யோவா 7:46) இயேசு அதிகாரத்தோடு பேசியதைக் கேட்டு மக்கள் அசந்துபோனார்கள். (மத் 7:28, 29) அவர் சொன்னபடி நடந்தவர்கள் நிறையப் பலன்களைப் பெற்றார்கள். (மத் 13:16, 17) பேச்சு கொடுக்கும் விஷயத்தில், அப்போஸ்தலர்களும் இயேசுவைப் பின்பற்றினார்கள். கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு கொடுத்த வலிமையான பேச்சைப் பற்றி அப்போஸ்தலர் 2:14-36-ல் படிக்கிறோம். அவர் சொன்னதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். அதேபோல், அத்தேனே நகரத்தில் பவுல் கொடுத்த பேச்சைக் கேட்டவர்களில் சிலரும் கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.—அப். 17:22-34.
7 இன்றும்கூட, நம்முடைய சபைகளில் வாராவாரம் கொடுக்கப்படுகிற பொதுப் பேச்சுகள், மாநாடுகளில் கொடுக்கப்படுகிற பேச்சுகள் ஆகியவற்றைக் கேட்டு லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். பைபிள் போதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், கடவுளுடைய சேவையை முழுமூச்சோடு செய்வதற்கும் இந்தப் பேச்சுகள் நமக்கு உதவுகின்றன. ஆர்வம் காட்டுகிறவர்களையும் மற்றவர்களையும் நம்முடைய கூட்டங்களுக்கு நாம் அழைக்கலாம். அதன் மூலம், பைபிளில் இருக்கிற அடிப்படைப் போதனைகளைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு நம்மால் உதவ முடியும்.
8 வித்தியாசமான தலைப்புகளில் பொதுப் பேச்சுகள் கொடுக்கப்படுகின்றன. சில பேச்சுகள் பைபிள் கோட்பாடுகளையும் தீர்க்கதரிசனங்களையும் பற்றி இருக்கும். சில பேச்சுகளில், திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, இளைஞர்கள் சந்திக்கிற சவால்கள், ஒழுக்கநெறிகள் ஆகியவை சம்பந்தமான பைபிள் நியமங்களும் ஆலோசனைகளும் சொல்லப்படும். இன்னும் சில பேச்சுகள், யெகோவாவின் அற்புத படைப்புகளைப் பற்றி இருக்கும். வேறு சில பேச்சுகள், பைபிள் காலத்தில் விசுவாசமாக, தைரியமாக, உண்மையாக வாழ்ந்தவர்களைப் பற்றி விளக்கும். அவர்களைப் போல நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்பதையும் நமக்குக் கற்றுத்தரும்.
9 பொதுப் பேச்சுகளிலிருந்து நாம் முழு நன்மை அடைய விரும்பினால், பேச்சாளர் சொல்வதைக் கவனித்துக் கேட்க வேண்டும். வசனங்களை அவர் வாசிக்கும்போதும் விளக்கும்போதும், நாம் அவற்றை பைபிளில் எடுத்துப் பார்க்க வேண்டும். (லூக். 8:18) அப்போது, அவர் சொல்லும் விஷயங்கள் உண்மைதான் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்; அதோடு, அவற்றை உறுதியாகப் பிடித்துக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் தீர்மானமாக இருக்க முடியும்.—1 தெ. 5:21.
10 போதுமான பேச்சாளர்கள் இருந்தால், சபையில் ஒவ்வொரு வாரமும் பொதுப் பேச்சு கொடுக்கப்படும். வாரம்தவறாமல் பொதுப் பேச்சு கொடுக்கப்படுவதற்கு, பக்கத்து சபைகளில் இருக்கும் சகோதரர்களையும் அழைக்கலாம். ஆனால், பேச்சாளர்கள் குறைவாக இருந்தால், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பொதுப் பேச்சுகளைக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
11 வாரயிறுதியில் நடக்கும் கூட்டத்தில் பொதுப் பேச்சுக்கு பிறகு காவற்கோபுர படிப்பு இருக்கும். காவற்கோபுர படிப்பு இதழில் இருக்கிற கட்டுரைகள் கேள்வி-பதில் முறையில் கலந்துபேசப்படும். இந்தப் பத்திரிகையின் மூலம் காலத்துக்கு ஏற்ற ஆன்மீக உணவை யெகோவா கொடுக்கிறார்.
12 பெரும்பாலும், பைபிள் நியமங்களைத் தினசரி வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைப் பற்றி படிப்பு கட்டுரைகள் விளக்கும். ‘உலகத்தின் சிந்தையையும்’ அசுத்தமான நடத்தையையும் தவிர்க்க கிறிஸ்தவர்களுக்கு அவை உதவுகின்றன. (1 கொ. 2:12) பைபிள் போதனைகள், தீர்க்கதரிசனங்கள் பற்றிய புதிய விளக்கங்களும் காவற்கோபுர பத்திரிகையில் வெளிவருகின்றன. இதனால், அமைப்பிடமிருந்து வருகிற சமீபத்திய விளக்கங்களை எல்லாராலும் தெரிந்துகொள்ள முடிகிறது, நீதிமான்களின் பாதையில் தொடர்ந்து நடக்க முடிகிறது. (சங். 97:11; நீதி. 4:18) காவற்கோபுர படிப்பில் கலந்துகொள்வதும், பதில் சொல்வதும் யெகோவா தரப்போகும் நீதியான புதிய உலகத்தைப் பற்றிய நம்பிக்கையில் சந்தோஷமாக இருக்க நமக்கு உதவும். (ரோ. 12:12; 2 பே. 3:13) நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை நம்மால் வளர்த்துக்கொள்ள முடிகிறது. யெகோவாவுக்கு ஆர்வத்தோடு சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை அதிகமாகிறது. (கலா. 5:22, 23) சோதனைகளைச் சகிப்பதற்கு நமக்குப் பலம் கிடைக்கிறது. “எதிர்காலத்துக்காக நல்ல அஸ்திவாரத்தை” போட முடிகிறது. இப்படி, ‘உண்மையான வாழ்வை நம்மால் உறுதியாகப் பிடித்துக்கொள்ள’ முடிகிறது.—1 தீ. 6:19; 1 பே. 1:6, 7.
13 ஆன்மீக உணவைக் கொடுப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கிற இந்த ஏற்பாட்டை நாம் எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்? காவற்கோபுர படிப்புக்காக தனியாகவோ, குடும்பமாகவோ முன்கூட்டியே தயாரிக்க வேண்டும். கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களை எடுத்துப் பார்க்க வேண்டும். காவற்கோபுர படிப்பு நடக்கும்போது, சொந்த வார்த்தைகளில் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்யும்போது, நாம் கற்றுக்கொள்கிற உண்மைகள் நம்முடைய மனதில் ஆழமாகப் பதியும். விசுவாசத்தினால் நாம் சொல்கிற பதில்களைக் கேட்டு மற்றவர்களும் பயனடைவார்கள். மற்றவர்கள் சொல்கிற பதில்களைக் கவனமாகக் கேட்கும்போது, அதிலிருந்து நாமும் பயனடைவோம்.
வார நாளில் நடக்கும் கூட்டம்
14 ‘நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்’ என்ற தலைப்பில் நடத்தப்படுகிற கூட்டத்துக்காக சகோதர சகோதரிகள் ஒவ்வொரு வாரமும் ராஜ்ய மன்றத்தில் கூடிவருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் மூன்று பாகங்கள் இருக்கின்றன. கடவுளுடைய ஊழியர்களாக ஆவதற்கு ‘போதிய தகுதியை’ வளர்த்துக்கொள்ள இவை உதவுகின்றன. (2 கொ. 3:5, 6) கூட்டத்துக்கான அட்டவணையும், படிப்பதற்கான தகவல்களும் நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும். இந்தப் பயிற்சிப் புத்தகத்தில் “இப்படிப் பேசலாம்” என்ற பகுதி இருக்கிறது. ஊழியத்தில் எப்படிப் பேசுவது என்பதை இந்தப் பகுதியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
15 இந்தக் கூட்டத்தின் முதல் பாகம், “பைபிளில் இருக்கும் புதையல்கள்” என்று அழைக்கப்படுகிறது. பைபிளில் இருக்கிற சில அதிகாரங்களின் பின்னணியைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள இது உதவும். அதோடு, படிக்கும் விஷயங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதையும் இந்தக் கூட்டத்தில் கற்றுக்கொள்வோம். இந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சும், பைபிள் வாசிப்பும், அந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியின் அடிப்படையில் ஒரு கலந்தாலோசிப்பும் இருக்கும். இவற்றோடு சம்பந்தப்பட்ட படங்கள், பயிற்சிகள் போன்றவை வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில் இருக்கும். பைபிளை இப்படி ஆழமாகப் படிப்பது, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும்” பெற்றவர்களாக இருக்க அது உதவுகிறது.—2 தீ. 3:16, 17.
16 இந்தக் கூட்டத்தின் இரண்டாவது பாகம், “ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்” என்று அழைக்கப்படுகிறது. ஊழியம் செய்ய பயிற்சி கொடுப்பதற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் திறமையை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது. இந்தக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நியமிப்புகள் கொடுக்கப்படும், ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதைக் காட்டும் வீடியோக்களும் கலந்துபேசப்படும். “பக்குவமாகப் பேசும் திறமையை” வளர்த்துக்கொள்ள இந்தப் பாகம் நமக்கு உதவுவதால், “சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக பேசுவது” என்பதை நம்மால் கற்றுக்கொள்ள முடிகிறது.—ஏசா. 50:4.
17 மூன்றாவது பாகம், “கிறிஸ்தவர்களாக வாழுங்கள்” என்று அழைக்கப்படுகிறது. பைபிள் நியமங்களை அன்றாட வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதை இது கற்றுத்தருகிறது. (சங். 119:105) சபை பைபிள் படிப்புதான் இந்தப் பாகத்தின் முக்கிய அம்சம். காவற்கோபுர படிப்பைப் போலவே சபை பைபிள் படிப்பும் கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசிக்கப்படும்.
18 ஒவ்வொரு மாதமும், வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகம் கிடைத்தவுடன், மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரோ அவருக்கு உதவி செய்கிற ஒரு மூப்பரோ அதில் இருக்கிற பகுதிகளைக் கவனமாகப் படித்துவிட்டு அட்டவணை போடுவார். ஒவ்வொரு வாரமும், கற்றுக்கொடுக்கும் திறமையுள்ள ஒரு மூப்பர் அந்தக் கூட்டத்தின் சேர்மனாக இருப்பார். அவரை சேர்மனாகப் பயன்படுத்த சபையின் மூப்பர் குழு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். கூட்டத்தைச் சரியான நேரத்தில் ஆரம்பித்து, சரியான நேரத்தில் முடிப்பது சேர்மனின் பொறுப்பு. மாணவர் நியமிப்பைச் செய்கிறவர்களைப் பாராட்டுவதும் அவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதும் அவருடைய பொறுப்புதான்.
19 ஒவ்வொரு வாரமும், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்காக நாம் தயாரிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்யும்போது, பைபிளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வோம்; பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்வோம்; நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தேவையான தன்னம்பிக்கையைப் பெறுவோம்; சீஷர்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிற திறமைகளை வளர்த்துக்கொள்வோம். ஞானஸ்நானம் எடுக்காதவர்களும்கூட இந்தக் கூட்டத்தில் சொல்லப்படுகிற அருமையான விஷயங்களிலிருந்து பயனடைவார்கள், சகோதர சகோதரிகளோடு பழகுவதன் மூலமும் பயனடைவார்கள். இந்தக் கூட்டத்துக்கும் மற்ற கூட்டங்களுக்கும் தயாரிப்பதற்காக உவாட்ச்டவர் லைப்ரரி, JW லைப்ரரி ®, உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி ™, ராஜ்ய மன்றத்தில் இருக்கிற நூலகம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ராஜ்ய மன்ற நூலகத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள், உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ், அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு ஆகியவையும், வெவ்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளும், அகராதியும், இன்னும் சில ஆராய்ச்சிப் புத்தகங்களும் இருக்கும். கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் யார் வேண்டுமானாலும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம்.
வெளி ஊழியக் கூட்டங்கள்
20 வாரத்தின் வெவ்வேறு சமயங்களிலும், வாரக் கடைசியிலும் பிரஸ்தாபிகள் தங்கள் தொகுதியில் இருப்பவர்களோடு வெளி ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்தக் கூட்டம் ஒருசில நிமிஷங்களுக்கு மட்டுமே இருக்கும். பொதுவாக, இந்தக் கூட்டங்கள் சகோதர சகோதரிகளின் வீடுகளிலோ, வசதியான வேறு இடங்களிலோ நடக்கும். ராஜ்ய மன்றத்திலும் இந்தக் கூட்டத்தை நடத்தலாம். வெளி ஊழியக் கூட்டத்துக்குச் சின்னச் சின்னத் தொகுதிகளாக வெவ்வேறு இடங்களில் கூடிவருவது நல்லது. அப்போதுதான், பிரஸ்தாபிகளால் வெளி ஊழியக் கூட்டம் நடக்கும் இடத்துக்கும் ஊழியம் செய்ய வேண்டிய இடத்துக்கும் சீக்கிரமாகப் போக முடியும். அதோடு, தொகுதிக் கண்காணியால் பிரஸ்தாபிகளைச் சீக்கிரமாகப் பிரித்து ஊழியத்துக்கு அனுப்ப முடியும். தொகுதிக் கண்காணியால் தன்னுடைய தொகுதியில் இருக்கிறவர்கள்மீது அதிக கவனம் செலுத்தவும் முடியும். வெளி ஊழியத் தொகுதிகள் இப்படித் தனித்தனியாகக் கூடிவருவதால் பல நன்மைகள் இருந்தாலும், சூழ்நிலை காரணமாகச் சில தொகுதிகள் ஒன்றுசேர்ந்து ஒரே இடத்தில் கூடிவர வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, வார நாட்களில் ஒருசில பிரஸ்தாபிகள்தான் ஊழியத்துக்கு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, பல தொகுதிகளை அல்லது ஊழியத்துக்கு வருகிறவர்களை ராஜ்ய மன்றத்திலோ வசதியான வேறொரு இடத்திலோ கூடிவர வைத்து, வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தலாம். இப்படிச் செய்யும்போது, பிரஸ்தாபிகள் தங்களோடு ஊழியம் செய்ய ஆள் இல்லாமல் திண்டாட மாட்டார்கள். விடுமுறை நாட்களில், வெளி ஊழியக் கூட்டத்தை ராஜ்ய மன்றத்தில் நடத்தினால் சபையில் இருக்கிற எல்லாருக்கும் வசதியாக இருக்கும். காவற்கோபுர படிப்புக்குப் பிறகு, எல்லா தொகுதிகளுக்கும் சேர்த்து வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தலாமா என்பதைச் சபை முடிவு செய்யலாம்.
21 ஊழியத் தொகுதிகள் தனித்தனியாக கூடிவந்தால், வெளி ஊழியக் கூட்டத்தைத் தொகுதிக் கண்காணி நடத்துவார். அவ்வப்போது, இந்தக் கூட்டத்தை நடத்தும்படி தன்னுடைய உதவியாளரிடமோ, தகுதியுள்ள வேறொரு சகோதரரிடமோ அவர் சொல்லலாம். வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துபவர் ஊழியத்துக்குப் பிரயோஜனமாக இருக்கிற ஒரு விஷயத்தைக் கலந்துபேசுவார். வெளி ஊழியத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, தொகுதியில் இருக்கிற ஒருவர் ஜெபம் செய்வார். பிறகு, எல்லாரும் உடனடியாக ஊழியத்துக்குப் போவார்கள். இந்தக் கூட்டத்தை ஐந்திலிருந்து ஏழு நிமிஷங்களுக்குள் முடிக்க வேண்டும். சபைக் கூட்டத்துக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டால், இன்னும் சீக்கிரமாகவே முடிக்க வேண்டும். வெளி ஊழியக் கூட்டங்கள் உற்சாகத்தையும் நடைமுறையான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் பிரஸ்தாபிகளுக்குக் கொடுக்க வேண்டும். புதியவர்களும் உதவி தேவைப்படுகிற மற்ற பிரஸ்தாபிகளும் அனுபவமுள்ள பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்வார்கள்.
புதிய சபைகள் அல்லது சிறிய சபைகள் கூடிவருவதற்கான ஏற்பாடுகள்
22 சீஷர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, சபைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். பொதுவாக, புதிய சபையை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை வட்டாரக் கண்காணி கிளை அலுவலகத்துக்கு அனுப்புவார். சிலசமயங்களில், பக்கத்தில் இருக்கிற சபையோடு சிறிய தொகுதிகள் கூடிவந்தால் இன்னும் பிரயோஜனமாக இருக்கும்.
23 சிலசமயங்களில், சிறிய சபைகளில் வெறுமனே சகோதரிகள் மட்டுமே இருக்கலாம். அந்தச் சூழ்நிலையில், ஒரு சகோதரி சபைக் கூட்டங்களை நடத்தினாலோ சபையில் ஜெபம் செய்தாலோ முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 11:3-16) பெரும்பாலும், அந்தச் சகோதரி சபையாரைப் பார்த்தபடி உட்கார்ந்துதான் கூட்டத்தை நடத்துவார். சகோதரிகள் பேச்சுகளைக் கொடுக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அந்தக் கூட்டத்துக்காக அமைப்பு கொடுத்திருக்கிற பகுதியை வாசித்து, தங்கள் குறிப்புகளைச் சொல்வார்கள். சிலசமயங்களில், அந்தப் பகுதியைக் கூடிவந்திருப்பவர்களோடு கலந்துபேசலாம் அல்லது நடிப்பாகச் செய்து காட்டலாம். கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்வதற்கும் கூட்டங்களை நடத்துவதற்கும் அங்கிருக்கிற சகோதரிகளில் ஒருவரைக் கிளை அலுவலகம் நியமிக்கும். பிற்பாடு, உதவி ஊழியராகவோ மூப்பராகவோ நியமிக்கப்படுவதற்குச் சகோதரர்கள் தகுதிபெற்றால், இந்தப் பொறுப்புகளை அந்தச் சகோதரர்கள் செய்வார்கள்.
வட்டார மாநாடுகள்
24 ஒவ்வொரு வருஷமும், ஒரு வட்டாரத்தில் இருக்கிற எல்லா சபைகளும் வட்டார மாநாட்டில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். ஒருநாள் வட்டார மாநாடு வருஷத்துக்கு இரண்டு தடவை நடத்தப்படும். இந்தச் சந்தோஷமான சமயங்களில், ‘இதயக் கதவை அகலமாகத் திறந்து’ சகோதர சகோதரிகளுடன் பழக எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. (2 கொ. 6:11-13) யெகோவாவின் அமைப்பு ஒரு விசேஷத் தேவையை மனதில் வைத்து, பைபிள் அடிப்படையில் மாநாட்டின் தலைப்பையும், மற்ற பகுதிகளையும் தயாரிக்கிறது. அந்த விஷயங்கள் பேச்சுகள், நடிப்புகள், நிஜ சம்பவ நடிப்புகள், தனக்குத் தானே பேசிக்கொள்ளும் நடிப்புகள், பேட்டிகள் ஆகியவற்றின் மூலமாக நமக்குச் சொல்லப்படுகின்றன. சரியான சமயத்தில் கொடுக்கப்படுகிற இந்தப் போதனைகள், மாநாட்டில் கலந்துகொள்கிற எல்லாரையும் உற்சாகப்படுத்துகின்றன. புதிய சீஷர்கள், தாங்கள் யெகோவாவுக்கு அர்ப்பணித்திருப்பதைக் காட்டும் விதமாக இந்த மாநாடுகளில் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்.
மண்டல மாநாடுகள்
25 வருஷத்துக்கு ஒரு தடவை, பெரிய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த மண்டல மாநாடுகள் மூன்று நாட்களுக்கு நடக்கும். பல வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்வார்கள். சிறிய கிளை அலுவலகங்கள், தங்களுடைய கிளை அலுவலகப் பிராந்தியத்தில் இருக்கிற எல்லா சபைகளும் ஒரே இடத்தில் மாநாட்டுக்காகக் கூடிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். சில நாடுகளில், இப்படி கூடிவருவதற்கான ஏற்பாடுகள் அங்கிருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றபடி அல்லது அமைப்பிடமிருந்து வரும் ஆலோசனைக்கு ஏற்றபடி வித்தியாசப்படலாம். அவ்வப்போது, சர்வதேச மாநாடுகளோ விசேஷ மாநாடுகளோ சில நாடுகளில் நடத்தப்படும். பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இவற்றில் கலந்துகொள்வார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் நிறைய பேர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
26 மாநாடுகள், யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்த எல்லாரும் ஒன்றுசேர்ந்து அவரை சந்தோஷமாக வணங்குவதற்கான சந்தர்ப்பங்களாக இருக்கின்றன. பைபிள் சத்தியங்களைப் பற்றிய புதிய விளக்கங்கள் இந்த மாநாடுகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில மாநாடுகளில், தனிப்பட்ட விதமாகவும் சபையாகவும் படிப்பதற்கோ ஊழியத்தில் பயன்படுத்துவதற்கோ உதவுகிற புதிய பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன. மண்டல மாநாடுகளிலும் ஞானஸ்நானம் கொடுக்கப்படும். முக்கியமாக மாநாடுகளில் கலந்துகொள்ளும்போது, யெகோவாவுடன் நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடிகிறது. யெகோவாவின் மக்கள், அவருக்கு அர்ப்பணித்த கிறிஸ்தவர்களால் ஆன ஓர் உலகளாவிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இந்த மாநாடுகள் அத்தாட்சி அளிக்கின்றன. இவர்கள், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு அடையாளமாக இருக்கிற அன்பைக் காட்டுகிறார்கள்.—யோவா. 13:35.
27 யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்களிலும், வட்டார மாநாடுகளிலும் மண்டல மாநாடுகளிலும் கலந்துகொள்ளும்போது, யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய நமக்குப் பலம் கிடைக்கிறது. சாத்தானுடைய உலகம் நம்முடைய விசுவாசத்தைக் குலைத்துப்போடாதபடி இவை நம்மைப் பாதுகாக்கின்றன. இந்தக் கூட்டங்களும் மாநாடுகளும் யெகோவாவுக்கு மகிமையையும் புகழையும் சேர்க்கின்றன. (சங். 35:18; நீதி. 14:28) இந்த முடிவு காலத்தில், தன்னுடைய மக்களுக்கு ஆன்மீகப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதற்காக, யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாட்டுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும்.
எஜமானின் இரவு விருந்து
28 வருஷத்துக்கு ஒரு தடவை, இயேசு கிறிஸ்து இறந்த நாளில், உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கிறிஸ்துவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படும். இது எஜமானின் இரவு விருந்து என்றும் அழைக்கப்படுகிறது. (1 கொ. 11:20, 23, 24) யெகோவாவின் மக்களுக்கு இதுதான் வருஷத்தில் மிக முக்கியமான கூட்டம். நினைவு நாளை அனுசரிக்க வேண்டும் என்ற திட்டவட்டமான கட்டளை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.—லூக். 22:19.
29 பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்ட அதே தேதியில்தான் இயேசுவின் மரண நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. பஸ்கா பண்டிகை எப்போது கொண்டாடப்பட்டது என்ற தேதி பைபிளில் இருக்கிறது. (யாத். 12:2, 6; மத். 26:17, 20, 26) கி.மு. 1513-ல் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையான நாளை நினைத்துப்பார்ப்பதற்காக, வருஷாவருஷம் பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்தச் சமயத்தில், அவர்களுடைய சந்திர நாள்காட்டியின் முதல் மாதத்தின் 14-ஆம் நாளில் பஸ்கா ஆட்டுக்குட்டியைச் சாப்பிட வேண்டும் என்று யெகோவா சொல்லியிருந்தார். அதே நாளில் அவர்கள் எகிப்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். (யாத். 12:1-51) இந்தத் தேதி எப்படிக் கணக்கிடப்படுகிறது? வசந்த காலத்தில் இரவும் பகலும் ஏறக்குறைய சரிசமமாக இருக்கும் நாள், சம இரவுபகல் நாள் (spring equinox) என்று சொல்லப்படுகிறது. இந்த நாளுக்கு பின் வரும் அமாவாசைக்குப் பிறகு, முதல் பிறை நிலா எருசலேமில் என்றைக்குத் தெரிகிறதோ, அன்றிலிருந்து 13 நாட்களைச் சேர்த்தால் நிசான் 14 வரும். பெரும்பாலும், இந்தச் சம இரவுபகல் நாளுக்குப் பின் வருகிற பவுர்ணமி நாளில்தான் இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கும்.
30 இந்த நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று மத்தேயு 26:26-28-ல் இயேசு சொன்னார். நினைவு நாள் நிகழ்ச்சி ஒரு சடங்கு கிடையாது. அதில் பயன்படுத்தப்படுகிற சின்னங்கள் நிஜமாகவே இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுவதில்லை. இது அடையாள அர்த்தமுள்ள ஒரு விருந்து. இயேசு கிறிஸ்துவுடன் பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்தச் சின்னங்களில் பங்கெடுக்கிறார்கள். (லூக். 22:28-30) யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிற மற்ற கிறிஸ்தவர்களும், ஆர்வம் காட்டுகிற பொது மக்களும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள். இப்படி, மனிதர்கள் எல்லாருடைய நன்மைக்காகவும் யெகோவா தேவன் தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்தி செய்திருக்கிற ஏற்பாட்டுக்கு அவர்கள் நன்றி காட்டுகிறார்கள். நினைவு நாள் நிகழ்ச்சியிலும் பைபிள் படிப்பிலும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, நினைவு நாளுக்கு முன் விசேஷப் பொதுப் பேச்சு ஒன்று கொடுக்கப்படும்.
31 கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆசையாகக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், கூட்டங்களுக்கு வரும்போது, “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட” முடிகிறது. (எபி. 10:24) யெகோவாவுடன் இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளத் தேவையான தகவல்களை, கூட்டங்கள் மூலமாக நமக்குத் தர உண்மையும் விவேகமும் உள்ள அடிமை கவனமாக இருக்கிறார்கள். தவறாமல் ஒன்றுகூடி வருவதற்காகச் செய்யப்பட்டிருக்கிற இந்த ஏற்பாடுகளை, யெகோவாவின் மக்களும் ஆர்வம் காட்டுகிற மற்றவர்களும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய அமைப்பு மூலமாக யெகோவா செய்கிற ஏற்பாடுகளுக்கு நாம் உண்மையிலேயே மதிப்பு காட்டுவதால், கடவுளை ஒற்றுமையாக வணங்க முடிகிறது. மிக முக்கியமாக, யெகோவாவைப் புகழ்ந்து அவரை மகிமைப்படுத்தவும் முடிகிறது.—சங். 111:1.