அதிகாரம் 13
“எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்”
நாம் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பதால், அவருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் நம்முடைய சொல்லும் செயலும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நம் கடமை. இதற்கு அடிப்படையாக இருக்கும் ஒரு நியமத்தை அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.” (1 கொ. 10:31) அப்படியென்றால், யெகோவாவுடைய பரிபூரணமான சுபாவத்தை வெளிக்காட்டும் அவருடைய நீதிநெறிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். (கொலோ. 3:10) பரிசுத்தமான மக்களாக நாம் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.—எபே. 5:1, 2.
2 இதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதினார்: “கடவுளைப் பற்றித் தெரியாத காலத்தில் உங்களுக்கு இருந்த ஆசைகளின்படி நடப்பதை விட்டுவிட்டு, கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். ‘நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே.” (1 பே. 1:14-16) அன்று வாழ்ந்த இஸ்ரவேலர்களைப் போலவே இன்று வாழும் கிறிஸ்தவர்களாகிய நாமும் பரிசுத்தமாக இருப்பது அவசியம். அப்படியென்றால், பாவத்தினாலும் இந்த உலகத்தினாலும் கறைபடாத, சுத்தமான மக்களாக இருக்க வேண்டும். அப்போதுதான், பரிசுத்த சேவை செய்வதற்காகவே பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக இருப்போம்.—யாத். 20:5.
3 பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் யெகோவாவின் சட்டதிட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிக்கும்போது நாம் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியும். (2 தீ. 3:16) பைபிளைப் படித்தபோது நாம் யெகோவாவைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் கற்றுக்கொண்டோம், அவரிடம் ஈர்க்கப்பட்டோம். அதோடு, அவருடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்து அவருடைய விருப்பத்தைச் செய்வதுதான் வாழ்க்கையிலேயே மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டோம். (மத். 6:33; ரோ. 12:2) அவருடைய விருப்பத்தைச் செய்வதற்காக நாம் புதிய சுபாவத்தை அணிந்துகொண்டோம்.—எபே. 4:22-24.
ஆன்மீக சுத்தமும் ஒழுக்க சுத்தமும்
4 யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிப்பது எப்போதுமே சுலபம் அல்ல. சத்திய வழியைவிட்டு நம்மைத் திசைதிருப்ப நம் எதிரியான பிசாசாகிய சாத்தான் முயற்சி செய்கிறான். இந்தப் பொல்லாத உலகத்தின் செல்வாக்கினாலும் நம்முடைய பாவ இயல்பினாலும், சரியானதைச் செய்வது சிலசமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பதால், நாம் ஆன்மீக விதத்தில் போராட வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்ப்புகளை அல்லது சோதனைகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று பைபிள் சொல்கிறது. கடவுளுடைய நீதிநெறிகளின்படி வாழும்போது நாம் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். (2 தீ. 3:12) ஆனால், சோதனைகளும் பிரச்சினைகளும் வருவதை நினைத்து நாம் சந்தோஷப்படலாம்; ஏனென்றால், கடவுளுடைய விருப்பத்தைச் செய்கிறோம் என்பதற்கு அவை அத்தாட்சியாக இருக்கின்றன.—1 பே. 3:14-16; 4:12, 14-16.
5 இயேசு பரிபூரணராக இருந்தபோதிலும், தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். சாத்தானுடைய சோதனைகளுக்கு அவர் ஒருபோதும் அடிபணியவில்லை, உலகத்தில் எதையாவது சாதிக்க வேண்டுமென்று ஒருநாளும் நினைக்கவில்லை. (மத். 4:1-11; யோவா. 6:15) உத்தமத்தை விட்டுக்கொடுக்கும் யோசனைகூட அவருக்கு வந்ததே இல்லை. அவர் யெகோவாவுக்கு விசுவாசமாக நடந்ததால் இந்த உலகத்தின் பகையைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது; ஆனாலும், யெகோவாவின் நீதிநெறிகளைவிட்டு அவர் விலகவே இல்லை. தான் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, தன் சீஷர்களையும் இந்த உலகம் வெறுக்கும் என்று அவர் சொன்னார். அதுமுதல், அவருடைய சீஷர்களுக்குப் பல உபத்திரவங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும், கடவுளுடைய மகன் இந்த உலகத்தை ஜெயித்திருப்பதை மனதில் வைத்து அவர்கள் தைரியத்தைக் காட்டியிருக்கிறார்கள்.—யோவா. 15:19; 16:33; 17:16.
6 நாம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க, நம் எஜமானைப் போலவே யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களிலும் சமூகப் பிரச்சினைகளிலும் தலையிடாமல் இருக்க வேண்டும். அதோடு, இந்த உலகத்தில் பரவியிருக்கும் ஒழுக்கச் சீர்குலைவு நம்மைத் தொற்றிக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். யாக்கோபு 1:21-ல் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த அறிவுரையை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும்: “எல்லா விதமான அருவருப்பையும் ஒதுக்கிவிடுங்கள்; கெட்ட குணத்தை சுவடு தெரியாமல் ஒழித்துவிடுங்கள். அதோடு, உங்களை மீட்பதற்கு வல்லமையுள்ள கடவுளுடைய வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.” இந்த அறிவுரையின்படி நடந்தால், தனிப்பட்ட படிப்பு படிப்பதன் மூலமும் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும், நம் மனதிலும் இதயத்திலும் ‘கடவுளுடைய வார்த்தையை . . . பதிய வைப்போம்.’ இந்த உலகம் என்னதான் ஆசை காட்டினாலும், அதற்கு நம் மனதில் கொஞ்சம்கூட இடம்கொடுக்க மாட்டோம். சீஷராகிய யாக்கோபு இப்படி எழுதினார்: “உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.” (யாக். 4:4) அதனால்தான், நாம் யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், இந்த உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டுமென்றும் பைபிள் மிக உறுதியாகச் சொல்கிறது.
7 வெட்கக்கேடான, ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது. “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. இவை பரிசுத்தமான மக்களுக்கு ஏற்றவை அல்ல” என்று அது சொல்கிறது. (எபே. 5:3) அதனால், ஆபாசமான, வெட்கக்கேடான, கீழ்த்தரமான விஷயங்களைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட விஷயங்கள் தெரியாத்தனமாகக்கூட நம்முடைய பேச்சில் நுழைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட யெகோவாவின் தூய்மையான நீதிநெறிகளைக் கடைப்பிடிக்க விரும்புவதை நம்மால் காட்ட முடியும்.
உடல் சுத்தம்
8 கிறிஸ்தவர்கள் ஆன்மீக விஷயங்களிலும் ஒழுக்க விஷயங்களிலும் சுத்தமாக இருப்பதோடு, தங்கள் உடலையும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும்கூட சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். இஸ்ரவேலர்கள் தங்களுடைய முகாமைச் சுத்தமாக வைக்க வேண்டுமென்று பரிசுத்த கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். யெகோவா ‘நம் நடுவில் அருவருப்பான எதையாவது பார்க்காதபடி’ நாமும் சுத்தமாக இருக்க வேண்டும்.—உபா. 23:14.
9 பரிசுத்தத்துக்கும் உடல் சுத்தத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக பைபிள் காட்டுகிறது. உதாரணத்துக்கு, “அன்புக் கண்மணிகளே, . . . உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக. கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக” என்று பவுல் எழுதினார். (2 கொ. 7:1) அதனால், கிறிஸ்தவ ஆண்களும் சரி, பெண்களும் சரி, தவறாமல் குளிப்பதன் மூலமும் துணிமணிகளைத் துவைப்பதன் மூலமும் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சூழ்நிலைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டாலும், பொதுவாக எல்லா இடங்களிலும் தண்ணீரும் சோப்பும் கிடைப்பதால் நம்மையும் நம் பிள்ளைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
10 நம் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களை நாம் ஊழியத்தில் சந்தித்துப் பேசுவதால், நாம் யாரென்று பொதுவாக அவர்களுக்குத் தெரியும். அதனால், நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொண்டால் அதுவே அவர்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கும். குடும்பத்தில் உள்ள எல்லாருமே இந்த விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு முக்கியமாகச் சகோதரர்களுக்கு இருக்கிறது; நாம் எல்லாவற்றையும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வதை மற்றவர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும் என்பதைச் சகோதரர்கள் மறந்துவிடக் கூடாது. ஆன்மீக விஷயத்தில் மட்டுமல்லாமல் இந்த விஷயத்திலும் சகோதரர்கள் தங்கள் குடும்பத்தைத் தலைமைதாங்கி நடத்த வேண்டும். அப்போதுதான், தங்கள் குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவர்களாக இருப்பார்கள். (1 தீ. 3:4, 12) வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு சகோதரிகளுக்கும் இருக்கிறது; முக்கியமாக, வீட்டுக்குள் அவர்கள் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். (தீத். 2:4, 5) பிள்ளைகளும்கூட, பெற்றோர் தரும் பயிற்சியை ஏற்றுக்கொண்டு தங்களையும் தங்கள் அறைகளையும் சுத்தமாக, நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி, எல்லாவற்றையும் சுத்தமாக வைப்பதைக் குடும்பப் பழக்கமாகவே ஆக்கிக்கொள்ள வேண்டும்; இந்தப் பழக்கம், புதிய உலகத்திலும் நமக்குக் கைகொடுக்கும்.
11 இன்று யெகோவாவின் மக்களாகிய நம்மில் நிறைய பேர் கூட்டங்களுக்குப் போக கார், பைக் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். சில ஊர்களில், சொந்த வாகனம் இருந்தால் மட்டும்தான் ஊழியத்துக்குப் போக முடியும். நம் வாகனத்தைச் சுத்தமாகவும் நல்ல நிலையிலும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். நம் வீடும் சரி, வாகனமும் சரி, நாம் யெகோவாவின் பரிசுத்தமான மக்கள் என்பதைக் காட்ட வேண்டும். ஊழியத்துக்கு நாம் பயன்படுத்தும் பையும் பைபிளும்கூட அதைத்தான் காட்ட வேண்டும்.
12 நம் உடையும் அலங்காரமும் கடவுளுடைய நியமங்களுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். நாம் ஒரு உயர் அதிகாரியைப் பார்க்கப் போகும்போது, ஏனோதானோவென்று உடை உடுத்துவோமா? இல்லை. நம் உடைக்கும் தோற்றத்துக்கும் அதிக கவனம் செலுத்துவோம். அப்படியென்றால், யெகோவாவின் சார்பாக ஊழியம் செய்யும்போது அல்லது மேடையில் பேசும்போது இன்னும் எந்தளவு கவனம் செலுத்த வேண்டும்! நம் உடையும் அலங்காரமும் கண்ணியமாக இருந்தால் மட்டும்தான் யெகோவாவுக்கு நாம் செலுத்தும் வணக்கத்தை மற்றவர்கள் மதிப்பார்கள். நம் தோற்றம் அடக்கமில்லாமலும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்காத விதத்திலும் இருக்கவே கூடாது! (மீ. 6:8; 1 கொ. 10:31-33; 1 தீ. 2:9, 10) அதனால், ஊழியத்துக்கோ கூட்டங்களுக்கோ வட்டார மாநாடுகளுக்கோ மண்டல மாநாடுகளுக்கோ போக நாம் தயாராகும்போது, உடல் சுத்தத்தைப் பற்றியும் அடக்கமான தோற்றத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பதை மனதில் வைக்க வேண்டும். ஏனென்றால், நாம் எப்போதுமே யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கவும் அவரை மகிமைப்படுத்தவும் விரும்புகிறோம்.
நாம் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்திருப்பதால், நம் பேச்சும் நடத்தையும் எப்போதுமே அவருக்கு மகிமை சேர்க்கும்படி பார்த்துக்கொள்வது நம் கடமை
13 யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தையோ கிளை அலுவலகத்தையோ சுற்றிப்பார்க்கப் போகும்போதும்கூட இதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். பெத்தேல் என்ற பெயரின் அர்த்தம் “கடவுளுடைய வீடு” என்பதை மறந்துவிடாதீர்கள். ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்குப் போகும்போது நம் உடையும் நடத்தையும் எப்படி இருக்குமோ அப்படித்தான் அங்கே போகும்போதும் இருக்க வேண்டும்.
14 பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போதுகூட நம் உடைக்கும் தோற்றத்துக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ‘நான் போட்டிருக்கிற டிரெஸ்னால சந்தர்ப்ப சாட்சி கொடுக்க எனக்கு தயக்கமா இருக்கா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.
தரமான பொழுதுபோக்கு
15 வாழ்க்கையில் சமநிலையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க ஓய்வும் பொழுதுபோக்கும் அவசியம். இயேசு ஒருமுறை தன் சீஷர்களிடம், “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று கூப்பிட்டார். (மாற். 6:31) ஓய்வு எடுப்பதும் நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும், களைப்பையும் சோர்வையும் போக்கி, புத்துணர்ச்சியோடு நம்முடைய அன்றாட வேலைகளைத் தொடர உதவும்.
16 இன்று எத்தனையோ வகையான பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அதனால், கிறிஸ்தவர்கள் கடவுள் தரும் ஞானத்தைப் பயன்படுத்தி சரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொழுதுபோக்கு நமக்குத் தேவைதான்; ஆனால், அதற்கு முதலிடம் கொடுத்துவிடக் கூடாது. “கடைசி நாட்களில்” மக்கள் “கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள் என்ற எச்சரிப்பை பைபிள் தருகிறது. (2 தீ. 3:1, 4) யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறவர்களுக்கு, இன்றுள்ள பெரும்பாலான பொழுதுபோக்குகள் ஒத்துவராது.
17 முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் சுகபோக வாழ்க்கையையும் தரங்கெட்ட பொழுதுபோக்குகளையும் விரும்பினார்கள்; ஆனால், அன்றிருந்த கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட கெட்ட செல்வாக்கை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ரோமர்கள் நடத்திய ஒரு சர்க்கஸில், பார்வையாளர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வன்முறையும் கொலையும் பாலியல் ஒழுக்கக்கேடும் நிஜமாகவே மேடையில் அரங்கேற்றப்பட்டன. மற்றவர்கள் வேதனையில் துடிதுடிப்பதை வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு விளையாட்டாக இருந்தது. ஆனால், அன்றிருந்த கிறிஸ்தவர்கள் அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். இன்றும், பெரும்பாலான பொழுதுபோக்குகளில் அதுபோன்ற அம்சங்களைத்தான் பார்க்க முடிகிறது; அவை மனிதர்களுடைய கீழ்த்தரமான ஆசைகளுக்குத் தீனி போடுகின்றன. அதனால், நாம் ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு ‘அதிக கவனம் செலுத்தி,’ அப்படிப்பட்ட மட்டரகமான பொழுதுபோக்குகளை அடியோடு தவிர்க்க வேண்டும். (எபே. 5:15, 16; சங். 11:5) சிலசமயங்களில், ஒரு பொழுதுபோக்கு நல்லதாக இருந்தாலும், அங்கிருக்கும் சூழல் மோசமாக இருக்கலாம்.—1 பே. 4:1-4.
18 கிறிஸ்தவர்களுக்கு ஏற்ற தரமான பொழுதுபோக்குகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. பைபிள் அடிப்படையில் நம் பிரசுரங்களில் வந்திருக்கும் அறிவுரைகளும் சமநிலையான ஆலோசனைகளும், நல்ல பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.
19 சிலசமயங்களில், ஒரு கிறிஸ்தவர் சபையிலுள்ள சில குடும்பங்களை வீட்டுக்கு அழைக்கலாம். அல்லது, நம் சகோதர சகோதரிகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கோ அழைக்கப்படலாம். (யோவா. 2:2) அங்கு என்ன நடந்தாலும் அதற்குப் பொறுப்பு, அழைத்தவர்தான். அவர் நிறைய பேரைக் கூப்பிடும்போது ரொம்பவே முன்ஜாக்கிரதையோடு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பொதுவாக எல்லாரும் ரொம்ப ரிலாக்ஸாக இருப்பார்கள். அதனால், சிலர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு, குடித்து, அல்லது ஏதாவது ஒரு பெரிய பாவத்தைக்கூடச் செய்து, கிறிஸ்தவ வரம்பை மீறியிருக்கிறார்கள். விவேகமுள்ள கிறிஸ்தவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து, நிகழ்ச்சிக்கு நிறைய பேரைக் கூப்பிடாமல் கொஞ்சம் பேரை மட்டும் கூப்பிட்டிருக்கிறார்கள்; ரொம்ப நேரத்துக்கு நிகழ்ச்சியை நடத்தாமலும் இருந்திருக்கிறார்கள். நாம் மதுபானங்களைப் பரிமாறுவதாக இருந்தால், அளவோடு பரிமாற வேண்டும். (பிலி. 4:5) இப்படிப்பட்ட பார்ட்டிகளை அல்லது நிகழ்ச்சிகளை ஆன்மீகப் புத்துணர்ச்சி தரும் விதத்தில் நடத்துவதே நம் குறிக்கோளாக இருக்கும்போது, உணவும் பானமும் ஒரு பெரிய விஷயமாகத் தெரியாது.
20 உபசரிப்பது ஒரு நல்ல பழக்கம். (1 பே. 4:9) சக கிறிஸ்தவர்களை விருந்துக்கோ, காபி சாப்பிடவோ, பொழுதுபோக்கவோ, பேசி மகிழவோ நம் வீட்டுக்கு அழைக்கும்போது, வசதிவாய்ப்பு இல்லாதவர்களையும் கூப்பிட மறந்துவிடக் கூடாது. (லூக். 14:12-14) நாம் விருந்தாளியாக இருந்தால், மாற்கு 12:31-ல் உள்ள அறிவுரைப்படி நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் காட்டும் அன்புக்கு நன்றி காட்ட நாம் தவறிவிடக் கூடாது.
21 கடவுள் தரும் ஏராளமான பரிசுகளை நினைத்துக் கிறிஸ்தவர்களாகிய நாம் சந்தோஷப்படுகிறோம். ‘சாப்பிட்டு, குடித்து, நம்முடைய கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்கலாம்’ என்பதை நினைத்தும் சந்தோஷப்படுகிறோம். (பிர. 3:12, 13) நாம் ‘எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யும்போது,’ விருந்தாளிகளாக இருந்தாலும் சரி, விருந்து தருபவர்களாக இருந்தாலும் சரி, ஆன்மீகப் புத்துணர்ச்சி கிடைத்ததை நினைத்து மனநிறைவு பெறுவோம்.
பள்ளிப் படிப்பு
22 அடிப்படைக் கல்வியினால் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் பயன் பெறுகிறார்கள். சரளமாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்காக அவர்கள் பள்ளிக்குப் போகிறார்கள். அங்கு கற்றுத்தரப்படும் சில பாடங்கள், ஆன்மீகக் குறிக்கோள்களை அடைய அவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளியில் படிக்கும் காலத்தில், ‘மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினைக்க’ அவர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள்; அதற்காக, ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் தருகிறார்கள்.—பிர. 12:1.
23 நீங்கள் பள்ளிக்குப் போகும் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், மற்ற பிள்ளைகளோடு அநாவசியமாக நெருங்கிப் பழகாதீர்கள். (2 தீ. 3:1, 2) உங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையானவற்றை யெகோவா தந்திருப்பதால், இந்த உலகத்தின் செல்வாக்குகளை உங்களால் தவிர்க்க முடியும். (சங். 23:4; 91:1, 2) அதனால், யெகோவாவின் ஏற்பாடுகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.—சங். 23:5.
24 பள்ளிக்குப் போகும் பெரும்பாலான சாட்சிகள், உலகத்திலிருந்து விலகியிருப்பதற்காக போட்டி விளையாட்டுகள், இசை போன்ற கூடுதல் பயிற்சிகளை (extracurricular activities) தவிர்க்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதை உங்களோடு படிப்பவர்களாலும் உங்கள் ஆசிரியர்களாலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், கடவுளுடைய மனதை சந்தோஷப்படுத்துவதுதான் முக்கியம். அப்படியென்றால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பயன்படுத்தி, போட்டிகளையும் தேசப்பற்றையும் தவிர்க்க நீங்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். (கலா. 5:19, 26) யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிப்பதற்கு, பைபிளின் அடிப்படையில் உங்கள் பெற்றோர் கொடுக்கும் அறிவுரைகளைக் கேளுங்கள். அதோடு, சபையில் உள்ள நல்ல நண்பர்களோடு நெருங்கிப் பழகுங்கள்.
வேலையும் சகவாசமும்
25 குடும்பத் தலைவர்கள்தான் தங்கள் குடும்பத்தாரின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 5:8) ஆனாலும், அவர்கள் கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதால், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். (மத். 6:33; ரோ. 11:13) கடவுள்பக்தியைக் காட்டுவதன் மூலமும், உணவும் உடையும் இருந்தால் போதும் என்று திருப்தியோடு வாழ்வதன் மூலமும், வீண் கவலைகளைத் தவிர்க்கிறார்கள்; அதோடு, பொருளாசை என்ற கண்ணியில் சிக்காமல் இருக்கிறார்கள்.—1 தீ. 6:6-10.
26 வேலைக்குப் போகும் கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். நாம் நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டுமென்றால், கடவுளுடைய சட்டத்துக்கோ அரசாங்க சட்டத்துக்கோ விரோதமான எதையும் செய்யக் கூடாது. (ரோ. 13:1, 2; 1 கொ. 6:9, 10) கெட்ட சகவாசம் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதையும் நாம் எப்போதும் ஞாபகம் வைக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் படைவீரர்களாக இருப்பதால், கடவுளுடைய சட்டதிட்டங்களை மீற வைக்கிற... கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுக்கத் தூண்டுகிற... அல்லது கடவுளோடு இருக்கும் பந்தத்தை இழக்கச் செய்கிற... தொழில்களில் அல்லது வியாபாரங்களில் ஈடுபடக் கூடாது. (ஏசா. 2:4; 2 தீ. 2:3, 4) கடவுளுடைய மத எதிரியான ‘மகா பாபிலோனோடு’ எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது.—வெளி. 18:2, 4; 2 கொ. 6:14-17.
27 நாம் கடவுளுடைய நீதிநெறிகளைக் கடைப்பிடித்தால், கூட்டங்களுக்காக ஒன்றுகூடிவரும் சந்தர்ப்பங்களை வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கவோ சுயநலமான மற்ற காரணங்களுக்கோ பயன்படுத்த மாட்டோம். ராஜ்ய மன்றங்களிலும் மாநாடுகளிலும் நாம் கூடிவருவதற்கு முக்கியக் காரணமே யெகோவாவை வணங்குவதற்குத்தான். அங்கே அவர் தரும் ஆன்மீக விருந்தில் கலந்துகொண்டு, ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம்.’ (ரோ. 1:11, 12; எபி. 10:24, 25) அதனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை ஆன்மீக விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கிறிஸ்தவ ஒற்றுமை
28 யெகோவாவின் மக்கள் அவருடைய நீதிநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால், அவருடைய ‘சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்ளவும் சமாதானமாக வாழவும்’ வேண்டும். (எபே. 4:1-3) அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்குப் பிரியமாக நடப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு நன்மை செய்ய முயற்சி செய்கிறார்கள். (1 தெ. 5:15) உங்கள் சபையில் உள்ளவர்களும் இப்படிச் செய்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். நம்முடைய இனம், நாடு, சமூகம், பொருளாதார அந்தஸ்து, அல்லது படிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், எல்லாருமே ஒரே நீதிநெறிகளைத்தான் பின்பற்றுகிறோம். இது யெகோவாவின் மக்களுக்கே இருக்கும் ஒரு விசேஷம்! இதை வெளியாட்கள்கூடக் கவனிக்கிறார்கள்.—1 பே. 2:12.
29 யெகோவாவின் மக்களுடைய ஒற்றுமைக்கான இன்னொரு காரணத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒரே நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையைப் பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேபோல், ஒரே உடலும் ஒரே சக்தியும் உண்டு. ஒரே எஜமானும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு. எல்லாருக்கும் ஒரே கடவுளும் தகப்பனும் உண்டு. அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமும் செயல்படுகிறவர், எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவர்.” (எபே. 4:4-6) அதனால், நாம் எல்லாருமே யெகோவாவை உன்னதப் பேரரசராக ஏற்றுக்கொண்டு, பைபிள் விஷயங்களை ஒரேபோல் புரிந்துகொள்கிறோம், அவை அடிப்படையான கோட்பாடுகளாக இருந்தாலும் சரி, ஆழமான சத்தியங்களாக இருந்தாலும் சரி! உண்மையில், சத்தியம் என்ற சுத்தமான பாஷையில் யெகோவா தன் மக்களைப் பேச வைத்திருக்கிறார்; இப்படி, அவர்கள் தோளோடு தோள் சேர்ந்து அவருக்குச் சேவை செய்ய உதவியிருக்கிறார்.—செப். 3:9.
30 கிறிஸ்தவ சபையில் இருக்கும் ஒற்றுமையும் சமாதானமும், யெகோவாவின் மக்கள் எல்லாருக்குமே புத்துணர்ச்சி தருகின்றன. “தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்” என்ற வாக்குறுதியை யெகோவா எப்படி நிறைவேற்றியிருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். (மீ. 2:12) யெகோவாவின் நீதிநெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அந்த ஒற்றுமையையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க விரும்புகிறோம்.
31 யெகோவாவின் பரிசுத்தமான சபையின் பாகமாக ஆகும் வாய்ப்பைப் பெற்றவர்கள் உண்மையில் சந்தோஷமானவர்கள்! யெகோவாவின் பெயர் தாங்கிய மக்களாக இருப்பது ஒரு பெரிய பாக்கியம், அதற்காக எந்தத் தியாகத்தைச் செய்வதும் தகுந்ததுதான். யெகோவாவோடு இருக்கும் அருமையான பந்தத்தைக் கட்டிக்காக்க நாம் முயற்சி செய்கிறோம்; அவருடைய நீதிநெறிகளைக் கடைப்பிடிக்கவும் அவற்றை மற்றவர்களுக்குச் சிபாரிசு செய்யவும்கூட ஊக்கமாக முயற்சி செய்கிறோம்.—2 கொ. 3:18.