யெகோவா துயரத்தின் மத்தியில் நம்பிக்கை அளிக்கிறார் புலம்பல் 1:1-5:22
வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்:
யெகோவா துயரத்தின் மத்தியிலும் “நம்பிக்கையின் தேவனாக” இருக்கிறார். (ரோமர் 15:13) யெகோவாவின் தீர்க்கதரிசியும் சாட்சியுமான எரேமியாவால் பொ.ச.மு. 607-ல் எழுதிமுடிக்கப்பட்ட இந்தப் புலம்பல் புத்தகத்தில் இந்த ஒரு குறிப்பு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
எருசலேமின் இக்கட்டான நிலை
பாவம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில்லை. இதோ! பாவம் செய்த எருசலேம், ஒரு காலத்தில் யூதாவின் ஆரவாரம் மிகுந்த தலைநகர் இப்பொழுது தனிமையாக அமர்ந்திருக்கிறாள். யூதா தாமே அழுதுகொண்டிருக்கும், விதவையாகிவிட்ட ராஜ நாயகி போலிருக்கிறாள், ஏனென்றால் அவள் பாழாக்கப்பட்ட நிலையிலிருக்கிறாள். எகிப்து போன்ற அவளுடைய “சிநேகிதர்” பொ.ச.மு. 607-ல் பாபிலோனிய ஆக்ரமிப்பிலிருந்து அவளைப் பாதுகாக்க முடியவில்லை. பண்டிகைகளைக் கொண்டாட மக்கள் தொடர்ந்து சீயோனுக்குத் திரள் திரளாகச் செல்வதில்லை. அவளுடைய பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள், அவளுடைய வீழ்ச்சி கண்டு விரோதிகள் எள்ளி நகைக்கிறார்கள். அசுத்தமான அந்நியர்கள் ஆலயத்தை அசுத்த நடத்தையால் அசுசிப்படுத்தியிருக்கின்றனர். உணவுக்காக அவளுடைய மக்கள் விலையுயர்ந்தப் பொருட்களைக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. இதெல்லாமே அவளுடைய பாவத்தின் பலன்கள்!—1:1-11.
தவறிழைப்பவர்களைத் தண்டிப்பதில் யெகோவா நீதியுள்ளவர். எருசலேம் தானே பேசுகையில் இதை ஒப்புக்கொள்கிறாள். கடவுள் தனக்கு ஏற்படுத்தியிருக்கும் வேதனைக்குச் சமமான துக்கமும் உண்டோ என்று கேட்கிறாள். நகரத்தின் பாவங்கள் ஒரு நுகமாக ஆனது, மற்றும் கடவுள் அவளைத் திராட்சப் பழத்தை “ஆலையில்” மிதிக்கிறது போல மிதித்தபோது இரத்தம் திராட்சப் பழரசம் போன்று பாய்ந்தது. துக்கத்தினால் சீயோன் தன் கைகளை விரித்து மன்றாடினாள், ஆனால் ஆறுதலளிக்கும் எவரும் காணப்படவில்லை. கலகத்தனமான எருசலேமைத் தண்டிப்பதில் யெகோவா நீதியை நிறைவேற்றினார். அவளுடைய களிகூரும் பகைவர்களிடமும் அவ்விதமே கடுமையாகச் செயல்படுவாராக.—1:12-22.
“யெகோவாவுடைய கோபம்”
பாவத்தைக் கண்டனம் செய்யாத உத்தரவாதத்திலுள்ள ஆட்கள் குற்றமுடையவர்களாயிருக்கிறார்கள். கடவுள் எருசலேமை “வானத்திலிருந்து தரையிலே” தள்ளி, அவளும் தமது “பாதபீடமாகிய” ஆலயமும் அழிக்கப்பட அனுமதித்தார். (சங்கீதம் 132:7) இப்படியாக அவர் யூதா “ராஜ்யத்தை . . . பரிசுத்தக் குலைச்சலாக்கினார்.” ஒரு சாதாரண கூடாரத்தைப் போன்று ஆலயம் பகைவர்களால் அழிக்கப்பட்டது. அவர்களுடைய வெற்றி முழக்கம் பண்டிகைக்கால ஆர்ப்பரிப்பு போன்று இருந்தது. செத்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் தங்கள் தாயிடம் உணவுக்காக் கெஞ்சிக் கதறுகிறார்கள். ஆனால் பழிக்குரியவர்கள் யார்? பொய்த் தீர்க்கதரிசிகள் எருசலேமின் பாவத்தைக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக மோசம் போக்குகிற அறிவிப்புகளைச் செய்தனர். (எரேமியா 14:13) ஜெபம் பொருத்தமே, ஏனென்றால் ‘யெகோவாவின் இந்தக் கோபத்தின் நாளில்’ அநேகர் மாண்டனர்!—2:1-22.
யெகோவாவின் இரக்கம் நிலைக்கிறது
நாம் யெகோவாவில் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சார்பில் பேசுகிறவனாய் எரேமியா இந்தக் குறிப்பைக் கூறுகிறான். கடவுள் அவனுடைய ஜெபத்துக்கு வழியை அடைத்துப் போடுகிறார். அவன் தன்னுடைய பகைவர்கள் எள்ளிப்பாடும் பாடல்களின் பொருளாகிவிட்டான். அவனுடைய நம்பிக்கை, அல்லது “யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கை” அழிந்துவிட்டது போலிருந்தது. ஆனால் அவன் “நம்பிக்கை கொண்டிருப்பான்” ஏனென்றால் “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு . . . யெகோவா நல்லவர்.”—3:1-27.
உண்மையான மனந்திரும்புதல் தெய்வீக இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்கிறது. இதைக் குறித்து நிச்சயமாயிருந்த எரேமியா, “யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்” என்று துரிதப்படுத்துகிறான். மக்களுடைய பாவங்களினிமித்தம் ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்குக் கோப மேகத்தால் தடை செய்கிறார். ஆனால் எரேமியா, “யெகோவாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன் . . . என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்,” என்று ஜெபித்தான். உண்மைதான், மனந்திரும்பாத விரோதிகள் அழிக்கப்படுவார்கள்.—3:28-66.
“எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்”
வேண்டுமென்றே பாவம் செய்வோமானால் அழிவை நம்மீது நாமே குவித்துக்கொள்கிறோம். யூதாவின் பாவத்தால் “விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்” உடைந்துபோன மதிப்பற்ற மண்பாண்டமாகக் கருதப்படுகின்றர். முற்றுகையின்போது, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பசிபட்டினியால் படிப்படியாக மரிப்பவர்களைவிட மேன்மையானவர்கள். ஆம், கடவுள் “தமது உக்கிர கோபத்தை ஊற்றினார்.” அசுத்தப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் குருடர் போல் அலைந்துகொண்டிருந்தனர், மற்றும் சிதேக்கியா அரசன்—“யெகோவாவால் அபிஷேகம்பண்ணப்பட்டவன்”—பிடிக்கப்பட்டான். இப்பொழுது கடவுள் தம்முடைய கவனத்தைப் பாவமுள்ள ஏதோமிடமாகத் திருப்புவார்.—4:1-22.
துயரத்தின் மத்தியில் யெகோவா ஒருவரே நம்பிக்கை அளிக்கிறார். எரேமியா இதை உணர்ந்து, “யெகோவாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்,” என்று மன்றாடினான். ‘எங்கள் வீடுகள் புறதேசத்தார் வசமாக இருக்கிறது. எங்களுடைய முற்பிதாக்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம், மற்றும் இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.’ என்றாலும் எரேமியா இரக்கம் பெறும் நம்பிக்கையுடன் பின்வருமாறு ஜெபிக்கிறார்: “யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்.”—5:1-22.
எனவே புலம்பல் புத்தகத்திலுள்ள பாடங்களை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்: பாவம் மகிழ்ச்சியைத் தருவதில்லை, பாவிகளைத் தண்டிப்பதில் கடவுள் நீதிபரர், மற்றும் உத்தரவாதத்திலுள்ளவர்கள் தவறிழைத்தலைக் கண்டனம் செய்யாவிட்டால் குற்றமுள்ளவர்களாயிருக்கிறார்கள். நாம் பொறுமையோடே யெகோவாவில் காத்திருக்க வேண்டும். உண்மையான மனந்திரும்புதலிருந்தால் தெய்வீக இரக்கத்தைப் பெறமுடியும் என்பதில் உறுதியாயிருக்க வேண்டும், ஆனால் வேண்டுமென்றே பாவம் செய்வோமானால் அழிவை நமக்கு நாமே வருவித்துக்கொள்கிறோம். அதே சமயத்தில், யெகோவா ஒருவரே துயரத்தின் மத்தியில் நம்பிக்கையளிக்கிறார் என்றும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தப் புத்தகம் நம்மை உறுதியாக நம்பச் செய்கிறது. (w88 9⁄1)
[பக்கம் 31-ன் பெட்டி]