கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவை பண்புள்ள நடத்தை
“கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—எபே. 5:1.
1, 2. (அ) பண்புள்ள நடத்தை ஏன் முக்கியம்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படும்?
‘பண்புள்ள நடத்தைக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பண்போடு நடந்துகொள்ள வேண்டும். அதற்குக் கைமேல் பலன் கிடைக்கும்.’ இதைச் சொன்னவர் சூ ஃபாக்ஸ் என்ற எழுத்தாளர். மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துகிற பழக்கம் நமக்கு இருந்தால், மனஸ்தாபங்கள் பெருமளவு குறையும், ஏன் மறைந்துகூடப் போகும். ஆனால், மற்றவர்களிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளும்போது சண்டை சச்சரவும், மனக்கசப்பும், வருத்தமும்தான் மிஞ்சும்.
2 கிறிஸ்தவ சபையிலுள்ள நாம் எல்லாருமே பொதுவாகப் பண்புள்ளவர்களாய் நடந்துகொள்கிறோம். என்றாலும், இன்றைய உலகில் பரவலாகக் காணப்படும் பண்பற்ற நடத்தை நம்மைத் தொற்றிக்கொள்ளாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது சம்பந்தமான பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது, பண்பற்ற நடத்தை நம்மைத் தொற்றிக்கொள்ளாதபடி எப்படிப் பாதுகாக்கும், உண்மை வணக்கத்திடம் மக்களை எப்படிக் கவர்ந்திழுக்கும் என இப்போது சிந்திப்போம். நன்னடத்தையில் உட்பட்டிருக்கிற விஷயங்களைப் புரிந்துகொள்ள யெகோவாவின் முன்மாதிரியையும், அவரது மகனின் முன்மாதிரியையும் எடுத்துக்கொள்வோம்.
யெகோவா, இயேசு—பண்புள்ள நடத்தைக்கு முன்மாதிரிகள்
3. பிறரை மதிப்பு மரியாதையோடு நடத்துவதில் யெகோவா எப்படிப்பட்ட முன்மாதிரியை வைக்கிறார்?
3 பிறரை மதிப்பு மரியாதையோடு நடத்துவதில் யெகோவா பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்கிறார். சர்வலோகப் பேரரசராக அவர் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும், மனிதர்களை மிகுந்த தயவோடும் மரியாதையோடும் நடத்துகிறார். ஆபிரகாமிடமும் மோசேயிடமும் பேசியபோது, “தயவுசெய்து” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய வார்த்தையை அவர் பயன்படுத்தினார். (ஆதி. 13:14, NW; யாத். 4:6, NW) தம்முடைய ஊழியர்கள் தவறு செய்கிறபோது, அவர்களிடம் ‘மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ளவராக’ நடந்துகொள்கிறார். (சங். 86:15) மற்றவர்கள் தங்களுடைய எதிர்பார்ப்பின்படி நடக்காதபோது கோபத்தில் வெடிக்கிற ஆட்களுக்கும் யெகோவாவுக்கும் எத்தனை வித்தியாசம்!
4. மற்றவர்கள் நம்மிடம் பேசும்போது நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்?
4 மனிதர்கள் தம்மிடம் பேசும்போது யெகோவா செவிகொடுத்துக் கேட்பதிலிருந்தும் அவருடைய பண்புள்ள நடத்தை தெரிகிறது. சோதோம் மக்கள் மீதிருந்த அக்கறையால் ஆபிரகாம் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டபோது, யெகோவா அவருடைய ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். (ஆதி. 18:23-32) தம்முடைய நேரத்தை ஆபிரகாம் வீணடிப்பதாக அவர் நினைக்கவில்லை. தம் ஊழியர்களுடைய ஜெபங்களையும், மனந்திரும்புகிற பாவிகளுடைய கூக்குரலையும் அவர் செவிகொடுத்துக் கேட்கிறார். (சங்கீதம் 51:11, 17-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், மற்றவர்கள் நம்மிடம் பேசும்போது நாமும்கூட யெகோவாவைப் போலவே செவிகொடுத்துக் கேட்க வேண்டும், அல்லவா?
5. இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவது அவர்களோடு நமக்குள்ள உறவை எவ்வாறு மேம்படுத்தும்?
5 இயேசு கிறிஸ்து தம்முடைய தகப்பனிடமிருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொண்டார், அதில் ஒன்று மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவதாகும். சில சமயங்களில், ஊழியத்திற்காக அவர் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் பொறுமையோடும் கருணையோடும் நடந்துகொள்ளத் தவறியதே இல்லை. இயேசு தங்களுக்கு உதவ எப்போதும் மனமுள்ளவராய் இருந்தார் என்பதைத் தொழுநோயாளிகளும், பார்வையற்ற பிச்சைக்காரர்களும், உதவி தேவைப்பட்ட மற்றவர்களும் புரிந்துகொண்டார்கள். இயேசுவைச் சந்திப்பதற்கு அவர்கள் முன்கூட்டியே அனுமதி பெறாவிட்டாலும், அவர்களை அவர் புறக்கணித்துவிடவில்லை. தாம் செய்துகொண்டிருந்த காரியங்களைக்கூட நிறுத்திவிட்டு, வேதனையில் தவித்துக்கொண்டிருந்த நபர்களுக்கு எத்தனையோ முறை உதவி செய்தார். தம்மை விசுவாசித்தவர்கள்மீது பெருமளவு கரிசனை காட்டினார். (மாற். 5:30-34; லூக். 18:35-41) கிறிஸ்தவர்களாகிய நாமும்கூட, கருணை காட்டுகிறவர்களாக, உதவி செய்கிறவர்களாக இருப்பதன் மூலம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். இப்படிப்பட்ட நடத்தை நம்முடைய உறவினர், அக்கம்பக்கத்தார் போன்றோருடைய கண்களில் படாமல்போகாது. அது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும், நமக்கும் சந்தோஷத்தை அளிக்கும்.
6. அன்பு காட்டுவதிலும், சிநேகப்பான்மையோடு நடந்துகொள்வதிலும் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
6 கடவுளுடைய மகனாகிய இயேசு பிறரிடம் பேசும்போது அவர்களுடைய பெயரை உபயோகித்தார், இவ்வாறு அவர்களுக்கு மரியாதை காண்பித்தார். ஆனால், யூத மதத் தலைவர்கள் அப்படி மரியாதை காண்பித்தார்களா? இல்லை. திருச்சட்டத்தை அறியாத பாமர மக்களை “சபிக்கப்பட்டவர்கள்” என்று இகழ்ந்ததோடு, இழிவாகவும் நடத்தினார்கள். (யோவா. 7:49) இயேசுவோ மார்த்தாள், மரியாள், சகேயு போன்றோரிடம் பேசியபோது அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தினார். (லூக். 10:41, 42; 19:5) மற்றவர்களை நாம் எப்படி அழைக்கிறோம் என்பது நம்முடைய கலாச்சாரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்ததாக இருந்தாலும், யெகோவாவின் ஊழியர்களான நாம் மற்றவர்களிடம் சிநேகப்பான்மையோடு நடந்துகொள்ள முயற்சியெடுக்கிறோம்.a அதோடு, ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பார்க்காமல் நம் சக வணக்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும் மதிப்பு மரியாதை கொடுக்கிறோம்.—யாக்கோபு 2:1-4-ஐ வாசியுங்கள்.
7. எல்லா மக்களையும் மதிப்பு மரியாதையோடு நடத்த பைபிள் நியமங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
7 யெகோவாவும் இயேசுவும் எல்லாத் தேசத்தாரையும் இனத்தாரையும் பண்போடு நடத்துவது அந்த மக்களுக்குச் சுயமரியாதையை அளிக்கிறது; அதோடு, முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களைச் சத்தியத்திடம் கவர்ந்திழுக்கிறது. உண்மைதான், நன்னடத்தையில் உட்பட்டிருக்கிற அம்சங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன; எனவே, இந்த விஷயத்தில் நாம் திட்டவட்டமான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக, பைபிள் நியமங்களின் அடிப்படையில் வளைந்து கொடுத்து எல்லா மக்களுக்கும் மரியாதை காட்டுகிறோம். மற்றவர்களை இப்படி மதிப்பு மரியாதையோடு நடத்தும்போது, ஊழியத்தில் நாம் எவ்வாறு அதிகப் பலன்களைப் பெறலாம் என்பதை இப்போது ஆராய்வோம்.
பிறரிடம் வாழ்த்துச் சொல்வது, பேசுவது
8, 9. (அ) எந்தப் பழக்கம் பண்பற்ற பழக்கமாக இருக்கிறது? (ஆ) மற்றவர்களை நடத்தும் விஷயத்தில் நாம் ஏன் மத்தேயு 5:47-ல் உள்ள நியமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்?
8 இன்றைய மக்களுடைய வாழ்க்கை அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது; அதனால், இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கடந்துபோகும்போது, “எப்படி இருக்கிறீர்கள்?” “நன்றாக இருக்கிறீர்களா?” என்று கேட்பதும்கூட அபூர்வமாகிவிட்டது. நெரிசலான பாதையில் நடக்கும்போது போகிற வருகிற ஒவ்வொருவரிடமும் பேச வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும், வேறுபல சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசுவதே நல்லது, விரும்பத்தக்கது. நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா? அல்லது லேசாகக்கூடப் புன்னகைக்காமல், ஓரிரு வார்த்தைகள்கூடப் பேசாமல் அவர்களைக் கடந்துசென்று விடுகிறீர்களா? ஒரு நபர் வேண்டுமென்றே அப்படி நடந்துகொள்ளாவிட்டாலும், அது நல்ல பழக்கம் அல்ல.
9 இயேசு இந்த நினைப்பூட்டுதலை நமக்கு அளித்தார்: “உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொல்கிறீர்கள் என்றால், அதில் என்ன விசேஷம்? உலகத்தாரும் அப்படித்தானே செய்கிறார்கள்?” (மத். 5:47) இதுசம்பந்தமாக, டானல்ட் வைஸ் என்ற ஆலோசகர் இவ்வாறு எழுதினார்: “தங்களை யாராவது பார்த்தும் பார்க்காததுபோல் போகும்போது மக்கள் புண்பட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு ஓர் எளிய வழி: மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள், அவர்களிடம் பேசுங்கள்.” மற்றவர்களோடு ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கிற குணத்தையும் அக்கறையற்ற மனப்பான்மையையும் நாம் ஓரங்கட்டிவிட்டாலே போதும், நல்ல பலன்களைப் பெறுவோம்.
10. ஊழியத்தில் நல்ல பலன்களைப் பெற நன்னடத்தை நமக்கு எப்படி உதவலாம்? (“புன்னகையோடு பேச ஆரம்பியுங்கள்” என்ற பெட்டியையும் காண்க.)
10 அமெரிக்காவின் வட பகுதியிலுள்ள ஒரு பெரிய நகரில் வசிக்கிற டாம், கேரல் தம்பதியரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாரோடு இனிதாக உரையாடுவதைத் தங்கள் ஊழியத்தின் பாகமாக ஆக்கியிருக்கிறார்கள். இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள்? யாக்கோபு 3:18-ஐக் குறிப்பிட்டு டாம் இவ்வாறு சொல்கிறார்: “அக்கம்பக்கத்தாரோடு நாங்கள் சிநேகப்பான்மையாகவும் சமாதானமாகவும் பழக முயற்சியெடுக்கிறோம். அதற்காக, தங்கள் வீடுகளுக்கு வெளியே நின்றுகொண்டிருப்பவர்களையும், அந்தப் பகுதியில் வேலை செய்துகொண்டிருப்பவர்களையும் அணுகுகிறோம். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வாழ்த்துச் சொல்கிறோம். அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி, அதாவது அவர்களுடைய குழந்தைகள், செல்லப் பிராணிகள், வீடு, வேலை போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம். நாட்கள் செல்லச்செல்ல, அவர்கள் எங்களுடைய நண்பர்களாகி விடுகிறார்கள்.” கேரல் சொல்கிறார்: “இரண்டாவது முறையாக ஒருவரைச் சந்திக்கும்போது, எங்களுடைய பெயர்களைச் சொல்லிவிட்டு, அவர்களுடைய பெயர்களைக் கேட்போம். பிறகு, பிரசங்க வேலையைப் பற்றிச் சொல்வோம், ஆனால் சுருக்கமாகப் பேசி முடித்துவிடுவோம். இப்படிச் செய்வது, அவர்களுக்குச் சாட்சி கொடுக்க உதவுகிறது.” டாமும் கேரலும் தங்கள் அக்கம்பக்கத்தாரின் நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார்கள். ஏராளமானோர் அவர்களிடமிருந்து பைபிள் பிரசுரங்களைப் பெற்றிருக்கிறார்கள், சிலர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வமும் காட்டியிருக்கிறார்கள்.
இக்கட்டான சூழ்நிலைகளில் மதிப்பு மரியாதை காட்டுதல்
11, 12. நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது மக்கள் நம்மிடம் கடுகடுப்பாக நடந்துகொள்வார்களென நாம் ஏன் எதிர்பார்க்கலாம், அச்சமயங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
11 நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது சிலசமயம் ஆட்கள் நம்மிடம் கடுகடுப்பாக நடந்துகொள்கிறார்கள். இதை நாம் எதிர்பார்க்கலாம், ஏனென்றால் கிறிஸ்து இயேசு இதைக் குறித்துத் தம் சீடர்களை எச்சரித்திருந்தார்: “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.” (யோவா. 15:20) நம்மை எதிர்ப்பவர்களைப் போலவே நாமும் பதிலுக்குத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைக்காது. அப்படியானால், நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? “கிறிஸ்துவை எஜமானராகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராயிருங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 3:15) நம்மை இழிவாக நடத்துகிறவர்களிடம் நாம் பண்போடு நடந்துகொள்ளும்போது, அதாவது சாந்தத்தோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளும்போது, அவர்களுடைய மனம் இளகிவிடலாம்.—தீத். 2:7, 8.
12 மக்கள் நம்மிடம் கடுகடுப்பான வார்த்தைகளை வீசும்போது, கடவுளுக்குப் பிரியமான விதத்தில் நடந்துகொள்ள நாம் தயாராக இருப்போமா? இருப்போம். பவுல் இவ்வாறு பரிந்துரைத்தார்: “உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.” (கொலோ. 4:6) குடும்பத்தாரிடமும், சக மாணவர்களிடமும், சக பணியாளர்களிடமும், சபையாரிடமும், அக்கம்பக்கத்தாரிடமும் மதிப்பு மரியாதையோடு நடக்கப் பழகிக்கொண்டோம் என்றால், கேலி கிண்டல்களையும் வசைமொழிகளையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ற விதத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.—ரோமர் 12:17-21-ஐ வாசியுங்கள்.
13. பண்போடு நடந்துகொள்வது நம்மை எதிர்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்யலாம் என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
13 எதிர்ப்பைச் சந்திக்கையில் பண்போடு நடந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். உதாரணத்திற்கு, ஜப்பானிலுள்ள சகோதரர் ஒருவர் ஊழியத்திற்குச் சென்றபோது, ஒரு வீட்டுக்காரரும் அவரது விருந்தாளியும் அவரைக் கேலி செய்தார்கள். அப்போது, அந்தச் சகோதரர் பண்போடு நடந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதே பகுதியில் அவர் ஊழியத்தைத் தொடர்ந்தபோது, சற்றுத் தூரத்திலிருந்து தன்னை அந்த விருந்தாளி கவனித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார். சகோதரர் அவரை அணுகியபோது அந்த விருந்தாளி, “உங்களைப் புண்படுத்துகிற விதத்தில் பேசிவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் அப்படிப் பேசினாலும் நீங்கள் துளிகூடக் கோபப்படாமல் சிரித்த முகமாகவே இருந்தீர்கள். நானும் உங்களை மாதிரியே இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். பின்பு, தன் வேலையை இழந்துவிட்டதாகவும், சமீபத்தில் தன் தாயை மரணத்தில் பறிகொடுத்துவிட்டதாகவும், தனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டதாகவும் சொன்னார். அவரிடம் சகோதரர் பைபிள் படிப்பைப் பற்றிச் சொன்னபோது, அவர் அதற்கு ஒத்துக்கொண்டார். சீக்கிரத்திலேயே, அவருக்கு வாரம் இரண்டு முறை பைபிள் படிப்பு நடத்தப்பட்டது.
பண்புள்ள நடத்தையை வளர்க்கச் சிறந்த வழி
14, 15. பூர்வ காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு பயிற்சி அளித்தார்கள்?
14 பூர்வ காலங்களில் வாழ்ந்த தேவபக்திமிக்க பெற்றோர், பண்பாக நடந்துகொள்ளத் தங்களுடைய பிள்ளைகளுக்கு வீட்டிலேயே பயிற்சி அளித்தார்கள். உதாரணமாக, ஆபிரகாமும் அவருடைய மகனும் ஒருவரையொருவர் எப்படி மரியாதையோடு அழைத்துக்கொண்டார்கள் என்பதை ஆதியாகமம் 22:7-ல் கவனியுங்கள். யோசேப்பின் பெற்றோரும்கூட அவருக்கு நல்ல பயிற்சியை அளித்திருந்தார்கள். அதனால்தான், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், மற்ற கைதிகளிடம் அவர் பண்போடு நடந்துகொண்டார். (ஆதி. 40:8, 14) உயர்ந்த ஸ்தானத்திலுள்ள ஒருவரை எப்படி அழைக்க வேண்டுமென்று அறிந்திருந்தார்; பார்வோனிடம் அவர் பேசிய வார்த்தைகளே அதற்கு அத்தாட்சி.—ஆதி. 41:16, 33, 34.
15 இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் பின்வரும் கட்டளையும் அடங்கியுள்ளது: ‘உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.’ (யாத். 20:12) பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரைக் கனம்பண்ணுவதற்கான ஒரு வழி, அதாவது மதிப்புக் காட்டுவதற்கான ஒரு வழி, வீட்டில் பண்போடு நடந்துகொள்வதாகும். யெப்தாவின் மகள், தன்னுடைய தகப்பன் இக்கட்டான சூழ்நிலையில் செய்த ஒரு பொருத்தனையை நிறைவேற்ற முன்வந்தாள்; இதன் மூலம் நிகரற்ற விதத்தில் அவருக்கு மரியாதை காட்டினாள்.—நியா. 11:35-40.
16-18. (அ) பண்பாக நடந்துகொள்ளப் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி அளிக்கலாம்? (ஆ) அப்படிப் பயிற்சி அளிப்பதால் கிடைக்கும் சில பலன்கள் யாவை?
16 பண்பாக நடந்துகொள்ள நம்முடைய பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பது மிகமிக முக்கியம். பிள்ளைகள் வளர வளர, மற்றவர்களோடு சிநேகப்பான்மையுடன் பழகுவதற்கு அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். விருந்தினர்களை எப்படி வரவேற்பது, தொலைபேசியில் எப்படிப் பேசுவது, மற்றவர்களோடு சேர்ந்து உணவருந்தும்போது எப்படி நடந்துகொள்வது என்றெல்லாம் சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்காகத்தங்களுடைய இருக்கையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும், வயதானோரிடமும் நோயுற்றோரிடமும் ஏன் தயவாக நடந்துகொள்ள வேண்டும், நிறையப் பொருள்களைத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்கிறவர்களுக்கு உதவ ஏன் முன்வர வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். “தயவுசெய்து,” “நன்றி,” “உதவட்டுமா?” “மன்னித்துவிடுங்கள்” போன்ற வார்த்தைகளை உள்ளப்பூர்வமாகச் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
17 நற்பண்புகளைக் காட்டும்படி பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பது கஷ்டமான காரியமல்ல. பெற்றோர் நல்ல முன்மாதிரி வைப்பதே அதற்கான மிகச் சிறந்த வழி. 25 வயதான சகோதரர் கர்ட், தானும் தன் மூன்று சகோதரர்களும் பண்போடு நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டது எப்படியென்று சொல்கிறார்: “அம்மாவும் அப்பாவும் ஒருவரோடு ஒருவர் அன்பாகப் பேசிக்கொள்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்; அதுமட்டுமல்ல, மற்றவர்களைப் பொறுமையோடும் கரிசனையோடும் நடத்துவதைக் கவனித்திருக்கிறோம். ராஜ்ய மன்றத்தில், கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் மற்ற சகோதர சகோதரிகளிடம் பேசுவதற்காக அப்பா என்னையும் கூடவே அழைத்துக்கொண்டு போவார். அவர்களிடம் அப்பா வாழ்த்துச் சொல்வதையும், மரியாதையோடு நடந்துகொள்வதையும் கவனித்திருக்கிறேன். . . . போகப்போக, அவருடைய நல்ல பண்புகள் என்னையும் தொற்றிக்கொண்டன. மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்தும் பழக்கம் எனக்கு இயல்பாகவே வந்துவிட்டது. நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியமல்ல, எப்படி நடந்துகொள்ள விரும்புகிறோம் என்பதே முக்கியம்.”
18 பண்பாக நடந்துகொள்ளப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கலாம்? பிள்ளைகள் நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்வார்கள், மற்றவர்களோடு எப்போதும் சமாதானமாக நடந்துகொள்வார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள அதிகாரிகளோடும் சக பணியாளர்களோடும் பக்குவமாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகள் இப்படி மரியாதையாகவும் பண்பாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளும்போது அவர்களுடைய பெற்றோருக்கு மனமகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் அளிப்பார்கள்.—நீதிமொழிகள் 23:24, 25-ஐ வாசியுங்கள்.
நன்னடத்தை—நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது
19, 20. இனிய பண்புள்ள நம் கடவுளையும் அவருடைய மகனையும் போலவே நடந்துகொள்ள நாம் ஏன் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
19 “அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 5:1) யெகோவாவையும் அவருடைய மகனையும் போலவே நடந்துகொள்ள வேண்டுமானால் இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட சில பைபிள் நியமங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடித்தால், அதிகாரத்திலுள்ள ஒருவரின் தயவைப் பெறுவதற்காகவோ சொந்த ஆதாயத்திற்காகவோ மட்டுமே நற்பண்புகளைக் காட்டுகிறவர்களாய் இருக்க மாட்டோம்.—யூ. 16.
20 சாத்தானுடைய கொடுங்கோல் ஆட்சி வெகு விரைவில் முடியப்போகிறது என்பதால், நன்னடத்தை சம்பந்தமாக யெகோவா வகுத்துள்ள நெறிமுறைகளைச் சிதைத்துப்போட அவன் தீர்மானமாய் இருக்கிறான். ஆனால், அவனுக்குத் தோல்விதான் மிஞ்சும்; உண்மைக் கிறிஸ்தவர்களின் நன்னடத்தையை அவனால் துடைத்தழிக்கவே முடியாது. ஆகையால், இனிய பண்புள்ள நம் கடவுளுடைய முன்மாதிரியையும் அவரது மகனுடைய முன்மாதிரியையும் பின்பற்றுவதற்கு நாம் ஒவ்வொருவருமே தீர்மானமாய் இருப்போமாக. அப்போதுதான், நம்முடைய பேச்சும் நடத்தையும் பண்பற்ற மக்களிடமிருந்து எப்போதும் வித்தியாசப்பட்டதாக இருக்கும். பண்பாக நடந்துகொள்வதில் ஒப்பற்றவராய் விளங்குகிற நம் கடவுளான யெகோவாவுக்கு நாம் புகழ் சேர்ப்போம்; அதோடு, நல்மனமுள்ள ஆட்களை உண்மை வணக்கத்திடம் கவர்ந்திழுப்போம்.
[அடிக்குறிப்பு]
a சில கலாச்சாரங்களில், மக்கள் தங்களைவிட மூத்தவராக இருக்கிறவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள், அந்த நபர்கள் அனுமதித்தால் தவிர! அப்படிப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட வழக்கங்களுக்குக் கிறிஸ்தவர்கள் மதிப்புக் காட்ட வேண்டும்.
நினைவிருக்கிறதா?
• பண்போடு நடந்துகொள்வது சம்பந்தமாக யெகோவாவிடமிருந்தும் அவருடைய மகனிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• மக்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது கிறிஸ்தவர்களான நம்மீது ஏன் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது?
• மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவது ஊழியத்தில் நல்ல பலன்களைப் பெற எப்படி உதவும்?
• பண்பாக நடந்துகொள்ளப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கலாம்?
[பக்கம் 27-ன் பெட்டி]
புன்னகையோடு பேச ஆரம்பியுங்கள்
முன்பின் அறிமுகமில்லாதவரோடு பேச அநேகர் தயங்குகிறார்கள். ஆனால், கடவுள்மீதும் சக மனிதர்கள்மீதும் அன்பு வைத்திருக்கிற யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள்; அதற்காக, ஊக்கமான முயற்சி எடுத்து அவர்களோடு உரையாடக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் முன்னேற உங்களுக்கு எது உதவும்?
பிலிப்பியர் 2:4-ல் கொடுக்கப்பட்டுள்ள நியமம் மிகவும் பிரயோஜனமானது. “உங்களுடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுங்கள்” என அது சொல்கிறது. அந்த வசனத்தை மனதில் வைத்து இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஒருவரை முதன்முதலில் சந்திக்கும்போது அவர் உங்களை யாரோ எவரோ என்று நினைத்துப் பயப்படுவார். அவரது கலக்கத்தை எப்படிப் போக்குவது? அன்போடு புன்னகைத்து, சிநேகப்பான்மையோடு வாழ்த்துச் சொல்வது அவரது கலக்கத்தைப் போக்க உதவும். ஆனால், வேறு விஷயங்களையும் நீங்கள் மனதில் வைக்க வேண்டும்.
நீங்கள் ஒருவரோடு பேச ஆரம்பிக்கும்போது, அவர் ஒருவேளை வேறு எதைப் பற்றியாவது சிந்தித்துக்கொண்டு இருக்கலாம். அச்சமயத்தில் நீங்கள் அவருடைய யோசனைகளில் குறுக்கிட்டிருக்கலாம். அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் மனதில் இருப்பதைக் கலந்துபேச முயற்சி செய்தீர்கள் என்றால், அவருக்குப் பிடிக்காமல்போகலாம். ஆகவே, அவருடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை உங்களால் ஊகிக்க முடியுமென்றால், அதை வைத்தே அவரோடு பேச ஆரம்பிக்கலாம், அல்லவா? சமாரியாவிலிருந்த கிணற்றின் அருகே ஒரு பெண்ணைச் சந்தித்தபோது இயேசு அதைத்தான் செய்தார். (யோவா. 4:7-26) அவளுடைய மனமெல்லாம் தண்ணீர் எடுப்பதிலேயே இருந்ததைப் புரிந்துகொண்ட அவர் அதை அடிப்படையாக வைத்து அவளிடம் பேச்சுக் கொடுத்தார்; பிறகு, சுவாரஸ்யமான ஆன்மீக விஷயங்களைக் கலந்துரையாடத் துவங்கினார்.
[பக்கம் 26-ன் படங்கள்]
மக்களிடம் சிநேகப்பான்மையோடு பழகுவது நன்றாகச் சாட்சி கொடுக்க வழிவகுக்கலாம்
[பக்கம் 28-ன் படம்]
பண்புள்ள நடத்தை எப்போதும் நல்லது