பேச்சிலும் நடத்தையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருங்கள்
1 பேச்சிலும் நடத்தையிலும் ஓர் எடுத்துக்காட்டாக ஆகும்படி தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்தினார். (1 தீ. 4:12, தி.மொ.) நாம்கூட, விசேஷமாக வெளி ஊழியத்தில் பங்கேற்கும்போது, பேச்சிலும் நடத்தையிலும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்; ஏனெனில் அவ்வாறு செய்வதுதானே நாம் சந்திப்போரின் இருதயத்தை எட்டுகிறோமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாய் இருக்கலாம்.
2 மரியாதை, பரிவு, தயவு, கனிவு, சாதுரியம் ஆகியவை உட்பட நல்ல நடைப்பாங்குகளின் (manners) எல்லா அம்சங்களையும் நாம் வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது. இந்தப் பண்புகளைப் பிரதிபலிப்பதன்மூலம், நமது செயல்கள் எவ்வாறு பிறரது உணர்வுகளைப் பாதிக்கின்றன என்று நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். உணவின் சுவையையும் மணத்தையும் கூட்டுவதற்கு உபயோகிக்கப்படும் நறுமணப்பொருட்களுக்கு, வெளி ஊழியத்தில் காட்டும் நல்ல நடைப்பாங்குகள் ஒப்பிடப்படலாம். அவை இன்றி, ஆரோக்கியமான உணவும் சுவையற்று சப்பென்றும், பசியைத் தூண்டாததுமாய் இருக்கும். மற்றவர்களோடு நாம் கொள்ளும் தொடர்புகளில் நல்ல நடைப்பாங்குகளைக் காட்டத் தவறுவதும் இதேபோன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம்.—கொலோ. 4:6.
3 பேச்சில் எடுத்துக்காட்டாக இருங்கள்: நட்பான ஒரு புன்னகையும் அன்புகூர்ந்த ஒரு வாழ்த்துதலும் நற்செய்தியை நாம் அளிக்கும் முறையின் இன்றியமையாத கூறுகளாக இருக்கின்றன. நமது முன்னுரையை அன்புகூருதலோடும் உள்ளார்ந்தத் தன்மையோடும் சுவையூட்டுகையில், வீட்டுக்காரரின் மேல் நாம் உண்மையில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை அவர் அறிந்துகொள்ளுமாறு செய்கிறோம். அவர் பேசும்போது கவனமாக கேளுங்கள், அவரது கருத்துக்கு தகுந்த மதிப்பைக் காட்டுங்கள். நீங்கள் பேசும்போது, சாதுரியத்தோடும் கிருபையோடும் பேசுங்கள்.—அப். 6:8-ஐ ஒப்பிடுக.
4 எப்பொழுதாவது, ஒருவேளை நட்பற்றவராகவும் சண்டைக்காரராகவும்கூட இருக்கும் ஒரு நபரை நாம் சந்திக்கிறோம். நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? பேதுரு நம்மை ‘சாந்தத்தையும் பயபக்தியையும்’ வெளிக்காட்டும் விதத்தில் பேசும்படி துரிதப்படுத்தினார். (1 பே. 3:15; ரோ. 12:17, 18) ஒரு வீட்டுக்காரர் முரட்டுத்தனமாக ராஜ்ய செய்தியைப் புறக்கணிப்பாரேயாகில், நாம் வெறுமனே ‘கால்களில் படிந்த தூசியை உதறிப்போட்டு’ வரவேண்டும் என்று இயேசு கூறினார். (மத். 10:14) அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் வெளிக்காட்டும் எடுத்துக்காட்டான நடைப்பாங்குகள் கடைசியில் அந்த எதிர்ப்பாளரின் இருதயத்தை ஒருவேளை இளகச்செய்யலாம்.
5 நடத்தையில் எடுத்துக்காட்டாக இருங்கள்: சந்தடியுள்ள தெருக்களிலும், பொதுவிடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், நாம் கரிசனையுள்ளவர்களாகவும், ஒருபோதும் சப்தமாகவோ விடாப்பிடியாகவோ இல்லாதவர்களாகவும், கடந்துசெல்கிறவர்களுக்கு இடைஞ்சலில்லாதவர்களாகவும் இருப்பதைத் தேவைப்படுத்துகிறது. அக்கறைகாட்டும் நபர்களின் வீடுகளில் நாம் இருக்கையில் அவர்களது விருந்தோம்பலுக்காக மதித்துணருதலைக் காட்டி, பொருத்தமான நற்பண்பைக் காத்துக்கொள்ளவும் கிருபையுள்ள விருந்தினர்களாக நம்மை நடத்திக்கொள்ளவும் வேண்டும். நம்மோடு உடன் வரும் எந்தப் பிள்ளையும் வீட்டுக்காரருக்கும் அவரது உடைமைக்கும் மதிப்பைக் காட்டவேண்டும்; நடைப்பாங்குடன் நடந்துகொள்ள வேண்டும், பேசும்போது நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஒருவேளை பிள்ளைகள் அடங்காதவர்களாக இருப்பார்களேயாகில், அது பாதகமான ஓர் எண்ணத்தை விட்டுவரும்.—நீதி. 29:15.
6 நம்முடைய தனிப்பட்ட தோற்றம் நாம் கடவுளுடைய வார்த்தையின் ஊழியர்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும். நம் உடையும் சிகையலங்காரமும் அழுக்காக தலைவிரிகோலமாகவோ அல்லது பகட்டாக மிதமிஞ்சியதாகவோ இருக்கக்கூடாது. நம் தோற்றமானது எப்போதும் சுவிசேஷத்திற்குப் பாத்திரமாக இருக்க வேண்டும். (ஒப்பிடுக: பிலிப்பியர் 1:27.) நமது தோற்றத்திற்கும் சாதனத்திற்கும் கூர்ந்த கவனத்தைச் செலுத்துவதன்மூலம் மற்றவர்கள் இடறிவிழுவதற்கோ நமது ஊழியத்தில் குறை கண்டுபிடிப்பதற்கோ ஒரு காரணத்தையும் கொடுக்கமாட்டோம். (2 கொ. 6:3, 4) நமது எடுத்துக்காட்டான பேச்சும் நடத்தையும் ராஜ்ய செய்திக்கு ஓர் இனிமையான பண்பைக் கூட்டி, யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவருகின்றன.—1 பே. 2:12.