உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 4/15 பக். 28-30
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • இந்த மதங்களிடம் விடை இருக்கிறதா?
    விழித்தெழு!—1993
  • கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?
    விழித்தெழு!—1995
  • மனசாட்சிக்குச் செவிகொடுத்துச் செயல்படுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 4/15 பக். 28-30

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகளில் சிலருக்கு மத கட்டிடங்களில் அல்லது அவற்றுக்குச் சொந்தமானவற்றில் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வேலையைப் பற்றிய வேதப்பூர்வ கருத்து என்ன?

1 தீமோத்தேயு 5:8-ல், ஒருவர் தன் குடும்பத்தாருக்குத் தேவையான பொருளாதார உதவியை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் அறிவுறுத்தப்படுகிறது. அதை உள்ளப்பூர்வமாய் செய்ய விரும்புகிற கிறிஸ்தவர்கள், இந்தக் கேள்வியை எதிர்ப்படலாம். கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், எந்தவித உலகப்பிரகாரமான வேலையாக இருந்தாலும், அதை அவர்கள் ஏற்பது நியாயமாகாது. கடவுளுடைய சித்தத்தைத் தெரிவிக்கும் மற்ற குறிப்புகளுக்கு கவனம் செலுத்த வேண்டியதை கிறிஸ்தவர்கள் மதித்துணருகிறார்கள். உதாரணமாக, தன் குடும்பத்தை ஆதரிக்க வேண்டுமே என்பதற்காக ஒருவர், பைபிளுக்கு முரணாக ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, அல்லது கொலை செய்து பணம் சம்பாதிப்பது நியாயமாகாது. (ஒப்பிடுக: ஆதியாகமம் 39:4-9; ஏசாயா 2:4; யோவான் 17:14, 16.) பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனைவிட்டு வெளியேறும்படியான கட்டளைக்கு இசைவாக கிறிஸ்தவர்கள் நடப்பதும் முக்கியம்.—வெளிப்படுத்துதல் 18:4, 5.

வேலை சம்பந்தமாக உலகமெங்கும் பல சூழ்நிலைகளை கடவுளுடைய ஊழியர்கள் எதிர்ப்படுகிறார்கள். சாத்தியமான எல்லாவற்றையும் வரிசையாக குறிப்பிட்டு, இம்மியும் பிசகக்கூடாது என சட்டதிட்டங்களை ஏற்படுத்த முயற்சி செய்வது அர்த்தமற்றதாகவும் எங்கள் அதிகாரத்திற்கு மிஞ்சியதாகவும் இருக்கும். (2 கொரிந்தியர் 1:24) எனினும், வேலை சம்பந்தமாக தங்கள் தனிப்பட்ட தீர்மானங்களைச் செய்கையில் கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்த அம்சங்கள், ஜூலை 15, 1982-ன் ஆங்கில காவற்கோபுரத்தில், கடவுள் கொடுத்த நம் மனசாட்சியிலிருந்து நன்மையடைதல் பற்றிய ஒரு கட்டுரையில் சுருக்கமாய்க் குறிப்பிடப்பட்டன. ஒரு கட்டத்திற்குள், இரண்டு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டு, பின்பு உதவியான மற்ற குறிப்புகள் வரிசையாக கொடுக்கப்பட்டன.

முதல் முக்கிய கேள்வி: உலகப்பிரகாரமான வேலையையே பைபிள் கண்டனம் செய்கிறதா? இதன்பேரில் அந்தக் காவற்கோபுரம் இவ்வாறு பதிலளித்தது: திருடுவதையும், இரத்தத்தை துஷ்பிரயோகம் செய்வதையும், உருவ வழிபாட்டையும் பைபிள் கண்டனம் செய்கிறது. இது போன்ற, கடவுள் அங்கீகரிக்காத செயல்களை நேரடியாக முன்னேற்றுவிக்கும் உலகப்பிரகாரமான வேலையை ஒரு கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது கேள்வி: இந்த வேலையைச் செய்வது, கண்டனம் செய்யப்பட்ட செயலுக்கு ஒருவரை பங்காளியாக்குமா? ஆம், நிச்சயமாகவே, சூதாட்ட மறைவிடத்திலோ, கருச்சிதைவை நடப்பிக்கும் மருத்துவமனையிலோ, விபச்சார விடுதியிலோ வேலைசெய்கிற ஒருவர், வேதவசனத்திற்கு மாறான ஒரு நடவடிக்கைக்குப் பங்காளியாகிறார். தரையை சுத்தம் செய்தல் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தல் மட்டுமே அவருடைய வேலையாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிற ஒரு செயலுக்கு கைகொடுப்பவராக இருப்பார்.

வேலை சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் எடுத்த கிறிஸ்தவர்கள் பலர், இந்தக் கேள்விகளை மட்டுமே ஆராய்ந்தது, தாங்கள் சொந்தத் தீர்மானம் எடுக்க உதவியதாக கண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, உண்மை வணக்கத்தார் ஒருவர், பொய்மத அமைப்பு ஒன்றில், அதாவது சர்ச்சுக்காகவோ சர்ச்சிலோ ஏன் வேலைசெய்ய மாட்டார் என்பதை அந்த இரண்டு கேள்விகளிலிருந்து ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறது. வெளிப்படுத்துதல் 18:4-ல் (தி.மொ.) இந்தக் கட்டளை கொடுக்கப்படுகிறது: “என் ஜனமே, அவளை விட்டு வெளியே வாருங்கள், அவள் பாவங்களில் நீங்கள் பங்காளிகளாக வேண்டாம்.” பொய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கும் ஒரு மதத்தில் நிரந்தரமாக ஒருவர் வேலை செய்தால், அவர் மகா பாபிலோனின் செயல்களிலும் பாவங்களிலும் பங்குள்ளவராகிறார். அவர் தோட்ட வேலை செய்பவராகவோ, காவலராகவோ, பழுதுபார்ப்பவராகவோ, கணக்கராகவோ இருந்தாலும்சரி, அவருடைய வேலை உண்மை மதத்தோடு முரண்படுகிற வணக்கத்தையே முன்னேற்றுவிக்கும். மேலும், அங்கு வேலை செய்வதால் இவர், சர்ச்சை அழகுபடுத்துவதற்கு, அதை பராமரிப்பதற்கு, அல்லது அதன் மத சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கு பாடுபடுவதை மற்றவர்கள் காணும்போது, அவரும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்தான் என்றே நினைப்பர்.

எனினும், ஒரு சர்ச்சில் அல்லது மத அமைப்பில் நிரந்தரமாக வேலை செய்யாத ஒருவரைப் பற்றியதென்ன? சர்ச்சின் அடித்தளத்தில் லீக்காகும் தண்ணீர்க் குழாயைப் பழுதுபார்ப்பது போன்ற அவசர வேலைக்காக மாத்திரமே ஒருவர் ஒருவேளை அழைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அது, சர்ச் கூரையில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதற்கோ மின்காப்பிடுவதற்கோ கான்ட்ராக்ட் எடுத்து செய்வதிலிருந்து வேறுபடும் அல்லவா?

மறுபடியுமாக, உட்பட்டுள்ள பற்பல சூழ்நிலைகளை எண்ணிப்பார்க்கலாம். ஆகையால் அந்தக் காவற்கோபுரம் குறிப்பிட்டுள்ள கூடுதலான ஐந்து குறிப்புகளை நாம் மறுபார்வை செய்யலாம்:

1. அந்த வேலை வெறுமனே சாதாரண சேவையாக, வேதப்பூர்வமாய் ஆட்சேபணைக்கு இடமளிக்காததாய் இருக்கிறதா? தபால்காரரை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கடிதங்களைப் பட்டுவாடா செய்து வந்த பகுதியில், ஒரு சர்ச்சோ அல்லது கருச்சிதைவு மருத்துவமனையோ இருந்தால், கண்டனம் செய்யப்பட்ட செயலை அவர் முன்னேற்றுவித்தார் என்று அர்த்தப்படாது. சர்ச் அல்லது கருச்சிதைவு மருத்துவமனை உட்பட, எல்லா கட்டிடங்களின் சன்னல்கள் வழியாகவும் கடவுள் அருளும் பிரகாசிக்கிற சூரிய ஒளி பிரவேசிக்கின்றதே. (அப்போஸ்தலர் 14:16, 17) தபால்காரராக இருக்கும் ஒரு கிறிஸ்தவர், சாதாரண ஒரு சேவையையே நாள்தோறும் எல்லாருக்கும் செய்வதாக தீர்மானிக்கலாம். சர்ச்சுக்குள் தண்ணீர் வழிந்தோடுவதை நிறுத்துவதற்கு அழைக்கப்பட்ட நீர்க்குழாயை பழுதுபார்ப்பவர், அல்லது சர்ச் ஆராதனையின்போது மயங்கி விழுந்த ஒருவரை கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ் வண்டிக்காரர் போன்றே அவசர உதவிக்கு வருகிற ஒரு சகோதரனின் செயலும் இருக்கலாம். இதை அவர் தற்செயலாகச் செய்ய நேரிடும் சாதாரண உதவியாக கருதலாம்.

2. செய்யும் செயலின்மீது ஒருவருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறது? கிறிஸ்தவராக இருக்கும் ஒரு கடை சொந்தக்காரர், விக்கிரகங்களை, ஆவிக்கொள்கை சம்பந்தப்பட்ட தாயத்துகளை, சிகரெட்டுகளை அல்லது இரத்தம் நீக்கப்படாத பதார்த்தங்களை வாங்கி விற்பதற்குச் சம்மதிக்கமாட்டார். கடையின் சொந்தக்காரராகையால் அதற்கு உரிமை அவருக்கு இருக்கிறது. சிகரெட்டுகளையோ விக்கிரகங்களையோ விற்று இலாபம் சம்பாதிக்கும்படி ஆட்கள் அவரை ஒருவேளை வற்புறுத்தலாம். ஆனால் அவர், தன் பைபிள் நம்பிக்கைகளுக்கு ஏற்பவே செயல்படுவார். வேறொரு சூழ்நிலையில், உணவுப்பொருட்கள் விற்பனை அங்காடியில் வேலை செய்யும் ஒரு கிறிஸ்தவர், கேஷியராகவோ, தரையை பாலிஷ் செய்பவராகவோ அல்லது கணக்கராகவோ இருக்கலாம். என்ன பொருட்கள் வாங்கி விற்கப்படுகின்றன என்பவற்றில் அவருக்கு துளியும் அதிகாரம் இல்லை. சிகரெட்டுகள், மத கொண்டாட்டங்களுக்கான பொருட்கள் போன்று தனக்கு விருப்பமில்லாத சில பொருட்கள் இருந்தாலும், அவை அவர் பொறுப்பில் இல்லை. a (ஒப்பிடுக: லூக்கா 7:8; 17:7, 8.) இது அடுத்தக் குறிப்போடு சம்பந்தப்படுகிறது.

3. ஒருவர் எந்த அளவுக்கு உட்படுகிறார்? கடையைப் பற்றிய அந்த உதாரணத்தை நாம் திரும்ப எடுத்துக்கொள்வோம். கேஷியராகவோ அல்லது ஷெல்ஃப்களில் பொருட்களை அடுக்கி வைப்பவராகவோ வேலை செய்யும் ஒருவர், சிகரெட்டுகளை அல்லது மத பொருட்களை எப்போதாவது கையாள நேரிடலாம்; அது அவருடைய வேலையின் பாகமாகவே இருக்கிறது. ஆனால் அதே கடையில் புகையிலை கெளண்டரில் வேலைசெய்பவரோடு ஒப்பிட எவ்வளவு மாறுபட்டதாக இது இருக்கிறது! நாள்தோறும், அவருடைய வேலையெல்லாம் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு நேர்மாறான ஒன்றில் கவனம் செலுத்துவதை உட்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 7:1) வேலை சம்பந்தப்பட்ட கேள்விகளை சிந்திக்கையில் எந்தளவாக உட்படுகிறது அல்லது எந்தளவு நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்பதை மதிப்பிட வேண்டியது ஏன் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

4. சம்பளம் எங்கிருந்து வருகிறது அல்லது வேலை எங்கு செய்யப்படுகிறது? இரண்டு சூழ்நிலைமைகளைக் கவனியுங்கள். சமுதாயத்தில் தன் அந்தஸ்தை உயர்த்துவதற்கு சுற்றுப்புறத்திலுள்ள வீதிகளைச் சுத்தம்செய்ய ஓர் ஆளை நியமித்து பணம் கொடுக்க ஒரு கருச்சிதைவு மருத்துவமனை முன்வருகிறது. அவனுக்கு சம்பளத்தை கருச்சிதைவு மருத்துவமனை கொடுக்கும், ஆனால் அவன் அங்கு வேலை செய்கிறதுமில்லை அந்த மருத்துவமனையில் அவன் காணப்படுவதுமில்லை. மாறாக, அவனுக்குச் சம்பளம் கொடுப்பது யாராக இருந்தாலும் வேதவசனங்களோடு முரண்படாத பொதுவேலையை அவன் செய்வதையே அவர்கள் கவனிக்கிறார்கள். இப்போது ஒரு வேறுபட்ட சூழ்நிலை. விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஒரு நாட்டில், பாலுறவால் கடத்தப்படும் நோய்கள் பரவுவதைக் குறைக்கும் நோக்கத்தோடு உடல் பரிசோதனைகள் நடத்த விபச்சார விடுதியில் வேலைசெய்யும்படி பொது சுகாதார நிறுவனம் ஒரு நர்ஸுக்குச் சம்பளம் கொடுக்கிறது. பொது சுகாதார நிறுவனம் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறபோதிலும், விபச்சார விடுதிகளிலேயே முழுக்க முழுக்க அவர்கள் வேலை செய்ய வேண்டி உள்ளது. ஒழுக்கக்கேட்டைப் பாதுகாப்பானதாகவும் அதிகப்படியாய் ஏற்கத்தக்கதாகவும் அங்கு அவர்கள் செய்து வருகிறார்கள். ஒருவருடைய வேலைக்கு யார் சம்பளம் தருவது என்பதற்கும் வேலை செய்யும் இடம் எத்தகையது என்பதற்கும் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இந்த உதாரணங்கள் விளக்கம் அளிக்கின்றன.

5. அந்த வேலையால் என்ன பயன், அது ஒருவருடைய சொந்த மனசாட்சியை வேதனைப்படுத்துமா அல்லது மற்றவர்களை இடறலடையச் செய்யுமா? நம்முடைய மனசாட்சிக்கும் மற்றவர்களுடைய மனசாட்சிக்கும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு வேலை (எங்கு செய்யப்படுகிறது, எங்கிருந்து சம்பளம் வருகிறது உட்பட), பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு ஏற்கத்தக்கதாக தோன்றினாலும்கூட, அது தன் சொந்த மனசாட்சியை உறுத்துவதாக ஒருவர் நினைக்கலாம். சிறந்த முன்மாதிரியாய் இருந்த அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று திடநம்பிக்கையாயிருக்கிறோம்.” (எபிரேயர் 13:18, தி.மொ.) நம்மை மனசங்கடத்துக்குள்ளாக்கும் வேலையை தவிர்க்க வேண்டும்; எனினும் ஆளுக்கு ஆள் மனசாட்சி வேறுபடுவதால் மற்றவர்களில் குறைகாண்போராகவும் நாம் இருக்கக்கூடாது. சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவருக்கு தான் செய்யும் வேலை பைபிளோடு முரண்படாததாக தோன்றலாம், ஆனால் அது சபையிலும் சமுதாயத்திலும் உள்ள பலரின் அமைதியைக் குலைக்கும் என்று உணரலாம். பவுல் பின்வருமாறு சொல்கையில் சரியான மனநிலையைக் காட்டினார். “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.”—2 கொரிந்தியர் 6:3, 4.

ஒரு சர்ச் கட்டிடத்தில், புதிய சன்னல்களை பொறுத்துவது சமுக்காளங்களைச் சுத்தம் செய்வது, அல்லது கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான வெப்பமூட்டியை சீர்படுத்துவது போன்றவற்றைப் பற்றி முக்கிய கேள்விக்குச் சற்று கவனம் செலுத்தலாம். மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இதில் எவ்வாறு உட்படும்?

அதிகாரத்தைப் பற்றிய அம்சத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சர்ச்சில் அத்தகைய வேலையை ஏற்க தீர்மானிக்கும் ஓனராக அல்லது மானேஜராக அந்தக் கிறிஸ்தவர் இருக்கிறாரா? அத்தகைய வேலையை ஏற்பதன்மூலம் அல்லது கான்ட்ராக்ட் எடுப்பதன்மூலம், மகா பாபிலோனோடு பங்குகொள்ள அல்லது, பொய்வணக்கத்தை முன்னேற்றுவதில் ஒரு மதத்திற்கு உதவ அந்தக் கிறிஸ்தவர் விரும்புகிறாரா? இவ்வாறு தீர்மானிப்பது ஒருவர் தன் சொந்தக் கடையில் சிகரெட்டுகளை அல்லது விக்கிரகங்களை விற்பதற்கு ஒத்ததாக இருக்கும் அல்லவா?—2 கொரிந்தியர் 6:14-16.

ஒரு வேலையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு அதிகாரம் இல்லாதவராக, அங்கு வேலை செய்பவராக மட்டுமே அந்தக் கிறிஸ்தவர் இருந்தால் அவர் வேலைசெய்யும் இடம், அந்த வேலையில் எந்தளவு உட்பட வேண்டும் போன்ற மற்ற அம்சங்களையும் கவனிக்க வேண்டும். சர்ச்சில் ஏதோ நிகழ்ச்சிக்காக நாற்காலிகளைக் கொண்டுசென்று ஒப்படைப்பது அல்லது புதிய நாற்காலிகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்பது அல்லது சர்ச்சில் பற்றியெரியும் தீ பரவுவதற்கு முன் தீயணைப்பு படையினர் அதை அணைப்பது போன்ற ஏதோ சாதாரண சேவை செய்வதற்கே அவர் கட்டளையிடப்பட்டாரா? ஏதோ தொழில் செய்பவர், சர்ச்சுக்கு நீண்ட காலமாக பெயின்ட் அடிப்பதிலிருந்து அல்லது அதை அழகுபடுத்த தோட்டத்தை ஒழுங்காக கவனிப்பதிலிருந்து இதை வேறுபட்டதாக பலர் காணலாம். இத்தகைய நிலையான நெடுங்காலத் தொடர்பு, தான் ஆதரிக்கிறதில்லை என்று கூறும் ஒரு மதத்துடன் அந்தக் கிறிஸ்தவரை இணைத்துப் பேசும்படி பலரைத் தூண்டலாம்; ஏன், அவர்களைப் பெரும்பாலும் இடறலடையவும் செய்யலாமே.—மத்தேயு 13:41; 18:6, 7.

வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான பல குறிப்புகளை தெரிவித்தோம். இவை, பொய்மதம் சம்பந்தப்பட்ட பிரத்தியேக கேள்விகளாக இருந்தன. எனினும், மற்ற வேலைகளைக் குறித்ததிலும் இவை பொருந்தும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அப்போதுள்ள—ஒருவேளை தனிப்பட்டதாயிருக்கும்—சூழ்நிலைகளை கவனத்தில் வைத்து, ஜெபத்துடன் பகுத்தாராய வேண்டும். யெகோவாவுக்கு முன்பாக நேர்மையாய் நடக்க விரும்பும் தங்கள் ஆவலை வெளிப்படுத்தும் தீர்மானங்களைச் செய்ய, பிசகாமல் நடக்கும் கிறிஸ்தவர்கள் பலருக்கு இந்தக் குறிப்புகள் ஏற்கெனவே உதவி இருக்கின்றன.—நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 2:3; எபிரெயர் 12:12-14.

[அடிக்குறிப்புகள்]

a அதிகாரத்தைப் பற்றிய விஷயத்தில், மருத்துவமனையில் வேலைசெய்யும் கிறிஸ்தவர்கள் சிலர் கவனமாய் இருக்க வேண்டியிருந்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு மருந்தை கொடுக்கும்படி அல்லது மருத்துவ நடைமுறைகளை பின்பற்றும்படி கட்டளையிட ஒரு டாக்டருக்கு அதிகாரம் இருக்கலாம். நோயாளி மறுக்காவிட்டாலும், அதிகாரத்திலுள்ள கிறிஸ்தவ டாக்டர், இவற்றின்பேரில் பைபிள் சொல்வதை அறிந்தும், இரத்தமேற்றுதலை அல்லது கருச்சிதைவை செய்யும்படி எவ்வாறு கட்டளையிட முடியும்? மாறாக, அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் ஒரு நர்ஸுக்கு அத்தகைய அதிகாரம் ஒருவேளை இராது. அந்த நர்ஸின் அன்றாட வேலையில் ஏதோ நோக்கத்தோடு ஓர் இரத்த பரிசோதனை செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிடலாம் அல்லது கருச்சிதைவுக்கு வந்த ஒருவரை கவனிக்கும்படி டாக்டர் சொல்லலாம். 2 இராஜாக்கள் 5:17-19-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளதற்கு ஒத்த விதமாக, இரத்தமேற்றவும் கருச்சிதைவு செய்யவும் கட்டளையிடுகிற அதிகாரம் தனக்கு இல்லாததால், ஒரு நோயாளிக்கு சாதாரண சேவைகளைத் தான் செய்வதாக அவர்கள் முடிவுசெய்யலாம். எனினும், ‘நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடப்பதற்கு’ நிச்சயமாகவே தன் மனச்சாட்சிக்கு அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.—அப்போஸ்தலர் 23:1.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்