உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 10 பக். 49-54
  • போதிக்கும் கலையை வளர்த்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போதிக்கும் கலையை வளர்த்தல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இதே தகவல்
  • ‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • உங்கள் பைபிள் மாணாக்கருடைய இருதயத்தைச் சென்றெட்டுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—⁠பகுதி 2
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 10 பக். 49-54

படிப்பு 10

போதிக்கும் கலையை வளர்த்தல்

1 உண்மைக் கிறிஸ்தவர்களாக நம்முடைய பெரிய போதகர்களாகிய யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் நாம் சார்ந்திருக்கிறோம். யெகோவாவிடம் இவ்விதமாக ஜெபித்த சங்கீதக்காரனோடு நாம் சேர்ந்துகொள்கிறோம்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்.” (சங். 143:10) “போதகர்” என்று அவரை அழைத்த இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களின் மனநிலையையே நாமும் கொண்டிருக்கிறோம். மற்றும் எப்பேர்ப்பட்ட போதகராக இருக்கிறார் இயேசு! மலைப்பிரசங்கத்தை கொடுத்தப்பின், “அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத். 7:28, 29) இவர்கள்தாம் மிகப் பெரிய போதகர்கள். அவர்களைப் பின்பற்ற நாம் நாடுகிறோம்.

2 போதித்தல் என்பது வளர்க்கப்பட வேண்டிய ஒரு திறமையாகும். அது காரியத்தினுடைய என்ன, எப்படி, ஏன், எங்கே மற்றும் எப்போது ஆகியவற்றை விளக்குவதை உட்படுத்துகிறது. விசேஷமாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுத்த கட்டளையை முன்னிட்டுப்பார்க்கையில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் போதிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்: “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத். 28:19, 20) இது திறமையை உட்படுத்தும் வேலை என்பதை தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையிலிருந்து காணமுடிகிறது: “எல்லா நீடிய சாந்தத்தோடும் [போதிக்கும் கலையோடும், NW] . . . புத்திசொல்லு.”—2 தீ. 4:2.

3 மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான வாய்ப்புகள் அநேகம் இருக்கின்றன. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். நற்செய்தியை அறிவிப்பவர்கள் வீட்டு பைபிள் படிப்புகளின் மூலம், புதிதாக அக்கறை காட்டும் நபர்களுக்குப் போதிக்க வேண்டும். புதிய பிரஸ்தாபிகளுக்குக் கற்பிக்கவும் வாய்ப்புகள் அநேகம் இருக்கின்றன. அநேக சகோதரர்கள் ஊழியக் கூட்டத்திலோ பொதுப் பேச்சுக்களிலோ கட்டியெழுப்பும் பேச்சுக்களைக் கொடுக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலுள்ள எல்லா மாணாக்கரும் போதகர்களாக அவர்களுடைய முன்னேற்றத்தைக் காண்பிக்க ஆவலுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஊழியத்தினுடைய இந்தப் போதனை அம்சத்தில் பகிர்ந்துகொள்வதற்கான உங்கள் திறமையை வளர்த்துக்கொள்கையில், நீங்கள் அது உண்மையில் திருப்திகரமானதாகவும், அதிகமாக பலனளிக்கக்கூடியதாகவும் இருப்பதைக் காண்பீர்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒருவருக்கு கற்றுக்கொடுத்தப்பின் அவர் செய்யும் நல்ல ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இருக்கமுடியாது.

4 யெகோவாவின்மீது சார்ந்திருத்தல். நற்செய்தியின் ஒரு போதகராக பலன்தரத்தக்கவராக இருப்பதற்கு முக்கியமான ஒரு தேவை, யெகோவாவின்மீது சார்ந்திருந்து, அவரை நினைத்து, வழிநடத்துதலுக்காக அவரை நோக்கியிருந்து, உதவிக்காக அவரை கேட்பதாகும். (நீதி. 3:5, 6) இயேசுவும்கூட சொன்னார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” (யோவா. 7:16) அவர் ஒழுங்காக கடவுளுடைய வார்த்தையை குறிப்பிட்டுக் காட்டினார். பதிவுசெய்யப்பட்ட அவருடைய உரையாடல்களில், எபிரெய வேதாகம புத்தகங்களின் ஒரு பாதி அளவினையாவது அவர் மேற்கோள் காட்டினார் அல்லது சுட்டிக்காட்டினார். எனவே மற்றவர்களுக்குப் போதிக்கும்போது இயேசு செய்தவிதமாக கடவுளுடைய சத்திய வார்த்தையின்மீது சார்ந்திருங்கள். அதிலிருந்து விடைகளைப் பெறுங்கள். ஏனென்றால் இயேசுவின் சீஷர்களாவதற்கு ஜனங்களுக்கு போதிக்க ஒரே முக்கியமான பாடப்புத்தகம் இருக்கிறது, அதுவே பரிசுத்த பைபிள்.—2 தீ. 3:16.

5 நீங்கள் யெகோவாவின்மீது உண்மையாக சார்ந்திருந்தால், தகுதியற்றவர்களாக உணரவேண்டிய அவசியமில்லை. கடவுள், அவருடைய சத்திய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, தம்முடைய நோக்கங்களைப்பற்றிய புரிந்துகொள்ளுதலை நமக்குத் தருகிறார். இந்தச் சத்தியங்களைப் பற்றிய அறிவை நீங்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டால், யெகோவா உங்களைத் தாங்கி ஆதரிப்பார். “நான் ஒரு போதகனல்ல,” என்று சொல்லி பின்வாங்க அவசியமில்லை. ஜெபசிந்தையோடு யெகோவாவின்மேல் சார்ந்திருந்தால் நீங்கள் போதகராக இருக்கமுடியும்.—2 கொ. 3:5.

6 தயாரிப்பு. உங்கள் தலைப்புப் பொருளைத் தெரிந்துகொள்வதற்கு நிச்சயமாகவே மாற்றீடு எதுவுமில்லை. வேறு ஒருவருக்குப் போதிப்பதற்கு முன்பாக பொருளை நீங்கள் தெளிவாக கிரகித்துக்கொள்வது அவசியமாகும். (ரோ. 2:21) உங்கள் அறிவின் பரப்பெல்லை அதிகமாகும்போது நீங்கள் சந்தேகமின்றி மேம்பட்ட ஒரு போதகராக ஆவீர்கள். ஆனால் வெறும் ஒருசில அடிப்படை சத்தியங்கள் மாத்திரமே உங்களுக்குத் தெரிந்திருந்தாலும்கூட, நீங்கள் ஒரு போதகராக இருக்கமுடியும். உங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றி பேசுங்கள். இளம்பிள்ளைகளும்கூட, தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டிருக்கும் சத்தியங்களைப் பள்ளி சகாக்களுக்குப் போதிக்கலாம். தேவராஜ்ய ஊழியப் பள்ளி உங்கள் போதிக்கும் திறமையை வளர்க்க உதவிசெய்யும்.

7 நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்தவோ ஒரு பேச்சை கொடுக்கவோ போவதாக இருந்தால், பொருளை நிலைநிறுத்த உதவும் விவாதங்களைத் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காரியம் ஏன் அப்படி என்பதைத் தீர்மானிக்க முயற்சிசெய்யுங்கள். கருத்துக்களை உங்கள் சொந்த வார்த்தைகளில் அமைக்க முடியுமா என்பதைப் பாருங்கள். வேதாகம நிரூபணங்களின் நல்ல புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். வேதவசனங்களைப் பலன்தரத்தக்கவிதமாகப் பொருத்திப் பிரயோகிக்கத் தயாராயிருங்கள்.

8 தயாரிப்பின் மற்றொரு அம்சம், மாணாக்கரின் மனதில் அவருடைய மதசம்பந்தமான பின்னணியின் காரணமாக எழக்கூடிய கேள்விகளைக் குறித்து முன்கூட்டியே சிந்திப்பதாகும். இது குறிப்பாக அந்த மாணாக்கருக்கு பொருந்தக்கூடிய தகவலோடு தயாராயிருப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்யும். ஏற்கெனவே அவருக்கிருக்கும் புரிந்துகொள்ளுதலை மனதில்கொண்டிருப்பது, புதிய பொருளுக்கான அஸ்திவாரத்தைப் போடுவதிலும் முன்னேறுவதற்கு அவருக்கு உதவிசெய்வதிலும் உங்களுக்கு உதவிசெய்யும். மற்றொரு மாணாக்கருக்கு அவருடைய பின்னணிச்சூழலின் காரணமாக வித்தியாசமான விவாதங்களின் ஒரு தொகுதி தேவைப்படலாம். ஆகவே உங்கள் மாணாக்கரை அறிந்திருப்பது தயாரிப்பதற்கு உதவிசெய்கிறது.

9 கேள்விகள். இயேசு கிறிஸ்து அடிக்கடி செய்தவிதமாகவே கேள்விகள் பலன்தரத்தக்க போதனைக்கு விசேஷமாக பிரயோஜனமுள்ளவையாய் இருக்கின்றன. (லூக். 10:36) ஆகவே ஒரு பைபிள் படிப்பை நடத்துகையில் பிரசுரங்களிலுள்ள அச்சடிக்கப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி அவருடைய முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆனால் நீங்கள் மிகச் சரியான ஒரு போதகராக இருந்தால், மாணாக்கர் வெறுமனே புத்தகத்திலிருந்து பதிலை வாசிப்பாரேயானால் திருப்தியடைந்துவிடமாட்டீர்கள். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் எண்ணத்தைத் தன்னுடைய சொந்த வார்த்தைகளில் அமைப்பதற்கு மாணாக்கரை ஊக்குவிக்க உங்களுக்கு கூடுதலானக் கேள்விகள் தேவையாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் சொல்லவேண்டியதெல்லாம் இப்படியாக இருக்கலாம்: “அது சரி, ஆனால் அதை உங்கள் சொந்த வார்த்தைகளில் நீங்கள் எவ்விதமாக விளக்குவீர்கள்?”

10 வழிநடத்தும் கேள்விகள் போதிப்பதில் பயனுள்ளவையாக இருப்பதையும்கூட நீங்கள் காண்பீர்கள். இவை அந்த நபர் ஏற்கெனவே அறிந்திருப்பவற்றின் அடிப்படையில் அவருடைய மனதை அவர் ஒருபோதும் நினைத்திராத முடிவுக்கு வழிநடத்த உங்களுக்கு உதவும் கேள்விகளாகும். (மத். 17:25, 26; 22:41-46) உண்மையில் உங்களிடம் இவ்வாறு நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்: ‘இதைப்பற்றியும் அதைப்பற்றியும் இந்த மாணாக்கருக்கு அறிவு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆகவே தர்க்கரீதியான வரிசைமுறையில் நான் சில கேள்விகளைக் கேட்டால், அவர் சரியான முடிவுக்கு வரமுடியும். ஆனால் வழிநடத்தும் கேள்விகளை நான் விட்டுவிட்டு நேரடியாக அவரை முக்கிய கேள்வியைக் கேட்டால், அவர் தவறான முடிவுக்கு அவசரமாக வந்துவிடலாம்.’ வேறு வார்த்தைகளில், மாணாக்கர் பதிலைக் கண்டடைவதற்குரிய தகவல் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கு உதவி தேவை. நிச்சயமாகவே சுலபமான வழி பதிலை அவருக்குச் சொல்லிவிடுவதாகும். ஆனால் நீங்கள் வழிநடத்தும் கேள்விகளைப் பயன்படுத்தினால், மாணாக்கர்தாமே அதை சொல்வதால் விடையை நீங்கள் அதிகமாக ஏற்கத்தகுந்ததாகச் செய்வது மாத்திரமல்லாமல், சிந்திக்கும் திறமையையும் வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவிசெய்கிறீர்கள். உங்கள் கேள்விகள் அவருடைய மனதை தர்க்கரீதியான சிந்தனைப் போக்கின் ஊடாக சரியான முடிவுக்கு வழிநடத்திச்செல்லும். இது அவருக்குப் பின்னால் அளவிடமுடியாத மதிப்புள்ளதாக இருக்கும்.

11 சில சமயங்களில் நீங்கள் நோக்குநிலை கேள்விகளைக் கேட்பது விரும்பத்தக்கதாகக் காண்பீர்கள். அவற்றின் மூலமாக மாணாக்கர் தனிப்பட்டவிதமாக ஒரு காரியத்தின்பேரில் என்ன நம்புகிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் நாடுகிறீர்கள். உதாரணமாக வேசித்தனத்தின்பேரில் கடவுளுடைய சட்டம் என்ன என்பதாக நீங்கள் ஒருவேளை அவரைக் கேட்கலாம். அது தவறு என்பதைக் காண்பிக்கும் ஒரு வேதவசனத்தை அவர் ஒருவேளை மேற்கோள்காட்ட முடிகிறவராக இருப்பார். ஆனால் மாணாக்கர் அவர் கொடுத்த பதிலை அவர் உண்மையில் ஒப்புக்கொள்கிறாரா? அதுவே அவருடைய தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கிறதா? அவர் உண்மையில் வேசித்தனத்தைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்க ஒருவேளை விரும்பலாம். நீங்கள் “அவ்விதமாக நாம் வாழ்கிறோமா இல்லையா என்பது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?” என்பதாக கேட்கலாம். பின்னர் அதிகப்படியான உதவி தேவைப்படும் பகுதிகளைப் பகுத்துணர்ந்து நீங்கள் உதவிசெய்யலாம். நோக்குநிலை கேள்விகள் மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்ட உங்களுக்கு உதவிசெய்கின்றன.

12 கேள்விகள் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும்கூட பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன. உதாரணமாக, பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள வீட்டுக்காரருக்கு மேம்பட்டவிதமாக உதவிசெய்வதற்கு அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் விரும்பலாம். அவர் தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டால், நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு அவர் அதிக மனச்சாய்வுள்ளவராக இருப்பார் என்பதை அறிந்திருப்பதாலும்கூட நீங்கள் கேள்விகளைக் கேட்டு அவருடைய குறிப்பை வரவேற்கிறீர்கள்.

13 மேடையிலிருந்து ஒரு பேச்சை கொடுக்கையிலும்கூட, நீங்கள் ஒரு பதிலை விரும்பி கேள்விகளைக் கேட்கும் சமயங்கள் இருக்கின்றன. ஆகவே கேட்போர் பதிலளிக்கும்படியாக நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால் அறிவினாக்களை—கேட்போரிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் சிந்தனையைத் தூண்டுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளை நீங்கள் பயன்படுத்தும் சமயங்களும் உண்டு. (லூக். 12:49-51) பதில்களை நீங்களே கொடுக்கிறீர்கள். சில சமயங்களில் வரிசையாக கேள்விகளைக் கேட்டு கடைசியானதற்கு வரும்வரையாக ஒரு பதிலை கொடுக்காமல் இருக்கலாம். என்ன வகையான கேள்வியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்கள் கேட்போரையும், நீங்கள் என்ன போதிக்கிறீர்கள் என்பதையும் பொருத்திருக்கும்.

14 உதாரணங்கள். இவை இயேசுவின் போதனையில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தன. அதேவிதமாகவே, கிறிஸ்தவ போதகர்களும் இன்று தங்களுக்குச் செவிகொடுப்போரின் மனங்களில் நேர்த்தியான போதனைகளைப் பதியவைப்பதற்கு உதவக்கூடிய உதாரணங்களுக்கு வாழ்க்கையின் விவகாரங்களையும் அனுபவங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். (மத். 13:34, 35) உங்கள் உதாரணங்களை எளிமையாக்க வேலைசெய்யுங்கள், ஏனென்றால் எளிதற்ற அல்லது சிக்கலானவற்றை பின்பற்றுவது கடினமாக இருக்கலாம் அல்லது உங்கள் விவாதங்களிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடவும் செய்யலாம். யாக்கோபின் கடிதம் அநேக உதாரணங்களைக் கொண்டிருக்கிறது—கடலின் அலை, கப்பலின் சுக்கான், குதிரையின் கடிவாளம், ஒரு கண்ணாடி போன்றவை. அனைத்துமே வாழ்க்கையின் சாதாரணமான காரியங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. விழிப்புள்ள ஒரு போதகர், உதாரணம் தன்னிடம் கற்றுக்கொள்பவரின் சூழ்நிலைகள், வயது, மதம், கலாச்சாரம் போன்றவற்றிற்கு பொருந்தக்கூடியதாகச் செய்ய நாடுவார். உதாரணங்கள் நிச்சயமாகவே சொற்பொழிவுகளிலும் தனிநபருக்கு நீங்கள் போதிக்கையிலும் பயன்படுத்தப்படலாம்.

15 மறுபடியும் மறுபடியும் சொல்லுதல். நீங்கள் மேடையிலிருந்தாலும் அல்லது வீட்டில் ஒரு தனிநபருக்குப் போதித்துக்கொண்டிருந்தாலும்சரி, வெற்றிகரமாக போதிப்பதற்கு இந்த நுணுக்கம் இன்றியமையாததாகும். முக்கிய வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை விசேஷமாக வேதவசனங்களை உங்கள் மாணாக்கரின் மனதில் பதியவைக்க நாடுங்கள். ஒரு வீட்டுக்காரரோடு உங்களுக்கு ஒரு மாணாக்கர் பேச்சு இருக்குமானால், நீங்கள் மறுபார்வைக் கேள்விகளைக் கேட்டு, இவ்விதமாக மறுபடியும் மறுபடியும் சொல்லுவதன் மூலம் குறிப்புகளை அழுத்திக்காட்டலாம். இந்த முறையில் மாணாக்கர் கருத்தை புரிந்துகொண்டதைக்குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். உண்மையில் இயேசு செய்த விதமாக நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்: “இவையெல்லாவற்றின் கருத்தையும் அறிந்துகொண்டீர்களா?”—மத். 13:51, NW.

16 போதிக்கும் பேச்சுக்கள். நீங்கள் அதிகத்தைக் கற்றுக்கொண்ட பேச்சுக்களை போற்றுதலோடு நினைவுகூருவீர்கள். ஆகவே சில பேச்சாளர்கள் ஏன் நல்ல போதகர்களாக இருக்கின்றனர் என்பதை கவனியுங்கள். அவர்களுடைய பேச்சை எளிதில் நினைவில்கொள்ளச் செய்வது எது என்பதை கவனியுங்கள். அவர்கள் அவசரமாக பேச்சை கொடுப்பதில்லை. அவர்கள் கேள்விகளை, கேட்போர் பதிலளிப்பதற்காக அல்லது சிந்தனையைத் தூண்டுவதற்காக அறிவினாக்களைப் பயன்படுத்தக்கூடும். அவர்கள் உங்களை முக்கிய வேதவசனங்களை எடுத்துப்பார்க்கும்படியாகவும், அவர்கள் வாசித்து, அவற்றின்பேரில் நியாயம்காட்டி பேசி, அவற்றை விரிவுபடுத்தி, முக்கிய குறிப்புகளை உயர்த்திக்காண்பிக்கையில் பின்பற்றிக்கொண்டே வரும்படியாகவும் கேட்கலாம். சிலர் காட்சிக்கருவி கல்விமுறையை (visual aids) பயன்படுத்தலாம். ஆனால் எல்லா சமயங்களிலும், மேலோட்டமாக விளக்கப்பட்ட அநேக குறிப்புகளைவிட நன்றாக விளக்கப்பட்ட ஒருசில குறிப்புகளையே நினைவில் வைப்பது அதிக எளிதாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். போதிக்கும் கலை பயன்படுத்தப்படுகையில், பேச்சைக் கேட்பவர்கள் தலைப்பையும், பிரதான குறிப்புகளையும் ஒருவேளை பயன்படுத்தப்பட்ட ஓரிரண்டு முக்கியமான வேதவசனங்களையும் உடனடியாகச் சொல்லமுடிகிறவர்களாக இருக்க வேண்டும்.

17 மிகப் பெரிய போதகர்களிடமாக கவனத்தைத் திருப்புதல். கிறிஸ்தவ போதகராக நீங்கள் ஜீவ ஊற்றாக இருக்கும் யெகோவா தேவனிடமும், ஜீவனும் ஆசீர்வாதங்களும் வருகின்ற கடவுளின் வழியாக இருக்கும் இயேசு கிறிஸ்துவிடமும் கவனத்தைத் திருப்புவதனுடைய முக்கியத்துவத்தைக்குறித்து எப்பொழுதும் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். (யோவா. 17:3) உண்மையிலேயே மிகப் பெரிய போதகர்களாக இருக்கும் இவர்களுக்கு மற்றவர்களில் ஒரு கனிவான போற்றுதலை வளர்ப்பதற்கு முயற்சிசெய்யுங்கள்.

18 போதிக்கும் கலையில் தேர்ச்சியடைகையில், அன்பு வகிக்கும் பாகத்தையும்கூட நீங்கள் போற்றுவீர்கள். ஒரு மாணாக்கர் உண்மையில் யெகோவாவை நேசிப்பவரானால், அவரை உண்மையுடன் அவர் சேவிப்பார். ஆகவே படிப்பின்போது, பொருத்தமான இடங்களில், கடவுள் பாவமுள்ள மனிதர்களுக்காக என்ன செய்திருக்கிறார் மற்றும் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதன் முக்கியத்துவத்துக்குக் கவனத்தை இழுங்கள். கீழ்ப்படிதலுள்ள மனிதர்களின் நன்மைக்காக கடவுளின் ஞானம், நீதி, அன்பு, வல்லமை ஆகியவை அத்தனை அதிசயமாக எப்பொழுதும் ஒருங்கிணைவதை உயர்த்திக்காண்பியுங்கள். ஒரு மாணாக்கரின் இருதயம் சரியாக இருக்குமானால், காலப்போக்கில், அவரும்கூட யெகோவாவிடமாக ஆழ்ந்த பற்றுறுதியையும் அவருடைய பெயரை சிறப்பிப்பதில் பங்கெடுப்பதற்கு ஆசையையும் உணரக்கூடும்.

[கேள்விகள்]

1-3. போதிப்பது எதை உட்படுத்துகிறது, போதிப்பதற்கு நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

4, 5. அறிவுரை கொடுக்கையில் யார் மீதும் எதன் மீதும் நாம் சார்ந்திருக்க வேண்டும்?

6-8. பலன்தரத்தக்க போதனையில் தயாரிப்பு என்ன பங்கை வகிக்கிறது?

9. மாணாக்கர்கள் தங்களுடைய சொந்த வார்த்தைகளில் பதிலளிக்க நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்?

10. வழிநடத்தும் கேள்விகளின் பயனை விளக்கவும்.

11. நோக்குநிலை கேள்விகள் எவ்விதமாக பயன்படுத்தப்படலாம்?

12, 13. வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மேடையிலிருந்து பேச்சு கொடுக்கையிலும் கேள்விகளைப் பயன்படுத்துவது ஏன் பிரயோஜனமாயிருக்கிறது?

14, 15. உதாரணங்களாலும் மறுபடியும் மறுபடியும் சொல்லுவதாலும் என்ன நோக்கங்கள் சேவிக்கப்படுகின்றன?

16. ஒரு பேச்சாளர் ஒரு நல்ல போதகராக இருப்பாரேயானால், அவருடைய பேச்சைக் கேட்ட பிறகு நீங்கள் எதை நினைவில்கொள்ள முடிகிறவர்களாக இருப்பீர்கள்?

17, 18. நாம் எவ்விதமாக மற்றும் ஏன் பெரிய போதகர்களிடமாக கவனத்தைத் திருப்ப வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்