உங்களால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடியும்!
1. (அ) சந்தர்ப்ப சாட்சி என்றால் என்ன? (ஆ) உங்களில் எத்தனை பேர் சந்தர்ப்ப சாட்சி மூலம் சத்தியத்திற்கு வந்திருக்கிறீர்கள்?
1 சந்தர்ப்ப சாட்சி மூலமாக உங்களுடைய சபையில் எத்தனை பேர் சத்தியத்திற்கு வந்திருக்கிறார்கள்? பதில் தெரிந்தால் நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள்! சந்தர்ப்ப சாட்சி என்பது உடன் பயணம் செய்பவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தார் என நாம் அன்றாடம் சந்திக்கிறவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதாகும்; அதோடு, கடைகளில், பள்ளியில், வேலை செய்யுமிடத்தில் நாம் சந்திக்கிறவர்களிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதாகும். 200-க்கும் அதிகமான பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபையில் 80 பேர் சந்தர்ப்ப சாட்சி மூலமாகவே சத்தியத்திற்கு வந்திருந்தார்கள்! சந்தர்ப்ப சாட்சி மிகுந்த பலன் தருகிறது என்று இது காட்டுகிறது.
2. சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததாக பைபிளில் யாருடைய உதாரணங்கள் உள்ளன?
2 முதல் நூற்றாண்டில் ஊழியம் செய்தவர்கள் அடிக்கடி சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்கள். உதாரணத்திற்கு, சமாரியா வழியாக இயேசு பயணித்தபோது, யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்திருந்த ஒரு பெண்ணிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். (யோவா. 4:6-26) எத்தியோப்பிய அதிகாரி ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டு பிலிப்பு உரையாடலை ஆரம்பித்தார். (அப். 8:26-38) அப்போஸ்தலன் பவுல், பிலிப்பி நகரில் சிறையில் இருந்தபோது சிறைக்காவலரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். (அப். 16:23-34) பின்பு அவர் வீட்டுக்காவலில் இருந்தபோதும்கூட, “தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று, . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்து வந்தார்; அதோடு, எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களை . . . கற்பித்து வந்தார்.” (அப். 28:30, 31) நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவராய் இருந்தாலும்கூட உங்களால் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடியும்! எப்படி?
3. தயக்கத்தை மேற்கொள்ள எது நமக்கு உதவும்?
3 எப்படி ஆரம்பிக்கலாம்: முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் உரையாடலை ஆரம்பிக்க நம்மில் அநேகர் தயங்கலாம். நமக்குப் பரிச்சயமாக இருப்பவர்களிடமும் சத்தியத்தைப் பற்றிப் பேச நாம் தர்மசங்கடமாக உணரலாம். என்றாலும், யெகோவாவின் நற்குணத்தையும், தம் ஊழியர்களுக்கு அவர் கற்பித்திருக்கும் விலைமதிக்க முடியாத சத்தியங்களையும், உலக மக்களின் பரிதாபமான நிலைமையையும் பற்றி நாம் ஆழ்ந்து சிந்தித்தோமென்றால் நிச்சயமாகவே அவர்களிடம் சத்தியத்தைக் குறித்துப் பேசத் தூண்டப்படுவோம். (யோனா 4:11; சங். 40:5; மத். 13:52) அதுமட்டுமல்ல, ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ள’ யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிக்கலாம். (1 தெ. 2:2) கிலியட் மாணவர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “மக்களிடம் பேச நான் தயங்கியபோதெல்லாம் ஜெபம் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது.” ஆகவே, மக்களிடம் பேச உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் மனதுக்குள் சுருக்கமாக ஜெபம் செய்துகொள்ளுங்கள்.—நெ. 2:4.
4. முதலில் நாம் என்ன இலக்கை வைத்துக்கொள்ளலாம், ஏன்?
4 சந்தர்ப்ப சாட்சி என்றாலே, மக்களிடம் சந்தர்ப்ப வசமாகச் சாட்சி கொடுப்பதைக் குறிக்கிறது; எனவே, வழக்கமாய் செய்வதுபோல் நம்மை அறிமுகம் செய்துவிட்டு அல்லது ஒரு வசனத்தை வாசித்துவிட்டு உரையாடலைத் துவங்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக ஒருவரிடம் சாட்சி கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், வெறுமனே உரையாடலை ஆரம்பிக்க ஓர் இலக்கு வைக்கலாம். இவ்வாறு செய்வதால், அப்படியே பேச்சுவாக்கில் நற்செய்தியைக் குறித்து மக்களிடம் பேசத் தைரியம் கிடைத்திருப்பதாக அநேக பிரஸ்தாபிகள் சொல்கிறார்கள். ஒருவேளை அந்த நபருக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லையென்றால், அவரை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. நாசுக்காக உரையாடலை நிறுத்திவிட்டு வேறு யாரிடமாவது பேச வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள்.
5. கூச்ச சுபாவமுள்ள ஒரு சகோதரிக்கு எந்த அணுகுமுறை கைகொடுக்கிறது?
5 கூச்ச சுபாவமுள்ள ஒரு சகோதரி மார்க்கெட்டில் தான் சந்திக்கிற நபரைப் பார்த்து முதலில் சிநேகப்பான்மையோடு புன்னகைப்பார். அந்த நபரும் புன்னகைத்தால், அவரிடம் சுருக்கமாக எதைப் பற்றியாவது பேசுவார். அந்த நபர் சாதகமாகப் பிரதிபலித்தால், அந்த சகோதரி மேற்கொண்டு தைரியமாய்ப் பேசுவார். அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டு, பைபிளிலுள்ள எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினால் அவருடைய ஆர்வத்தைத் தூண்ட முடியும் என்று பார்ப்பார். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி நிறையப் பிரசுரங்களை மற்றவர்களுக்கு அளித்திருக்கிறார்; ஒரு பைபிள் படிப்பையும் ஆரம்பித்திருக்கிறார்.
6. அன்றாட அலுவல்களில் மக்களைச் சந்திக்கும்போது நாம் எப்படி உரையாடலை ஆரம்பிக்கலாம்?
6 உரையாடல்களை ஆரம்பித்தல்: நாம் என்ன சொல்லி உரையாடலை ஆரம்பிக்கலாம்? கிணற்றருகே சந்தித்த பெண்ணிடம் இயேசு பேசியபோது, தண்ணீர் கொடுக்கும்படி கேட்டே உரையாடலை ஆரம்பித்தார். (யோவா. 4:7) ஆகவே, சிநேகப்பான்மையாக வாழ்த்துச் சொல்வதன் மூலமாகவோ ஏதாவது கேள்வி கேட்பதன் மூலமாகவோ நாம் உரையாடலை ஆரம்பிக்கலாம். எடுத்த எடுப்பில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசவோ பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசிக்கவோ வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக, மக்களுக்கு நம்மீது தவறான அபிப்பிராயம் இருக்கும்போது அவர்களிடம் சிநேகப்பான்மையுடன் உரையாடலைத் தொடர்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். இப்படி நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, சரியான சந்தர்ப்பம் பார்த்து ஒரு பைபிள் கருத்தைச் சொல்லி சத்தியத்தின் விதையை விதைக்கலாம். (பிர. 11:6) மக்களுடைய அக்கறையைத் தூண்டும் விஷயத்தைக் குறித்துப் பேசும்போது அவர்களும் ஆர்வத்தோடு ஏதாவது கேள்வி கேட்கத் தூண்டப்படுவார்கள்; இவ்வாறு, உரையாடலை ஆரம்பிப்பதில் அநேகர் வெற்றி கண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, டாக்டருக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, “வியாதியே இல்லாத ஒரு காலம் வரப்போவதை நினைத்தாலே எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது” என்று சொல்லி நீங்கள் உரையாடலை ஆரம்பிக்கலாம்.
7. கூர்ந்து கவனிப்பது சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நமக்கு எப்படி உதவும்?
7 கூர்ந்து கவனிப்பதும்கூட உரையாடலை ஆரம்பிக்க நமக்கு உதவும். நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளை உடைய பெற்றோரை நாம் பார்த்தால், அவரைப் பாராட்டிய பிறகு, “உங்கள் பிள்ளைகளை எப்படி இவ்வளவு நன்றாக வளர்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்கலாம். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை ஒரு சகோதரி கூர்ந்து கவனிக்கிறார்; பின்பு, அவர்களுடைய ஆர்வத்திற்குரிய விஷயத்தின் பேரில் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுக்கு கல்யாணம் என்பதைத் தெரிந்துகொண்டபோது, திருமணத்திற்குத் திட்டமிடுவது எப்படி என்பதைப் பற்றி அலசும் ஒரு விழித்தெழு!-வை அவரிடம் கொடுத்தார். இதனால் பைபிளைப் பற்றி இன்னும் பலமுறை அவரோடு பேச வாய்ப்பு கிடைத்தது.
8. நம்முடைய பிரசுரங்களைப் பயன்படுத்தி உரையாடல்களை ஆரம்பிப்பது எப்படி?
8 உரையாடலை ஆரம்பிப்பதற்கு மற்றொரு வழி, மற்றவர்கள் கண்ணில் படும் விதத்தில் நம் பிரசுரங்களை வாசிப்பதாகும். ஒரு சகோதரர், காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையில் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரையை எடுத்து அமைதியாக வாசிப்பார். பக்கத்தில் இருப்பவர்கள் தன் கையிலுள்ள பத்திரிகையைப் பார்ப்பதை இவர் கவனித்தால் ஒரு கேள்வியைக் கேட்பார் அல்லது அந்தக் கட்டுரையைப் பற்றிச் சுருக்கமாக ஏதாவது சொல்வார். இது, உரையாடலுக்கு வழிநடத்துகிறது, சாட்சி கொடுக்கவும் உதவுகிறது. சக வேலையாட்கள் அல்லது சக மாணவர்கள் கண்களில் படும்படி நம்முடைய பத்திரிகைகளை வைப்பது அவர்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்பலாம்; அதோடு, ஏதாவது கேள்வி கேட்கவும் அவர்களைத் தூண்டலாம்.
9, 10. (அ) சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நாம் எப்படி வாய்ப்புகளை உருவாக்கலாம்? (ஆ) நீங்கள் எப்படி வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள்?
9 வாய்ப்புகளை உருவாக்குதல்: அவசர உணர்வுடன் நாம் பிரசங்கிக்க வேண்டியிருப்பதால், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதை ஏனோதானோவென்று கருதக் கூடாது. மாறாக, அன்றாடக் காரியங்களில் ஈடுபடும்போது, சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நாம் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எப்படிப்பட்ட மக்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் என்பதையும் அவர்களிடம் சிநேகப்பான்மையாக உரையாடலை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதையும் பற்றி முன்கூட்டியே யோசித்துப்பாருங்கள். பைபிளையும் பிரசுரங்களையும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்; அப்பொழுது, ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிளிலிருந்து பேசி பிரசுரங்களைக் கொடுக்கலாம். (1 பே. 3:15) துண்டுப்பிரதிகளைக் கைவசம் வைத்திருப்பது சிலருக்கு உதவியாக இருக்கிறது.—km 6/07 பக். 3.
10 புதுமையாக யோசிப்பதன் மூலம் அநேக பிரஸ்தாபிகள் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றனர். பலத்த பாதுகாப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கிற ஒரு சகோதரி, அந்தக் குடியிருப்பில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இயற்கைக் காட்சிகளைக் கொண்ட ஜிக்சா புதிர் விளையாட்டின் மூலம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறார். ஜிக்சா விளையாட்டில் அவர் உருவாக்கிய அந்த அழகிய படத்தைப் பற்றி மக்கள் அவரிடம் ஏதாவது பேச ஆரம்பிக்கையில், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய பைபிள் வாக்குறுதியைச் சொல்ல அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். (வெளி. 21:1-4) சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வேறென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நீங்களும் யோசித்துப்பார்க்கலாம், அல்லவா?
11. சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது ஆர்வம் காட்டின நபர்களை மறுபடியும் சந்திக்க நாம் என்ன செய்யலாம்?
11 ஆர்வம் காட்டுவோரை மீண்டும் சந்தித்தல்: ஆர்வம் காட்டும் ஒரு நபரைக் கண்டுபிடிக்கையில் அவரை மீண்டும் சந்தியுங்கள். சூழ்நிலை சாதகமாக இருந்தால் நீங்கள் அந்த நபரிடம் இவ்வாறு சொல்லலாம்: “உங்களோடு பேசியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் உங்களை மறுபடியும் எங்கு சந்திக்கலாம்?” சில பிராந்தியங்களில் மக்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது சவாலாக இருக்கலாம், அதனால் கவனமாக இருப்பது அவசியம். ஆர்வம் இருப்பதுபோல் நடிக்கும் நபர்களிடம் சில பிரஸ்தாபிகள் சிக்கியிருக்கிறார்கள். ஆர்வம் காட்டின நபரை உங்களால் போய்ப் பார்க்க முடியவில்லையென்றால், அவர் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சபையிலிருந்து யாராவது ஒருவர் அவரைப் போய்ச் சந்திக்க, தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் சபைச் செயலரிடம் உடனடியாகக் கொடுங்கள்.
12. (அ) சந்தர்ப்ப சாட்சி கொடுத்த மணிநேரங்களை ஏன் கணக்கில் வைத்துக்கொண்டு அறிக்கை செய்ய வேண்டும்? (ஆ) சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன? (“சந்தர்ப்ப சாட்சியினால் கிடைத்த பலன்கள்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
12 நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த மணிநேரங்களை அறிக்கை செய்ய வேண்டும். ஆகவே, ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தாலும், அதைக் கணக்கில் வைத்துக்கொள்ள மறந்து விடாதீர்கள். இதைக் கவனியுங்கள்: ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஒரு நாளுக்கு வெறுமனே ஐந்து நிமிடங்கள் மட்டுமே சந்தர்ப்ப சாட்சி கொடுத்தாலும்கூட, ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே எழுபது லட்சம் மணிநேரங்களுக்கும் அதிகமாய்ச் செய்திருப்போம்!
13. சந்தர்ப்ப சாட்சி கொடுக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?
13 நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள்—கடவுள் மீதுள்ள அன்பும், சக மனிதர் மீதுள்ள அன்பும்தான். (மத். 22:37-39) யெகோவாவின் குணங்கள் மீதும் அவருடைய நோக்கங்கள் மீதும் நம்முடைய இருதயத்தில் நன்றிப் பெருக்கெடுப்பதால், அவருடைய ‘ராஜ்யத்தின் மகிமையைப்’ பற்றிப் பேசத் தூண்டப்படுகிறோம். (சங். 145:7, 10-12) சக மனிதர்மீது நமக்கு இருக்கும் உண்மையான அக்கறைதான், சமயம் இருக்கும்போதே நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. (ரோ. 10:13, 14) சற்று எச்சரிப்புடனும் முன்யோசனையுடனும் செயல்படுவதோடு, தயாரிப்பும் செய்தோமென்றால், நாம் எல்லாருமே சந்தர்ப்ப சாட்சி கொடுக்க முடியும்; அதோடு, நேர்மை இருதயமுள்ளவர்களுக்குச் சத்தியத்தைச் சொல்வதன் மூலம் சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும்.
[பக்கம் 4-ன் சிறுகுறிப்பு]
வெறுமனே மக்களைச் சந்தித்து உரையாடலை ஆரம்பிக்க நீங்கள் இலக்கு வைக்கலாம்
[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]
புதுமையாக யோசிப்பதன் மூலம் அநேக பிரஸ்தாபிகள் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றனர்
[பக்கம் 5-ன் பெட்டி]
உரையாடலை ஆரம்பிக்க சில குறிப்புகள்
◼ உரையாடலை ஆரம்பிக்க உதவும்படி ஜெபியுங்கள்
◼ சிநேகப்பான்மையுடன், சாவகாசமாய் இருக்கிறவர்களை அணுகுங்கள்
◼ நீங்கள் அணுகும் நபரைப் பார்த்துப் புன்னகைத்த பிறகு, இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுங்கள்
◼ நன்கு செவிகொடுத்துக் கேளுங்கள்
[பக்கம் 6-ன் பெட்டி]
சந்தர்ப்ப சாட்சியினால் கிடைத்த பலன்கள்!
• ஒரு சகோதரர் ஒர்க் ஷாப்பில் தன்னுடைய காரைப் பழுதுபார்க்கக் கொடுத்துவிட்டு காத்துக்கொண்டிருந்த சமயத்தில் அருகில் இருந்தவர்களிடம் சாட்சி கொடுத்தார். மாநாட்டில் கொடுக்கப்படும் பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழ்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அடுத்த வருடம் நடந்த ஒரு மாநாட்டில், ஒரு சகோதரர் இவருக்கு வாழ்த்துச் சொன்னார். அந்த நபர் வேறு யாருமில்லை, ஒரு வருடத்திற்கு முன் ஒர்க் ஷாப்பில் நம் சகோதரரிடமிருந்து அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர்தான்! அந்த நபர் மாநாட்டில் பொதுப் பேச்சைக் கேட்கப் போயிருந்தார்; அங்கு தனக்கு ஒரு பைபிள் படிப்பு வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்; இப்போது அவரும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் பெற்ற சாட்சிகளாக இருக்கிறார்கள்.
• ஒரு சகோதரி சந்தர்ப்ப சாட்சி மூலமாக சத்தியத்தைக் கற்றார்; அவர் தன்னுடைய மூன்று பிள்ளைகள் மூலம் யாரையெல்லாம் சந்திக்கிறாரோ அவர்கள் அனைவருக்கும் சாட்சி கொடுக்கிறார். அதோடு அக்கம்பக்கத்தினரிடமும், பள்ளிக்கு மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு வரும் பெற்றோர்களிடமும் சாட்சி கொடுக்கிறார். அவர் மற்றவர்களிடம் பேசும்போது தன்னுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்கு பைபிள் மிகவும் உதவுவதாக உணர்ச்சி பொங்க சொல்வார்; அதன்பின் வேறெதாவது விஷயத்தைப் பற்றிப் பேசுவார். ஏற்கெனவே உரையாடலை ஆரம்பித்துவிடுவதால் அடுத்தடுத்த முறை அவர்களைச் சந்திக்கும்போது பைபிளில் இருக்கும் விஷயங்களைப் பற்றிச் சொல்வது அவருக்கு ரொம்பச் சுலபமாக இருக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம், 12 பேர் ஞானஸ்நானம் பெற உதவியிருக்கிறார்.
• நம் சகோதரி ஒருவரை, காப்பீடு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தித்தபோது, அந்தச் சந்தர்ப்பத்தைச் சாட்சி கொடுக்க அவர் பயன்படுத்திக் கொண்டார். “நல்ல ஆரோக்கியம், சந்தோஷம், முடிவில்லா வாழ்க்கையைத் தரும் ஒரு காப்பீட்டைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அந்தச் சகோதரி அவரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர், அதைப் பெற விரும்புவதாகக் கூறினார். அதோடு, எந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி அவர் பேசுகிறார் என்றும் கேட்டார். உடனடியாக, அந்தச் சகோதரி அவருக்கு பைபிள் அளிக்கும் வாக்குறுதிகளை வாசித்துக் காட்டினார்; நம்முடைய பிரசுரங்களில் ஒன்றையும் கொடுத்தார்; அதே நாளில், அந்த நபர் அதை வாசித்து முடித்துவிட்டார். பிறகு, அவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது; அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்; ஞானஸ்நானமும் பெற்றார்.
• பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் பேச ஆரம்பித்தார்; அப்படியே அவருக்கு சாட்சியும் கொடுத்தார். பயணத்தின் முடிவில், அந்தப் பெண்ணிடம் தன்னுடைய முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்; அதோடு, அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தால் தனக்கு ஒரு பைபிள் படிப்பை நடத்தும்படி அவர்களிடம் கேட்கும்படியும் உற்சாகப்படுத்தினார். அடுத்த நாளே, இரண்டு சகோதரிகள் அந்தப் பெண்ணுடைய வீட்டின் கதவைத் தட்டினார்கள். அந்தப் பெண் அவர்களோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; படுவேகமாக முன்னேற்றம் செய்தார்; ஞானஸ்நானமும் பெற்றார்; கொஞ்ச நாட்களுக்குள் மூன்று பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்துவிட்டார்.
• முதியோர் இல்லத்தில் குடியிருக்கும் கண்பார்வையற்ற 100 வயதுடைய ஒரு சகோதரர், “சீக்கிரமாக கடவுளுடைய அரசாங்கம் வரவேண்டும்” என்று எப்பொழுதும் சொல்வார். அங்கிருந்த மற்ற முதியோர்களும், நர்ஸுகளும் இதைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கும்போது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண், “பூஞ்சோலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “அப்பொழுது, நான் எல்லாவற்றையும் நன்றாகப் பார்ப்பேன், ஓடியாடுவேன், என்னுடைய சக்கர நாற்காலியை எரித்து விடுவேன்” என்று சொன்னார். அவருக்குக் கண் தெரியாததால், பத்திரிகைகளை வாசித்துக் காட்டும்படி அந்தப் பெண்ணிடம் சொல்வார். ஒருநாள் அந்த முதியவருடைய மகள் அவரைச் சந்திக்க வந்தபோது, அந்தப் பெண் பத்திரிகைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மகளிடம் அனுமதி கேட்டார். இன்னொரு நர்ஸ் அவருடைய மகளிடம் இவ்வாறு சொன்னார்: “‘கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரம் வரவேண்டும்’ என்பதைப் பற்றித்தான் எங்கள் முதியோர் இல்லத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி பேசிக்கொள்கிறோம்.”
• உணவகத்தில் ஒரு சகோதரி வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது அருகில் சில முதியவர்கள், அரசியல் விவகாரங்களைப் பேசிக்கொண்டிருந்தது அவருடைய காதில் விழுந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், மனித அரசாங்கத்தால் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று சொன்னார். “இந்தச் சந்தர்ப்பத்தை நான் நழுவ விடக்கூடாது” என்று அந்தச் சகோதரி தனக்குள் சொல்லிக்கொண்டார். சுருக்கமாக ஜெபம் செய்துவிட்டு அவர்களிடம் சென்றார். தன்னை அறிமுகம் செய்துகொண்ட பிறகு, மனிதர்களுடைய பிரச்சினைகளையெல்லாம் தீர்க்கப்போகிற கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் பேசிவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு சிற்றேட்டையும் கொடுத்தார். அந்தச் சமயத்தில், உணவகத்தின் முதலாளி அங்கு வந்தார். அவர் தன்னை வெளியே போகச் சொல்லப் போகிறார் என்று சகோதரி நினைத்தார். அவரோ, அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததாகச் சொன்னார், தனக்கும்கூட ஒரு சிற்றேடு வேண்டும் என்றார். அந்தச் சகோதரியின் உரையாடலை அங்கு வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணும் கேட்டுக்கொண்டிருந்தார், கண்களில் கண்ணீரோடு அந்தச் சகோதரியை அணுகினார். முன்பு சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த இவர் மீண்டும் பைபிள் படிப்பைத் தொடர விரும்புவதாகச் சொன்னார்.