உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 1/15 பக். 22-26
  • சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சோதனையை எதிர்த்து நிற்க...
  • களைப்பையும் சோர்வையும் சமாளிக்க...
  • “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு”
    விழிப்புடன் இருங்கள்!
  • சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • சோர்ந்துபோகிறவனை யெகோவா பலப்படுத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுளுடைய சக்தி உங்களுக்கு அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 1/15 பக். 22-26

சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்

‘கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெறுவீர்கள்.’—அப். 1:8.

1, 2. சீடர்களுக்கு எதைக் கொடுப்பதாக இயேசு வாக்குறுதி அளித்தார், அது ஏன் அவசியம்?

இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் சீடர்கள் தங்களுடைய சொந்த பலத்தால் செய்ய முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். உலகளாவிய பிரசங்க வேலை, எதிரிகளின் பலம், மனித பலவீனம் இதையெல்லாம் பார்க்கையில் அவர்களுக்கு அதீத சக்தி தேவைப்பட்டது. ஆகவே, இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பு சீடர்களிடம், “கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது நீங்கள் பலம் பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.—அப். 1:8.

2 அந்த வாக்குறுதி கி.பி. 33-ல் பெந்தெகொஸ்தே நாள்முதல் நிறைவேற ஆரம்பித்தது. அப்போது, எருசலேம் முழுவதும் பிரசங்கிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். அதனால், எதிரிகள் யாராலும் இந்த வேலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. (அப். 4:20) இயேசுவின் உண்மையுள்ள சீடர்கள் எல்லாருக்கும், நமக்கும்கூட அதே சக்தி அவசியம்; ஆம், “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும்” அவசியம்.—மத். 28:20.

3. (அ) கடவுளுடைய சக்திக்கும் பலத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குங்கள். (ஆ) யெகோவா தரும் பலம் எதைச் செய்ய நமக்கு உதவுகிறது?

3 இயேசு தம் சீடர்களிடம், ‘கடவுளுடைய சக்தி உங்கள்மீது வரும்போது பலம் பெறுவீர்கள்’ என்று வாக்குறுதி அளித்தார். “பலம்,” “சக்தி” ஆகிய வார்த்தைகள் வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டவை. கடவுளுடைய சக்தி என்பது அவருடைய சித்தத்தை நிறைவேற்ற மனிதர் மீதோ பொருள்கள் மீதோ செலுத்தப்படும் ஆற்றலைக் குறிக்கிறது. ஆனால், பலம் என்பது “செயல்படுவதற்கோ ஒரு விளைவை ஏற்படுத்துவதற்கோ தேவைப்படும் திறனை” குறிக்கிறது. இது, தேவையான விளைவை உண்டாக்கும்வரை ஒருவருக்குள் அல்லது ஒன்றிற்குள் இருக்கும். எனவே, பாட்டரியை ‘ரீசார்ஜ்’ செய்யும் மின்னோட்டத்திற்கு கடவுளுடைய சக்தியை ஒப்பிடலாம்; ஆனால், பாட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றலுக்கு பலத்தை ஒப்பிடலாம். யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் தம் ஊழியர்களுக்கு இந்தப் பலத்தைத் தருகிறார்; அந்தச் சக்தி, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கும் அவசியப்பட்டால் தீய செல்வாக்குகளை எதிர்ப்பதற்கும் தேவையான திறமையை நம் ஒவ்வொருவருக்கும் தருகிறது.—மீகா 3:8-யும் கொலோசெயர் 1:29-யும் வாசியுங்கள்.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம், ஏன்?

4 கடவுள் தமது சக்தியினால் தரும் பலத்தை நாம் எப்படிக் காட்டலாம்? இதனால் எப்படிப்பட்ட செயல்கள் அல்லது விளைவுகள் உண்டாகலாம்? கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்ய முயலுகையில் நமக்கு எத்தனையோ தடங்கல்கள் வரும்; ஆம், சாத்தானால், அவனுடைய இந்த உலகத்தால் அல்லது நம்முடைய அபூரணத்தால் தடங்கல்கள் வரும். கிறிஸ்தவர்களாக நிலைத்திருக்க... ஊழியத்தில் தவறால் ஈடுபட... யெகோவாவுடன் நல்லுறவை வைத்திருக்க... இந்தத் தடங்கல்களைச் சமாளிப்பது முக்கியம். அப்படியானால், சோதனையை எதிர்த்து நிற்க, களைப்பையும் சோர்வையும் சமாளிக்க கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவுகிறது என்பதை இப்போது சிந்திக்கலாம்.

சோதனையை எதிர்த்து நிற்க...

5. ஜெபம் நமக்கு எப்படிப் பலம் அளிக்கிறது?

5 “சோதனைக்கு இணங்கிவிட எங்களை அனுமதிக்காதீர்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காத்தருளுங்கள்” என்று ஜெபம் செய்யும்படி தம் சீடர்களுக்கு இயேசு கற்பித்தார். (மத். 6:13) இவ்வாறு வேண்டுகிற உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா கைவிட மாட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில், “பரலோகத்திலுள்ள உங்கள் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசு சொன்னார். (லூக். 11:13) சரியானதைச் செய்ய யெகோவா தம் சக்தியைத் தருவதாக வாக்குறுதி அளித்திருப்பது எவ்வளவு நம்பிக்கை அளிக்கிறது! ஆனால், நமக்கு எந்தச் சோதனையும் வராமல் யெகோவா தடுத்துவிடுவார் என்று இது அர்த்தப்படுத்தாது. (1 கொ. 10:13) சொல்லப்போனால், நமக்குச் சோதனை வரும்போதுதான் நாம் இன்னும் ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும்.—மத். 26:42.

6. சாத்தானுடைய சோதனைகளுக்கு எதைப் பயன்படுத்தி இயேசு பதிலடி கொடுத்தார்?

6 பிசாசின் சோதனைகளுக்குப் பதிலடி கொடுக்க இயேசு வேத வசனங்களைப் பயன்படுத்தினார். கடவுளுடைய வார்த்தை இயேசுவின் மனதில் தெள்ளத் தெளிவாக இருந்தது, அதனால்தான் “. . . என எழுதப்பட்டிருக்கிறதே . . . எனவும் எழுதப்பட்டிருக்கிறதே . . . அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதிலடி கொடுத்தார். யெகோவாமீதும் அவருடைய வார்த்தைமீதும் இயேசுவுக்கு இருந்த அன்பே, அந்தச் சோதனைக்காரனின் ஆசை வார்த்தைகளை ஒதுக்கித் தள்ள அவரைத் தூண்டியது. (மத். 4:1-10) சாத்தானுடைய ஒவ்வொரு சோதனையையும் இயேசு எதிர்த்து நின்றதால் அவரைவிட்டு அவன் போய்விட்டான்.

7. சோதனையை எதிர்த்து நிற்க பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது?

7 பிசாசின் சோதனைகளை எதிர்த்து நிற்க இயேசுவே வேத வசனங்களைச் சார்ந்திருந்தார் என்றால், நாம் இன்னும் எந்தளவுக்கு அவற்றைச் சார்ந்திருக்க வேண்டும்! பிசாசையும் அவனுடைய ஆட்களையும் எதிர்த்து நிற்க, முதலாவது கடவுளுடைய நெறிகளை நன்கு தெரிந்துகொண்டு அவற்றை முழுமையாய்க் கடைப்பிடிக்கத் தீர்மானமாய் இருக்க வேண்டும். அநேகர் பைபிளைப் படித்து கடவுளுடைய ஞானத்தையும் நீதியையும் புரிந்துகொண்டபோது அதன் நெறிகளின்படி வாழத் தூண்டப்பட்டிருக்கிறார்கள். ஆம், “கடவுளுடைய வார்த்தை . . . இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியக்கூடிய” சக்தி படைத்தது. (எபி. 4:12) ஒருவர் எந்தளவுக்கு பைபிள் வசனங்களை வாசித்து தியானிக்கிறாரோ அந்தளவுக்கு ‘யெகோவாவின் சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்வார்.’ (தானி. 9:13, NW) ஆகவே, நம்முடைய பலவீனத்தைச் சமாளிக்க உதவும் வேத வசனங்களைத் தியானிக்க வேண்டும்.

8. கடவுளுடைய சக்தியை நாம் எவ்விதங்களில் பெறலாம்?

8 இயேசுவால் எப்படிச் சோதனையை எதிர்த்து நிற்க முடிந்தது? அவர் வேதவசனங்களை அறிந்திருந்தார், ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்தவராகவும்’ இருந்தார். (லூக். 4:1) அவரைப் போலவே பலத்தையும் திறமையையும் பெற கடவுளிடம் நாம் நெருங்கி வர வேண்டும், அவருடைய சக்தியினால் நிரப்பப்படவும் வேண்டும்; இதற்காக, அவர் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். (யாக். 4:7, 8) பைபிள் படிப்பு, ஜெபம், சக கிறிஸ்தவர்களுடன் தோழமை ஆகியவை அந்த ஏற்பாடுகளில் சில. இப்படிப்பட்ட ஆன்மீகக் காரியங்களில் முழுமையாய் ஈடுபடுவதன் பயனை அநேகர் உணர்ந்திருக்கிறார்கள்; இவை ஆன்மீக விஷயங்களில் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன.

9, 10. (அ) கிறிஸ்தவர்கள் சகஜமாக எதிர்ப்படுகிற சில சோதனைகள் யாவை? (ஆ) நீங்கள் களைப்பாக இருக்கும்போதுகூட சோதனையை எதிர்த்து நிற்க தியானிப்பதும் ஜெபிப்பதும் எப்படி உங்களுக்குப் பலத்தைத் தரும்?

9 எப்படிப்பட்ட சபலங்களை நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது? உங்களுடைய மணத்துணை அல்லாதவரிடம் சரசமாட வேண்டுமென்ற ஆசை எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் மணமாகாதவர் என்றால், சத்தியத்தில் இல்லாத எதிர்பாலர் ஒருவருடன் நெருங்கிப் பழக ஆசைப்பட்டிருக்கிறீர்களா? டிவி பார்க்கையிலோ இன்டர்நெட்டை அலசுகையிலோ அசிங்கமான காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை திடீரென வரலாம். அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு வந்திருக்கிறதா, அப்போது என்ன செய்தீர்கள்? நீங்கள் தவறாக எடுத்து வைக்கும் முதல் அடி கடைசியில் எப்படிப் படுகுழியில் தள்ளிவிடும் என்பதைத் தியானித்துப் பார்ப்பது நல்லது. (யாக். 1:14, 15) நீங்கள் செய்யும் பெரிய தவறு யெகோவாவுக்கு, சபைக்கு, உங்கள் குடும்பத்துக்கு எப்பேர்ப்பட்ட மனவேதனையைக் கொண்டு வரும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆனால், கடவுளுடைய நெறிகளைப் பின்பற்றும்போது சுத்தமான மனசாட்சியைப் பெறலாம். (சங்கீதம் 119:37-யும் நீதிமொழிகள் 22:3-யும் வாசியுங்கள்.) இப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்படும்போதெல்லாம் பலத்திற்காக ஜெபம் செய்யத் தீர்மானமாய் இருங்கள்.

10 பிசாசின் சோதனைகளைக் குறித்து நினைவில் வைக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. வனாந்தரத்தில் 40 நாட்கள் விரதமிருந்த பிறகே இயேசுவைச் சாத்தான் சோதிக்க வந்தான். அவருடைய உத்தமத்தைப் பரீட்சிப்பதற்கு அதுவே “நல்ல சந்தர்ப்பம்” என்பதை பிசாசு அறிந்திருந்தான் என்பதில் சந்தேகமில்லை. (லூக். 4:13) நம்முடைய உத்தமத்தைப் பரீட்சிப்பதற்கும்கூட சாத்தான் நல்ல சந்தர்ப்பத்தைத் தேடுகிறான். ஆகவே, ஆன்மீக ரீதியில் நாம் பலமாக இருப்பது முக்கியம். நாம் எப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறோமோ அப்போது நம்மைக் குறிவைத்து தாக்குகிறான். அதனால், நாம் களைப்பாக அல்லது சோர்வாக இருக்கும்போதெல்லாம் யெகோவாவின் ஆதரவுக்காகவும் சக்திக்காகவும் வேண்டுதல் செய்யத் திடத் தீர்மானமாய் இருக்க வேண்டும்.—2 கொ. 12:8-10.

களைப்பையும் சோர்வையும் சமாளிக்க...

11, 12. (அ) இன்று அநேகர் சோர்ந்துவிடுவது ஏன்? (ஆ) சோர்வை முறியடிக்க எது நமக்குப் பலத்தைத் தருகிறது?

11 அபூரண மனிதரான நாம் அவ்வப்போது சோர்ந்துவிடுகிறோம். ஏனென்றால், பிரச்சினைகள் மிகுந்த காலத்தில் வாழ்கிறோம். சொல்லப்போனால், மனிதர் இதுவரை சந்தித்திராத மிகவும் கொடிய காலத்தில் வாழ்கிறோம். (2 தீ. 3:1-5) அர்மகெதோன் நெருங்கி வருவதால், பொருளாதார ரீதியில்... உணர்ச்சி ரீதியில்... என கஷ்டத்திற்கு மேல் கஷ்டங்கள் நம்மை நெருக்குகின்றன. இதனால், குடும்பத்தைக் கவனிப்பதும் பராமரிப்பதும் சிலருக்குப் பெரும் சவாலாகி வருகிறது. அதோடு, அவர்கள் களைப்படைகிறார்கள், தொய்வடைகிறார்கள், துவண்டுவிடுகிறார்கள். நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால், இவற்றை எப்படிச் சமாளிக்கலாம்?

12 இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஒரு சகாயரைத் தருவதாக, அதாவது கடவுளுடைய பரிசுத்த சக்தியைத் தருவதாக, உறுதியளித்தார் என்பதை நினைவில் வையுங்கள். (யோவான் 14:16, 17-ஐ வாசியுங்கள்.) இந்தப் பிரபஞ்சத்திலேயே இதுதான் மிகவும் வலிமைமிக்க சக்தி. இதன் உதவியால் எந்தவொரு கஷ்டத்தையும் சகிப்பதற்குத் தேவையான பலத்தை “பல மடங்கு அதிகமாய்” யெகோவாவால் தர முடியும். (எபே. 3:20) இந்தச் சக்தியை நாம் சார்ந்திருக்கும்போது, அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, ‘எல்லா விதத்திலும் நெருக்கப்பட்டாலும்’ ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெறுவோம். (2 கொ. 4:7, 8) நம்முடைய கஷ்டங்களை நீக்கிவிடுவதாக யெகோவா உறுதியளிப்பதில்லை, ஆனால் தம்முடைய சக்தியின் மூலம் அவற்றைச் சமாளிப்பதற்கான பலத்தைத் தருவதாக உறுதியளிக்கிறார்.—பிலி. 4:13.

13. (அ) ஓர் இளம் பெண் தன்னுடைய கஷ்டத்தைச் சமாளிக்க எப்படிப் பலத்தைப் பெற்றாள்? (ஆ) இது போன்ற அனுபவங்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

13 ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிற 19 வயது ஸ்டீஃபனியின் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். 12 வயதில் அவளுக்கு ஸ்ட்ரோக் வந்தது, மூளையில் கட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது; அதன் பிறகும் இரண்டு முறை ஸ்ட்ரோக் வந்தது. அதனால், இடது பக்கம் செயலிழந்துவிட்டது, கண் பார்வையும் மங்கிவிட்டது. அவளிடம் இருந்த கொஞ்ச சக்தியை சபைக் கூட்டங்கள், வெளி ஊழியம் போன்ற மிக முக்கியமான காரியங்களுக்கே செலவிடுகிறாள். என்றாலும், கஷ்டங்களைச் சகிப்பதற்குத் தேவையான பலத்தை யெகோவா பல வழிகளில் தருவதை அவள் உணர்கிறாள். மனதளவில் உடைந்து போயிருந்த சமயங்களில் பைபிள் பிரசுரங்களிலுள்ள அனுபவங்கள் அவளுக்குத் தெம்பளித்தன. சகோதர சகோதரிகள் கடிதங்கள் எழுதியும், கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் ஆறுதலாகப் பேசியும் அவளுக்குப் பக்க பலமாக இருந்தார்கள். சத்தியத்தில் ஆர்வம் காட்டியவர்கள் அவளுடைய வீட்டிற்குச் சென்று பைபிள் படித்தார்கள்; இப்படியாக, அவள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்களும் நன்றியுடன் இருந்தார்கள். இவையெல்லாவற்றிற்கும் ஸ்டீஃபனி யெகோவாவுக்கு அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்த வசனம் சங்கீதம் 41:3; இந்த வசனம் தன்னுடைய விஷயத்தில் நிறைவேறியிருப்பதாக அவள் நம்புகிறாள்.

14. நாம் களைப்பாகவோ கஷ்டத்திலோ இருக்கும்போது என்ன செய்யக் கூடாது, ஏன்?

14 நாம் களைப்பாகவோ கஷ்டத்திலோ இருக்கும்போது, அவற்றைக் காரணம் காட்டி ஆன்மீகக் காரியங்களை ஒருபோதும் தவறவிடக் கூடாது. அது நம் களைப்பையும் கஷ்டத்தையும் கூட்டவே செய்யும். ஏன்? ஏனென்றால், தனிப்பட்ட படிப்பு, குடும்பப் படிப்பு, வெளி ஊழியம், சபைக் கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் கடவுளுடைய சக்தியைப் பெற்று புதுத்தெம்பை அடைகிறோம். இவை நமக்கு எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கின்றன. (மத்தேயு 11:28, 29-ஐ வாசியுங்கள்.) கூட்டங்களுக்குக் களைப்புடன் வருகிற சகோதர சகோதரிகள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது புதுத்தெம்பு கிடைத்தது போல், ஆன்மீக ரீதியில் அவர்களுடைய பாட்டரி ‘ரீசார்ஜ்’ ஆனது போல் உணருகிறார்கள், அல்லவா?

15. (அ) கிறிஸ்தவரின் வாழ்க்கையை எளிதாக்குவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறாரா? வசனத்தோடு விளக்குங்கள். (ஆ) கடவுள் நமக்கு என்ன வாக்குறுதி அளிக்கிறார், இது என்ன கேள்வியை எழுப்புகிறது?

15 அதற்காக, கிறிஸ்தவர்களாய் இருப்பது ரொம்ப எளிது என்று சொல்லிவிட முடியாது. உண்மைக் கிறிஸ்தவராய் இருப்பதற்கு முயற்சி தேவை. (மத். 16:24-26; லூக். 13:24) என்றாலும், களைப்படைந்தவருக்கு யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் பலத்தை அளிக்க முடியும். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ [அதாவது, அவரை நம்பியிருக்கிறவர்களோ] புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். (ஏசா. 40:29-31) அப்படியானால், ஆன்மீக ரீதியில் களைப்படைவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

16. களைப்புக்கோ சோர்வுக்கோ காரணமானவற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

16 ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி’ யெகோவாவின் வார்த்தை நமக்கு அறிவுறுத்துகிறது. (பிலி. 1:10) கிறிஸ்தவ வாழ்க்கையை நீண்ட ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “நாமும்கூட பாரமான எல்லாவற்றையும் . . . உதறித்தள்ளிவிட்டு, நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுவோமாக.” (எபி. 12:1) நம்மைக் களைப்படையச் செய்யும் தேவையில்லாத காரியத்தை, தேவையில்லாத பாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவர் சொன்னதன் கருத்து. ஏற்கெனவே அரக்கப்பரக்க போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சிலர் தேவையில்லாத காரியங்களை இன்னும் இழுத்துப்போட்டுக் கொள்கிறார்கள். ஆகவே, நீங்கள் களைப்பாகவோ கஷ்டத்திலோ இருந்தால், வேலையில் எந்தளவு சக்தியைச் செலவிடுகிறீர்கள், எத்தனை முறை உல்லாசப் பயணம் போகிறீர்கள், விளையாட்டுகளிலோ பிற பொழுதுபோக்குகளிலோ எந்தளவு ஈடுபடுகிறீர்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்ப்பது பயனளிக்கும். இப்படிச் சமநிலையோடு யோசித்துப் பார்த்தால் நம்முடைய வரம்புகளை உணர்ந்து அநாவசியமான காரியங்களைக் குறைத்துக்கொள்வோம்.

17. சிலர் ஏன் சோர்வடையலாம், ஆனால் யெகோவா நமக்கு என்ன உறுதி அளித்திருக்கிறார்?

17 சிலர் தாங்கள் எதிர்பார்த்தபடி இந்த உலகத்தின் முடிவு சீக்கிரம் வராததால்கூட சோர்ந்துவிடலாம். (நீதி. 13:12) அப்படிச் சோர்ந்துவிடுபவர்கள் ஆபகூக் 2:3-லுள்ள வார்த்தைகளிலிருந்து உற்சாகத்தைப் பெறலாம்: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” இந்த உலகத்தின் முடிவு, குறித்த நேரத்தில் கண்டிப்பாக வரும் என்று யெகோவா உறுதி அளித்திருக்கிறார்!

18. (அ) எந்த வாக்குறுதிகள் உங்களுக்குத் தெம்பூட்டுகின்றன? (ஆ) அடுத்த கட்டுரை நமக்கு எப்படிப் பயனளிக்கும்?

18 களைப்பும் சோர்வும் பறந்துவிடும் நாளுக்காக யெகோவாவின் உண்மை ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்; அப்போது, எல்லாரும் “இளமை துடிப்போடு” வாழ்வார்கள். (யோபு 33:25, NW) புத்துணர்வூட்டும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுகையில், இப்போதும்கூட கடவுளுடைய சக்தியால் நம் உள்ளம் வலிமை பெறலாம். (2 கொ. 4:16; எபே. 3:16) எனவே, சோர்வு நித்திய ஆசீர்வாதங்களைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள். சோதனை, களைப்பு, அல்லது சோர்வு என எந்தக் கஷ்டமாக இருந்தாலும், அது உடனடியாக நீங்காவிட்டாலும்கூட கடவுளுடைய புதிய உலகில் இல்லாமல் போய்விடும். துன்புறுத்தலைச் சமாளிக்க... சகாக்களின் தொல்லையை எதிர்த்து நிற்க... வேறு பல பிரச்சினைகளைச் சகிக்க... கடவுளுடைய சக்தி நமக்கு எப்படிப் பலமளிக்கும் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

• பைபிள் வாசிப்பது நமக்கு எப்படிப் பலமளிக்கிறது?

• ஜெபிப்பதும் தியானிப்பதும் நமக்கு எப்படிப் பலமளிக்கின்றன?

• சோர்வுக்குக் காரணமானவற்றை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்?

[பக்கம் 24-ன் படம்]

சபைக் கூட்டங்கள் நமக்கு ஆன்மீக ரீதியில் புதுத்தெம்பூட்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்