உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 41 பக். 226-பக். 229 பாரா. 1
  • புரிந்துகொள்ளும்படி பேசுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புரிந்துகொள்ளும்படி பேசுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • புரியும்படி பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • தகவல் நிறைந்த பேச்சு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 41 பக். 226-பக். 229 பாரா. 1

படிப்பு 41

புரிந்துகொள்ளும்படி பேசுதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சொல்வதன் அர்த்தத்தை மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பேசுங்கள்.

ஏன் முக்கியம்?

தகவல் எந்தளவுக்கு எளிமையாக இருக்கிறதோ அந்தளவுக்கு கேட்போரும் அதிக பலன் பெறுவர்.

நீங்கள் பேசும்போது வெறுமனே தகவல்களை தந்தால் மட்டும் போதாது. கேட்போருக்குப் புரியும்படியும் சொல்ல வேண்டும். சபையாரிடம் பேசினாலும்சரி சாட்சிகளாக அல்லாதோரிடம் பேசினாலும்சரி, திறம்பட பேச்சுத் தொடர்புகொள்வதற்கு இது உதவும்.

புரிந்துகொள்ளத்தக்க பேச்சிற்கு அநேக அம்சங்கள் உள்ளன. அவற்றில் சில, “தர்க்க ரீதியில் பேசுதல்” என்ற படிப்பு எண் 26-⁠ல் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில “பிறர்மீது அக்கறை காட்டுதல்” என்ற படிப்பு எண் 30-⁠ல் சிந்திக்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்பில் கூடுதலான குறிப்புகள் சிலவற்றை நாம் பார்க்கப் போகிறோம்.

எளிய வார்த்தைகளும் எளிய நடையும். எளிய வார்த்தைகளும் சிறு வாக்கியங்களும் பேச்சுத்தொடர்புக்கு உதவும் வலிமைமிக்க கருவிகள். இயேசுவின் மலைப்பிரசங்கம் இதற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. ஜனங்கள் யாராக இருந்தாலும்சரி, எங்கு வாழ்ந்தாலும்சரி, அந்தப் பிரசங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவேளை கருத்துக்கள் அவர்களுக்கு புதிதாக இருக்கலாம். என்றாலும், இயேசு சொன்னதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி, மற்றவர்களோடு நல்ல உறவை வளர்ப்பது எப்படி, கவலைகளை மேற்கொள்வது எப்படி, வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி போன்ற அனைவருக்கும் பொதுவான விஷயங்களையே அவர் பேசினார். அதோடு இயல்பான மொழிநடையில் கருத்துக்களை எடுத்துரைத்தார். (மத். 5-7 அதி.) நீளத்திலும் அமைப்பிலும் வேறுபடும் வாக்கியங்களுக்கு பல்வேறு உதாரணங்களை பைபிள் தருவது உண்மைதான். ஆனால் கருத்துக்களைத் தெளிவாக புரிந்துகொள்ளும் விதத்தில் அளிப்பதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய விஷயங்களைக்கூட, எளிய நடையில் சொன்னால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். எளிய நடையில் பேசுவது எப்படி? தேவையில்லாமல் அநேக விவரங்களைச் சொல்லி சபையாரை திணறடிக்காதீர்கள். முக்கிய குறிப்புகளை முழுமையாக தருவதற்கு தகவல்களை ஒழுங்கமையுங்கள். முக்கியமான வசனங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். ஒரு வசனத்திலிருந்து மற்றொரு வசனத்திற்கு வேகமாக தாவுவதற்கு பதிலாக, அவற்றை வாசித்து விளக்குங்கள். வளவளவென்று பேசி நல்ல கருத்துக்களைக் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்.

பைபிள் படிப்பு நடத்தும்போதும் இதே நியமங்களைப் பின்பற்றுங்கள். நுட்ப விவரங்கள் அனைத்தையும் விளக்க முயலாதீர்கள். முக்கிய கருத்துக்களைத் தெளிவாக புரிந்துகொள்ள மாணாக்கருக்கு உதவுங்கள். மற்ற விளக்கங்களை பிற்பாடு தனிப்பட்ட படிப்பிலும் சபைக் கூட்டங்களிலும் அவர் தெரிந்துகொள்ளலாம்.

தகவலை எளிய முறையில் எடுத்துரைப்பதற்கு நல்ல தயாரிப்பு அவசியம். மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு முன்பு பேசப்போகும் பொருளை முதலில் நீங்கள் தெளிவாக புரிந்திருக்க வேண்டும். ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளும்போது, அதற்குரிய காரணங்களை உங்களால் சொல்ல முடியும். அதை உங்களுடைய சொந்த வார்த்தைகளிலும் சொல்ல முடியும்.

பழக்கமில்லாத வார்த்தைகளை விளக்குங்கள். சில சமயங்களில் விஷயங்களை சபையாருக்கு விளங்க வைக்க, அவர்களுக்கு பழக்கமில்லாத வார்த்தைகளை விளக்குவது அவசியம். சபையாருடைய அறிவை உயர்வாக எடைபோடாதீர்கள், அதேசமயம் அவர்களுடைய அறிவுத்திறனை குறைவாகவும் எடைபோடாதீர்கள். பைபிளைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருப்பதால் மற்றவர்களுக்குப் பழக்கமில்லாத சில வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தலாம். சில குறிப்பிட்ட வகுப்பாரை அடையாளப்படுத்தும் பதங்களாகிய ‘மீதியானோர்,’ ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,’ ‘வேறே ஆடுகள்,’ ‘திரள் கூட்டம்’ ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் யெகோவாவின் சாட்சிகள் அல்லாதோர் புரிந்துகொள்வது கடினம். (ரோ. 11:5; மத். 24:45, NW; யோவா. 10:16; வெளி. 7:9) அவ்வாறே, யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்புடன் ஒருவர் பழக்கப்படாத வரையில், “பிரஸ்தாபி,” “பயனியர்,” “வட்டாரக் கண்காணி,” “நினைவு ஆசரிப்பு” போன்ற வார்த்தைகளை அவரால் புரிந்துகொள்ள முடியாது.

சாட்சிகள் அல்லாதவர்களால் தாராளமாக பயன்படுத்தப்படும் சில பைபிள் வார்த்தைகளுக்கும்கூட விளக்கம் தேவைப்படலாம். “அர்மகெதோன்” என்பது ஓர் அணு ஆயுத பேரழிவு என பலரும் நினைக்கிறார்கள். ‘கடவுளுடைய ராஜ்யத்தை’ அரசாங்கத்தோடு அல்ல, ஆனால் ஒருவருடைய இருதயத்திலுள்ள ஒரு நிலைமையோடு அல்லது பரலோகத்தோடு இணைக்கிறார்கள். “ஆத்துமா” என்றதும் மரணத்திற்குப்பின் மனிதரின் உடலைவிட்டுப் பிரிந்து வாழும் காணக்கூடாத ஒன்று என்ற எண்ணமே அவர்களுடைய மனதிற்கு வரலாம். “பரிசுத்த ஆவி” என்பது ஓர் ஆள், திரித்துவத்தின் பாகம் என்றே லட்சக்கணக்கானோருக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. பைபிள் நெறிமுறைகளை பலர் புறக்கணித்திருப்பதால் “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என பைபிள் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவி தேவைப்படலாம்.​—⁠1 கொ. 6:18.

பைபிளைப் பற்றி தெரியாதவர்களிடத்தில், “பவுல் இப்படி எழுதியிருக்கிறார் . . . ,” அல்லது “லூக்கா இப்படி சொன்னார் . . . .” என்று மொட்டையாக சொன்னால் அவர்கள் தவறாக புரிந்துகொள்ளலாம். ஏனெனில் அந்தப் பெயரில் அவருக்கு நண்பரோ அயலகத்தாரோ இருக்கலாம். ஆகவே, அவர் ஒரு கிறிஸ்தவ அப்போஸ்தலர் அல்லது பைபிள் எழுத்தாளர் என்ற வார்த்தைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அளவைகளை அல்லது பண்டைய பழக்க வழக்கங்களை தற்காலத்தவர் புரிந்துகொள்வதற்கு உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக, நோவாவுடைய பேழையின் நீளம் 300 முழம், அகலம் 50 முழம், உயரம் 30 முழம் என குறிப்பிட்டிருப்பது அவர்களுக்குப் புரியாதிருக்கலாம். (ஆதி. 6:15) ஆனால் அந்த அளவுகளை அவர்களுக்குப் பழக்கமான கட்டிடங்களோடு ஒப்பிட்டு விளக்கும்போது பேழையின் அளவை உடனடியாக கற்பனை செய்து பார்ப்பார்கள்.

தேவையான விளக்கங்களை கொடுங்கள். சபையாருக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்குவதற்கு, குறிப்பிட்ட வார்த்தைக்குரிய சொற்பொருள் விளக்கத்தை சொன்னால் மட்டும் போதாது. எருசலேமில் எஸ்றாவின் காலத்தில், நியாயப்பிரமாணத்தை வாசிப்பதோடு அதற்கு விளக்கமும் சொல்லப்பட்டது. அதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு லேவியர் பொருள்விளக்கமும் கொடுத்தார்கள், அந்த சமயத்தில் அவர்கள் எதிர்ப்பட்ட சூழ்நிலையோடு அதைப் பொருத்தியும் காண்பித்தார்கள். (நெ. 8:8, 12) இது போலவே, நீங்கள் வாசிக்கும் வசனத்தை விளக்குவதற்கும் பொருத்துவதற்கும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.

இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு, தமக்கு நேரிட்ட சம்பவம் வேதவசனங்களின் நிறைவேற்றமே என்பதை சீஷர்களுக்கு விளக்கிக் காட்டினார். அந்த விஷயங்களை சாட்சியாக அறிவிக்க வேண்டிய பொறுப்பையும் அவர்களுக்கு வலியுறுத்திக் காட்டினார். (லூக். 24:44-48) கற்பிக்கப்பட்ட காரியங்கள் வாழ்க்கையில் எப்படி செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதைக் காண ஜனங்களுக்கு உதவும்போது, அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை உடனடியாக புரிந்துகொள்வார்கள்.

இருதயம் எப்படி உட்படுகிறது. உங்களுடைய விளக்கங்கள் தெளிவாக இருந்தாலும், ஒருவருக்கு அது புரியுமா புரியாதா என்பது மற்ற அம்சங்கள் மீதும் சார்ந்திருக்கிறது. ஒருவருடைய இருதயம் ஒன்றை ஏற்றுக்கொள்ளாதபோது, அதுவே கருத்தைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக அமைகிறது. (மத். 13:13-15) தங்களுடைய சொந்த கருத்துக்களிலேயே பிடிவாதமாக இருப்பவர்களுக்கு ஆவிக்குரிய விஷயங்கள் பைத்தியமானவையாக தோன்றுகின்றன. (1 கொ. 2:14) ஒருவர் அப்படிப்பட்ட பிடிவாத குணத்தைக் காட்டும்போது பேச்சை அப்போதைக்கு முடித்துக் கொள்வதே ஞானமானது.

என்றபோதிலும், சிலருடைய இருதயம் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதற்கு காரணம் வாழ்க்கையில் அவர்கள் எதிர்ப்படும் இக்கட்டான சூழ்நிலைகள். தொடர்ந்து சிலகாலத்திற்கு பைபிள் சத்தியத்தைப் போதிக்கும்போது அவர்களுடைய இருதயம் ஒருவேளை அதை ஏற்கலாம். தாம் வாரினால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்படப்போவதை சீஷர்களிடம் இயேசு சொன்னபோது அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை. ஏன்? ஏனென்றால் அவர்கள் அதை எதிர்பார்க்கவுமில்லை, விரும்பவுமில்லை! (லூக். 18:31-34) என்றாலும், காலப்போக்கில் அப்போஸ்தலர்களில் 11 பேர் அதைப் புரிந்துகொண்டு இயேசு கற்பித்ததற்கு இசைவாக செயல்பட்டார்கள்.

சிறந்த மாதிரியால் வரும் பலன். நம்முடைய வார்த்தைகளால் மட்டுமல்ல செயல்களாலும் ஜனங்களுக்கு உதவலாம். ராஜ்ய மன்றத்திற்கு முதன்முதலாக சென்றபோது, அங்கு சொல்லப்பட்ட விஷயங்கள் அல்ல ஆனால் அங்கு நிலவிய அன்பே இன்னும் தங்கள் நினைவில் இருப்பதாக அநேகர் சொல்கிறார்கள். அவ்வாறே நம் மத்தியில் நிலவும் மகிழ்ச்சி, பைபிள் சத்தியத்திற்கு அநேகர் தங்களுடைய மனக் கண்களை திறக்க உதவியுள்ளது. யெகோவாவின் ஜனங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புள்ள தயவையும், கஷ்ட காலங்களில் பிறரிடம் காட்டும் கரிசனையையும் பார்த்து, யெகோவாவின் சாட்சிகளுடைய மதமே உண்மையான மதம் என்ற முடிவுக்கு சிலர் வந்திருக்கின்றனர். ஆகவே பைபிளைப் புரிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவி செய்கையில், நீங்கள் விளக்கும் விதத்திற்கும் உங்களுடைய முன்மாதிரிக்கும் கவனம் செலுத்துங்கள்.

எப்படி செய்வது

  • சாதாரண மொழி நடையில் பேசுங்கள்; முக்கிய கருத்துக்களைச் சொல்வதற்கு சிறிய வாக்கியங்களைப் பயன்படுத்துங்கள்.

  • முக்கிய குறிப்புகள் சிலவற்றை மட்டும் வலியுறுத்துங்கள்.

  • சபையாருக்குப் பழக்கமில்லாத வார்த்தைகளை விளக்குங்கள்.

  • வசனங்களை விளக்குவதற்கும் பொருத்துவதற்கும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.

  • உங்களுடைய முன்மாதிரி, கேட்போரை எப்படி பாதிக்கலாம் என்பதை சிந்தியுங்கள்.

பயிற்சி: இந்த வாரம் சபை கூட்டத்தில் கற்ற விஷயங்களில் எதையாவது சாட்சியாக இல்லாத உறவினரிடமோ அயலகத்தாரிடமோ சக பணியாளரிடமோ அல்லது பள்ளித் தோழரிடமோ சொல்ல முயலுங்கள். அந்த நபருக்குப் புரியாத வார்த்தைகள் இருந்தால் அவற்றை விளக்க மறந்துவிடாதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்