இளைஞர்களே—கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுங்கள்
“ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி.”—நீதி. 4:5.
1, 2. (அ) தனக்குள் ஏற்பட்ட போராட்டத்தைச் சமாளிக்க அப்போஸ்தலன் பவுலுக்கு எது உதவியது? (ஆ) ஞானத்தையும் புத்தியையும் நீங்கள் எப்படிப் பெறலாம்?
“நன்மை செய்ய விரும்புகிற எனக்குள் தீமை இருக்கிறது.” இதைச் சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்போஸ்தலன் பவுலே இதைச் சொன்னார். யெகோவாவை அவர் நேசித்தபோதிலும், சரியானதைச் செய்வது சில நேரங்களில் அவருக்குப் போராட்டமாகத்தான் இருந்தது. இந்தப் போராட்டத்தைக் குறித்து பவுல் எப்படி உணர்ந்தார்? “எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கிறேன்!” என்று அவர் எழுதினார். (ரோ. 7:21-24) பவுலின் உணர்ச்சிகளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? சரியானதைச் செய்வது உங்களுக்குச் சில சமயங்களில் கஷ்டமாக இருக்கிறதா? பவுலைப் போல நீங்களும் விரக்தி அடைந்துவிடுகிறீர்களா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள். சவால்களைச் சமாளிக்க பவுலால் முடிந்தது, உங்களாலும் முடியும்.
2 “பயனளிக்கும் வார்த்தைகளை” பின்பற்றியதால் அவர் வெற்றி கண்டார். (2 தீ. 1:13, 14) ஆம், சவால்களைச் சமாளிக்கவும் சரியான தீர்மானங்களை எடுக்கவும் தேவையான ஞானத்தையும் புத்தியையும் பெற்றார். அவற்றைப் பெற்றுக்கொள்ள யெகோவா உங்களுக்கும் உதவுவார். (நீதி. 4:5) அவர் தம்முடைய வார்த்தையான பைபிளில் மிகச் சிறந்த ஆலோசனைகளைத் தந்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.) பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில், பணத்தைப் பயன்படுத்துவதில், தனியாக இருக்கையில் பைபிள் நியமங்கள் உங்களுக்கு எப்படி உதவும் என்பதை இப்போது சிந்திக்கலாம்.
கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுதல்—குடும்பத்தில்
3, 4. பெற்றோரின் சொல்கேட்டு நடப்பது உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் பெற்றோர் ஏன் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்?
3 பெற்றோரின் சொல்கேட்டு நடப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் சுதந்திரப் பறவையாக இருக்க ஆசைப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். இது இயல்புதான். வளர வளர அநேகர் அப்படி இருக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், வீட்டில் பெற்றோருடைய கவனிப்பில் இருக்கும்வரை அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது உங்கள் கடமை.—எபே. 6:1-3.
4 பெற்றோர் விதிக்கும் சட்டதிட்டங்களைச் சரிவர புரிந்துகொண்டால் அவற்றிற்குக் கீழ்ப்படிவது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். சில நேரங்களில் நீங்களும் 18 வயது பிரேமாவைப்a போல உணரலாம்; தன் பெற்றோரைப் பற்றி அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் வயதிலுள்ள பிள்ளைகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. நான் சொல்ல வருவதைக் காதில் வாங்குவதும் இல்லை, என்னைத் தீர்மானம் எடுக்க விடுவதும் இல்லை, நான் வளர்ந்துவிட்டேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதும் இல்லை.” உங்களுடைய பெற்றோரும் உங்களுக்குத் தர வேண்டிய சுதந்திரத்தைத் தருவதில்லை என்று பிரேமாவைப் போல நீங்களும் நினைக்கலாம். ஆனால், உங்கள்மீது அக்கறை வைத்திருப்பதால்தான் பெற்றோர் உங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதோடு, உங்களை வளர்க்கும் விதத்தைக் குறித்து யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—1 தீ. 5:8.
5. பெற்றோருக்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு எப்படி நன்மை அளிக்கும்?
5 பெற்றோரின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை வங்கிக் கடனை அடைப்பதற்கு ஒப்பிடலாம்; கடனை நீங்கள் எந்தளவு சரியாகக் கட்டுகிறீர்களோ அந்தளவு வங்கி உங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கும். அதேபோல, நீங்களும் பெற்றோருக்கு மரியாதையும் கீழ்ப்படிதலும் காட்ட கடன்பட்டிருக்கிறீர்கள். (நீதிமொழிகள் 1:8-ஐ வாசியுங்கள்.) பெற்றோருக்கு எந்தளவு கீழ்ப்படிந்து நடக்கிறீர்களோ அந்தளவு அவர்களும் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். (லூக். 16:10) நீங்கள் எப்போதுமே பெற்றோரின் சொல்லை மீறி நடந்தால், அவர்கள் “கடன் கொடுப்பதை,” அதாவது சுதந்திரம் கொடுப்பதை, குறைத்துக் கொள்வார்கள் அல்லது கொடுக்கவே மாட்டார்கள்.
6. பிள்ளைகள் கீழ்ப்படிந்து நடக்க பெற்றோர் எப்படி உதவலாம்?
6 சட்டங்களுக்குக் கீழ்ப்படிய இளைஞர்களுக்குப் பெற்றோர் உதவும் ஒரு வழி, சிறந்த முன்மாதிரி வைப்பதாகும். யெகோவாவுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவதன் மூலம் அவருடைய சட்டதிட்டங்கள் நியாயமானவை என அவர்கள் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் பிள்ளைகளும் பெற்றோருடைய சட்டதிட்டங்கள் நியாயமானவை என்பதைப் புரிந்துகொள்வார்கள். (1 யோ. 5:3) சில சமயங்களில், ஒரு விஷயத்தைக் குறித்துத் தம் ஊழியர்களும்கூட தங்களுடைய கருத்தைச் சொல்ல யெகோவா வாய்ப்பளித்தார் என பைபிள் சொல்கிறது. (ஆதி. 18:22-32; 1 இரா. 22:19-22) அதேபோல, பிள்ளைகளும் சில விஷயங்களைக் குறித்து தங்கள் கருத்தைச் சொல்ல பெற்றோர் வாய்ப்பு தரலாம், அல்லவா?
7, 8. (அ) இளைஞர்கள் சிலர் எதை ஒரு சவாலாக நினைக்கலாம்? (ஆ) பெற்றோரின் கண்டிப்பிலிருந்து பயனடைய பிள்ளைகள் எதை மனதில் வைக்க வேண்டும்?
7 பெற்றோர் எதற்கெடுத்தாலும் தங்களைக் குறைசொல்வதாகப் பிள்ளைகள் நினைக்கலாம். அதுபோன்ற நேரங்களில் குமார் என்ற இளைஞரைப் போலவே நீங்களும் உணரலாம்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் என்ன தப்பு செய்கிறேன் என்று என் அம்மா ஒரு போலீஸ்காரர் மாதிரி எப்போது பார்த்தாலும் நோட்டம் விடுகிறார்கள்.”
8 யாராவது நம்மைக் கண்டித்தால் அல்லது திருத்தினால் பெரும்பாலும் குறைசொல்வதாகவே நினைக்கிறோம். நியாயமான காரணத்தோடு கண்டித்தாலும்கூட அதை ஏற்றுக்கொள்வது கடினமாகத்தான் இருக்கும் என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. (எபி. 12:11) பெற்றோர் கண்டிக்கும்போது எதை நீங்கள் மனதில் வைப்பது பிரயோஜனமாக இருக்கும்? உங்கள்மேல் உள்ள அன்பினால்தான் அவர்கள் கண்டிக்கிறார்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும். (நீதி. 3:12) நீங்கள் கெட்ட பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கும் உதவவே அவர்கள் விரும்புகிறார்கள். அதே சமயத்தில், உங்களைக் கண்டிக்காமல் விட்டுவிட்டால் அது உங்களைப் பகைப்பதற்குச் சமம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 13:24-ஐ வாசியுங்கள்.) தவறு செய்யும்போது ஒருவிதத்தில் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே, பெற்றோர் உங்களைத் திருத்தும்போது அவர்களுடைய அறிவுரையில் பொதிந்துள்ள ஒப்பற்ற ஞானத்தைப் பார்க்கலாம், அல்லவா? “வெள்ளியைவிட ஞானமே மிகுநலன் தருவது; பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.”—நீதி. 3:13, 14, பொது மொழிபெயர்ப்பு.
9. பெற்றோருடைய தவறுகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்யலாம்?
9 உண்மைதான், பெற்றோரும் தவறு செய்கிறார்கள். (யாக். 3:2) உங்களைக் கண்டிக்கும்போது சில சமயங்களில் யோசிக்காமல் பேசிவிடலாம். (நீதி. 12:18) அவர்கள் அப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? அவர்கள் ஒருவேளை மனக்கஷ்டத்தில் இருக்கலாம் அல்லது உங்களைச் சரியாக வளர்க்காததால்தான் நீங்கள் தவறு செய்வதாக நினைக்கலாம். பெற்றோருடைய தவறுகளைப் பற்றியே நீங்கள் யோசித்துக் கொண்டிருக்காமல், உங்களுக்கு உதவ அவர்கள் விருப்பமுள்ளவர்களாய் இருப்பதற்காக நன்றியுடன் இருக்கலாம், அல்லவா? பெற்றோரின் கண்டிப்பை ஏற்றுக்கொண்டால் வளர்ந்த பிறகு அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
10. பெற்றோருடைய கண்டிப்பிலிருந்தும் சட்டங்களிலிருந்தும் நீங்கள் எப்படி அதிக பயனடையலாம்?
10 பெற்றோருடைய கண்டிப்பிலிருந்தும் சட்டங்களிலிருந்தும் அதிக பயனடைய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், அவர்களிடம் நல்ல விதத்தில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? முதலில் அவர்கள் சொல்வதைச் செவிகொடுத்து கேட்க வேண்டும். “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:19) நீங்கள் செய்வதுதான் சரியென்று முந்திக்கொண்டு பேசாமல், உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பிறகு, அவர்கள் சொன்னதைக் கேட்டு அதன் கருத்தை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் மரியாதையுடன் அவர்களிடம் திரும்பச் சொல்லுங்கள். அப்படிச் செய்யும்போது அவர்கள் சொன்னதைக் காதுகொடுத்து கேட்டீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வரும். நீங்கள் ஏன் அப்படிப் பேசினீர்கள் அல்லது செய்தீர்கள் என்று சொல்ல விரும்பினால் என்ன செய்யலாம்? அநேக சமயங்களில், பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடக்கும்வரை, உங்கள் ‘நாவை அடக்கிக்கொள்வது’ ஞானமான காரியம். (நீதி. 10:19, பொ.மொ.) அவர்கள் சொன்னதைக் கேட்டு நடக்கும்போதுதான் நீங்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் மனமுள்ளவர்களாய் இருப்பார்கள். இதுபோல பக்குவமாக நடந்துகொள்வது கடவுளுடைய வார்த்தையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
பணத்தைப் பயன்படுத்துவதில்
11, 12. (அ) பண விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் நமக்குச் சொல்கிறது, ஏன்? (ஆ) பணத்தைச் சரியாகப் பயன்படுத்த பெற்றோர் உங்களுக்கு எப்படி உதவலாம்?
11 “பணம் பாதுகாப்பு தரும்” என்று பைபிள் சொல்கிறது. ஆனால், ஞானம் அதைவிட மதிப்புமிக்கது என்று அதே வசனம் சொல்கிறது. (பிர. 7:12, NW) பணத்தின் அருமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் அதன்மீது ஆசைப்படக் கூடாது என்று அது நமக்குச் சொல்கிறது. நீங்கள் ஏன் பண ஆசையைத் தவிர்க்க வேண்டும்? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு நல்ல சமையல்காரரிடம் கூர்மையான கத்தி இருந்தால் அது அவருக்குப் பயன்படும். அதுவே சரியாகப் பயன்படுத்தத் தெரியாத ஒருவரிடம் இருந்தால் அது அவருக்கே ஆபத்தாகிவிடும். அதேபோல, பணத்தையும் சரியாகப் பயன்படுத்தினால் அது நன்மை தரும். “பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள்” பெரும்பாலும் நண்பர்களோடு, குடும்பத்தாரோடு, கடவுளோடு உள்ள உறவை இழந்துவிடுகிறார்கள். அதன் விளைவாக, “பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.
12 பணத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ளலாம்? எப்படி பட்ஜெட் போடுவது என்று உங்கள் பெற்றோரிடமே கேட்கலாம், அல்லவா? ‘புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைவான்’ என்று சாலொமோன் எழுதினார். (நீதி. 1:5) அனிதா என்ற இளம் பெண் தன் பெற்றோரிடம் இதே போல் ஆலோசனை கேட்டாள். “பட்ஜெட் போடுவது எப்படி, பணத்தைத் திட்டமிட்டு செலவழிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையெல்லாம் அப்பா சொல்லிக்கொடுத்தார்” என்று அவள் சொல்கிறாள். அவளுடைய அம்மாவும் நடைமுறையான சில ஆலோசனைகளைக் கொடுத்தார். “ஒரு பொருளை வாங்குவதற்குமுன் பல இடங்களில் விசாரிப்பது முக்கியம் என அம்மா சொல்லித்தந்தார்” என்றும் அவள் கூறுகிறாள். இது அனிதாவிற்கு எப்படி உதவியது? அவள் சொல்கிறாள்: “இப்போதெல்லாம் நான் பார்த்துச் செலவு செய்கிறேன். சிக்கனமாகச் செலவு செய்ய பழகிக்கொண்டதால், அநாவசியமாக எந்தக் கடன் தொல்லையிலும் மாட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்கிறேன்.”
13. பணத்தைச் செலவு செய்வதில் நீங்கள் எப்படி உங்களையே கட்டுப்படுத்திக்கொள்ளலாம்?
13 நீங்கள் இஷ்டத்திற்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பவர் என்றால், அல்லது நண்பர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகப் பணத்தைச் செலவழிப்பவர் என்றால், சீக்கிரத்தில் கடனில் மூழ்கிவிடுவீர்கள். இப்படிப்பட்ட கண்ணியில் சிக்கிவிடாதிருக்க எது உங்களுக்கு உதவும்? சிக்கனமாகச் செலவு செய்ய பழகிக்கொள்வது அவசியம். சுமார் 22 வயதுள்ள லதா இதையே செய்கிறாள். “நான் என்னுடைய ஃபிரெண்ட்ஸோடு வெளியில் போகும்போது, முன்கூட்டியே திட்டமிடுவேன்; எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கணக்கு வைத்துக்கொள்வேன். . . . அதோடு, பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்கிற ஃபிரண்ட்ஸோடு மட்டுமே போவேன்; எதையும் பார்த்த உடனே வாங்காமல் நாலு கடை ஏறி இறங்கி விசாரித்து வாங்குபவர்களையே அழைத்துச் செல்வேன்” என்று சொல்கிறாள்.
14. ‘செல்வத்தின் வஞ்சக சக்தியை’ குறித்து நீங்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
14 பணம் சம்பாதிப்பதும் அதைக் கவனமாகச் செலவு செய்வதும் வாழ்க்கையில் முக்கியம். என்றாலும், “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருக்கும்போதுதான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என இயேசு சொன்னார். (மத். 5:3) ஆன்மீக விஷயங்களில் ஒருவருக்கு இருக்கிற ஆர்வத்தை “செல்வத்தின் வஞ்சக சக்தி” நெருக்கிவிடும் என்று அவர் எச்சரித்தார். (மாற். 4:19) அப்படியானால், கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றி, பண விஷயத்தில் சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம்!
தனியாக இருக்கையில்
15. உங்களுடைய உத்தமத்தன்மை எப்போது அதிகமாகச் சோதிக்கப்படலாம்?
15 உங்களுடைய உத்தமத்தன்மை எப்போது அதிகமாகச் சோதிக்கப்படும்—மற்றவர்களோடு இருக்கும்போதா, தனிமையில் இருக்கும்போதா? பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ ஆன்மீக ரீதியில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். அப்போது, என்னென்ன சோதனைகள் வரலாம் என்பதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் தனிமையில் இருக்கும்போதும் ஜாக்கிரதையாக இல்லாதபோதும் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்வது கஷ்டமாகி விடலாம்.
16. தனிமையில் இருக்கும்போதுகூட நீங்கள் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
16 தனிமையில் இருக்கும்போதுகூட நீங்கள் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் யெகோவாவின் மனதை விசனப்படுத்தவோ சந்தோஷப்படுத்தவோ முடியும் என்பதை மனதில் வையுங்கள். (ஆதி. 6:5, 6; நீதி. 27:11) யெகோவா “உங்கள்மீது அக்கறையாக இருப்பதால்” உங்களுடைய செயல்கள் அவரைப் பாதிக்கும். (1 பே. 5:7) உங்களுடைய நன்மைக்காக நீங்கள் அவருக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார். (ஏசா. 48:17, 18) பூர்வ இஸ்ரவேலில் இருந்த யெகோவாவின் ஊழியர்கள் சிலர் அவர் கொடுத்த அறிவுரையைப் புறக்கணித்தது அவரது மனதுக்கு விசனமாயிருந்தது. (சங். 78:40, 41) மாறாக, தானியேல் தீர்க்கதரிசிமீது அவருக்கு அளவற்ற அன்பு இருந்தது; ஒரு தேவதூதர் அவரை “பிரியமான புருஷனாகிய தானியேலே” என்று அழைத்ததிலிருந்து இது தெரிகிறது. (தானி. 10:11) ஏன் அப்படி அழைத்தார்? மற்றவர்களுக்குமுன் மட்டுமல்ல, தனிமையில் இருக்கும்போதும் யெகோவாவுக்கு தானியேல் உண்மையுடன் இருந்தார்.—தானியேல் 6:10-ஐ வாசியுங்கள்.
17. பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
17 நீங்கள் தனிமையில் இருக்கும்போது உத்தமமாய் நிலைத்திருக்க வேண்டுமென்றால், ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய . . . பகுத்தறியும் திறன்களை’ வளர்த்துக்கொள்ள வேண்டும்; அதுமட்டுமல்ல, சரியானதைச் செய்வதற்கு அந்தத் திறன்களை ‘பயன்படுத்தி’ பயிற்றுவிக்கவும் வேண்டும். (எபி. 5:14) உதாரணமாக, கேட்க விரும்பும் இசை, பார்க்க விரும்பும் சினிமா, செல்ல விரும்பும் இன்டர்நெட் சைட் சரியானதா தவறானதா என்பதைக் கண்டுகொள்ள பின்வரும் கேள்விகள் உங்களுக்கு உதவலாம்: ‘மென்மையாக நடந்துகொள்ள அது என்னை உந்துவிக்குமா அல்லது “பிறருடைய இக்கட்டைப் பார்த்து” சந்தோஷப்பட வைக்குமா?’ (நீதி. 17:5 பொ.மொ.) ‘“நன்மையை விரும்ப” அது எனக்கு உதவுமா அல்லது “தீமையை வெறுப்பதை” கடினமாக்குமா?’ (ஆமோ. 5:15) தனிமையில் இருக்கும்போது செய்கிற காரியங்கள் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்திவிடும்.—லூக். 6:45.
18. தவறான நடத்தையில் நீங்கள் ரகசியமாக ஈடுபட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும், ஏன்?
18 தவறான நடத்தையில் நீங்கள் ரகசியமாக ஈடுபட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும்? “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்பதை மறந்துவிடாதீர்கள். (நீதி. 28:13) தவறான பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டு, ‘கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தி’ வருவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! (எபே. 4:30) நீங்கள் செய்கிற தவறைக் கடவுளுக்கும் பெற்றோருக்கும் முன்பு அறிக்கை செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால் நீங்கள் பயனடைவீர்கள். இந்த விஷயத்தில் ‘சபையின் மூப்பர்கள்’ உங்களுக்கு உதவி செய்ய முடியும். சீடராகிய யாக்கோபு இவ்வாறு சொன்னார்: “அவர்கள் யெகோவாவின் பெயரில் அவனுக்கு [தவறு செய்தவனுக்கு] எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் செய்யட்டும். விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும், யெகோவா அவனை எழுந்திருக்கச் செய்வார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.” (யாக். 5:14, 15) இதனால் நீங்கள் தர்மசங்கடம் அடையலாம் அல்லது ஏதாவது பின்விளைவுகளைச் சந்திக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் தைரியமாக உதவியை நாடினால் ஆன்மீகப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்; அதோடு, சுத்தமான மனசாட்சியினால் நிம்மதியும் அடைவீர்கள்.—சங். 32:1-5.
யெகோவாவின் இதயத்தைப் பூரிப்பாக்குங்கள்
19, 20. நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
19 யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்,” அதனால் நீங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். (1 தீ. 1:11) அவருக்கு உங்கள்மீது ஆழ்ந்த அக்கறை இருக்கிறது. சரியானதைச் செய்ய நீங்கள் எடுக்கிற முயற்சியை யார் பார்க்காவிட்டாலும் சரி, அவர் பார்க்கிறார். யெகோவாவின் பார்வையிலிருந்து எதுவுமே தப்பாது. அவர் குறை கண்டுபிடிப்பதற்காக அல்ல, சரியானதை செய்ய உதவுவதற்காகவே உங்களைப் பார்க்கிறார். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.—2 நா. 16:9.
20 எனவே, கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுங்கள்; அதன் ஆலோசனையைக் கடைப்பிடியுங்கள். அப்போது, முள்போன்ற பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு... முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு... தேவையான ஞானத்தையும் புத்தியையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். யெகோவாவையும் பெற்றோரையும் சந்தோஷப்படுத்துவீர்கள்; உங்கள் வாழ்விலும் சந்தோஷம் கரைபுரண்டோடும்.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• பெற்றோருடைய கண்டிப்பிலிருந்தும் சட்டங்களிலிருந்தும் பிள்ளைகள் எப்படி அதிக பயனடையலாம்?
• பணத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம் ஏன் முக்கியம்?
• தனிமையில் இருக்கும்போதும் நீங்கள் கடவுளுக்கு எப்படி உத்தமமாய் நிலைத்திருக்கலாம்?
[பக்கம் 6-ன் படம்]
நீங்கள் தனிமையில் இருக்கும்போதும் கடவுளுக்கு உத்தமமாய் நிலைத்திருப்பீர்களா?