வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
செப்டம்பர் 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 1-2
“தன்னுடைய முதல் அற்புதத்தை இயேசு செய்கிறார்”
கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்
3 கானா ஊரில் நடந்த ஒரு கல்யாண விருந்தில் இயேசு கலந்துகொண்டார். என்ன காரணமென்று தெரியவில்லை, அந்த விருந்தில் திராட்சமது தீர்ந்து போனது. விருந்திற்கு வருபவர்களை உபசரிப்பது புதுமண தம்பதியின் கடமையாக இருந்ததால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கும். அந்த விருந்திற்கு இயேசுவின் தாய் மரியாளும் வந்திருந்தார். இயேசுவைப் பற்றி சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை எல்லாம் மரியாள் பல வருடங்களாக யோசித்திருப்பார். அவர் “உன்னதமானவரின் மகன்” என்று அழைக்கப்படுவார் என்பதும் மரியாளுக்குத் தெரிந்திருந்தது. அதனால், இயேசு தம் வல்லமையைப் பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்று நினைத்து மரியாள் அவரிடம் உதவி கேட்டிருப்பாரா? (லூக். 1:30-32; 2:52) அது நமக்கு சரியாகத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: இயேசுவும் மரியாளும் அந்தத் தம்பதிக்கு உதவி செய்யவே விரும்பினார்கள். அதனால், இயேசு தம் முதல் அற்புதத்தை செய்தார். சுமார் 380 லிட்டர் தண்ணீரை ‘தரமான திராட்சமதுவாக’ மாற்றினார். (யோவான் 2:3, 6-11-ஐ வாசியுங்கள்.) இயேசு இந்த அற்புதத்தை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், அவர் ஏன் அதை செய்தார்? ஏனென்றால், அவருக்கு மக்கள்மீது அக்கறை இருந்தது. அதோடு, தம்முடைய அப்பாவைப் போலவே அவருக்கும் தாராள குணம் இருந்தது. அதனால்தான் அவர் அந்த அற்புதத்தை செய்தார்.
இயேசுவின் முதல் அற்புதம்
இதுதான் இயேசு செய்த முதல் அற்புதம். அந்த அற்புதத்தைப் பார்த்த பிறகு அவருடைய சீஷர்கள் அவர்மேல் இன்னும் அதிகமாக விசுவாசம் வைக்கிறார்கள். பிறகு, இயேசுவும் அவருடைய அம்மாவும் சகோதரர்களும் கலிலேயா கடலின் வடமேற்கு கரையில் இருக்கிற கப்பர்நகூம் என்ற நகரத்துக்குப் போகிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோவா 1:1-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
வார்த்தை என்பவர்: வே.வா., “லோகோஸ் என்பவர்.” கிரேக்கில், ஹோ லோகோஸ். இங்கே இது ஒரு பட்டப்பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. யோவா 1:14; வெளி 19:13 ஆகிய வசனங்களிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டப்பெயருக்குச் சொந்தமானவர் இயேசு என்பதை யோவான் சுட்டிக்காட்டினார். இயேசு மனிதராக வருவதற்கு முன்பு பரலோகத்தில் தேவதூதராக இருந்த சமயத்திலும் சரி, பரிபூரண மனிதராக இந்தப் பூமியில் ஊழியம் செய்த சமயத்திலும் சரி, பரலோகத்துக்குப் போன பிறகும் சரி, அவருக்கு இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு யெகோவாவின் வார்த்தையாக, அதாவது அவருடைய சார்பில் பேசுபவராக, இருந்தார்; யெகோவாவின் மகன்களாகிய மற்ற தூதர்களுக்கும், பூமியிலிருந்த மனிதர்களுக்கும் அவர் தகவல்களையும் அறிவுரைகளையும் தெரியப்படுத்தினார். அதனால், இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு அவர் மூலமாகத்தான் யெகோவா மனிதர்களோடு பேசினார் என்ற முடிவுக்கு நாம் வருவது நியாயமானது; அதாவது, இயேசுதான் கடவுளுடைய வார்த்தையாக, கடவுளுடைய சார்பில் பேசும் தேவதூதராக இருந்தார் என்ற முடிவுக்கு நாம் வருவது நியாயமானது.—ஆதி 16:7-11; 22:11; 31:11; யாத் 3:2-5; நியா 2:1-4; 6:11, 12; 13:3.
கடவுளோடு: இந்த வசனத்தில், ப்ரோஸ் என்ற கிரேக்க முன்னிடைச் சொல் (preposition) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நெருங்கிய பந்தத்தையும் நட்பையும் குறிக்கிறது. அதோடு, தனித்தனி நபர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக இந்த வசனத்தில், வார்த்தையாகிய இயேசுவையும் ஒரே உண்மையான கடவுளையும் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்: நே.மொ., “அந்த வார்த்தை ஒரு தேவனாக இருந்தது.” வே.வா., “அந்த வார்த்தை ஒரு தேவனைப் போல இருந்தது.” இந்தச் சொற்றொடரில், ‘வார்த்தையாகிய’ (கிரேக்கில், ஹோ லோகோஸ்; வார்த்தை என்பவர் என்ற ஆராய்ச்சிக் குறிப்பை மேலே பாருங்கள்) இயேசு கிறிஸ்துவின் ஒரு பண்பை யோவான் விவரிக்கிறார். கடவுளுடைய முதல் மகனாக இருப்பதால் இயேசு மிக முக்கியமானவராக இருக்கிறார். அவர் மூலமாகத்தான் கடவுள் மற்ற எல்லாவற்றையும் படைத்தார். அதனால், இயேசுவை “ஒரு தேவன்; ஒரு தேவனைப் போன்றவர்; தெய்வீகத்தன்மை உள்ளவர்; தெய்வீகமானவர்” என்றெல்லாம் அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் அவரைச் சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமாக்கி, “அந்த வார்த்தை கடவுளாகவே இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், ‘அந்த வார்த்தையும்’ சர்வவல்லமையுள்ள கடவுளும் ஒருவர்தான் என்று யோவான் சொல்லவில்லை; நாம் இந்த முடிவுக்கு வருவதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்தச் சொற்றொடருக்கு முன்னால் வரும் சொற்றொடரும் சரி, பின்னால் வரும் சொற்றொடரும் சரி, “அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்” என்று தெளிவாகச் சொல்கின்றன. அதோடு, தியாஸ் என்ற கிரேக்க வார்த்தை 1-ஆம் வசனத்திலும் 2-ஆம் வசனத்திலும் மூன்று தடவை வருகிறது. முதல் தடவையும் மூன்றாவது தடவையும், இந்தக் கிரேக்க வார்த்தைக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் (definite article) வருகிறது. ஆனால், இரண்டாவது தடவை, எந்தச் சுட்டிடைச்சொல்லும் (article) கொடுக்கப்படவில்லை. இரண்டாவது தடவை எந்தச் சுட்டிடைச்சொல்லும் கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது என்று நிறைய அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இந்த வசனங்களில், தியாஸ் என்ற வார்த்தைக்குச் சுட்டிடைச்சொல் பயன்படுத்தப்படும்போது அது சர்வவல்லமையுள்ள கடவுளைக் குறிக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு இலக்கண நடையில் எழுதப்பட்ட சொற்றொடரில் சுட்டிடைச்சொல் இல்லாதிருப்பது, ‘வார்த்தை என்பவரின்’ பண்பைக் குறிக்கிறது. அதனால், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் உள்ள நிறைய பைபிள்கள், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் போலவே இந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்கின்றன; அதாவது, “வார்த்தை என்பவர்” ‘ஒரு தேவனாக; ஒரு தேவனைப் போன்றவராக; தெய்வீகத்தன்மை உள்ளவராக; தெய்வீகமானவராக’ இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கின்றன. காப்டிக் கிளைமொழிகளில் (சாஹிடிக், பொஹாய்ரிக் என்ற கிளைமொழிகளில்) உள்ள யோவானின் சுவிசேஷப் புத்தகத்துடைய பழங்கால மொழிபெயர்ப்புகள் இதை ஆதரிக்கின்றன. அநேகமாக, கி.பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட இந்த மொழிபெயர்ப்புகள், யோவா 1:1-ல் தியாஸ் என்ற வார்த்தையை முதல் தடவை ஒரு விதமாகவும், இரண்டாவது தடவை இன்னொரு விதமாகவும் மொழிபெயர்த்திருக்கின்றன. இரண்டாவது இடத்தில் இந்த மொழிபெயர்ப்புகள், ‘வார்த்தை என்பவரின்’ பண்பைச் சிறப்பித்துக் காட்டுகின்றன; அதாவது, அவர் கடவுளைப் போன்ற இயல்புள்ளவராக இருந்தார் என்பதைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. ஆனால், அவர் சர்வவல்லமையுள்ள கடவுளாகிய பரலோகத் தகப்பனுக்குச் சமமாக இருந்தார் என்று அவை சொல்வதில்லை. இந்த வசனத்துக்கு இசைவாக, கிறிஸ்துவிடம் “தெய்வீகப் பண்புகள் முழு நிறைவாகக் குடிகொண்டிருக்கின்றன” என்று கொலோ 2:9 சொல்கிறது. அதோடு, கிறிஸ்துவின் சக வாரிசுகள்கூட ‘தெய்வீகத்தன்மையைப் பெறுவார்கள்’ என்று 2 பே 1:4 சொல்கிறது. அதுமட்டுமல்ல, “கடவுள்” என்று மொழிபெயர்க்கப்படும் ஏல், ஏலோஹிம் என்ற எபிரெய வார்த்தைகளுக்கு தியாஸ் என்ற கிரேக்க வார்த்தையைத்தான் செப்டுவஜன்ட் பொதுவாகப் பயன்படுத்தியிருக்கிறது. அந்த எபிரெய வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம், “வல்லமையுள்ள ஒருவர்; பலம்படைத்த ஒருவர்” என்று நம்பப்படுகிறது. அந்த எபிரெய வார்த்தைகள் சர்வவல்லமையுள்ள கடவுளையும், மற்ற கடவுள்களையும், மனுஷர்களையும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வார்த்தை என்பவரை ‘ஒரு கடவுள்’ என்றோ, ‘வல்லமையுள்ள ஒருவர்’ என்றோ அழைப்பது ஏசா 9:6-ல் உள்ள தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக இருக்கும்; (“சர்வவல்லமையுள்ள கடவுள்” என்றல்ல) “வல்லமையுள்ள கடவுள்” என்று மேசியா அழைக்கப்படுவார் என்றும், அவருடைய ஆட்சியில் வாழும் பாக்கியத்தைப் பெறுகிற எல்லாருக்கும் ‘என்றென்றுமுள்ள தகப்பனாக’ இருப்பார் என்றும் அந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. அவருடைய தகப்பனுடைய, அதாவது “பரலோகப் படைகளின் யெகோவாவுடைய” வைராக்கியம் இதை நிறைவேற்றும்.—ஏசா 9:7.
யோவா 1:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி: இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, பிசாசினால் சோதிக்கப்பட்டார்; அவர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது யோவான் ஸ்நானகர் அவரைப் பார்த்து, “இதோ, . . . கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் இந்த வசனத்திலும் யோவா 1:36-லும் மட்டும்தான் காணப்படுகின்றன. (இணைப்பு A7-ஐப் பாருங்கள்.) இயேசுவை ஆட்டுக்குட்டி என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், பாவத்தைப் போக்குவதற்காகவும் கடவுளை அணுகுவதற்காகவும் ஆடுகள் பலி செலுத்தப்பட்டதாக நிறைய வசனங்கள் சொல்கின்றன. மனிதர்களுக்காக இயேசு தன்னுடைய பரிபூரண மனித உயிரைப் பலி செலுத்தியதற்கு அது அடையாளமாக இருந்தது. “கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி” என்ற வார்த்தைகள், பைபிளில் இருக்கும் பல வசனங்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கலாம். யோவான் ஸ்நானகர் எபிரெய வேதாகமத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால், அவருடைய வார்த்தைகள் பின்வரும் விஷயங்களில் ஒன்றையோ பலவற்றையோ மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கலாம்: ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்குக்குப் பதிலாகப் பலி செலுத்திய செம்மறியாட்டுக் கடா (ஆதி 22:13); அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதற்காக எகிப்தில் பலி செலுத்தப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி (யாத் 12:1-13); அல்லது, எருசலேமில் ஒவ்வொரு நாள் காலையிலும் சாயங்காலத்திலும் கடவுளுடைய பலிபீடத்தில் செலுத்தப்பட்ட செம்மறியாட்டுக் கடாக் குட்டி (யாத் 29:38-42). ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை மனதில் வைத்துக்கூட யோவான் இதைச் சொல்லியிருக்கலாம்; “என் ஊழியர்” என்று யெகோவாவினால் அழைக்கப்படுகிறவர் “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போல” இருப்பதாக அந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஏசா 52:13; 53:5, 7, 11) அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், இயேசுவை “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி” என்று குறிப்பிட்டார். (1கொ 5:7) “மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலைமதிப்புள்ள இரத்தத்தால்” நாம் விடுவிக்கப்பட்டு இருப்பதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1பே 1:19) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை ‘ஆட்டுக்குட்டியானவர்’ என்று 25 தடவைக்கும் அதிகமாக வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது.—சில உதாரணங்கள்: வெளி 5:8; 6:1; 7:9; 12:11; 13:8; 14:1; 15:3; 17:14; 19:7; 21:9; 22:1.
செப்டம்பர் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 3-4
“சமாரியப் பெண்ணிடம் இயேசு சாட்சி கொடுக்கிறார்”
யோவா 4:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
களைப்பாக இருந்ததால்: பைபிளிலேயே இந்த வசனத்தில் மட்டும்தான், இயேசு ‘களைப்பாக இருந்தார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது நண்பகல் சுமார் 12 மணியாக இருந்தது. அன்று காலையில் இயேசு அநேகமாக, யூதேயாவிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து சமாரியாவிலுள்ள சீகாருக்குப் பயணம் செய்திருந்தார்; அந்தப் பாதை செங்குத்தாக இருந்தது. ஏனென்றால், சீகார் 900 மீ. (3,000 அடி) அல்லது அதற்கும் அதிக உயரத்தில் இருந்தது.—யோவா 4:3-5; இணைப்பு A7-ஐப் பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோவா 3:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மணமகனின் தோழன்: பைபிள் காலங்களில், மணமகனுக்கு நன்றாகப் பழக்கப்பட்ட ஒருவர், சட்டப்படி செய்ய வேண்டிய விஷயங்களை மணமகனின் சார்பாகச் செய்வார். திருமண ஏற்பாடுகளை அவர்தான் முன்நின்று செய்வார். மணமகனையும் மணமகளையும் அவர்தான் சேர்த்து வைத்ததாகக் கருதப்பட்டது. கல்யாண நாளில், கல்யாண ஊர்வலம் மணமகனின் வீடுவரை அல்லது மணமகனின் அப்பாவுடைய வீடுவரை போகும். அங்குதான் கல்யாண விருந்து கொடுக்கப்படும். அந்த விருந்தின்போது, மணமகளோடு மணமகன் பேசுவதைக் கேட்டு மணமகனின் தோழன் சந்தோஷப்படுவார்; ஏனென்றால், தன் கடமையை நன்றாகச் செய்து முடித்த திருப்தி அவருக்கு இருக்கும். யோவான் ஸ்நானகர் தன்னை ‘மணமகனின் தோழனுக்கு’ ஒப்பிட்டுப் பேசினார். இந்த உவமையில், இயேசுதான் மணமகன், இயேசுவின் சீஷர்கள்தான் மணமகள் வகுப்பு. மேசியாவுக்கு வழியைத் தயார்படுத்தும் விதத்தில், ‘மணமகள்’ வகுப்பின் முதல் அங்கத்தினர்களை யோவான் ஸ்நானகர் இயேசு கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். (யோவா 1:29, 35; 2கொ 11:2; எபே 5:22-27; வெளி 21:2, 9) “மணமகனின் தோழன்” மணமகனையும் மணமகளையும் நல்லபடியாகச் சேர்த்து வைப்பதன் மூலம் தன் குறிக்கோளை நிறைவேற்றினார். அதன் பிறகு அவருக்கு எந்தவொரு முக்கியமான பொறுப்பும் இருக்கவில்லை. அதனால்தான், “அவருடைய [இயேசுவுடைய] செயல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்க வேண்டும், ஆனால் என்னுடைய செயல்கள் குறைந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று யோவான் ஸ்நானகர் சொன்னார்.—யோவா 3:30.
யோவா 4:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
வாழ்வு தரும் தண்ணீரை: நே.மொ., “உயிருள்ள தண்ணீரை.” இதற்கான கிரேக்க வார்த்தைகள், தொட்டியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் குறிப்பதில்லை; அதற்குப் பதிலாக, ஆற்றுத் தண்ணீரையோ ஊற்றுத் தண்ணீரையோ கிணற்றில் ஊற்றெடுக்கும் நன்னீரையோ குறிக்கின்றன. லேவி 14:5-ல் ‘ஊற்றுநீர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைகளின் நேரடி அர்த்தம், “உயிருள்ள தண்ணீர்.” எரே 2:13; 17:13 ஆகிய வசனங்களில், யெகோவா ‘வாழ்வு தரும் நீருற்றாக’ இருக்கிறார் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சமாரியப் பெண்ணோடு பேசியபோது, ‘வாழ்வு தரும் தண்ணீரை’ பற்றி அடையாள அர்த்தத்தில் சொன்னார். ஆனால் யோவா 4:11 காட்டுகிறபடி, அவர் நிஜமான தண்ணீரைப் பற்றிச் சொன்னதாக அந்தப் பெண் முதலில் நினைத்துக்கொண்டாள்.
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
wp16.2-E 9 ¶1-4
கிறிஸ்தவர்கள் புனித ஸ்தலங்களில் கடவுளை வணங்க வேண்டுமா?
இயேசு தொடர்ந்து இப்படிச் சொன்னார்: “உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப்போகிற நேரம் வருகிறது, அது ஏற்கெனவே வந்துவிட்டது. சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்.“ (யோவான் 4:23) பல நூற்றாண்டுகளாக, யூதர்கள் எருசலேமிலிருந்த பிரமாண்டமான ஆலயத்தைத்தான் தங்களுடைய வணக்கத்தின் மைய இடமாகக் கருதினார்கள். தங்கள் கடவுளான யெகோவாவுக்குப் பலி செலுத்துவதற்காக அவர்கள் வருஷத்துக்கு மூன்று முறை அங்கே போனார்கள். (யாத்திராகமம் 23:14-17) ஆனால், இவையெல்லாம் மாறிவிடும் என்றும், “உண்மை வணக்கத்தார்“ கடவுளுடைய “சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்“ அவரை வணங்குவார்கள் என்றும் இயேசு சொன்னார்.
யூதர்களுடைய ஆலயம் ஓர் உறுதியான கட்டிடமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தது. ஆனால், சக்தியும் சத்தியமும் அப்படிக் கிடையாது, அவை ஒரு கட்டிடத்திலோ குறிப்பிட்ட ஓர் இடத்திலோ இருக்க முடியாது. இதன் மூலம் இயேசு என்ன சொன்னார்? உண்மை வணக்கத்துக்கு ஒரு மைய இடம் என்று ஒன்று இருக்காது, அது ஒரு கட்டிடத்தையோ குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, அதாவது, கெரிசீம் மலையையோ எருசலேமிலிருந்த ஆலயத்தையோ அல்லது அது போன்ற வேறு புனித ஸ்தலங்களையோ சார்ந்து இருக்காது என்றுதான் இயேசு சொன்னார்.
சமாரியப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கடவுளை வணங்கும் விதத்தில் இப்படிப்பட்ட மாற்றம் ஏற்படுவதற்கான “நேரம் வருகிறது“ என்றும் இயேசு சொன்னார். அது எப்போது வந்தது? இயேசு தன்னுடைய உயிரைத் தியாகம் செய்ததன் மூலம், மோசேயின் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட யூதர்களின் வணக்க முறையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது அந்த நேரம் வந்தது. (ரோமர் 10:4) அதோடு, “நேரம் . . . வந்துவிட்டது” என்றும் இயேசு சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால், இயேசு மேசியாவாக தன்னுடைய சீஷர்களை ஏற்கெனவே கூட்டிச்சேர்த்துக்கொண்டிருந்தார். “கடவுள் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார். அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்” என்று அவர் கொடுத்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியவிருந்தார்கள். (யோவான் 4:24) அப்படியென்றால், சக்தியோடும் சத்தியத்தோடும் வணங்குவது என்றால் என்ன என்பதைப் பற்றி இப்போது கவனிக்கலாம்.
சக்தியோடு வணங்குவது என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? ஆவேசமாகவோ உணர்ச்சி பொங்கவோ கடவுளை வணங்குவதைப் பற்றி அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டு அவரை வணங்குவதைப் பற்றித்தான் அவர் சொன்னார். இந்தச் சக்தி நம்மைப் பல விதங்களில் வழிநடத்துவதோடு, வேதவசனங்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. (1 கொரிந்தியர் 2:9-12) சத்தியம் என்று இயேசு குறிப்பிட்டபோது, பைபிள் போதனைகளின் திருத்தமான அறிவைப் பற்றியே அவர் சொன்னார். அப்படியென்றால், நாம் என்ன முடிவுக்கு வரலாம்? ஏதோ ஒரு விசேஷ இடத்தில் கடவுளை வணங்குவதற்குப் பதிலாக, பைபிள் போதனைகளுக்கு இசைவாகவும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடும் நாம் கடவுளை வணங்க வேண்டும்; இப்படிப்பட்ட வணக்கத்தையே கடவுள் ஏற்றுக்கொள்கிறார்.
செப்டம்பர் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 5-6
“சரியான உள்நோக்கத்தோடு இயேசுவைப் பின்பற்றுங்கள்”
யோவா 6:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்: இந்த அற்புதத்தைப் பற்றிச் சொல்லும்போது, மத்தேயுவின் பதிவு மட்டும்தான் “பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர” என்று சொல்கிறது. (மத் 14:21) அற்புதமாக உணவு அளிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,000-க்கும் அதிகமாக இருந்திருக்கலாம்.
யோவா 6:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
தீர்க்கதரிசி: உபா 18:15, 18-ல் சொல்லப்பட்டுள்ளபடி, மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசிதான் மேசியாவாக இருப்பார் என்று கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த நிறைய யூதர்கள் நினைத்தார்கள். இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி என்ற வார்த்தைகள், மேசியா வரவிருந்ததைக் குறித்ததாகத் தெரிகிறது. இந்த வசனத்தில் உள்ள சம்பவங்களை யோவான் மட்டும்தான் பதிவு செய்திருக்கிறார்.
யோவா 6:27, 54-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே: ஏதோ ஆதாயத்துக்காகத்தான் சிலர் தன்னோடும் தன் சீஷர்களோடும் பழகினார்கள் என்பதை இயேசு புரிந்துகொண்டார். நிஜமான உணவு எப்படி மக்களின் உயிரைத் தினமும் பாதுகாக்குமோ, அப்படித்தான் கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆன்மீக உணவு என்றென்றும் வாழ மனிதர்களுக்கு உதவும். ‘முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காக பாடுபடும்படி’ இயேசு மக்களை உற்சாகப்படுத்தினார். அதாவது, தங்களுடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்யவும், கற்றுக்கொண்ட விஷயங்களில் விசுவாசம் வைக்கவும் முயற்சி எடுக்க வேண்டுமென்று உற்சாகப்படுத்தினார்.—மத் 4:4; 5:3; யோவா 6:28-39.
என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு: இங்கே சொல்லப்படுகிறவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் அடையாள அர்த்தத்தில் அவருடைய சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்கிறார்கள். (யோவா 6:35, 40) இயேசு இந்த வார்த்தைகளை கி.பி. 32-ல் சொன்னார். அதனால், எஜமானின் இரவு விருந்தைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கவில்லை; அதை ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் அவர் ஆரம்பித்து வைத்தார். அப்படியென்றால், இந்த வார்த்தைகளை ‘யூதர்களுடைய பஸ்கா பண்டிகைக்கு’ கொஞ்சம் முன்புதான் சொன்னார். (யோவா 6:4) அதனால், வரவிருந்த பஸ்கா பண்டிகையையும், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த இரவில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் உயிர்களைக் காப்பாற்றிய விதத்தையும் இந்த வார்த்தைகள் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும் (யாத் 12:24-27). தன் சீஷர்கள், ‘முடிவில்லாத வாழ்வை’ பெறுவதில் தன் இரத்தம் முக்கியமான பங்கு வகிக்கும் என்பதை இயேசு இங்கே வலியுறுத்தினார்.
நம் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நடப்போம்
13 இருந்தாலும், யோவான் சொல்வது போல, ஜனங்கள் விடாமல் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்று, “அக்கரையிலே” அவரைக் கண்டுபிடித்தார்கள். ராஜாவாக்குவதற்கு அவர்கள் செய்த முயற்சியை அவர் தவிர்த்தும் ஏன் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்? அவர்களில் பலர், மோசேயின் நாளிலே வனாந்தரத்தில் யெகோவா உணவளித்ததைச் சுட்டிக்காட்டியதன் மூலம் தங்கள் மனித கண்ணோட்டத்தை வெளிக்காட்டினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு இயேசு உணவளிக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக தெரிவித்தார்கள். அவர்களுடைய தவறான நோக்கங்களை உணர்ந்து, அவர்களுடைய எண்ணத்தை சரிசெய்ய ஆவிக்குரிய சத்தியங்களை அவர் போதிக்க ஆரம்பித்தார். (யோவான் 6:17, 24, 25, 30, 31, 35-40) அதனால் சிலர் முறுமுறுத்தார்கள், முக்கியமாக பின்வரும் உவமையை சொன்னபோது முறுமுறுத்தார்கள்: “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்.”—யோவான் 6:53, 54.
14 பெரும்பாலும் இயேசுவின் உவமைகள், ஜனங்கள் உண்மையிலேயே கடவுளோடு நடக்க விரும்புகிறார்களா என்பதை வெளிக்காட்டத் தூண்டின. இந்த உவமையும் அதற்கு விதிவிலக்கல்ல. இது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கிளறியது. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.” தாம் சொன்ன வார்த்தைகளில் புதைந்துள்ள ஆவிக்குரிய அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென இயேசு விளக்கினார். “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” என்று அவர் கூறினார். (யோவான் 6:63) இருந்தாலும், அநேகர் செவிசாய்க்கவில்லை. அந்தப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.”—யோவான் 6:60, 63, 66.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோவா 6:44-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
ஒருவனை ஈர்க்காவிட்டால்: ‘ஈர்ப்பது’ என்பதற்கான கிரேக்க வினைச்சொல், மீன்கள் நிறைந்த வலையை இழுப்பதைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் (யோவா 21:6, 11), மக்களை வலுக்கட்டாயமாகக் கடவுள் இழுக்கிறார் என்பதை அர்த்தப்படுத்தாது. இந்த வினைச்சொல், ‘கவருவது’ என்ற அர்த்தத்தையும் தரும். அதனால், இயேசுவின் வார்த்தைகள் எரே 31:3-ல் உள்ள வார்த்தைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டலாம். அந்த வசனத்தில், “என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்” என்று அன்றிருந்த தன் மக்களிடம் யெகோவா சொன்னார். (அதே கிரேக்க வார்த்தையைத்தான் இங்கே செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது.) அதேபோல் இயேசுவும் எல்லா விதமான மக்களையும் தன்னிடம் ஈர்க்கிறார் என்பதை யோவா 12:32 காட்டுகிறது. பைபிளின்படி, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை மனிதர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். அவருக்குச் சேவை செய்வதா வேண்டாமா என்பதை அவரவர் முடிவு செய்யலாம். (உபா 30:19, 20) சரியான மனப்பான்மையோடு இருப்பவர்களைக் கடவுள் மென்மையாகத் தன் பக்கத்தில் இழுக்கிறார். (சங் 11:5; நீதி 21:2; அப் 13:48) பைபிளிலுள்ள செய்தியின் மூலமாகவும் தன்னுடைய சக்தியின் மூலமாகவும் அவர் இதைச் செய்கிறார். ஏசா 54:13-ல் உள்ள தீர்க்கதரிசனம், அதாவது யோவா 6:45-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ள தீர்க்கதரிசனம், பரலோகத் தகப்பனால் ஈர்க்கப்படுகிறவர்களைப் பற்றிச் சொல்கிறது.—யோவா 6:65-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
யோவா 6:64-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் யார் என்றும் இயேசுவுக்கு . . . தெரிந்திருந்ததால்: யூதாஸ் இஸ்காரியோத்தைப் பற்றி இயேசு சொல்லிக்கொண்டிருந்தார். இயேசு தன்னுடைய 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முந்தின இரவு முழுவதும் தன் தகப்பனிடம் ஜெபம் செய்தார். (லூ 6:12-16) அப்படியென்றால், யூதாஸ் ஆரம்பத்தில் கடவுளுக்கு உண்மையுள்ளவனாக இருந்திருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நெருங்கிய நண்பனே தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதை எபிரெய வேதாகமத்தில் இருந்த தீர்க்கதரிசனங்களின் மூலம் இயேசு தெரிந்துவைத்திருந்தார். (சங் 41:9; 109:8; யோவா 13:18, 19) யூதாஸ் கெட்டவனாக மாற ஆரம்பித்தபோதே, இயேசு அதைக் கண்டுபிடித்துவிட்டார்; ஏனென்றால், மற்றவர்களுடைய மனதில் இருந்த எண்ணங்களையும் இதயத்தில் இருந்த உணர்ச்சிகளையும் அவரால் தெரிந்துகொள்ள முடிந்தது. (மத் 9:4) எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் திறன் கடவுளுக்கு இருப்பதால், இயேசுவின் நெருங்கிய நண்பனே அவருக்குத் துரோகம் செய்வான் என்பதைக் கடவுள் முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார். ஆனால், கடவுளுடைய குணங்களையும் அவர் நடந்துகொண்ட விதங்களையும் யோசித்துப் பார்க்கும்போது, யூதாஸ்தான் துரோகம் செய்ய வேண்டுமென்று அவர் முன்கூட்டியே தீர்மானித்திருக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆரம்பத்திலிருந்தே: இந்த வார்த்தை, யூதாஸ் பிறந்த சமயத்தைக் குறிப்பதில்லை. அப்போஸ்தலனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தையும் இது குறிப்பதில்லை; ஏனென்றால், ராத்திரி முழுவதும் ஜெபம் செய்துவிட்டுத்தான் இயேசு தன் அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். (லூ 6:12-16) அதனால், “ஆரம்பத்திலிருந்தே” என்ற வார்த்தை, யூதாஸ் துரோகம் செய்ய ஆரம்பித்த சமயத்தைக் குறிக்கிறது; அதை இயேசு உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டார். (யோவா 2:24, 25; வெளி 1:1; 2:23) யூதாஸ் திடீரென்று மனம் மாறவில்லை என்பதையும் இந்த வார்த்தை காட்டுகிறது; அவன் முன்கூட்டியே யோசித்து, திட்டம்போட்டுதான் துரோகம் செய்தான். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், ‘ஆரம்பம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் (ஆர்க்கீ) அர்த்தம் அந்தந்த வசனத்தின் சூழமைவைப் பொறுத்து மாறுகிறது. உதாரணத்துக்கு, 2பே 3:4-ல் உலகம் “உண்டான [ஆரம்பமான]” காலத்தை அது குறிக்கிறது. ஆனால், பெரும்பாலான வசனங்களில் பொதுப்படையான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, “கடவுளுடைய சக்தி முதலில் [ஆரம்பத்தில்] நம்மேல் எப்படிப் பொழியப்பட்டதோ” அப்படியே மற்ற தேசத்தார்மேலும் பொழியப்பட்டது என்று பேதுரு சொன்னார். (அப் 11:15) தான் பிறந்த சமயத்தைப் பற்றியோ அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தைப் பற்றியோ பேதுரு சொல்லவில்லை. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகக் கடவுள் தன் சக்தியைப் பொழிய ஆரம்பித்த சமயத்தைப் பற்றியே அவர் சொல்லிக்கொண்டிருந்தார். (அப் 2:1-4) ‘ஆரம்பம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை அந்தந்த சூழமைவைப் பொறுத்து எப்படி வித்தியாசமான அர்த்தத்தைத் தரலாம் என்பதற்கு மற்ற உதாரணங்கள்: லூ 1:2; யோவா 15:27; 1யோ 2:7.
செப்டம்பர் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 7-8
“தன்னுடைய தகப்பனை இயேசு மகிமைப்படுத்தினார்”
“எழுதப்பட்டிருக்கிறது”
5 தாம் சொல்லும் செய்தி யாருடையது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார். எனவேதான், “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்றார். (யோவான் 7:16) மற்றொரு சமயம் இவ்வாறு சொன்னார்: ‘நான் எதையும் சுயமாகச் செய்வதில்லை, தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன்.’ (யோவான் 8:28) “நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சுயமாகச் சொல்லவில்லை; என்னோடு ஒன்றுபட்டிருக்கும் என் தகப்பனே தமது செயல்களை என் மூலமாகச் செய்து வருகிறார்” என்றும் சொன்னார். (யோவான் 14:10) இந்தக் கூற்றுகள் உண்மை என்பதை நிரூபிக்க அவர் பயன்படுத்திய ஒரு வழி, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டியதாகும்.
6 இயேசுவின் வார்த்தைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், எபிரெய வேதாகமத்தின் பாதிக்கும் அதிகமான புத்தகங்களிலிருந்து (அதாவது, அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களிலிருந்து) நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் மேற்கோள் காட்டினார் என்பதைத் தெரிந்துகொள்வோம். இது உங்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம், ‘அவர்தான் மூன்றரை வருஷம் போதித்தாரே, அப்படியென்றால் எல்லா புத்தகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாமே?’ ஒருவேளை, அப்படி அவர் காட்டியும் இருந்திருக்கலாம். ஆனால், இயேசு சொன்ன... செய்த... காரியங்களில் கடுகளவுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். (யோவான் 21:25) சொல்லப்போனால், பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் சப்தமாக வாசிக்க உங்களுக்குச் சில மணிநேரங்களே எடுக்கும். இப்போது, கடவுளைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் நீங்கள் சில மணிநேரங்களே பேசுவதாக கற்பனை செய்து பாருங்கள்; அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் எபிரெய வேதாகமத்தில் பாதிக்கும் அதிகமான புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது சாதாரண விஷயம் என்று நினைக்கிறீர்களா? அதுமட்டுமல்ல, இயேசு பெரும்பாலான சமயங்களில் சுருள்கள் எதுவும் இல்லாமலேயே பேசினார். பிரபலமான மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தபோது எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏராளமான மேற்கோள்களைக் காட்டினார்—எல்லாமே மனப்பாடமாக!
உலகத்தின் சிந்தையை அல்ல, கடவுளுடைய சக்தியைப் பெறுங்கள்
19 யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியுங்கள். இயேசு தம்முடைய தகப்பனுக்குப் பிரியமானவற்றையே எப்போதும் செய்தார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பதில் இயேசுவின் கருத்து அவருடைய தகப்பனுடைய கருத்திலிருந்து வேறுபட்டிருந்தது. என்றாலும் தம்முடைய தகப்பனிடம், “என் சித்தத்தின்படி அல்ல, உங்களுடைய சித்தத்தின்படியே நடக்கட்டும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார். (லூக். 22:42) எனவே, ‘எனக்குக் கஷ்டமாக இருந்தால்கூட நான் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்வைப் பெற நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிவது மிக முக்கியம். அவர் நம் படைப்பாளர், நம் உயிரின் ஊற்றுமூலர், நம்மை பராமரிப்பவர்; எனவே, அவருக்கு முழுமையாய்க் கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். (சங். 95:6, 7) கீழ்ப்படிதலுக்கு இணை வேறேதுமில்லை. கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க அது மிக முக்கியம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஏன் உண்மை பேச வேண்டும்?
இவ்விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவை விசுவாசிக்காத சிலர் அவருடைய பயணத் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்கள். “இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்” என்று அவர்கள் இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு அவர் எப்படிப் பதில் அளித்தார்? “நீங்கள் [எருசலேமில் நடக்கும்] இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை.” அதன் பிறகு விரைவிலேயே, இயேசு பண்டிகையில் கலந்துகொள்ள எருசலேமுக்குச் சென்றார். பிறகு, ஏன் அவர்களிடம் இயேசு அவ்வாறு பதில் அளித்தார்? அவர் இருக்கும் இடத்தைப்பற்றித் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. இயேசு அவர்களிடம் பொய் சொல்லவில்லை, அதேசமயத்தில் எல்லா தகவல்களையும் சொல்லவும் இல்லை. தமக்கோ தம் சீஷர்களுக்கோ அவர்கள் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவே அவ்வாறு சொன்னார். இது ஒரு பொய் அல்ல. ஏனெனில், கிறிஸ்துவைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினார்: “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.”—யோவான் 7:1-13; 1 பேதுரு 2:22.
யோவா 8:58-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
நான் இருந்திருக்கிறேன்: ‘ஆபிரகாமைப் பார்த்ததாக’ இயேசு சொன்னதால் யூத எதிரிகள் அவர்மேல் கல்லெறிய நினைத்தார்கள்; இன்னும் 50 வயதுகூட ஆகாதபோது ஆபிரகாமை எப்படிப் பார்த்திருக்க முடியும் என்று கேட்டார்கள். (யோவா 8:57) அப்போது இயேசு, ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே பரலோகத்தில் வல்லமையுள்ள ஒரு தேவதூதராக தான் இருந்ததைப் பற்றி அவர்களிடம் சொன்னார். இயேசுதான் கடவுள் என்று இந்த வசனம் காட்டுவதாகச் சிலர் சொல்கிறார்கள். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளான ஈகோ ஈமீ (“நான் இருக்கிறேன்” என்று சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன), யாத் 3:14-ன் செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பை (“இருக்கிறேன்” என்று கடவுள் தன்னைப் பற்றிச் சொல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள்; இந்த இரண்டு வசனங்களையும் ஒரேபோல் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்தச் சூழமைவில், ஈமீ என்ற கிரேக்க வினைச்சொல்லினால் சுட்டிக்காட்டப்படும் செயல், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே” ஆரம்பமாகியிருந்தது, தொடர்ந்து நடந்துகொண்டும் இருந்தது. அதனால், “நான் இருக்கிறேன்” என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, “நான் இருந்திருக்கிறேன்” என்று மொழிபெயர்ப்பதுதான் சரியாக இருக்கும். நிறைய பழங்கால மொழிபெயர்ப்புகளிலும் நவீனகால மொழிபெயர்ப்புகளிலும்கூட, “நான் இருந்திருக்கிறேன்” என்பதைப் போன்ற வார்த்தைகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால், ஈமீ என்ற கிரேக்க வினைச்சொல்லின் அதே வடிவம்தான் யோவா 14:9-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் [வே.வா., இருந்திருந்தும்] நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா?” என்று இயேசு கேட்டதாக அந்த வசனம் சொல்கிறது. பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் இதேபோன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றன. சூழமைவைப் பொறுத்து, ஈமீ என்ற வார்த்தையை “இருந்திருக்கிறேன்” என்று மொழிபெயர்ப்பதில் எந்த இலக்கணப் பிழையும் இல்லை என்பதை இது காட்டுகிறது. (கிரேக்க நிகழ்கால வினைச்சொல் [present tense verb], நிகழ்கால வினைமுற்றாக [present perfect tense verb] மொழிபெயர்க்கப்பட்டுள்ள மற்ற சில வசனங்கள் இவை: லூ 15:29; அப் 15:21; 1யோ 3:8.) அதுமட்டுமல்ல, தன் தகப்பனும் தானும் தனித்தனி நபர்கள்தான் என்று இயேசு சுட்டிக்காட்டியதை யோவா 8:54, 55-ல் உள்ள அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன.